சனி, 15 ஜூன், 2013

பெண்களை சினிமா ஆசைகாட்டி பாலியல் தொழிலில் தள்ளும் பயங்கரம் !


சென்னை – விபச்சாரம் - கோ.ஜெயக்குமார்

பெண்களை சினிமா ஆசைகாட்டி பாலியல் தொழிலில் தள்ளும் பயங்கரம் !...
ஆபாச படம் பிடித்து, மிரட்டி பணம் பறிக்கும் புரோக்கர்கள் !...
கஞ்சா வழக்கு போடுவதாக கூறி, ரெகுலராக  மாமூல் கேட்கும் போலீஸ் !...
----------------------
நமது பண்பாடும் கலாச்சாரமும் நமக்கு பல்வேறு கற்பிதங்களை கற்றுக்கொடுத்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்று கோட்பாட்டில் வாழும் சமூக அமைப்பை கொண்டதே நம்முடைய அமைப்பாகும். அப்படி இருப்பினும், நமது சமுதாயத்தில் வறுமை தாண்டவமாடும்போது,புனிதமாக போற்றப்படும் கற்பையும் விற்கும் சூழ்நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்ற சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
சாதாரமான குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்து வரும் பெண்கள், பல சூழ்நிலையாலும் வஞ்க வலையாலும், பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள், ஏமாற்றங்கள் போன்றவற்றையும் அதனால், சமூகத்தில்  அவர்கள்  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
பாலியல் தொழில் செய்யும் பெண்களை சமூகப் பொதுவாழ்விலிருந்து ஓரங்கட்டுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பாலியல் தொழிலை கட்டுப்படுத்த முடிந்தபாடில்லை. நாடு முழுவதும் கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த தொழிலில் பெண்கள் பலர் எரியும் விளக்கில் சிக்கிக்கொண்ட விட்டில் பூச்சிகளாக மாட்டிக்கொண்டு்தான் அவதிப்படுகின்றனர். மேலும் பலர் அபலைகளுக்கு உ்தவுவதாக ஆசை காட்டி அநியாயமாக பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றனர். ஒரு சிலர் சினிமா ஆசைகாட்டி கொண்டு வந்த நகை பணத்தை மட்டும் பறிக்காமல், பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களை சென்னை சாலைகளில் பரிதாப திரியவிடும் பரிதாபக் காட்சிகளை இன்றளவும் பார்க்க முடிகிறது.
கேரளாவை சேர்ந்த பெலோமினா என்பவர் அங்கு குடும்பத்துடன் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தபோது, சென்னையை சேர்ந்த சினிமா படப்பிடிப்பு குழு ஒன்று அங்கு வந்துள்ளது. அப்போது, சினிமா ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த அவரிடம் அந்த படக்குழுவை சேர்ந்த ஒருவர் “நீ சிவப்பாக, அழகாக இருக்கிறாய். உன்னை போன்ற பெண்கள் சினிமாவில் நடித்தால் நன்றாக சம்பாதிக்கலாம்” என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதனால், சினிமாவில் ஹிரோயினாகி புகழும், பணமும் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில், சினிமா மோகத்தில் பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல், அந்த படப்பிடிப்பு குழுவை சேர்ந்த ஒருவருடன் சென்னை வந்துள்ளார். பல கனவுகளோடு  சென்னை வந்த இந்த அப்பாவி பெண்ணிடம் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து சீரழித்துள்ளார். மேலும், தனக்கு விருந்தான அந்த பெண்ணை நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார் அந்த மோசடிக்காரர். இப்படி சினிமா ஆசையால் ஊரையும், உறவையும் விட்டு வந்ததோடு, தன் வாழ்க்கையையும் இழந்து, வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலுக்காக தற்போது பெலோமினா பரிதாபமாக தள்ளப்பட்டுள்ளார்.
இப்படித்தான், பல ஆசை வார்த்தைகளை நம்பி வரும் பெண்கள், அநியாயமாக ஏமாறுவதோடு, பின்னர் விபச்சார கும்பல்களிடம் விற்கப்பட்டும் விடுகின்றனர். அதன்பிறகு அவர்கள் அந்த கும்பல்களை சேர்ந்த தரகர்கள் கூறும் அதிகாரிகளை திருப்திப்படுத்துவதும், அந்த பகுதியில் உள்ள குண்டர்கள், பலருடன் வந்து பலவந்தமாக கற்பழிப்பதும் இதனால் விரக்தி அடைவதும் வாடிக்கையாகிவிட்டதாகவும் மனம் குமுறுகிறார்கள்.
மேலும், அப்பாவி பெண்களை இந்த புரோக்கர்கள் எப்படி தங்கள் வலைகளில் வீழ்த்துகிறார்கள் என்பதை தன் அனுபவத்தில் கூறும் பெலோமினா, சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், தி,நகர், சாலிகிராமம் என திரைப்பட துறயினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தான் பாலியல் தொழில் கொடி கட்டி பறப்பதாக கூறுகிறார்.
மேலும், பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விருந்துகளில் கலந்துக்கொள்ள வைக்கும் புரோக்கர்கள், இவர்களை சினிமா துணை நடிகைகள் என்று போலியாக அறிமுகம் செய்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்துவதாக கூறப்படுகிறது. சில சமயம் போலீசார் சிலர் தங்களை பிரச்சனைகளில் இருந்து காப்பதாக உறுதியளித்து ’ஃபிரீ செக்ஸ்’ வைத்துகொள்வதாகவும் குமுறுகின்றனர்.
இந்நிலையில், தங்களை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தும் புரோக்கர்களில் சிலர் தங்களது அந்தரங்ககளை ரகசியமாக படம் பிடித்து, தங்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகிறது.
இப்படி, சினிமா மோகத்தால் பலர் இந்த நரகத்தில் அகப்பட்டுக்கொள்கிறார்கள் என்றால் இன்னும் சிலர் தங்களது வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகின்றனர். மதுரையை சேர்ந்த சுமதி என்பவர் தனது வறுமையை போக்கிக்  கொள்ள தன் நண்பர்களிடம் வேலை கேட்டுள்ளார். அப்போது, வேலை செய்து சம்பாதித்து எப்போது  நீ நல்ல நிலையை எட்டுவது என்றும் உடனே உன் வாழ்வை ஓகோவென்று மாற்றுகிறோம் என்று கூறி பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட பரிதாப சம்பவமும் நடந்துள்ளது.
தன் எதிர்காலம் கணவன்தான் என்று நம்பிய தன்னை கணவனே இந்த தொழிலுக்கு தள்ளியதாகவும், இதனால் தற்போது தன் உறவினர்களாலும் ஒதுக்கப்படுவதாக கூறுகிறார் சுமதி.
இப்படி, நம்பியவர்களாலேயே படுகுழியில் தள்ளப்படும் இவர்களின் வாழ்க்கையில், சம்பாதியத்தில் ஒரு பங்கை போலீசாரும், தரகர்களும் பங்கு போட்டு கொள்வதோடு அவர்கள் அனுப்பும் நபர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நிர்பந்திப்பதுதான் வேதனையிலும் வேதனை என்று கூறுகிறார்கள். மேலும், போலீசாருக்கு மாமூல் தரவில்லை என்றால் அவ்வளோதான், கஞ்சா விற்றதாக பொய் வழக்குப்போட்டு வெளிவர முடியாத பிரிவுகளில் சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படி ஒருபுறம் இருக்க, சிறுவயதில் பெற்றோர்களால், கைவிடப்படும் குழந்தைகளையும், வீட்டு வேலைக்கு வரும் பெண்களையும், சிலர் தங்களது வக்கிர புத்தியால் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கி அவர்கள் வாழ்க்கையை நாசப் படுத்தும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
இப்படித்தான், சிறுவயதில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சேலத்தை சேர்ந்த அனிதா என்பவரை படிக்க வைப்பதாக கூறி கோவை அழைத்து சென்றார் ஒருவர். இவரை ஒரு  வீட்டில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆனால், அந்த முதலாளியோ மனைவியில்லாத சமயத்தில், இவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறல்களில் ஈடுப்பட்டிருகிறார். மேலும் அவரது வீட்டுக்கு வரும் உறவினர்களும் இவரிடம் தவறாக நடந்திருக்கிறார்கள். இதனால், அங்கிருந்து தப்பித்த இவர், கோவை பேருந்து நிலையத்தில் தன் உறவுக்கார ஒருவரை சந்தித்திருக்கிறார்.
அப்போது, இவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற அந்த பெண், இவரை சாராய ஆலையில் வேலைக்கு சேர்த்துவிட்டதோடு மட்டுமின்றி இவரை விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியிருக்கிறார். இப்படி சிறு வயதிலேயே பல கொடுமைகளுக்கு ஆளான இவர், ஒருநாள் அந்த பெண்ணின் பிடியில் இருந்து தப்பி, தன் பெற்றோரை கண்டுபிடித்திருக்கிறார் அனிதா. ஆனால், பெண்ணாக பிறந்த ஒரே காரணத்திற்காக இவரை நிராகரித்திருக்கிறார்கள். இதனால் தன் வாழ்க்கை பாதை திசை மாறி சென்றுவிட்டதாக அனிதா கூறுகிறார்.
இப்படி, பல வகைகளில் ஏமாந்துவிடும் பெண்களை, சிலர் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. கலை வாணி என்பவர் தன் காதலன் ஏமாற்றியதில் கர்ப்பமாகியிருக்கிறார். இதனால்,  உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, ஒருவேளை கஞ்சிக்கே வழியில்லாத போதுதான், இந்த தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். உடல்ரீதியாக இவர் அனுபவித்த துன்பங்களால் எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோயினால் கர்ப்பப்பை பாதிக்கப் பட்டதாகவும், பின்னர் என்.ஜி.ஓக்கள் என்று அழைக்கப்படும் அரசு சார்பற்ற அமைப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வருவதாக கூறுகிறார்.
இதேபோல், பாலியல் தொழிலில் இருந்து மீண்டு தொண்டு நிறுவனங்களில் பணி யாற்றிவரும் கேரளாவை சேர்ந்த சாந்தி என்பவர், பாலியல் தொழிலில் இருந்து விடுப்பட்டாலும்,  வெளியிடங்களுக்கு தங்கள் மகள்களுடன் செல்லும்போது பலரால் தொந்தரவு செய்யப்படுவதாக என்று கூறுகிறார்.
இப்படி பெண்களை போக பொருளாக நினைத்து அவர்களது சதைக்காக அலையும் பல கும்பல்கள் ’செக்ஸ் டிரஃபிக்கிங்’ என்று அழைக்கப்படும் பாலியல் தேவைக்காக பெண்களை கடத்தி விற்கும் செயல்களில் ஈடுப்படுகின்றனர். ஆம், இப்படித்தான் கலைவாணி என்பவரை சிங்கப்பூர் அழைத்து சென்று வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, அங்கு பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். மேலும், சிங்கப்பூரில் தன்னை ஊதுபத்திகளால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதோடு மட்டுமின்றி, அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட பிறகு இந்தியா திரும்பியுள்ளார். இப்படி, தன்னை போன்று பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட அமைப்பு ரீதியாக இயங்குவதாகவும் தெரிவித்தார்.
இப்படி சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் புறந்தள்ளப்படும் இவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திதர பல அமைப்புகள் செயல்படுகிறது. பல பெண்கள் குடும்ப வறுமையாலும், கணவன் கைவிடுவதாலும், பாலியல் தொழிலில் ஈடுப்படுகின்றனர். இதுபோன்ற வர்களுக்கு  நம்பிக்கை அளிக்கவும், அவர்களுக்கான உரிமைகளை பெற்று தர போராடுவதாகவும் கூறுகிறது இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் அமைப்பினர்.
இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் ஆர்கனைஸேஷன் என்னும் தன்னார்வ அமைப்பு பாலியல் தொழிலாளர்கள், ஒரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு புணர்வாழ்வு அளித்து வருவதாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் மாற்று தொழில்களை கற்று தருவதாகவும் கூறுகிறார்கள்.
பாலியல் தொழில்  என்பது பல நாடுகலில் சட்டப்பூர்வமானது ஆகும். ஆனால் பெண்களை அடிமையாக பாலியல் தொழிலில் ஈடுப்பத்துவதோ, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதோ, பாலியலில் தொழில் செய்யும் ஒருவர் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அல்லது ஈர்க்கும் வகையில் செயல்படுவதோ சட்டவிரோதமானது ஆகும். இ்தனை கட்டுப்படுத்த அரசு  பல என். ஜி .ஓ அமைப்புகளுடன் இணைந்து பெண்களை காக்க மும்முரம் காட்டவேண்டும்.
===============

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக