திங்கள், 29 ஏப்ரல், 2013

திரைப்படம்









நடிகை ஸ்ரீ வித்யா மரணம்



நடிகை ஸ்ரீ வித்யா மரணம்
கேன்சர் நோய் வந்தும் உதவி வேண்டாத நடிகை !...
மரணப் படுக்கையிலும் வசதியற்றவர்களுக்கு உயில் எழுதிய  உன்னதம் !...
கடைசி ஆசையையும் நிறைவேற்றாத கேரள அரசியல் வாதியின் மெத்தனம் !...
============
திரைப்படத் துறையில் தங்களது அழகிய முகத்தாலும், மந்தகாச மேனியாலும், கொஞ்சும் குரலாலும், குறையில்லாத நடிப்பாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு, கவர்ந்து,  தங்கள் வசம் இழுத்துக் கொள்பவர்கள் நடிகைகள். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்று கலைத் துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் மிகச் சிலரே. அதில் ஸ்ரீவித்யாவிற்கு அப்படிச் சில பேர்களில் நம்  மனதில் தனி இடம் கொடுத்து நிச்சயம்  போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த நடிகைதான் ஸ்ரீவித்யா.
சகல அம்சங்களுடனும் நம் தமிழ்த்திரை உலகில் மட்டுமில்லாமல் தென்னக திரைஉலகம் முழுமையுமே  ஆக்கிரமித்து தன்  விஸ்வரூப நடிப்பால் வியாபித்து  சகல ரசிகர்களையும் தனக்கென சம்பாதித்து வைத்திருந்த ஸ்ரீவித்யா நாடு தழுவிய பட்டங்களையும் பரிசுகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பதும் உண்மை. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று ””பாரத நாட்டுக் கலைச்செல்வி “”யின்  செல்லப் பிள்ளையாகவே  வலம் வந்தவர்.
ஆனால் விதியின் வசமான அவரின் 35 வயதைத் தாண்டிய வாழ்க்கை அவரின் முந்தைய குதூகல நிலையிலிருந்து  அவரை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. அமைதியான வாழ்க்கையையும் அழகிய மேனியையும் அற்புதக் குரலையும் சின்னாபின்னப் படுத்தி சீரழித்துச் சிரித்தது. அவரின் அன்பான ரசிகர்களை அழவைத்துப் பார்த்து ரசித்தது.
மேலும் தன் கடுமையான உழைப்பால் சேர்த்த செல்வத்தை தன் காலத்திலேயும், தனக்குப் பின்பாகவும்  தன் விருப்பப் படி செலவழிக்க முடியாத அவல நிலையையும் அவருக்கு ஏற்படுத்தியது. குழந்தை மனமும், கொடை உள்ளமும், நடிப்புப் புலமையும், கொண்டு நடிப்பு தேசத்தில் மஹாராணியாக வலம் வந்த அவருக்கு என்ன நேர்ந்தது? அதற்க்கு யார் யார் எதுவெல்லாம் காரணம் என்பது பற்றிய உண்மைகளையும் அதன் பின்னணியை பார்க்கலாம்.!
1970 தொட்டு 2000 வரை சுமார் 30 ஆண்டுகளாக  தனது மிகத் துல்லியமான  தேர்ந்த நடிப்பாலும்,  அழகு வதனத்தாலும், பேசும் விழிகளாலும், தென்னகத்திரை உலகையே தன் வசப்படுத்தி ரசிகர்களை மெய் மறக்க வைத்திருந்த நடிகை ஸ்ரீவித்யா, கர்னாடக இசையை தன் தேன் குரலால் உலகம் முழுவதும் பரப்பிய தேவகானக் குயில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரிக்கும், பல குரல் வேந்தனாய்த் திகழ்ந்த திரு விகடம் கிருஷ்ன மூர்த்திக்கும் 1953ல் செல்வ மகளாய்ப் பிறந்து. செல்ல மகளாயும் திகழ்ந்தவர்
சென்னையில், மிகப் பிரசித்தமான மைலாப்பூர் பகுதியில் ப்ரம்மாண்டமான தனது இல்லத்தில் வசதியுடன் இளம் பருவ வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிறந்து வளர்ந்த சமயங்களிலெல்லாம் இவரின் வீட்டைச் சுற்றிலும் ,அதே பகுதியிலும் பிரபலமான கலைஞர்களும், பல முக்கியப் பிரமுகர்களும் வசித்து வந்ததால் இவரின் இளம் பருவம் தொட்டே கலை ஞானமும், அதை ஊக்குவிக்கும் நபர்களின், உறவும்  நட்பும் நிறையவே கிடைத்து வந்தன.
 நாட்டியப் பேரொளி பத்மினி சகோதரிகள் இவரின் எதிர்வீட்டில் வசித்ததால் எப்போதும் அவரின் தத்துப்பிள்ளை போன்றே வளர்க்கப்பட்டார். 4 தாய்களின் செல்லப்பிள்ளை எண்றும்  இவரைக் கூறலாம். {போட்டோ} அப்படியாக அவரின் கலை ஆர்வமும் வளர்க்கப்பட்டது. கபடமற்ற குணமும் நகைச்சுவை உணர்வும் எதையும் தீர்க்கமாய் உணரும் தன்மையும் இவரை சிறு பிராயம் தொட்டே தனித்து சிறப்பாகக் காட்டியது.
வித்தி என்று செல்லமாக அழைக்கப்பட்ட வித்யா  தன் பெயருக்குத் தகுந்தார்ப் போன்றே சகல கல்வி கேள்விகளில் சிறந்து அந்தக் கலைமகளான ஸ்ரீவித்யாவைப் போன்றே விளங்கினார். தாய் எம்.எல்.வியோ மனோகரமான இசையால் பொருளீட்டும் தன லட்சுமியாகத் திகழ்ந்தார். நாளொரு கலையும் பொழுதொரு அரவணைப்புமாய் தன் படிப்புக்கும் பாதிப்பில்லாமல் கலைப் பயிற்ச்சியுடன்  சிறுமிப் பருவம் கடந்து குமரிப் பருவத்தை எட்டினார் ஸ்ரீவித்யா. தன் தாயின் இசையும். தந்தையின் விகடமும், தனது பரதமும், என்று பாரதம் முழுக்க பிரபலங்களின் பாராட்டுக்களுடன் வலம் வந்தார்கள். {போட்டோ}
இவர் தனது கல்வியில் மெட்ரிக்குலேசன் படிப்பை முடிக்கும் சமயம் சிறப்பான கலைதாகத்தையும் கலா மேதமையையும் கண்ட பலரின்  யோசனைப்படி இவர் நாட்டியம் மற்றும் நடிப்புத் துறைக்குள் அடி எடுத்து வைத்தார். சகல கலைகளிலும் பயிற்சியும் தேற்சியும் பெற்று கலைமகளின் திருவருட்ச் செல்வியாகத் திகழ்ந்த இவருக்கு பக்தி இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற அற்புதப் படைப்பே சிறப்பாக நாட்டியமாடி நடிக்கும் வாய்ப்பை  முதல் முதலாக வழங்கியது.
அதன்மூலம் வெற்றி என்ற மூன்றெழுத்தைப் பெற்ற இவருக்கு அடுத்ததாக அமைந்த வாய்ப்போ நடிகர் ரவிச்சந்திரன் செல்வி ஜெயலலிதாவுடனான மூன்றெழுத்து திரைப்படம். பிறகு தொடங்கியது  திரைப்படத் துறையிலான இவரது புலிப் பாய்ச்சலான வேகம்.
துவக்க காலத்திலேயே இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் போன்றோரின்  மூலமான அற்புத வாய்ப்புகள் நிறையக் கிடைத்ததால் இவரின் திறமையும் பட்டை தீட்டிய வைரமாய் மின்னியது. காலம் செல்லச் செல்ல தென்னக மொழிப் படங்கள் அத்தனையிலுமே இவரின் கலையாதிக்கம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.
புகழின் உச்சிக்குச் சென்ற ஸ்ரீவித்யா தனக்கென ஒரு துணையைத் தேடும் முயற்சியில் இறங்கினார். அங்குதான் அவரின் கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனம் அவரை ஏமாற்றி  மன வாழ்க்கையில் குப்புறத் தள்ளியது. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவரை தான் திருமணம் செய்வதாகவே தீர்மானித்து விட்டதாக தன் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது அவர்கள் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் அவரைப் பார்த்தனர்.
காரணம், ஆச்சாரமான பிரபல இந்துக் குடும்பத்தில் பிறந்துவிட்ட நிலையில் கொஞ்சமும் தொடர்பே இல்லாத ஒரு நபரைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது எப்படி என்று குழப்பமடைந்து அவரிடம் மறு பரிசீலனை செய்யும் படிக்கேட்க அவரோ தன் முடிவில் மிகத் தீர்மானமாக இருந்துவிட்டார். விதியின் விளையாட்டை வெறும் மனிதர்களா மாற்றிவிட முடியும்?
கடுமையான பல எதிர்ப்புகளை எல்லாம் மீறி  நடந்து முடிந்தது இவர்களின் திருமணம் அதுவும் பின் நாளில் இவருக்குப் பல வழிகளில் தொல்லைகளை வழங்கும் வகையான கிறிஸ்டியன் சிரியன் என்ற கிறித்துவ முறைப்படி மும்பையில்.1978ல் நடந்தது. கணவர் ஜார்ஜ் தாமஸ் நடிகர் திலகம் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உட்பட சில  படங்களைத் தயாரித்தவர்.
9 வருட  காலம் வரை மட்டுமே போராட்டத்துடன் ஓடிய  இவர்களின் தாம்பத்ய வாழ்க்கை ஒரு கட்டத்தில் 1987ல் சோகமான பிரிவில் முடிந்தது. தன் கணவனுக்கு எதனால் தன் மீது காதல் ஏற்ப்பட்டது? ஏன் பிரிந்து செல்ல முடிவெடுத்தார்? ஏன் திருமணத்தை மும்பையில் சிரியன் கத்தோலிக்க முறையில் நடத்தினார்? என்றெல்லாம் பதிலே கிடைக்காத கேள்வியின் நாயகனாக தன் கணவன் அமைந்ததையும் ””இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை தான் திருமணம் என்ற பெயரில் நடத்தி முடித்ததையும் எண்ணி மனம் வாடினார் ஸ்ரீவித்யா. {பாடல்}
இவரின் மண முறிவுக்குப் பிறகு முன்னாள் கணவனுடனான ப்ரச்சனைகள் விச்வரூபம் எடுத்தன. அவற்ரை சமாளிக்க முடியாமல் தனி மனுஷியாய்த் தள்ளாடித் தவித்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை மாஜிக் கணவரோ தன் பெயருக்கு மாற்றம் செய்யத் துடித்தார். அதற்க்காகப் பல வருடங்கள் கோர்ட்டுக்கு  ஸ்ரீவித்யாவை அலைய வைத்தார் ஜார்ஜ். இந்தத் தீராத தொடர் போராட்டத்துக்கு இடையிலும் எண்ணற்ற படங்கள், திறமைக்குச் சவால் விட்ட எதிர்பாராத கதாபாத்திரங்கள், வேறு வேறு மொழிகளில் என்று சுற்றிச் சுழன்று புயலாய் நடிப்பில் சாதித்தார் ஸ்ரீவித்யா.  நவரசங்களையும் அருவியாய்க் கொட்டும் அழகிய விழிகள் இவரின் அற்புத நடிப்புக்கு இலக்கணம் வகுத்தன.
புதிய புதிய கதாபாத்திரங்களின் மீதான  அதீத மோகமும், வெற்றியும், புகழும் வழங்கிய உற்சாகம் அவரின் களைப்பை உணரவே விடாமல் தொடர்ந்து உழைக்க வைத்தது. அத்துடன் ஜார்ஜை விட்டு விலகிய வித்யா தன் தாய் தந்தையுடன் சென்னை ஸ்ரீராம் நகரில் ஒரு அடுக்கு மாடிக் குடிஇருப்பில் வசிக்கத் தொடங்கினார்.
காலம் விரைந்து ஓடியது. கூடவே இவரின் மீதான காலனின் மறைமுகத் தாக்குதல்களும் நடந்துகொண்டே இருந்தன. இதனிடயே 1990 அக்டோபரில் தன் அன்புக்கும் பாசத்துக்கும் வழி காட்டலுக்குமாக இருந்த தன் தாயும் உலகப் புகழ் கர்னாடக இசைப் பாடகியுமான இசைக்குயில் திருமதி  எம்.எல்.வசந்தகுமாரியை காலனிடம் பறி கொடுத்தார் வித்யா.
நலமில்லாத தன் தாய்க்கு உடனிருந்தே உதவிய தன்  உழைப்பு வீணாகிப் போனது கண்டு மனம் நொந்தார். {போட்டோ} தன் திருமணத் தோல்விக்குப் பிறகான மற்றுமொரு சம்மட்டி அடியாக விழுந்தது இந்த இழப்பு நிறைவேறாமல் போன குடும்ப வாழ்க்கையின் சோகத்தை மறக்க மேலும் மேலும் நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஸ்ரீவித்யா.  
அப்பாவிக் குழந்தை மனம் என்றாலும் துவக்கம் முதலே ஆன்மீக ஈடுபாட்டால் மனம் பக்குவப்பட்டுப் போனதால் இவரை பல படங்கள் பல பண்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் உச்சாணிக்குக் கொண்டு போயின
ஒரு கட்டத்தில் தன் உடலில் சில சில மாற்றங்கள் ஏற்படுவதையும், அதனால் தனக்கு மிகவும் அசொவ்கரியங்களும், வலியும், சோர்வும். பசியின்மையும் உள்ளதையும்  அறிந்து குழப்பமடைந்தார். ஆனாலும் அவற்றுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க விடாமல் விதி தடுத்துவிட்டது.
மிகக் கடுமையான பாதிப்பை உணர வந்த சமயம் மருத்துவர்களைப் பார்த்து பரிசோதித்த போது அவருக்கு வந்துள்ளது புற்றுநோய் என்றும் தற்போது அதன் தீவிரம்  மிக எல்லை மீறி விட்டதாகவும் கூறிக் கைவிரித்து விட்டார்கள். சினிமாவில் தான் இதுவரை நடித்திருந்த அத்தனை சோக கதாபாத்திரந்களும் தற்போது தனக்குள்ளேயே குடியிருப்பதாய்  உணர்ந்தார்.
அந்நிலையில் தற்போது தனக்கான முக்கிய உறவும் தன்னைப் பற்றி மிக அக்கறை கொள்ளும் ஒரே ஜீவனாயும்  இருந்த தந்தை விகடம் கிருஷ்ணமூர்த்தியையும் காலம் கருணையற்று 2001ல் பறித்துக்கொண்டது. சோதனைமேல் சோதனையாக காலம் கொடுத்த சம்மட்டி அடிகளால் கலங்கித் தவித்தார்.
தந்தை அமரர் விகடம் கிருஷ்ணமூர்த்தியின் அளவு கடந்த நகைச்சுவை உணர்வு தன்னிடமும் அப்படியே குடிகொண்டிருந்தாலும், இக்கொடிய நோய் தாக்கிவிட்ட நிலையில் அதுவும்கூட தனது மன நிம்மதிக்கு கைகொடுக்க முடியவில்லை. தனது மரண வேதனையை வேறு யாரும் கண்டுகொள்ளா வண்ணம் தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கலங்கிக் கண்ணீர் வடித்து துடித்துத் துவண்டார்.
அற்புதமான அழகிய ஓவியத்தை அற்பமான கறையான் மெல்ல மெல்ல அரித்து அலங்கோலப்படுத்தியது போல அவரின் அழகிய மேனி குரூரப் படுத்தப்பட்டு விட்டது. தனது இந்த கோரமான நிலை கண்டு தனது உறவுகளும் மற்றவர்களும் பரிதாபப்படவோ கவலைப்படவோ, உதவவோ எண்ணிவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே அவர் சென்னையை விட்டு தனது நாட்களை கேரளத்தில் கழிக்க முடிவெடுத்தார்.
தனிமையும் ஏகாந்தமும் மட்டுமே தன் நோய் தீர்க்கும் உன்னத மருந்து என்றும்  தீர்மானித்தார். இவ்வாறான தனிமையே அவருக்கு தன் வாழ்க்கைக்குப் பிறகான பயனுள்ள செயல்பாடுகள் குறித்து சிந்தித்து செயல்படத் தூண்டின. அதே சமயம் தன் நெருங்கிய உறவுகளற்ற அந்த சூழல் அவருக்கு பல இக்கட்டுகளையும் பின்னால் ஏற்படுத்தியது.
ஒரு சூழ்நிலைக் கைதியின் நிலையையும் அவருக்கு வழங்கியது. பிறகு ஒரு கட்டத்தில் அவரால் ரகசியமாக தன் சுய முடிவின் படி உருவாக்கப்பட்டதாய் கூறப்படுகிறது ஓர் ஒப்பற்ற உயில். அது என்ன சொல்கிறது . பிறகு பார்ப்போம்.
காலங்கள்கடந்தன. அவர் மேனியின் கோலங்களும் மெல்ல, மெல்ல மாறின.
பாசத்தைக் கொட்டிக்கொட்டி வளர்த்த பெற்றோரின் இழப்பும் தன்னை முழுமையாய் நேசித்தவர்களின் பிரிவும் அவரை விரக்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டன. தான் வாழ விரும்பிய கணவர் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளுடனான அழகான வாழ்க்கையை. தங்கையாய் காதலியாய் மனைவியாய் தாயாய் அண்ணியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் சகல பரினாம வளர்ச்சிகளையும் இவர் தனக்குக் கிடைத்த திரைக் கதாபாத்திரங்களீன் மூலமாக மட்டுமே வாழ்ந்து பார்க்க முடிந்தது.
பிறகு ஒரு கட்டத்தில் உடலும் மனமும் சோர்ந்து வாழ்வே விரக்தி யான சமயத்தில் மீண்டும் தீர்ப்பு மூலம்  கிடைத்தது ஸ்ரீவித்யாவுக்கான சொத்துக்கள். தன்னைச் சுற்றிய சில சொந்தங்களும்  தன்னை விட்டுப்போய் மணவாழ்வும் பொய்யாகி  எல்லாம் சூன்யமான நிலையில் தனக்கச் சொந்தமான திரண்ட சொத்துக்களை என்ன செய்வது என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்தார் ஸ்ரீவித்யா.
கலைகளின் மீது அளவற்ற தாகம் கொண்டிருந்த தனக்கு  அதே துறையில் ஈடுபட்டிருந்த தன் பெற்றோரின் உதவி கிடைத்ததால் மட்டுமே பிரகாசிக்க முடிந்தது என்பதையும், அதற்கான பொருளாதாரம் அவர்கள் மூலமே கிடைத்தது என்பதையும் நன்கு உணர்ந்த ஸ்ரீவித்யா அவ்வாறு வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்டவர்களின் வளமான எதிர்காலம் கருதி ஒரு சிறப்பான முடிவை எடுத்தார்
அதன் படி தனக்கான சொத்து முழுமைக்குமான உயிலை எழுதினார்.அந்த உயிலின் படி பல கோடி ரூபாய் மதிப்புக்கான தனது  அசையும் மற்றும் அசையாச்சொத்துக்களையும் தன் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத் தொகைகளையும் காட்டி இவைகளில் விற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் விற்று ரொக்கத் தொகையுடன் கூட்டி மொத்தத்தையும் ஒரு ட்ரஸ்ட்டின் மூலமாக வங்கியில் டெபாசிட் செய்யும் படியும்
அந்தத்தொகை பெரும்பாலும் தான் விரும்பியுள்ளபடி இசை மற்றும் நடனம் கற்பிக்கும் பள்ளிகளில் அவற்றில் அதிகத்திறமையும் அதே சமயம் வசதியற்றும் உள்ள மாணவர்களைச் சேர்த்து பயிற்சி அளிக்க வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவரால் கையொப்பமிடப்பட்டுள்ள இந்த உயிலில் மேற்கூறிய செயல்பாடுகள் அனைத்துமே கேரள மானிலம்  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழுத்தக்கோட்டில் தாகூர் நகரில் வசிக்கும்திரு கே.பி.கணேஷ்குமார் மூலமாகவே நடத்தப்பட
======
2006ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவரால் கையொப்பமிடப்பட்டுள்ள இந்த உயிலில் மேற்கூறிய செயல்பாடுகள் அனைத்துமே கேரள மானிலம்  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வழுத்தக்கோட்டில் தாகூர் நகரில் வசிக்கும்திரு கே.பி.கணேஷ்குமார் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கே.பி.கனேஷ் குமார்தான் சில நாட்கள் முன்புவரை கேரளா மானில கலை  மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சராகப்பணியாற்றி வந்தவர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
 தற்போது தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ப்ரச்சனையில் ஈடுபட்டு கைகலப்பாகி  மீடியாக்களில் பரபரப்பாகிவிட்ட கேரள எம்.எல்.ஏ தான்  இந்த கே.பி.கனேஷ் என்பவர்.
சொந்தத் தந்தையையே எதிர்த்து கட்சி நடத்தியவர். தன் தந்தையை ஏமாற்றி குடும்பச் சொத்து அனைத்தயும் பிடுங்கிக் கொண்டவர். தன் பதவிக்காக  அடிக்கடி பல கட்சிகள் மாறியவர். சொந்த மனைவியை விட்டு விட்டு தன் மகனின் நண்பனாய் இருந்தவனின் தாயையே சேர்த்துக்கொண்டு குடும்பமும் மும்மாளமுமாய் இருந்து வந்தவர். அதனால் தன் அரசியல் வாழ்க்கயே  தற்போது ஆட்டம் கண்டு போய் இருப்பவர்.
இவ்வளவு கபட நோக்கமும் செயல்பாடுகளும் கொண்ட ஒரு நபரை நம்பி எப்படி ஸ்ரீவித்யா அவரது முழுப்பொறுப்பில் இந்த உயில் பொறுப்பை ஒப்படைத்தார், இந்த நிர்ப்பந்தம் அவருக்கு எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது என்பதெல்லால் புரியாத புதிராகவே உள்ளன.
எவ்வளவோ முறைகள் யார் யாரையோ சந்தித்து முறையிட்டும் வேண்டியும் இதுவரை இம்மி அளவும் உயிலின் படியான நடவடிக்கைகள் ஊசி அளவும் நகரவே இல்லை. திரைத்துறை சார்பான தற்போதய தமிழக முதல்வரின் மேலான தலையீட்டால் இந்த மேன்மையான ஸ்ரீவித்யாவின் வாழ்நாள் ஆசை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வேண்டுகின்றார்கள்
மனிதர்கள் பொது வாழ்வில் எப்படிப்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் கணவன் மனைவி பிள்ளைகள், உடல்நலம், ஆயுள், பொருளாதாரம், போன்றாவையின் அமைப்போ காலத்தால் மிக மிக ரகசியமாகவே தீர்மானிக்கப் படுகின்றன என்பதற்கு ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
===========

.
  .
.

திருநெல்வேலி வெங்கடேசன் சுவாமிகள்

இன்றைய மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் தவிர சமுதாயத்தில் மேலும் பல தேவைகள் கூடிக் கொண்டே போகின்றன. இதனால் இவர்களின் எதிர்பார்ப்பும், பணத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் இவைகளால் துருப்தி அடையாத மனிதன் மன அமைதியை தேடி அலையும் சம்பவங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
அப்படித்தேடி அலைபவர்கள் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் ஆழ்ந்து  யோசிக்காமல் அவர்களின் போதனைகளை வேத வாக்காக எண்ணி மயங்கி, மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாய் மாறி விடுகிறார்கள். தங்களின் குறைகள் எல்லாம் அவர்களால் முழுமையாகத் தீர்க்கப்பட்டு விடுவதாகவும் நம்பி சரணாகதி அடைந்து விடுகிறார்கள், இதைப் பயன்படுத்தி நாட்டில் போலிச் சாமிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
நாம் இப்போது பார்க்கப்போகும் சாமியார் ஒருவரின் நடவடிக்கையோ வேறு ஒரு வினோதமான வகையாக உள்ளது. இவர் வழங்கும் மிக வித்யாசமான அருள்வாக்கு முறையின் உண்மையையும் அதன் பின்னணி பற்றியும் நாம்  பார்க்கலாமா.
===========
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வரும் பிரதான சாலையில் உடையார்பட்டி பைபாஸ் அருகில் முன் பகுதியிலேயே அமைந்திருக்கிறது பஞ்சமுக ஆஞ்சனேயர் திருக்கோவிலும், அதனுடன் இணைந்த அண்டகாளி அம்மன் திருக்கோவிலும். இக்கோவிலை உருவாக்கி தற்போது நிர்வகித்தும் வருகிறார் வெங்கடேச சுவாமிகள் இவருக்கு வயதோ இவரது மனைவி பெயர் கலா. இவர்களுக்கு விவேக், குமார், மீனா என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சிறு வயது முதலே பக்தி வழி பாட்டில் அதிகம் ஈடுபாடுகொண்டிருந்த இந்த வெங்கடேச சாமிகள் முன்பு சொந்தமாக டயர் மற்றும் ரீட்ரேடிங் கம்பெனியை நடத்தி வந்தார். தொழில் மிகச் சிறப்பாக நடை பெற்று வந்தாலும் மனதில் பக்தி வழிபாட்டிலேயே மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டி வந்தார். நாட்கள் செல்லச்செல்ல இவர் கொண்ட பக்தி ஈடுபாடும் மிக மிக உச்சக்கட்டத்தை அடைந்தது.
ஒரு நாள் அதிகாலை  எழுந்தவர் உற்சாகக் கூக்குரல் எழுப்பி ஆஞ்சனேயர் புகழ்பாடத் தொடங்கி விட்டார். இந்த திடீர் மாற்றம் கண்டு குழம்பி காரணம் அறியாமல் திகைத்த குடுப்பத்தினரும் அக்கம் பக்கத்தார்களும் அவரிடம் விவரம் கேட்க அவரோ
முதல் நாள் இரவு தன் கனவில் ஆஞ்சனேயப் பெருமான் வந்ததாயும், திவ்ய தரிசனம் தந்து தன்னை ஆட்கொண்டு விட்டதாயும், ஆஞ்சனேயருக்குக் கோவில் கட்டி விசேச பூஜை புனஸ்காரங்கள் தவறாது வெகு சிறப்பாய்ச் செய்யவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டதாயும் பக்திப் பரவசத்துடன் கூறினார்.
இப்படி திடீர் ஆனந்தப் பெருக்கில் கூறிய அவரின் வார்த்தைகளைக் கேட்டு முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவர் ஏதோ பக்தி மேலீட்டால் இவ்வாறு நடந்து கொண்டதாய் எண்ணி நாட்கள் சென்றால் எல்லாம் சரியாகி விடும் என்றும் விட்டு விட்டார்கள்.
ஆனால் அவரின் பக்திப் போக்கிலோ எந்தவித மாற்றமும் ஏற்படவே இல்லை. தான் விரும்பிய படியும் ஆஞ்சனேயர் தன்னிடம் கனவில் வந்து உத்தரவிட்ட படியும் உடனடியாக கோவில் எழுப்பும் பணியில் மிகத் தீவிரமாய் ஈடுபடத் தொடங்கினார் வெங்கடேசன். தொழில் பற்றிய ஈடுபாடோ கொஜ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.
நாளொரு உயரமும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலையம். பக்தர் வெங்கடேசனின் பக்தி ஆவேசம் அத்துடன் முடிந்துவிட வில்லை. மேலும் மேலும் அதிகரித்து அக்கோவிலுக்குப் பக்கமாகவே மேலும் ஒரு கோவிலை அண்டகாளி அம்மனுக்காகக் கட்டி முடித்தார்.
இவ்வாறாக தெற்குப் புறம் ஆஞ்சனேயருக்கும், கிழக்குப் புறமாக அண்டகாளி  அம்மனுக்குமாய் அற்புதமாக அமைந்தன கோயில்கள். மேலும் ஒரு சிறப்பாக கோவிலின் முதல் தளத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. வாழ வந்த காளிஅம்மன் என்ற பெயரிலும் இக் கோவில் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ சித்த ராமலிங்கேஸ்வரர் அறக்கட்டளை என்ற பெயரில் கோவில் நிர்வாகம் இயங்கி வருகிறது.
இவ்வாறு முழுமையான கோவிலில் தினமும் வித வித அபிசேகங்களும்  ஆராதனைகளும் அலங்காரங்களும், உற்சவங்களும், இடைவிடாது சிறப்பாக நடைபெறத் தொடங்கின. நாளொரு பூஜயும் பொழுதொரு யாகமுமாய் நடந்துவந்த வேளையில் தான் சில அதிசய மாற்றங்கள் நிகழ தொடங்கின நம் வெங்கடேசனிடம்.
வழிபட வரும் பக்தர்களுக்கு மன அமைதியும் நம்பிக்கையும் தரும் படியாக வெங்கடேசன் கூறிய சில நல்ல ஆசிகளும், நம்பிக்கை வார்த்தைகளும் பிறகு அப்படியே பலிக்கத் தொடங்கியதைக் கண்டு பக்தர்கள் மிகுந்த ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடையத் தொடங்கினார்கள். இந்த அதிசய நிகழ்வுகளால் மெல்ல மெல்ல சாதாரண பக்தர் வெங்கடேசன், வெங்கடேச சாமிகளாக பக்தர்களுக்கு அறிமுகமானார்.
சாமிகளின் மூத்த மகன் விவேக் ஒரு சிவில் இஞ்சினியர். திருமணமும் முடித்தவர். இரண்டாவது மகன் குமார் என்பவரோ தன் தந்தையைப்போல பக்தியில் மேம்பட்டவராய் தந்தையுடனேயே இருந்து அவரது ஆன்மீகப் பணியில் முழுமையாய் அவருக்கு உதவி வருகிறார்.
வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அண்டகாளி அம்மனுக்கு உச்சக்கட்டமான பூஜைகளும், பூஜையின் முடிவில் சாமிகளின் அருள்வாக்கு நிகழ்சிகளும் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அப்போது வெங்கடேச சாமிகள் அம்மனோடு அம்மனாக ஒன்றி மோனத் தவத்தில் மூழ்கிய படியே ஆடவும் பாடவும் ஆசி வளங்கவுமாக அமர்க்களம் செய்கிறார்.
காளி அம்மனுக்கான நள்ளிரவுப் பூஜைகளோ நம்மை அப்படியே மெய்சிலிர்க்க வைத்து மிரள வைக்கின்றன. ஆட்டுக் கடாயின் கழுத்தை அறுத்து ரத்த பலி கொடுப்பதும், வெட்டப்பட்ட ஆட்டைத் தோளில் போட்டபடியே அருள் வந்ததாய் ஆட்டம் போடுவதும், பெண்கள் வேப்பிலை சகிதமாய் சக்கரம்போல் சுற்றிச் சுழன்று பக்தியுடன் பம்பரமாய் ஆடி ஓடுவதும் பக்தர்களை நடுங்க வைக்கிறான.
மின்னிடும் வகை வகையான வண்ண வண்ண  விளக்குகளும், நெருப்புப் பந்தங்களும், வான வெடிகளும் கற்பூர ஜோதியும், பஜ்சமுக தீபங்களும், கணக்கற்ற தீச்சட்டி வழி பாடுகளும், பட்டாசுச் சத்தங்களும், பக்தர்களின் மன இருளைப் போக்கி பில்லி சூனியங்களை விரட்டி சாந்தப்படுத்துகின்றன. அதே நள்ளிரவில் உக்கிரமான முனீஸ்வரருக்கும் வழிபாடுகள் அற்புதமாய் நடக்கின்றன. துர்க்கை வேடமனிந்த நபர் அசுர வேகத்தில் ஆக்ரோச நடனம் ஆடுவதும், பக்தர்களீன் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதும், அச்சத்துடன் கூடிய பக்தியை வழங்குகிறது.
எட்டுக் கரங்களுடனும், அருகில் கதாயுதத்துடனும், முகத்தில் வீரமும் மனத்தில் ஈர முமாகக் காட்சி தரும் அஷ்டபுஜ ஆஞ்சனேயரின் தோற்றமோ தத்ரூபமாக திகழ்கிறது. நம்பிக்கை ஊட்டுகிறது. நாதஸ்வரம், தவில் சகிதமாய் இசைக்கப்படும் இசையோ நம்மை வேறு உலகுக்கே கூட்டிச் செல்கிறது. முழு முதற்கடவுள் கணபதிக்கும், முத்தமிழ்க் கடவுள் முருகனுக்கும், ராகு கேதுவுக்கும், சூலத்திற்க்கும், என்று வகை வகையான தீபாராதனைகள் விடிய விடிய நடந்தவண்ணமாகவே இருக்கின்றன.  
அப்போதெல்லாம் தானும் காளியோடு காளியாக மாறி சூலத்தைக் கையில் எடுத்து ஓங்காரச் சிரிப்புடன் குதித்து தாண்டவம் ஆடி,பெரும் அதட்டலுடன் அருள் வாக்கு வழங்குகிறார். பில்லி சூனியத்தாலும் கர்ம வினையாலும், கடும் நோயாலும்  பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அபிஷேக மஞ்சள் நீரை ஓங்கி அடித்தும்,திரு நீறு மற்றும் குங்குமத்தைப் பூசியும் கஷ்டங்களிலிருந்து உடனடி நிவாரனம் தருகிறார் வெங்கடேச சாமிகள்.
அம்மனும் இவரும் வேறு என்றில்லாமல் அம்மனுடன் உறைந்தபடியே அம்மனுக்கான அபிசேகஞ்களைத்தானும் ஏற்றுக்கொள்கிறார். திருமணத்தடை, கேன்சர் போன்ற தீராத நோய், குழந்தைப்பேறு இல்லாமை, கல்வியில் மந்தம், தொழில் நொடிப்பு, கடன் தொல்லை, ஏவல் பில்லி, என்று சகல ரோகத்துக்கும் சஞ்சீவி மருந்தாய் தீர்வு தருகிறார் வெங்கடேச சாமிகள்.
இந்த விசயத்தில் இந்த நாளில் உனக்கு இவ்வாறு தீர்வு கிடைக்கும் என்றும் இன்ரிலிருந்து இத்தனையாவது நாளில் காரியம் ஜயமாகும் என்றும், துல்லியமாஹ இவர் கூறும் அருள் வாக்கால் பக்தர்கள் கவலை மறந்து கண்ணீர் வழிய பேரானந்தத்துடன் நம்பிக்கையோடு செல்கின்றார்கள்.
அண்டகாளி அம்மனுக்கு  கொடைவிழா எடுக்க வேண்டி பந்தல் கால் நட்டும் ஏழு புது மண் கலயத்தில் நவ தான்யங்களைப்பாவியும், அவற்றில் பால் ஊற்றி முளைப்பாரி கட்டவைத்தும்  சங்குகள் முழங்க கோலாகலமாகத் துவக்குகின்றார்கள்.  அத்துடன் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்து திருநீரணிந்து குடங்களில் புனித நீர் மொண்டு ஊரின் முக்கிய சாலைகளின் வழியாக ஆட்ட பாட்டங்களுடனும், வான வேடிக்கைகளுடனும், பக்திப் பெருக்குடனும், உற்சாகப் பெருக்கோடு ஊர்வலம் வந்து  வாழவந்த காளி அம்மனுக்கும் ஆஞ்சனேயருக்கும் அபிசேகம் செய்கின்றார்கள்.
சனி மற்றும் புதன் கிழமைகளில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு வடைமாலை வெண்ணை சாத்தியும் வெற்றிலை மாலை சூட்டியும் பால்குடம் எடுத்தும், வெங்கடேசசாமியின் தலைமையில் அற்புதமாக வழிபாடு நடத்துகிறார்கள். பால்க்குடங்களை பூஜையில் வைத்து பூஜித்து கலசயாகம் செய்தும், ராமனாம வழிபாடுகள் நடத்தியும் ,அஷ்டபுஜ அனுமனுக்கு தொடர் மணி ஓசை முழங்க  அற்புதமாய் பூஜைகள் இரவு முடிய  தொடர்கின்றன.
பெண்கள் கூட்டம் பக்தியுடன் நடத்தும் கூட்டு வழிபாடுகளோ, விளக்கு பூஜைகளுடன்  ஜே  ஜே என்று அமர்க்களப்படுத்துகின்றன.
எந்தவித தட்சனைகளோ கட்டணமோ வாங்கிக்கொள்ளாமல் இவர் செய்யும் இந்த பக்தி சேவையின் போது இவர் கூறும் முக்கிய கட்டளைகள் என்னென்ன தெரியுமா.  தன்னை முழுவதுமாக நம்ப வேண்டும், தனக்கு அடிமையாய் இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும், எந்த தீய  சக்தியுமே தன்னை எதிர்க்க முடியாது, ஏனென்றால் தானே காளியும் ஆதிபரா சக்தியுமாக இருக்கிறேன் என்பதாகும்.
அம்மனுக்கான அபிஷேக சந்தனத்தை தன் தலையில் ஊற்றவைத்து ஆனந்தமயமாய் ரசித்து திளைத்து பரவசப்படுத்துகிறார் அம்மனாய் மாறிய வெங்கடேச சாமிகள். இவருடனான கூட்டு வழிபாடுகளாலும் பக்தி கோசங்களாலும் மனம் கரைந்து துன்பம் விலகி அமைதி கூடி, நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடிகிறது என்கிறார்கள் இவரது பக்த சிரோன்மணிகள்.
மஞ்சளாடை பள பளக்க,  தங்கவாளோ தக தகக்க, குங்கும முகத்தில் அருள் வழிய, கோலக்கரங்கள் ஆசி தர, பட்டுத்துகிலில்  பாதாதி கேசம் பத்ரகாளி பாங்குடன்,அருள் பாலிக்கிறாள்.
மக்கள் வாழ்க்கை முழுவதுமே பெரும்பாலும் கவலைகளாலும் கஷ்டங்களாலும், மட்டுமே அவதிப்படும் நிலை ஏற்படும்போது மனம் மிகவும் நொந்து ஆதரவு தேடி அங்கும் இங்குமாய் அலைந்து முடிவில் இறைவன் திருவடியே சரணம் என்று தீர்மானித்து கோவில்களை நாடுகின்றார்கள்.
அப்படி நாடும் கோவில்கள் உண்மையிலேயே அவர்களுக்கு அமைதியையும் ,நிம்மதியையும் செல்வத்தையும் கொடுக்கிறது என்றால் அது வரவேற்கவேண்டிய ஒன்றுதான். அதே சமயம் மூடத் தனத்தையும் ஏமாற்று வேலைகளையும் பக்தர்களிடம் திணிக்கின்றனவா என்று பார்ப்பதிலும் பக்தர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது
 ……..

நடிகை விஜயலட்சுமியின் கதை



திரைப்பட துறை என்பது மிகச்சாதாரண மக்கள் முதல் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் பணக்காரர்கள் வரையில் அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், பெண்களும் திரைப்படத்துறையின் மீது இருக்கும் மோகத்தினால் கதாநாயகன்,  கதநாயகி, இயக்குனர் என்று ஏதாவது ஒரு கனவோடு சென்னையை நோக்கி படையெடுக்கிறார்கள்.
சென்னை வந்தவுடன் திரைப்படத்துறை சார்ந்த பிரபலங்களை இவர்கள் சந்திப்பது என்பது சவாலான ஒன்று. அப்படியே சிலரஈ சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டினாலும், இவர்களைப் பற்றியெல்லாம் பிரபலங்களுக்கு சிந்திக்க கூட நேரமில்லை.அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள் என துன்பப்பட்டு கிடப்பதை விட கிடைக்கின்ற வேலையை செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
இன்னும் சிலரோ எப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தாலும் சாதிது விடலாம் என்று, கனவுக் கோட்டடை கட்டிக்கொண்டு தங்குவதற்க்கு கூட இடமில்லாமல், பூங்காக்களிலும், சுரங பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், உறங்கிவிட்டு பீடி, சிகரெட், குடிப்பழக்கம் என பல தீய பழக்கஙளுக்கு அடிமையாகி வாழ்க்கையயே தொலைத்து விட்டு நிற்பார்கள்.
திரைப்படத்துறை என்பது பணம் படைத்தவர்களுக்கும், திரப்படத்துறையை தாங்கி பிடித்திருப்பவர்களுடைய குடும்ப வாரிசுகள் என புரையோடிப் போயிருக்கும் அந்த துறையில் சாதாரண பின்புலத்திலிருந்து வந்து சாத்திதவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஊரில் இருந்து கொன்ண்டு வந்த நகைகளையும் பணத்தையும் சிலர் இழந்துவிடுவார்கள். ஆனால், பெண்ணகளின் வாழ்க்கையோ சின்னபின்னமாகிவிடும். கனவை நிஜமாக்கிவிடலாம் என்ற கற்பனையால் நிஜ வாழ்க்கையை தொலைத்துவிட்டு துன்பத்தின் உச்சதிற்கே சென்ற பெண்கள் ஏராளம்.
சொந்த நாட்டில் பிறந்தவர்களுக்கே இந்த நிலமை என்றால் அரசாங்கத்தின் அச்சுறுத்தளுக்கு பயந்துக்கொண்டு  உயிர்பிழைத்தால் பொதும் என்று உறவுகளையும், உடைமைகளையும் இழந்துவிட்டு தப்பித்து வரும் நமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் இதுப்போன்ற ஆசைகள் இருக்கதான் செய்கின்றன. பட்ட காயத்திற்கு மருந்து போடுவதற்க்குள்ளாகவே சினிமாத்துறையில் தடம் பதிது விட வேண்டும் என்று போலிகள் சிலரிடம் ஏமாந்து விடுகிறார்கள்.
சமுதாயத்தில் அடையாளம் காணப்படும் நபராக வளர வேண்டும் என்று அடையாளம் தெரியாமல் போய்விடுகிறார்கள். இப்படிதான் கதநாயகியாக ஆக வேண்டுமென்ற கனவுகளோடு இலங்கை மண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்த விஜயலட்சுமியினுடைய கதையை இப்போது பார்க்கலாம்.
இலங்கையை சேர்ந்த சின்னலட்சுமணனன் கமலா தம்பதிகளுக்கு குமார், சந்திரசேகர், ரமேஷ், லட்சுமி, நகராணி, அமுதா என்கிற விஜயலட்சுமி என்று ஆறு பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த குடும்பத்திற்கு தலை மேல் இடியாக வந்து விழுந்தது இலங்கையில் நடைப்பெற்ற போர். உயிருக்கு பயந்த்யுக்கொண்டு  சின்னலட்சுமணனன் கமலா தம்பதிகள் குழந்தைகளோடு 1990-ஆம் ஆண்டு மிக முக்கியமான மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் தஞ்சமடைந்தார்கள்.
இலங்கையில் செய்து வந்த தொழில், அசையா சொத்துக்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்கையோடு வந்த இவர்கள் தினக்கூலிகளாக வேலை செய்து தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்தார்கள். திருவண்ணாமலை அருகே உள்ள கலசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட காலக்கட்டதில்  மீண்டும் இலங்கைக்கே திரும்பினார்கள்.
இலங்கையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், விஜயலட்சுமிக்கும் தர்மா என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. அங்கு அவர்களுக்கு கீர்த்தனா என்ற அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நேரத்தில் இலங்கையில் 2010-ஆம் ஆண்டு மீண்டும் போர் தொடங்கவே தந்தை சின்னலட்சுமணனும், சகோதரர் ரமேஷும் இறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் விஜயலட்சுமியும், அவரது கணவர் தர்மாவும் த்யனது கீர்த்தனாவுடன் கடல் மார்க்கமாக தப்பித்து தமிழகம் வந்தனர். மூன்று நாள் கடல் பயணத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தன் குழந்தைக்கு கடல் நீரையே குடிநீராக கொடுத்ததாக உருக்கமாக கூறுகிறார் விஜயலட்சுமி.
தனது குழந்தை கீர்த்தனாவின் சட்டையை கழட்டி உதவிக்கு காட்ட, மீனவர்கள் அவர்களை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டுவதுள்ளனர். தனது தாய் கமலா, தாஙள் இலங்கையில் இருந்து தப்பி வந்தபோது நகை, பணம் தரவில்லை என்றும் அதற்கு பதிலாக உயிருக்கோ உடலுக்கோ ஆபத்து வந்தால் சயனைடை சாப்பிட்டு இறந்துவிடுமாறு கூறி அணிவித்ததாக கூறினார்.
தமிழர்கள் வாழும்போது மானத்தோடு வாழ வேண்டும், சாகும்போது வீரத்தோடு சாகவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படித்தான், விஜயலட்சுமியின் தாயாரும் கூறியுள்ளார். இப்படி வலி நிறைந்த பின்புலத்தைகொண்ட விஜயலட்சுமி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவில் சிங்கார சென்னைக்கு தனது கணவர் தர்மா மற்றும் கீர்த்தனாவுடன் சின்மயா நகரில் குடியேறினார்.
விஜயலட்சுமியின் கணவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். குழந்தை கீர்த்தனாவை ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு சினிமாவில் நடிப்பதற்கான வாஇப்பு கேட்டு பல இடங்களில் அலைந்து திரிந்துள்ளார். இந்த நேரத்தில் வடபழனி அருகே உள்ள திருநகர் பகுதியில், அழகிரி தெருவில் அமைந்திருந்த மாருதி மூவி மேக்கர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கேட்டு சென்ற போது பாலமுருகன் என்பவர் அறிமுகமானார்.
விஜயலட்சுமியிடம் தன்னனை இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பாலமுருகன் தான், ‘உயிரோடு விளையாடு’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதகவும், அதில் அவரை கதாநாயகியாக ஆக்குவதாக உறுதியளித்துள்ளார். எந்த பின்புலமும் இல்லாமல் சென்னை வந்த விஜயலட்சுமியை கதநாயகியாக ஆக்குகிறேன் என்ற பாலமுருகனின் பேச்சை வேதவாக்காக நம்பினார்.
விஜயலட்சுமியின் நம்பிக்கையை தனகு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட த பாலமுருகன், துளசி என்ற பெண்ணை திருமணம் செஇதுக்கொண்டு பாடியநல்லூரிலுள்ள முனீஸ்வரன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தன் கீர்த்தனா, பரத் என்ற குழந்தைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமியை தன் வீட்டருகே குடி வந்தால் வாடகை குறைவாக இருக்கும் என்று அங்கேயே குடியேற செய்துள்ளார்.
ஒருநாள் விஜயலட்சுமியிடம் நான் உன்னை கதாநாயகியாக ஆக்குவதாக கூறிய ‘உயிரோடு விளையாடு’ திரைப்படம் பணம் நெருக்கடியால் தடைப்பட்டுள்ளது என்றும் அதற்கு விஜயலட்சுமி பணவுதவி செய்யுமாறு கூற, விஜயலட்சுமியும் தன்னிடமிருந்த நான்கு லட்சம் ரொக்க பணத்தையும், 15 பவுன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆன பின்பும் படம் பற்றி பாலமுருகன் வாயை திறக்காததால், அவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இந்த நெருக்கடியை சமளிக்க இரண்டு போஸ்டர்களை அடித்து கொண்டுவந்து விஜயலட்சுமியை சமாதனம் செய்துள்ளார்.
இலங்கையிலுள்ள விஜயலட்சுமியின் தாய் கமாலாவிற்கு இதய நோய் தாக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, அவரை பார்க்க இலங்கை செல்ல பாஸ்போர்ட் இல்லையென்று கூறியிருக்கிறார். உடனே இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாலமுருகன் தன்னை திருமணம் செய்து கொண்டால் பாஸ்போர்ட் எளிதாக கிடைத்துவிடுமென்றும், இதற்கு இடையூறாக அவரது கணவர் தர்மா இருந்தால் இரண்டு போலீஸ்காரர்களை வைத்து நைய்யப்புடைத்து விவாகரத்து வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்தவுடன் விஜயலட்சுமியை கத்தியால் குத்தி, இந்த விஷயங்களை வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
உடனே அதிர்ந்த போன விஜயலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, தனது கணவர் தர்மாவிடமும் இதை தெரிவித்திருக்கிறார். அடுத்தகட்டமாக பாலமுருகனின் சுயரூபம் வெளிப்பட்டவுடன் தான் கொடுத்த பணத்தையும் நகையையும் கேட்க துவங்கினார். ஆனால், பாலமுருகனோ பணத்தையும், நகையையும் கொடுப்பதாக இல்லை. மாறாக விஜயலட்சுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாலமுகனுடைய மிரட்டலுக்கு பயந்து போன விஜயலட்சுமி, சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான்கு லட்சம் ரொக்க பணத்தையும், 15 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொண்டு தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக கூறி ஏமாற்றியதாகவும், அதை மீட்டு தருமாறும் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி மறுநாள் நாளிதழ்களில் வந்தவுடன் பாலமுருகனால் பாதிப்படைந்த பலர் புகார் அளித்தனர்.
வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ஞானராஜ் என்பவரிடமும், வங்கியில்  ஒன்றரை கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் சிவா என்ற தயாரிப்பாளரிடமும், தனக்கு ரயில்வே அதிகாரிகள் நண்பர்கள் அன்றும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூரி ஜானகிராமன், மனோகரன் என்பவர்களிடம் தலா 15 லட்சமும், திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி அன்பரசு என்பவரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றியிருப்பதாகவும் புகார்கள் குவிய தொடங்கியுள்ளன.
விஜயலட்சுமி ஏமாந்த பணத்தை அவரது கணவர் தர்மா கேட்டபோது விஜயலட்சுமியை கொலை செய்துவிடுவேன் என்றும், தன் ஒரு ரவுடி என்றும், தான் ஏற்கனவே ஒரு கொலை செய்திருப்பதாகவும் அதிரவைத்துள்ளார். அதோடு நில்லாமல் தன் பங்கிற்கு பாலமுருகனும் ஒரு புகார் மனுவை காவல்த்துறை ஆணையிரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் விஜயலட்சுமியுடன் தான் குடும்பம் நடத்தியதாக கூறி அதிரவைக்க, இதனை அறிந்த விஜயலட்சுமி தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கண்ணீரோடு தெரிவித்த விஜயலட்சுமி, தனக்கு பணம் பிரதானம் இலாஇயென்றும் மானம் தான் முக்கியம் என்று கூறிய அவர், பாலமுருகனை அண்ணன் என்று அழைத்துவந்த தான் எப்படி அவரோடு குடும்பம் நடத்தியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, அடுக்கடுக்காக பாலமுருகன் பொய் கூறினால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கதறினார்.
வெளுத்துக்கட்டு, , ஆசாமி, விசுவாசம்,ஆகிய திரைப்படங்களிலும் வந்தாலே மகராசி, அவள் ஒரு மின்சாரம், ஆவிகள் ஆயிரம், விசாரணை, வைர நெஞ்சம், வைராக்கியம், திருமதி செல்வம், துளசி, வசந்தம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடதகுந்தது.
நடிகை விஜயலட்சுமி தனக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து ஸ்பைனல் கார்டு முறிந்து இல்லரத்தில் ஈடுபட முடியாது என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும், இப்படி இருக்கும்பட்சத்தில் பாலமுருகனுடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுப்பற்றி பாலமுருகனிடம் கேட்டபோது விஜயலட்சுமியின் புகார்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், விஜயலட்சுமிக்கு மருத்துவ உதவி முதல் அனைத்து உதவிகளையும் தான் தான் செய்துவந்ததாகவும் தன்னை விஜயலட்சுமி துன்புறுத்தியதகவும் கூறியுள்ளார். செய்திதாள்களில் தன்னைப்பற்றி செய்தி வந்ததால் குடும்பத்தினர் ஆவேசம் அடைந்துள்ளதாகவும் அதனால் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் சென்னை வந்த்தால் பெசுவதாகவும் அவர் பாலமுருகன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பு புகார்களை விசாரிக்கும்படி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மாதவரம் துணை ஆணையருக்கு ஆணையிட்டுள்ளார். துணை ஆணையர் இந்த புகாரை செங்குன்றம் காவல் ஆய்வாளர் மாதேஸ்வரனை விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். இரு தரப்பு விவாதன்களை விசாரித்த பின்னரே உண்மை தெரியவரும்.