சனி, 1 ஜூன், 2013

மகாதேவன் மலை;
மகாதேவ மலையை முழுங்கிய மகானந்த சாமியார் !...
வைரக்கோவில் கட்ட 90 ஆயிரம் கோடியில் வசூல் வேட்டை !...
தனி விமானத்தில் உலகை வலம்வரப்போவதாக தகவல் !...
==========
இந்தியாவில் ஆன்மீகம் என்ற பேரில் பல சாமியார்கள் தங்களை மிக பெரிய சமூக தொண்டராக அடையாளம் காட்டிக்கொண்டு, கோடிக்கணக்கில் பணம் புரள வைக்கின்றனர். பெரும்பாலான தொழிலதிபர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரையும் தங்கள் தொடர்பில் வைத்துக்கொண்டு பலவித வியாபார பரிவர்தனைகளைப் நடத்திவரும் சம்பவத்தைப் பற்றி இப்போது பார்ப்போம
வெளிநாட்டிலிருந்து குவியும் பக்தர்கள் ஒருபுறம், கோடிக்கணக்கில் நன்கொடைகளை அள்ளிவீசும் தொழிலதிபர்கள் மறுபுறம் என உளாவரும் ஒரு சாமியார் 90 ஆயிரம் கோடியில் மிக பிரம்மாண்டமான வைரக்கோயிலை கட்டுவதாக கூறப்படுகிறது. இந்த அற்புத கோயிலின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கே.வி. குப்பம் என்ற கிராமம். இந்த கிராமத்தில்தான், 150 ஏக்கர் நிலப்பரப்பில பரந்து விரிந்துள்ளது மகாதேவன் மலை. இங்கு சுமார் ஆயிரத்து ஆறுநூறு ஆண்டுக்ளுக்கு முன்பு தோன்றிய புராதனமான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயில் சுயம்புவாக உருவானதாக நம்பப்படுகிறது. அதே சிவன் கோயிலில் காமட்சியம்மனுக்கும் ஒரு பிரகாரம் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகாதேவன் மலையில் உள்ள கோயில் ஆறநூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தை ஆண்ட ஸ்ரீகிருஷ்ண தேவராயரால் புனரமைக்கப்பட்டு அவரால் வணங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுயம்புவாக தோன்றிய இந்த பிரம்மாண்டமான சிவன் கோயிலை காண பக்தர்கள் நித்தமும் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இங்குள்ள மற்றொரு ரகசியம் என்னவென்றால், இந்த மகாதேவன் மலை சிவன் கோயிலில் இருக்கும் நந்தியும் சுயம்புவாக உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலை மாயம்மாள், தேவானந்தா, ரத்தினம் என்ற சக்தி வாய்ந்த சாமியார்கள் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இறந்த பிறகு, ஆண்டுகள் பல சென்றாலும் இங்குள்ள சிவன் கோயிலுக்கு எந்தவித பராமரிப்புகளும் நடைபெறவில்லை.
இந்த மகாதேவன் மலைலை சுற்றிலும் 18 சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மகானந்த சாமிகள் என்ற ஒரு சாமியார் இந்த மகாதேவன் மலையில் நுழைகிறார். நீண்ட ஜடாமுடியும், உடல் முழுக்க திருநீரும் பூசிக்கொண்டு, உடம்பில் ஒரு சிறிய துண்டை மட்டும் அணிந்துக்கொண்டு பக்தர்களுக்கு கொடுக்கும் காட்சியை பார்த்து இவரை மிக பெரிய ஞானியென்று பூஜிக்க தொடங்கினர் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில், கோயிலை விரிவுப்படுத்த திட்டம் தீட்டிய இந்த மகானந்த சாமியார் தமிழகத்தில் உள்ள முக்கிய புள்ளிகளான நீதிபதிகள், நடிக-நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் என பலருக்கும் நெருக்கமானார்.
படிப்படியாக மகாதேவன் மலையை ஆக்கிரமித்துக்கொண்ட இந்த மகானந்த சாமி, தன்னை யாரும் நெருங்காமல் இருக்க கோயில் பிரகாரத்தில் மிக பெரிய பாம்பு உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் மலையை நெருங்கவிடாமல் பயமுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல மலையை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். உண்மையில் இந்த மகானந்த சாமிகள் யார் ? இவர் எப்படி இங்கு வந்தார் என்று ஆராய்ந்தால் சரியான விவரம் யாருக்கும் தெரியவில்லை.
இவர் தர்மபுரியை சேர்ந்த இன்ஜினியர் என்றும் பெங்களூரில் பிரபல பேருந்து நிலையத்தை கட்டியவர்களில் இவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இவரது மனைவி முன்னால் அரசு அதிகாரி என்றும், தம்பதிகள் இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வியட்நாம் நாட்டில் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு நாள் மகானந்த சாமிகளின் கனவில் தோன்றிய சிவன் தனக்கு மிக பிரம்மாண்டமான கோயில் எழுப்புமாறு கூறியதாகவும், அதன்படி மலையை உடைத்து சமன்படுத்தி கோடிக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமா கோபுரம் கட்டவேண்டும் என்று கட்டளையிட்டதாக தெரிவித்தார்.  
இப்படி கூறும் இந்த மகானந்த சாமிகள் மகாதேவன் மலையில் எழுப்பிவரும் கோயிலின் உட்பிரகாரத்தை ஒரு நட்சத்திர ஓட்டல் போன்ற வடிவில் உருவாக்கி வெளி நாட்டவரையும், இந்தியாவில் உள்ள பல விவிஐபிக்களையும் கவர்ந்துள்ளார் இந்த மகானந்த சாமிகள்.
தொல்லியல் துறைக்கு சேரவேண்டிய இந்த கோயிலை பல அரசியல் புள்ளிகளின் செல்வாக்ககை பயன்படுத்தி 150 ஏக்கர் நில பரப்பு உள்ள மகாதேவன் மலையே இந்த மகானந்த சாமிகள் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகிவரும் இந்த கோயிலால், பழமை வாய்ந்த பல சிற்பங்களும், 18 சித்தர்களின் உருவங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையுடன் இந்த கோயிலை கட்டுவதற்கு மகானந்த சாமிகளுக்கு உண்மையில் உதவியர்கள் யார் தெரியுமா, இந்தியாவில் உள்ள மிக பெரிய கட்டமான நிறுவனங்களான எல் அன்ட் டி மற்றும் லான்கோ என்ற நிறுவனங்கள் தான்.
லான்கோவை சேர்ந்த சேகர் என்பவரும் எல் அன்ட் டி யை சேர்ந்த ரமேஷ் என்பவரும் இந்த மகானந்த சாமியாரின் லெப்ட், ரைட் என்று கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீராம் என்ற சாமியார்தான் இவரின் அடுத்த வாரிசாக இருந்துக்கொண்டு பல வில்லங்க வேலைகளை செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த மகாதேவன் மலையில் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமான ஒரு வைரக் கோயில் கட்ட பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை செய்யப்பட்டுவருதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், லட்சக்கணக்கில் நிதியை கொடுத்துள்ள பக்தர்கள் தங்களுக்கு கூறப்பட்ட வாக்குகள் எதுவும் நிறைவேற்றவில்லை என்றும், தாங்கள் ஏமாற்றபட்டுவிட்டதாகவும், இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நீர் நிறைந்த பல சுனைகளும், அகழி போன்ற பள்ளங்களும், பாறைகளுளோடு புதுவித சூழலை உணர்த்தும் இக்கோவிலில், பளபளப்புடன் கூடிய மரகத லிங்கங்கள், ரம்யமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதை காண வெளிநாட்டு பக்தர்களின்  பக்தி அணிவகுப்போ நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அங்கிருக்கும் மூல விக்ரகத்துக்கான சிறப்பு வழிபாடுகளைவிட இந்தச் சாமியாருக்கான வகை வகையான வழிபாடுகளே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த மகானந்த சாமிகள் கடந்த 7 ஆண்டுகளாக பச்சை தண்ணியோ, உணவோ எடுத்துக் கொள்ளவில்லை என்றும், தினமும் சிறுநீர் கழிப்பதுக்கூட கிடையாதென்றும் கூறப்படுகிறது. உலகில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறும் இவர்,  பசி தாகம், உணவு, என்று தனக்கு எதுவுமே தோன்றவில்லை என்கிறார். ஆனால், வேடிக்கை என்னவென்றால் அவரின் செயல்பாடுகளை குறித்து அவரை அனுகியபோது சாப்பிட செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து காரில்  பறந்துவிட்டார்.
ஆனால், ஆண்டுக்கணககில் உணவு உட்கொள்வதில்லை என்று கூறும் இவர் எப்படி இதை தெரிவித்தார் என்ற ஆச்சர்யம் நமக்கு மேலோங்கியது.
இது ஒருபுறம் இருக்க, இந்த மகானந்த சாமியாருக்கு  கடந்த 9 வருடங்களாக ஆண்டுதோறும் சித்திரை 1ஆம் தேதி அன்று பக்தர்கள் பால் குடம் எடுப்பது வழக்கம். அப்போது ஆண்டு முழுவதும் குளிக்காமல் இருக்கும் மகானந்த சாமிகளுக்கு இந்த பால்குட அபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படுகிறது.
அதோடு கோயிலின் ஒவ்வொரு விக்ரகத்தின் முன்பு தானும் அமர்ந்து, அந்தந்த விக்ரகத்திற்கான அபிசேக ஆராதனைகள் அனைத்தும் தனக்கும் வாங்கிக் கொள்கிறார் இந்த மகானந்த சாமியார்.  தலையணை போன்ற பழமையான அந்த ஜடாமுடியில் குடம் குடமாக பால் ஊற்றப்படுவதும், பிறகு அந்த ஈரம் உலராமலேயே அவர் ஆனந்த தாண்டவம் ஆடுவதும் உண்மையில் அதிசயம்தான்.
அதன்பிறகு மலையைச்சுற்றி வரும் இந்த சாமிகள் க்ளைமேக்சாக அம்மலையில் இருக்கும் ஆழமான 5 நிலையிலான சுரங்கத்துக்குள் நுழைகிறார். அந்தச் சுரங்கம் உட்புறமாக சுமார் 60,000 சதுர அடிகளைக்கொண்டது என்கிறார்கள். ஆனால் இந்த சாமியாரைத் தவிற வேறு  யாரும் அந்த சுரங்கத்தை உள்ளே சென்று பார்த்தது கிடையாது.
சுரங்கத்தின் உட்புறம் மிகுந்த கலைப்பாங்குடனும், வித்யாசமான பொலிவுடனும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விஷேச நாட்களில், தன்னை நாடிவரும் வெளிநாட்டு பக்தர்கள் வழங்கும் பூ மாலைகளை அவர்களுக்கே சாற்றுவதும், பூச்சரத்தை அப்படியே தனது ப்ரம்மாண்டக் கொண்டையில் சூட்டிக்கொள்வதும், அத்துடன் வேப்ப இலைகளை தனது ஜடாமுடியில் திணித்துக்கொள்வதும் வினோதமான செயலாகவே இருக்கிறது.
இந்த மகாதேவன் மலையில் உள்ள மற்றொரு குகையில் 6 உயரம் உள்ள தக்ஷணா மூர்த்தி சிலை உள்ளதாகவும், இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லையென்று கூறப்படுகிறது. இந்த கோயில் நிர்வாகம் முழுக்க முழுக்க தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் மகானந்த சித்தரின் கண் அசைவின்று இங்கு எதுவும் நடக்காது என்று கூறப்படுகிறது.
இந்த சித்தரை காண வெளிநாட்டிலிருந்து வரும் ஏராளாமான பக்தர்கள் பக்தியுடன் வணங்கி லட்சக்கணக்கில் காணிக்கைகளை செலுத்துகின்றனர். மேலும், அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் இருந்து வந்துள்ள பக்தர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது மதங்கள் பல ஆனாலும் கடவுள் என்பது ஒன்றுதான் என்றும் பின்லேடனின் சாவுக்குப் பிறகு இனி அமெரிக்காவுக்கு நன்மையே என்றும் அரிய விசயங்களை அருள் வாக்காக கூறுகின்றார்.
கடவுள் நம்பிக்கை பற்றிக்கேட்டபோது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சரியான கலவையால் நாம் வாழும் பூமி ஒழுங்காக இயங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால், கடவுள் இருப்பதையும் நாம்  நம்பித்தான் ஆக வேண்டும் என்று திருவாய் மொழிகின்றார்.
தங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்கா வரும்படி பக்தர்கள் அழைத்தபோது, அதற்கு மகானந்த சாமிகளோ தற்போது கோவில் கட்டுமானப் பணி மும்மரமாக நடை பெற்று வருவதாகவும், அது முடிந்து தங்க ரதம் விடும் அளவுக்கு பூர்த்தியானதும் தனி விமானத்தில் வருகிறேன் என்று கூறுகிறார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கியதாகக் கூறப்படும் 16 பேர் பயணம் செல்லத் தோதான கிங் பிஷ்ஷர் குட்டி விமானத்தில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் 5, 6 மாதங்களாவது ஒரு குட்டி டூர் வருவதாகவும் கூறும் மகானந்த சாமிகள், மேலும் தன்கை வசம்  ஒரு ஆன்மீகத் திட்டமும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வேலூர் கோட்டையையும், அகழியையும் தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள தொல்லியல் துறையினர், இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறப்படும் இந்த புனித கோயிலை ஏன் கையகப்படுத்தவில்லை என்று கேள்வி எழுகிறது. இனியாவது இந்த மகாதேவன் மலையில் உள்ள சிவன் கோயிலை தொல்லியல் துறை ஏற்று அங்குள்ள பழமைமிக்க சிற்பங்களையும், குகைகளையும் காக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
அரசுக்கு சொந்தமான பழமைவாய்ந்த மலையையும், கோயிலையும் கையகப்படுத்த இந்த சாமியாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கோடிக்கணக்கான பணம் எப்படி இந்த சாதாரண கிராமத்தில் புரளுகின்றன என்பதை வருமான வரித்துறையினரும், மத்திய புலனாய்வு துறையினரும் விசாரித்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பது உறுதி.
==========


.                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக