வியாழன், 31 மார்ச், 2022

நடுகல் வரலாறும் நம்பிக்கைகளும் - முனைவர் கோ.ஜெயக்குமார்,

நடுகல் வரலாறும் நம்பிக்கைகளும் - முனைவர் கோ.ஜெயக்குமார்,

                                                (தொல்லியல் ஆய்வுக்கட்டுரை)

நடுகல் என்பது வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டது. பல்லவர், பாண்டியர், சோழர், கங்கர், நொளம்பர், விஜயநகரதார் என பல்வேறு அரசர்களது கால கட்டத்தில் கிடைக்கப்பெற்றாலும் பல்லவர்காலத்தில் மிகுதியான நடுகற்களை காணமுடிகிறது. கிடைத்துள்ள அனைத்து நடுகற்களும் வட்டெழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்களிலுகம் ஒன்றிரண்டு கன்னட மொழியிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. வடமொழியில் நடுகற்கள் எதுவும் கிடைக்கவில்லை. உருவம் எழுதிய கல் உருவம் எழுதப்படாத கற்கள் என இரண்டுமே நமக்கு கிடைக்கின்றன. தெருச்சந்திகளிலும் பாதைச் சந்திகளிலும் இருக்கும் உருவம் எழுதாத கற்களை கவலையகல் எனவும், உருவம் எழுதிய கற்களை கடவுளெழுதிய கல் எனவும் சங்க இலக்கிய புறநூலான புறநானூறு குறிப்பிடுகின்றது.



நடுகற்களில் சிலவற்றில் பெயரும், எதற்காக இறந்து பட்டான் என்ற குறியீடுகள் மூலமாக அதன் விவரத்தை அறிய முடியும். குறிப்பாகபூசலில் பட்டான்என்றும்தொரு கொண்டு பட்டான்எனவும்தொரு மீட்டு பட்டான்என்றும் அமைந்திருப்பதை காணமுடிகிறது. மன்னனுக்காக நாட்டைப் பாதுகாக்கவும் ஆநிரைகளை கவர்ந்து செல்லும் கள்வர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க நடைபெற்ற போர்களில் மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடப்படும் கல் நடுகல் எனப்பட்டது.



நடுகல்லிற்கு பலவகையான பெயர்கள் இருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக வீரகல், கடவுலெழுதியகல், கவலையகல் என்ற பெயர்கள் வழங்கப்பட்டாலும் இவை சாதாரண நிலைகளில் உள்ள மக்களுக்காண பெயர்களாக மட்டுமே அறிய முடிகிறது. அரசனோ அல்லது அரசியோ இறந்து பட்டால் அவர்கள் நினைவாக எழுப்பப்படும் கற்கள் பள்ளிப்படை என்று அறிகிறோம். உதாரணத்திற்கு பஞ்சமாதேவி பள்ளிப்படை என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் சில மாவட்டங்களில் இப்பெயர்கள் வேறுபடுவதைக்காணமுடிகிறது. காரணம் வழிபடுகற்களாக நடுகற்கள் மாறியுள்ளது.



நடுகற்கள்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டாலும் இதுவரை 202 நடுகற்கள் மட்டுமே தமிழகத்தில் கிடைக்கப்பெற்றதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் இந்த புள்ளிவிவரம் என்பது குறிப்பிட்ட காலகட்டத்தோடு நிற்கிறது அதன் தொடர்ச்சியான பணிகள் குறித்த விவரங்கள் கணக்கிடப்படவேண்டும். குறிப்பாக திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் வேடியப்பன், கிருஷ்ணராயப்பன், மீனாரப்பன், சன்யாசியப்பன், ஆஞ்சநேயர்கல்லு, சிறைமீட்டான் கோயில் (நிரைமீட்டான் என்பதன் திரிபு), ஊமைவேடியப்பன், இரட்டைவேடியப்பன், சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேட்டு வேடியப்பன், மொச வேடியப்பன் ( சில நடுகற்களில் வீரனின் காலில் மாட்டுத்தலை இருப்பது போல அமைந்திருக்கும் இது சிரிய முயல் போல காட்சியளிப்பதால் இப்பெயர் வந்துள்ளது), கால் உடைந்தது போல இருக்கும் நடுகற்களுக்கு நொண்டி வேடியப்பன் என்ற பெயர்களை வைத்து வழிபடுவதை காணமுடிகிறது. வேடியப்பன் என்பது வேடுவர்கள் அதிகம் வாழ்ந்ததால் இப்பெயர் வந்ததோ என்ற ஐயம் தோன்றுகிறது.



போரில் இறந்த வீரர்களின் ஆவியானது விண்ணில் இருப்பதாக நம்பினர். இதனடிப்படையில் போர்கலத்திற்கு செல்லும் போது தங்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவும், நடுகற்களை வணங்கினால் விண்ணில் உள்ள ஆவியானது பூமியில் உள்ள நடுகல்லுக்கு வரும். அதோடு வழிபடும் மக்களுக்காண தேவைகளைத் தரும் என்ற நம்பிக்கை இருந்தது. இதனால் தான் போருக்கு போகும் முன்பாக நடுகற்களை வணங்குவதோடு பலிகொடுத்து மகிழ்வித்தல் போன்ற செயல்களை செய்தனர். நடுகற்களின் துணையைப்பெற்றால் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தை அறியமுடிகிறது.



இனக்குழு மக்களிடையே இவ்வகையான நம்பிக்கை இருந்ததை காணமுடிகிறது. நடுகல் வழக்கம் இனக்குழு மக்களின் கலாச்சாரம் என்பதை ஆராய்கின்றபோது அங்காமி நாகர்கள் தங்களின் மூதாதையர்கள் போரில் இறந்தால் அவர்களின் நினைவாக கல்நட்டு வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். அப்படி நடப்படும் கற்களே அம்மக்களின் கோயில்களாகும். போரில் இறந்து போன ஆவிகளுக்கு ஆக்கவுக் அழிக்கவும் சக்தி இருந்ததாக அவர்கள் நம்பினர். இதனால் ஆவிகளை மகிழ்விக்க பலிகொடுக்கும் வழக்கம் இம்மக்களிடம் தோன்றியது.



இவ்வகையான போர் ஏற்படுவதற்கு அடிப்படைகாரணம் என்ன என்று ஆராயும் போது உற்பத்தி என்பது சமமாக இல்லை. குறிப்பாக பாலைநில மக்கள் உழவுத்தொழில் செய்யமுடியாத சூழல் இருந்தது. முல்லை மற்றும் மருத நில மக்களின் முக்கிய செல்வமாக கருதப்பட்ட கால்நடைகளை கவருந்து செல்லும் தொழிலில் ஈடுபட்டனர். அப்படி கவர்ந்து வருபவர்களை பாலை நிலமக்கள் வீரர்களாக போற்றினர். வெட்சிப்போர் புரிந்து இறந்த வீரர்களுக்கும் நடுகல் நடப்பட்டது. இதனால் பாலை நில மக்களில் தொழில் நிரைகவர்தல் மற்றும் வழிப்பறி  ஆகியவை முக்கிய தொழிலாக இலக்கண நுல்கள் சான்றுபகர்கிறது.



      வேந்தன் விடுமுனைஞர் வேற்றுப்புலக்களவின்

      ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்.” ( தொல்காப்பியம் பொருளதிகாரம் பு. - 1003 )

அரசனது ஆணையை ஏற்று செயல்படும் நாட்டின் பாதுகாப்பில் உள்ள வீரர்கள் வேற்று நாட்டவர் கால்நடைகளை கவர்ந்து வந்து பாதுகாத்தலைப் பற்றி கூறுகிறது.



கொள்ளையர்களிடமிருந்து தமது செல்லவங்களை பாதுகாக்க முல்லை மற்றும் மருத நில மக்கள் கரந்தைப்போர் புரிந்தனர். இதில் மரண மடைந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்தனர். தலைவன் (மன்னன்) இறந்தால் புலவர்கள் அவரின் புகழ் பாடுவர். கல்நட்டு கோயில் கட்டுவர். போரில் இறந்து பட்டவன் சாதரண மக்கள் என்றால் புலவர்கள் பாடமாட்டார்கள். அரசர்களும் நடுகல் நாட்ட முன்வரமாட்டார்கள். மாறாக ஊர் மக்களும் உறவினர்களுக் கல்நாட்டி அவர்களால் முடிந்த அளவிற்கு சடங்குகள் நடத்துவர்.  நடுகல் நாட்டல் பற்றியச் செய்திகளை இலக்கண நூல்கலான தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும் சான்று பகர்கிறது.



தொல்காப்பியர் புறத்திணையியல் ஆறு துறைகளாக வகைப்படுத்திக் கூறுகின்றார். நடுகல் பற்றி பேசும் போது அதன் பல்வேறு நிலைகளை தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.

             காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,

       சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்.” ( தொல்காப்பியம் பு. -1006 )

போரில் இறந்த வீரனுக்கு கல்நடுவது வழக்கம், அந்தக்கல்லில் வீரனது உருவம் பெயர் மற்றும் இறப்பிற்கான காரணத்தை வடித்தல், தேர்வு செய்த கல்லை நன்னீராட்டுதல், கல்நடுதல், நட்டகல்லிற்கு சடங்குகள் செய்தல், சடங்கிற்கு பிறகு மலர்களைக்கொண்டு வழிபாடு செய்தல் போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.



நடுகற்களைப் பற்றி கூறும் புறப்பொருள் வெண்பாமாலை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

அவன்பெயர்கல் மிசைப் பொறித்துக்

 கவின்பெறக் கல்நாட்டினது.” ( பு.வெ.பொதுவியற்படலம் -12 )

கல்லின்மேல் இறந்துபட்ட வீரனின் பெயர் இடம் பெற்றதைக் கூறுகிறது. கற்காண்டல், காற்கோள்நிலை,  கல்நீர்படுத்தல், கல்நடுதல், கல்முறை பழிக்கல், இல்கொண்டு புகுதல் என்று ஆறு வகையான சடங்குகளைப் பற்றி கூறுகிறது.

 


       வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்

         சென்றி கண்முறை ஆதந் தன்று.” ( புறப்பொருள் வெண்பாமாலை - 1 )

பகைவரை வெற்றிகான நினைத்த மன்னன் அவர்களின் கால்நடைச் செல்வங்களை கொள்ளையடிக்க வீரர்களுக்கு பணிப்பதே வெட்சித் திணையாகும்.

இவ்வகையான கற்கள் எந்த இடங்களில் காணப்படுகிறது என்று பார்க்கும் போது ஊரின் புறப்பகுதிகளான மலைகள், ஏரிகள், குளங்கள், ஆறுகள், வயல்வெளிப்பகுதிகள் போன்ற இடங்களில் நடப்பட்டிருப்பதை காணமுடிகிறது. நடுகற்கள் கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை நமக்கு பரவலாக கிடைக்கின்றன. அதற்குப்பின்னும் நடுகற்கள் கிடைத்தாலும் அவை உருவம் கொண்ட கற்களாக மட்டுமே உள்ளது. எழுத்துக்கள் இடம்பெறவில்லை. இருப்பினும் சங்ககால நடுகற்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.



சங்க இலக்கிய நூலான புறநானூறும் நடுகல் எடுத்ததைப் பற்றிய கூறுகிறது. குறிப்பாக தலைமக்களது நடுகற்களைப் பற்றியே பேசப்பட்டுள்ளது. புறநானூறு 231ஆம் பாடல் அதியமான் நெடுமானஞ்சி போரில் இறந்தது பற்றியும் 232 ஆம் பாடல் அவனுக்கு நடுகல் எடுத்த செய்தியையும் கூறுகிறது.

               


   இல்லா கியரோ காலை மாலை

       அல்லா கியர்யான் வாழு நாளே

       நடுகற் பீலி சூட்டி நாரரி

       சிருகலத் துப்பவுங் கொள்வன் கொல்லோ.” ( புறநானூறு - 232 )

மலையை பரிசாக கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொல்லாத பண்பைக் கொண்டவன் நமது மன்னன் அப்படிப்பட்டவன் இறந்துபட்டான் அவனுக்கு நடுகல் நட்டு அந்த கல்லிற்கு மயிற்பீலி சூட்டி சிறிய பாத்திரத்தில் (கள்) மதுவையும் வைத்து வழிபடுவதைக் குறிப்பிடுகிறது.

 


அகநானூற்றில் ஆண்களுக்கு நடுகல் எடுத்து அழகுபடுத்தலைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

 

ஆடவர் பீடும் பெயரும் எழுதி அதர்தொறும்

       பீலிசூட்டிய பிறங்கு நிலைநடுகல்.” ( அகநானூறு - 131 )

 

நடுகல் பற்றிய செய்தியை பல நூலகள் சான்று பகர்கின்றது. திருக்குறளில் கற்களில் வீரர்கள் நிற்பதைப் பற்றி குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

 

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

 முன்னின்று கல்நின்றவர். (திருக்குறள் - 71)

நடுகற்களைப் பற்றி பல நூலகள் சான்று பகர்கின்றன.



நடுகற்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலும் கிடைக்கிறது. நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டத்தில் மல்லாம் என்ற சிற்றூர் உள்ளது. இந்தவூரில் கிடைக்கப்பெற்ற நடுகல் ஒன்றில் இவ்வூரை திருவான்மூர் என்று குறிப்பிடுகிறது. வீரன் ஒருவன் தனது உடலை ஒன்பது இடங்களில் வாளால் வெட்டிக்கொண்ட பின்னர் தலையை வெட்டி கொற்றவைக்குப் (பிடாரி) பலியாக தந்ததை குறிப்பிடுகிறது. அவனது பெயர் ஒக்கொண்ட நாகன் ஒக்கதித்தன் பட்டைப் போத்தனுக்கு ஊர்சபையினர் கூடி நடுகல் எடுத்த செய்தியைக் கூறுகிறது.



இந்த நடுகல்லில் வீரன் வலது கால்முட்டியை ஊன்றிக்கொண்டு அமர்ந்த்த நிலையில் தலையில்லாமல் தனது இடதுகரத்தில் தலையை கையில் ஏந்தியவாறு அதனை பலி பீடத்தின் மேல் வைப்பது போல கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் குறுவாள் ஏந்தியவாறு இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை மறுப்பவர்களுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்ற குறிப்பும் அக்கல்லில் காணமுடிகிறது.

    பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன்

       ஒக்கதித்தன் பட்டைபொத்தன் மேதவம்

       புரிந்தென்று படாரிக்கு நவகண்டம் குடுத்து

       குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

       வைத்தானுக்கு திருவான்மூர் ஊரார் வைத்த

       பரிசாவது எமூர்ப்பறை கொட்டக் கல்மேடு

       எழுநூற்றுக்காதமும் செய்தான் பாவத்துப் படுவார்

       அன்றென்றார் அன்நாள் கோவுக்குக் கால்

       பொன் தண்டப்படுவார். ( தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள்  - 20 )



இதைப்போன்று செங்கம் நடுகற்களிலும் ஆவி ஆற்றல் தொடர்பான நடுகல் இருந்ததை அறிய முடிகிறது. தனது தலையை அறுத்து பலிகொடுத்து மற்றொரு வீரனுக்கு நம்பிக்கைய ஏற்படுத்தியதை அறிய முடிகிறது. அரசன் வெற்றிக்காக தலையை அறுத்துப் பீடத்தின் மீது வைத்த செய்தியை இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலையிலும் காணப்படுகிறது

.     


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் இதுவரை 60 நடுகற்கள் கிடைத்திருப்பதாக முன்னாள் தொல்லியல் துறையின் இயக்குனராகப் பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி செங்கம் நடுகற்கள் பதிப்பு நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலக்கியங்களிலும் இலக்கணங்கள் கூறுவது போல தலைமக்களது நடுகற்களாக இல்லாமல் பொதுமக்களது நடுகற்களாகவே உள்ளன. குறிப்பாக கீழ்நிலையில் உள்ள மக்களது நடுகற்களாக இருப்பதை அரியமுடிகிறது. இவ்வகையான நடுகற்களை நட்டவர்கள் ஊரார் அல்லது உறவினர்களாகவே இருந்ததையும் அறியமுடிகிறது. இது பற்றி கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் பேராசிரியர் நா.வானமாமலை நாட்டுமக்களின் நடுகற்களாக (folkhero stones) இருப்பதைக் குறிப்பிடுகின்றார். உதாரணத்திற்கு

கங்கரைசரு சேவகரு எறிந்து பட்டாறு.” ( செங்கம் நடுகற்கள்-8 )

பொன்மோதண்ணார் சேவகன் அக்கதைக்

 கோடன் தொறு விடுத்துப் பட்டான்கல்.” ( செங்கம் நடுகற்கள்-9 )

சாத்தனூர் ஆந்தொறுக்கொண்ட ஞான்று

 கோவலூர் ஊரைசர் பெரும் பாணதி

 யரைசர் சேவகன் சிற்றுபாடி பனை

 யனார் மறி தொறுக் கொண்ட ஞான்று( செங்கம் நடுகற்கள் )



கால்நடைகளை கொள்ளையடித்தல் மற்றும் பாதுகாத்தல் என்பது அக்கால மக்களுக்கு முக்கியமான செயல்பாடாக இருந்துள்ளது. இதனை நடுகற்கள் கூறும் நிரை கவர்ந்தனவும் மீட்டனவும் என்ற வாசகங்களைக் கொண்டு அறியமுடிகிறது. போருக்கு முக்கிய காரணமாக பசு மந்தைகளையும், ஆட்டு மந்தைகளையும் கவர்தலே முக்கியப் பணியாக இருப்பதை அறிய முடிகிறது.



ஆறாம் நூற்றாண்டு முதலான செங்கம் நடுகற்களில் எழுத்துகளைக் கொண்ட நடுகற்களால் பல்வேறு காலகட்ட எழுத்து வளர்ச்சியை அறியமுடிகிறது. அதோடு பெரும்பாலான நடுகற்கள் வாயிலாக பல்லவ மன்னர்களின் வரலாற்றை அறிய மிகப்பெரிய ஆவணங்களாக பயன்படுகின்றன. பல்லவர் வரலாற்றை அறிய இது ஒரு திறவுகோலாக அமைகிறது.



செங்கம் பகுதியில் உள்ள நடுகற்களை பார்ப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழத்தின் இலக்கியத் துறை மூலமாக சென்றோம்.அப்போது பல்வேறு விதமான நடுகற்களை பார்க்க முடிந்தது. ஊர் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது. மலைப்பகுதி என்பதால் காட்டு விலங்குகளின் தாக்கம் அக்கால கட்டத்தில் அதிகம் இருந்துள்ளது. குறிப்பாக புலியினால் அதிகமான கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த தாக்கத்தைப் பற்றிய ஒருகல்லை காணமுடிந்தது. வீரன் ஒருவன் வில் அம்புடன் நின்றுகொண்டு எதிரே வரும் புலியை கொல்ல நிற்பது போலவும் அவ்வீரனின் காலடியில் கால்நடை ஒன்று இருப்பது போலவும் அந்த நடுகல் காணப்படுகிறது. எனவே புலியிடம் இருந்து கால்நடைகளை காத்த வீரனுக்காக நடப்பட்ட நடுகல் என்று அறியமுடிந்தது.



அந்தப்பகுதியிலேயே வயல்வெளியில் ஒரு நடுகல் நடப்பட்டிருந்தது. அந்த கல்லில் செதுக்கப்பட்டிருந்த உருவத்திலும் வில் அம்பு போன்ற ஆயுதங்கள் தாங்கி நிற்பதை காணமுடிகிறது. ஒருநடுகல் வீரனின் கால் பகுதியில் சிதைந்த நிலையில் உள்ளது. எழுத்துக்களுடன் கூடிய நடுகல் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அனைத்து நடுகற்களுமே மலையை ஒட்டிய சமவெளிப்பகுதியில் உள்ளன. இவைகள் அனைத்தும் பாதுகாத்தல் என்பது முக்கியப்பணியாகும். இதனை நமது தொல்லியல் துறை முன்வந்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாத்தால் மட்டுமே இருக்கும் நடுகற்களையாவது அடுத்த தலைமுறையினர் அறிய முடியும்.



தற்போது அந்த கற்கள் மக்களால் பல்வேறு நிலைகளில் வழிபாட்டு நிலையில் உள்ளன. அதன் மீது வண்ணம் பூசிவிட்டால் கிடைக்கப்பெரும் ஆதாரங்கள் வீனாகிவிடும். அங்கு காணப்படும் சிலகற்களில் நாமம் போட்டும் குங்குமம் மஞ்சள் வைத்தும் அதன் எதிரே சூலம் மற்றும் கத்திகளில் எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. வைணவத்தின் குறியீடாக நாமம் பார்க்கப்பட்டாலும் சைவசமயத்தின் குறியீடுகளான சூலம், கத்தி போன்றவை காணமுடிகிறது. இது வாரலாற்று ஆவணம் என்பதைத்தாண்டி சமயங்களுக்குள் கொண்டு செல்வதை ஏற்கமுடியவில்லை. தற்போதைய வழிபாட்டு நிலைகளில் சடங்குகள் சார்ந்த குறியீடுகள் கற்களில் இல்லை அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் இந்த துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களைக் கொண்டு தொல்லியல் துறை தற்போது பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ள கற்களையும் அதன் கால கட்டங்களை கணக்கிட்டு பாதுகாக்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற ஆய்வாளர்களின் கருத்தாகும். தமிழகத்தில் கிடைக்கப்பெரும் ஒவ்வொரு ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுயது அவசியம்.



நடுகற்கள் வாயிலாக பல்வேறு தரவுகள் நமக்குகிடைக்கின்றது. நடுகல் நடப்பட்ட இடம் யார் தானமாக அளித்தார்கள், எதற்காக அவ்வீரனுக்கு நடுகல் எடுக்கப்படுகிறது, போர் செய்து இறந்தவனுக்காகவா இல்லை ஊரையும் மக்களையும் காத்த வீரனுக்காகவா, போரில் இறந்த வீரனாக இருந்தால் மேலோர் உலகம் செல்வான் என்ற நம்பிக்கையின் ஊடாக அக்கால மக்களின் சமய நம்பிக்கையை அறியமுடிகிறது. நடுகற்களிம் வாசகங்களைக் கொண்டு எழுத்து வளர்ச்சி அதன் காலகட்டம் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.



நடுகற்கள் மூலமாக குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த மக்களின் பண்பாட்டு வரலாற்றையும், அரசியல் வரலாறு, மொழிவரலாறு, எழுத்து வளர்ச்சி, தமிழர் சமுதாயநிலை போன்றவற்றை அறிவதற்கு சான்றாதாரங்களாக விளங்குகின்றன. குறிப்பாக அண்மையில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள்களான நடுகற்கள் பற்றிய புள்ளிவிவரம் இல்லை என்றே கூறமுடியும். தற்போதுதான் தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறைசார்பில் மாவட்ட அளவில் தொல்பொருள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பெயரளவில் இருந்துவிடாமல் விரைவில் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்பதே என்னைப் போன்ற ஆய்வாளர்களின் விருப்பமாக உள்ளது.



தமிழர்களின் வரலாற்றை அறியவும் உலக அளவில் அதன் தரத்தை கொண்டு சேர்க்கவும் நாம் செய்யவேண்டிய முதல்வேலை பண்பாட்டை பாதுகாப்பது. அதனை அச்சேற்றுவது, பல்வேறு மொழிகளில் நமது பண்பாட்டை கொண்டுசேர்ப்பது முக்கிய பணியாகும். இதுவரை நமக்கு கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பல்வேறு வரலாற்று புரிதல்களை நமக்கு கொடுத்துள்ளது என்பதை மறந்து விமுடியாது.

செங்கம் நடுகல் புகைப்படங்கள்:-

1.   வீரன் வில் வாலுடன் சிதைந்த நிலையில்

2.   வீரன் வில் வாலுடன் நிற்கும் நடுகல்

3.   வீரன் வில் வாலுடன் கம்ம்பீரமாக நிற்கும் நடுகல்

4.   எழுத்து இடம்பெற்ற வீரனது நடுகல்

5.   மாடுகளை காக்க புலியை கொல்லும் நடுகல்

6.   புலிகொன்றான் நடுகல் பார்வையிடுதல்

7.   வயல் பகுதியில் ஆயுதங்களோடு பாதுகாப்பிற்காக நிற்கும் வீரனது கல்