செவ்வாய், 11 ஜூன், 2013

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நம் தமிழ்கூறும் மூதுரை. தமிழ்நாட்டில் கோவில்கள் இல்லாத ஊர்களே இல்லை. குக்கிராமத்தில் கூட ஒரு பிள்ளையார் கோவில் அல்லது மாரியம்மன் கோவில் இருக்கும். ஆஸ்திகத்திற்கும், பக்திக்கும் பெயர் பெற்றது தமிழ்நாடு. நாயன்மார்களும் ஆழ்வார்களும் எண்ணிறந்த கோவில் களைப் பற்றிப் பாடியுள்ளதால், அந்தக் கோவில்கள் பாடல் பெற்ற தலங்களாகவும், மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களாகவும் விளங்குகின்றன.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரமும், கும்பகோணமும் கோவில் நகரங்களாகப் (Temple Town) புகழ்பெற்றவை. ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அவ்விரண்டு நகரங்களுக்கு நித்தமும் பயணம் செய்து கோவில்களையும், பழமைச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களையும் கண்டு மகிழ்கின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வந்தவாசி தாலூகாவில் தண்டரை என்னும் கிராமத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் தொன்மையானதாகும். அந்தக் கோவிலில் உள்ள கல்தூண்களும், கல்வெட்டு எழுத்துக்களும், முத்திரைச் சின்னங்களும் அதன் தொன்மையையும், பல்லவர் காலத்துக் கலை நயத்தையும் பறைசாற்றுகின்றன.
மேலும் இந்தக் கோவிலின் கருவறை அடித்தளம் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் கூடிய சிறிய கல்தூண்களுடன் கருவறை அமைந்துள்ளது. அதை யொட்டி ஒரு மண்டபம், தீபஸ்தம்பம் இரண்டும் அமைக்கப் பட்டுள்ளன.
சாஸ்திர விதிப்படி துல்லியமாக இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி அழகான மாட வீதிகளும், நீண்ட அக்ரகாரமும் அமைந்துள்ளன. இவைதான் இந்தக் கோவில் புராதனமான ஒன்று என்பதற்குச் சான்றுகள்.
இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ள ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கேட்கும் வரங்களை உடனே அளிக்கும் வரப்ரசாதியாகக் காட்சியளிக் கிறார். இப்படிப்பட்ட திருக்கோவிலின் கருவறைக் கோபுரம் இடிந்து விழும் அளவுக்கு மிகவும் சிதிலமடைந்துள்ளது. இதனால் கவலை யடைந்த ஊர்ப் பொதுமக்களும், பக்தர்களும், உலக நன்மைக்காக நடத்தப் பட்ட சுதர்சன ஹோமத்தின் போது இக்கோவிலின் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்தனர்.
அதன்படி, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ கேசவ பட்டாச்சாரியார் டிரஸ்ட் என்னும் அறக்கட்டளை திருப்பணி வேலைகளை உடனடியாக மேற் கொண்டு வேலைகள் செய்து வருகிறது. திருப்பணி வேலைகள் முழுமையாக நடைபெற சுமார் ரூ. 8 லட்சத்துக்கும் அதிகமாக நிதி தேவைப்படுகிறது. கடந்த நவம்பரில் பாலாலயம் அமைக்கப்பட்டுப் பெருமாளைத் தற்காலிகமாக ஒரு சிறிய இடத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கருவறை, விமானம் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சன்னதி, ஸ்ரீ கருடன் சன்னதி, மண்டபம், மதில்சுவர், முகப்புத் தோரண வாயில், ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் சன்னதி முதலியவை புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் அமைய உள்ளன.
ஆகவே, பக்தகோடிப் பெருமக்கள் இந்தத் திருப்பணியில் பங்கு கொண்டு தாராளமான பண உதவியும், பொருளுதவியும் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்களால் முடிந்த தொகையைப் பண அஞ்சல் / கேட்புக் காசோலை (Demand Draft) SRI KESAVA BHATTACHARYAR TRUST என்ற பெயருக்கு எடுத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஸ்ரீ ரங்கராஜபட்டாச்சாரியர், ஸ்தாபகர், ஸ்ரீகேசவ பட்டாச்சாரியார் டிரஸ்ட், பழைய எண் : 5, புதிய எண் : 32, கேசவப் பெருமாள் சந்நிதித் தெரு, மயிலாப்பூர், சென்னை & 600 004. செல் : 94440 80130 / 99840 400781.
கோயில் அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வந்தவாசி செல்லும் வழியில் தண்டரை கிராமத்தில் கோயில் அடைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 110 கி.மீ. தூரத்திலும், கோவை, மதுரையிலிருந்து சுமார் 480 கி.மீ. தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது. அடிக்கடி பஸ் வசதி உண்டு.
சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் வழியில் தண்டரை கிராமம் உள்ளது.
கோவை, மதுரையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து வந்தவாசி செல்லும் வழியில் தண்டரை கிராமத்தை அடையலாம்.
கோயில் இருக்கும் தண்டரை கிராமத்தில் பக்தர்கள் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் இல்லை. அருகிலுள்ள வந்தவாசியிலும், அங்கிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ள உத்திரமேரூரிலும் தங்கும் விடுதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக