வியாழன், 27 ஜூன், 2013

அண்ணா எழுதிய நூல்கள் அரசுடைமையானது

அண்ணா எழுதிய நூல்கள் அரசுடைமையானது
மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நூல்களை அரசுடைமை ஆக்கி, அண்ணாவின் மனைவி ராணி அம்மாளிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ரூ.75 லட்சத்தை வழங்கினார். மறைந்த முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சி பீடத்தில் அமருவதற்கு முன்பு ஏராளமான கதை, கட்டுரை நூல்கள் எழுதி இருந்தார்.

சமுதாயத்தில் பல்வேறு மட்டங்களில் நிகழும் வாழ்க்கை போராட்டங்களை சித்தரித்து பல நூல்கள் வெளிவந்தன. அண்ணா எழுதிய புத்தகங்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்று அவருடைய பிறந்த தினத்தில் (15-9-1994) அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், "பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் எழுத்தோவியங்களையும், படைப்புகளையும் தேசியவுடைமையாக்கி அதன் மூலம் அவரது எண்ணங் களும், கருத்துக்களும் விரைவில் பரவுவதற்கு வழிவகை செய்யவேண்டும்" என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, அண்ணா எழுதிய புத்தகங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன.

புத்தகங்களை அரசுடைமை ஆக்குவதற்காக வழங்கப்பட வேண்டிய ஈட்டுத்தொகையை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையை ஏற்று, அண்ணா எழுதிய புத்தகங்களுக்கு ஈட்டு தொகையாக ரூ.75 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த தொகையை, அண்ணாவின் வீட்டிற்கு நேரில் சென்று அண்ணாவின் மனைவி ராணி அம்மாளிடம் வழங்க ஜெயலலிதா முடிவு செய்தார். இதன்படி 2-11-1995 அன்று அண்ணாவின் வீட்டிற்கு ஜெயலலிதா சென்றார். ராணி அம்மாளை சந்தித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினார். அதன் பிறகு ராணி அம்மாளிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை ("செக்") வழங்கினார்.

ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் சென்றிருந்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்தின் முன்பு ஜெயலலிதா சிறிது நேரம் நின்று வணங்கி, தனது மரியாதையை செலுத்தினார். ராணி அம்மாளின் உடல் நலம் பற்றி விசாரித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்றபோது அண்ணாவின் வளர்ப்பு மகன்களும், குடும்பத்தாரும் வீட்டு வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின்போது ராணி அம்மாளுடன் அண்ணாவின் மகன்கள் பரிமளம், இளங்கோவன், கவுதமன், ராஜேந்திரன் மற்றும் சரோஜா, விஜயா, துளசி, சாந்தா ஆகியோரும் உடன் இருந்தார்கள். அண்ணாவின் புத்தகங்கள் அரசுடைமை ஆக்கியதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அண்ணாவின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள்.  

திராவிடக் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.பெரியாரின் தளபதியாக விளங்கிய அண்ணா 1949-ல் திராவிடக் கழகத்தை விட்டுப் பிரிந்து தி.மு.கழகத்தைத் தொடங்கினார். 1967-ல் தமிழக முதல்-அமைச்சர் ஆனார். 1969 பிப்ரவரி 3-ந்தேதி காலமானார். அண்ணா சிறந்த எழுத்தாளர். ஏராளமான கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

அவர் படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்ட பிறகு, பல்வேறு பதிப்பகங்கள் அவர் நூல்களை குறைந்த விலையில் வெளியிட்டன. அவருடைய முக்கிய நூல்கள் விவரம் வருமாறு:-

நாவல்கள்: ரங்கூன்ராதா, குமாஸ்தாவின் பெண், பார்வதி பி.ஏ., கன்னி விதவையான கதை.

கட்டுரைகள்:- ஆரியமாயை, கம்பரசம், ரோமாபுரி ராணிகள்.

நாடகங்கள்:- ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்கவாசல், நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி, சந்திர மோகன், இன்பஒளி. அண்ணாவின் சொற்பொழிவுகள், தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் ஆகியவையும் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளனஅண்ணா எழுதிய நூல்கள் அரசுடைமையானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக