செவ்வாய், 11 ஜூன், 2013

ஏழு புத்தர் சிற்பங்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக தெற்கு கோபுரத்தின் அருகில் ஏழு புத்தர் சிற்பங்கள் தியான நிலையில் காணப்படுகின்றன. கிழக்கு வெளிச்சுற்று சுவரின் வெளிப்பக்கமாக ஒரு புத்தர் சிற்பம் நின்ற நிலையில் காணப்படுகிறது. இது புத்தர் பரி நிர்வாணம் அடைந்த நிலை என்று காலம் சென்ற தமிழ் வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, தன்னுடைய பௌத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிடுகிறார். இது நாயக்கர் காலத்தில், மதிற்சுவராக மாறி விட்டது என்கிறார்.
கச்சபேஸ்வரர் கோவிலில் நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள தூண்களில் பதினைந்து புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
காமாட்சி அம்மன் கோவிலில் கிழக்கில் (நுழைவாயிலுக்கு இடப்புறம்) உள்ள மண்டபத்தில் இரண்டு புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலுக்கு அருகில் உள்ள சுப்பராய முதலியார் பள்ளியில் மூன்றடி உயரமுள்ள ஒரு புத்தர் சிலை தியான நிலையில் காணப்படுகிறது. பள்ளியில் கிணறு தோண்டும்போது இந்த சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுத் தெருவில் உள்ள கருக்கினில் அமர்ந்தாள் கோவிலில் இரண்டு புத்தர் சிலைகள் தியான நிலையில் காணப்படுகின்றன. இந்த சிலைகளுக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணின் சிற்பம், மணிமேகலை என்று நம்பப்படுகிறது.
சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் ஒரு புத்தர் சிலை காணப்படுகிறது.
இவை அனைத்தும் கி பி ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தவை.இந்த புத்தர் சிற்பங்கள் (பள்ளியில் கிடைத்த சிலையைத் தவிர) குறித்தும் மயிலை சீனி வேங்கடசாமி எழுதி இருக்கிறார். பல புத்தர் சிற்பங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன. தற்போது பௌத்த காஞ்சி அழிந்து விட்டாலும், இந்த சிற்பங்கள் வழியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றெண்ண தோன்றுகிறது.இந்த பயணத்திற்கு உதவியவர் திரு. லோகேஷ். தமிழில் சங்க கால சமூக உருவாக்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இணையத்தில் பதிவு செய்தவற்றை தொகுக்கும் பொருட்டு கூகிள் தளம்  ஒன்றை ஆரம்பித்து இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக