வெள்ளி, 19 ஜூலை, 2013

பேராசிரியர்ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல் -- கோ.ஜெயக்குமார்.

பேராசிரியர்ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல் -- கோ.ஜெயக்குமார்.

பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களுள் தலைமாணவரும் சிறந்த ஆராய்ச்சியாளரும் வெகுமக்கள் இலக்கியமான நாட்டார் வழக் காற்றியல் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் தனி ஆளுமையுமானவர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஆய்வுலகில் பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார். தமிழக வரலாற்றிலும் விடுதலைப் போரிலும் மறைக்கப்பட்ட செய்திகள் வெகு மக்கள் இலக்கியம் போன்றவற்றை எவ்வாறு மீள் கட்டமைக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறார். தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
பேராசிரியர் நா.வானமாமலையால் தொடங்கப் பெற்ற ‘ஆராய்ச்சி’ இதழின் காலம் முதல் இன்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நடத்திவரும் ‘புதிய ஆராய்ச்சி’ வரையிலான ஆய்வுப் பயணம் நீண்ட தொடர்ச்சியைக் கொண்டது. இந்த நெடும் பயணத்தில் பல்வேறு தளங்களில் - குறிப்பாக, செவ்விலக்கியம், வெகுசன ஆக்கங்கள் / ஆய்வுகள், மார்க்சியம், கல்வெட்டு, மொழி வரலாறு போன்ற துறைகளில் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி வருகிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.
 http://www.keetru.com/dalithmurasu/aug08/A_sivasubramanian.jpg
தமிழியற்பரப்பில் தற்போது வந்துகொண்டி ருக்கும் இதழ்களில் ‘புதிய ஆராய்ச்சியின்’ பங்களிப்பு மிக முக்கியமான பணியாகும். அந்தப் பணியைப் பேராசிரியர் நேர்த்தியாக செய்து வரு கிறார். ஆய்வுப் பரப்பில் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக, தமிழக நாட்டுப்பாடல் களஞ்சியம், அடித்தள மக்கள் வரலாறு, மந்திரமும் சடங்குகளும், அடிமை முறையும் தமிழகமும், கிறித்துவமும் சாதியும், பிள்ளையார் அரசியல், இனவரைவியலும் தமிழ்நாவலும், பூச்சியம்மன் வில்லுப்பாட்டு, வரலாறும் வழக்காறும், பண்பாட்டுப் போராளி பேராசிரியர் நா.வானமாமலை முதலிய நூல்களையும், பல ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ளார்.
 
இத்தகைய சிறப்புமிக்க சிவசுப்பிரமணியனின் நேர்காணல் இங்கே இடம்பெறுகிறது.
- கோ.ஜெயக்குமார்

பேராசிரியர் நா.வானமாமலையின் இலக்கியப் பார்வை / பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்.
பேராசிரியரின் இலக்கியப் பங்களிப்பு பல்வேறு பரிணாமங்களைக் கொண்டது. குறிப்பாக செவ்விலக்கியம், மத்திய கால இலக்கியம், நவீன இலக்கியம், தத்துவம், சமயம், அறிவியல், மொழி பெயர்ப்பு என்ற நிலைகளில் அமைந்திருந்தது.
ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் எப்படிப்பட்ட கருத்துகளை நா.வா. முன்வைத்தார். அதற்கு அவர் ஏற்படுத்திக்கொடுத்த தளங்கள் என்னென்ன?
‘தமிழ்ப்பயிற்சி’ என்ற குறுநூலை மாணவர்களுக்காகக் கொண்டு வந்தார். மார்க்சிய வகுப்புக்கள் துவங்க வேண்டுமென நினைத்தார். ஆனால் அது ‘ஆண்டிமடம் கட்டியது போலத்தான்’. கட்சி நிறுவனத்தின் அருகே முதல்வர் தலைமை யில் பல பேராசிரியர்களைக் கொண்டு நடத்த திட் டம், அப்போது பாலன் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு அதில் சில மாறுதல்களைக் கூறினார். வகுப்புக்கு வருபவர்களுக்கு உணவு கொடுப்பது, தங்க வைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை உணர்ந்து மாவட்ட வாரியாகக் குறிப்பிட்ட இடங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
அண்மையில் நீங்கள் எழுதி வெளிவந்த ‘பண்பாட்டுப் போராளி பேராசிரியர் நா.வானமாமலை என்ற நூலில், பல செய்திகளைக் கூறியுள்ளீர்கள், இந்தச் சூழலில் இந்த நூல் உருவாக்கத்தை எப்படித் திட்டமிட்டு முடித்தீர்கள்?
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் இருக்கின்ற வேளையில், பழைய நினைவுகள் வந்தன. அவற்றை அப்படியே நூலாகச் செய்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அதனால் நினைவுக்கு வந்தவற்றை அப்படியே எழுத்துக்குக் கொண்டு வந்து நூலாக்கினேன். புத்தகங்களை எடுக்கக்கூட முடியாத நிலை, இந்நூல் உருவாக்கத்தைப் பற்றி தாமரை இதழில் பேசிய தோழர் நல்லகண்ணு, நா.வானமாமலையைப் பண்பாட்டுப் போராளி என்று ஒருமுகமாகக் காட்டி அடைத்துவிடக் கூடாது என்று கூறியிருந்தார். மிக நெருக்கடியில் வெளியிட்ட நூல், குறிப்பாக நா.வா.வின் பிறந்தநாள் விழாவுக்காக விரைவில் கொண்டுவர வேண்டும் என்ற ஆதங்கத்தில் வெளியிடப்பட்ட நூல் என்பதால்தான் இன்னும் விசாலமாகக் கூறமுடியவில்லை.
பண்பாடுபற்றி நா.வாவின் கருத்து என்ன? அதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பண்பாடு எனத் தமிழில் வரும் போது சங்க இலக்கியத்தில் இருந்துதான் பார்க்க வேண்டும். சங்க இலக்கியத்தைத் தொட்ட திராவிட இயக்கத்தார் வேளாளச் சார்பாகத் தான் தொட்டுள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. ஆரியப் பண்பாட்டிற்கு எதிராக மட்டும் தான் பார்த்தார்கள்.
பேராசிரியர் நா.வா.வுக்குக் கோபம் என்றால் எப்படி இருக்கும்? அவருடன் பழகியவர் நீங்கள், அதை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
ஆராய்ச்சி இதழ் வந்ததும் அதனை அஞ்சல் செய்யும் வேலைகளில் (பேக்கிங், ஸ்டேம்பு / அஞ்சல் தலை ஒட்டுதல்) சில மாணவர்கள் ஆர்வமாக ஈடுபடுவார்கள். அந்த மாணவர்களுக்கு சிற்றுண்டி உணவாக மொச்சை, பூரி தரப்படும். இது குறிப்பாக எட்டயபுரம் பகுதிகளில் தோனி செட்டியார்கள் கடைகளில் அதிகம் கிடைக்கும். ஒரு நாள் அந்த வேலைகளைக் கவனிக்க நான் செல்லவில்லை. பேராசிரியர் கோபமாக இருந்தார். அதனை வெளிப்படுத்திய அவர், ‘என்னை நோக்கி நான் நெடும் பகையைத் தேடிக் கொண்டேன்’ என்ற கம்பராமாயண வரிகளைக் கூறிக் கோபத்தைத் தணித்துக் கொண்டார்.
நா.வா.-வின் குடும்பச்சூழல் குறித்து விளக்கிக் கூறுங்கள்?
பேராசிரியரின் தந்தை நாராயணன், தாய் திருவேங்கடம், உடன் பிறந்தவர்கள் சகோதரி திருவேங்கடம், சகோதரன் ஆழ்வான். சகோதரி திருவேங்கடம் கோவிந்தன் என்பவருக்குத் திருமணம் செய்து தரப்பட்டது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. சகோதரன் ஆழ்வானுக்குப் ‘பொன்னு’ என்ற பெண்ணுடன் திருமணம் முடிக்கப்பட்டது. இவர்களுக்கு நாராயணன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் காச நோயால் ‘பொன்னு’ இறந்துவிட்டார். அந்தக் குழந்தை நா.வா. இடம் கொடுக்கப்பட்டது. தங்கைக்குக் குழந்தை இல்லாததால் அவரிடம் கொடுத்து வளர்த்தனர். தற்போது அந்தப் பிள்ளை நாராயணனுக்கு ராதா என்ற பெண் மணியுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள், ஒரு பெண் குழந்தைகளைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். தம்பி ஆழ்வானுக்கு நாடக கம்பெனி வைத்துக் கொடுத்தார். அதனை அவர் இழந்த பிறகு, பேராசிரியரே டூடோரியல் பணிக் காக இறுதிக்காலம் வரையில் பார்த்துக் கொள்வார். புகைபிடிக்கும் பழக்கம் ஆழ்வானுக்கு இருந்தது. பேராசிரியருக்குத் தெரியாமல் மங்கை யிடம் 5, 10 வாங்கிக் கொள்வார். பேராசிரியர் சொந்த அத்தை மகள் (அப்பாவின் சகோதரி மகள்) சீதாலட்சுமி என்பவரை மணந்துகொண் டார். தென்காசியில் நா.வா. பணியாற்றிக் கொண் டிருந்த பொழுது குற்றால அருவியில் நீராடிவிட்டு வந்த பின் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை மணந்து கொண்டார். இவர் களுக்கு கிருஷ்ணமூர்த்தி, கலாவதி, ராமமூர்த்தி, அருணா, நாராயண மூர்த்தி என ஐந்து பிள்ளை கள் உள்ளனர்.
நாட்டார் இலக்கியப் பங்களிப்பு பற்றியும், அதற்கு உதவிகள் செய்தவர்கள் யார் யார், என்பதைப் பற்றியும் விளக்குங்கள்?
நாட்டார் இலக்கியத்தை ஒழுங்குபடுத்தி கல்லூரிகளில் பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்று திட்டம் . ஏ.ஜி.பெருமாள், கட்டபொம்மன் கூத்து படியெடுத்துக் கொடுத்தார். அதில் வரும் தெலுங்கு வார்த்தைகளைத் தனியாகப் படி யெடுத்துத் தந்தார். இதே போன்று முத்துப் பட்டன் கதை ஓலைச்சுவடிகள் குமரி மாவட்டம் தாமரக் குளத்தில் இருந்து வேலாயுதம் என்பவரின் உதவியால் கிடைத்தன. ஓலைச்சுவடிகளைப் பின்பற்றிப் பிரதி செய்யப்பட்டது. முத்துப் பட்டன் கதையை ஒத்துப் பார்க்கவும், பிரதி செய்ய வும் நான் உதவினேன். இரு பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்துப் பதிப்பிக்கப்பட்டது. ஐவர்ராசாக்கள் கதையை அருணாச்சலக் கவுண்டர் கொடுத்து உதவினார். வீணாதி-வீணன் கதையை ஆர்.நல்ல கண்ணு கொடுத்து உதவி புரிந்தார்.
பேராசிரியர் நா.வானமாமலையின் சிறப்பு என்றால் எதைக் கூறுவீர்கள்?
எவ்வளவு சிக்கல் வந்தாலும் அசரமாட்டார் நா.வா., எந்த ஒரு புதுமையான விசயத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாகவும், வேகமாகவும் இருப்பார். பணம், புகழ், அங்கீகாரம் இவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படமாட்டார். அவரி டம் இரவலாகப் புத்தகம் கொடுத்தால் வாங்க முடியாது. காரணம் அதே போன்று அங்கு வருப வர்கள் யாராவது அந்தப் புத்தகத்தை இரவலாக எடுத்துச் சென்று இருப்பார்கள். உதாரணமாக, தி.முத்துக்கிருஷ்ணன் என்பவர் அவரின் கார்டில் (புத்தகம் வாங்கும் அடையாள அட்டை) புத்தகம் எடுத்துக் கொடுத்தார். அதை யாரோ எடுத்துச் சென்று விட்டனர். முத்துக் கிருஷ்ணன், தினமனி நாளிதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பாளையங்கோட்டை நூலகத்தார் தினமணி அலுவலகத்திற்குப் புத்தகம் திரும்ப வரவில்லை என்ற தகவலைக் கடிதம் மூலம் தெரியப்படுத்த புத்தகத்தின் இரண்டு மடங்கு அதிகத் தொகையை நூலகத்திற்குச் செலுத்த நேர்ந்தது. இதனால் சில நேரங்களில் நல்ல நட்பைக்கூட இழக்க நேரிடும்.
நா.வா.விடம் உங்களுக்குப் பிடிக்காதது என்று சொன்னால் எதைச் சொல்வீர்கள்?
குடும்ப நிலையில் அடுப்பங்கரையில் நடப்பதைக் கூடச் சொல்லிவிடுவார். புகைபிடிக்கும் பழக்கத்தை அவரால் கடைசிவரை நிறுத்த முடியவில்லை. நான் மதுரைக்குச் சென்றிருந்த போது ‘புகையை நிறுத்துவதெப்படி?’ என்ற ஒரு நூலை வாங்கி வந்தேன், அதனைப் பேராசிரியரிடம் கொடுத்தபோது சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார். ஆனால் தொடர்ந்து புகை பிடித்தார். ‘அந்தப் புத்தகத்தைப் படித்தீர்களா?’ என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, ‘புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் விண்ணப்பம் உள்ளது. அதனைப் பூர்த்தி செய்து அனுப்பு’ என்று கூறினார். என்ன காரணம் என்றால் புத்தகத்தைப் படித்தும் புகையை நிறுத்தவில்லை என்றால், அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால் புத்தகத்தின் தொகையைத் திருப்பித் தருவதாக அதில் கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டினார். ஆரம்பகாலத்தில் ஆசிரியர் பணியில் ஈடுபட்ட நா.வா.வுக்கு அதில் பெரிய அளவில் வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நா.வா.வின் அரசியல் பணியைப் பற்றியும், அவர் வகித்த பொறுப்புகளைப்பற்றியும் கூறுங் கள்?
முதன்முதலில் பாளையங்கோட்டை செயற்குழு மாவட்டச் சிறப்பு அழைப்பாளர். மாநிலப் பொதுக்குழு, மாநிலக் கல்விக்குழு, கலை இலக் கியக் கல்விக்குழு, இந்தக் கூட்டங்களுக்குச் செல்வ தற்குப் போக்குவரத்துப்படி கூட வாங்காமல் சென்று வருவார். பாளையங்கோட்டை நகரமன்ற உறுப்பினராக இரண்டுமுறை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி இன்றி வெற்றி பெற்றார். நெல்லைச் சிந்துப்பூந்துறை பீடித் தொழிலாளர் சங்கம், தாழையூத்து சிமெண்ட் தொழிலாளர் சங்கம், இரண்டிற்கும் பொறுப் பாளராகச் செயல்பட்டார். 1961இல் கோவையில் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநாடு ஜீவா தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட் டில் நா.வா.மாநிலத் துணைத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். நாடோடி இலக்கியக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அரசியல் பணியில் நேர்மையாகவும், மக்கள் பிரச்சினை களை முன்வைத்தும் செயல்பட்டார்.
நா.வா.வின் பதிப்புப் பணிகள் பற்றிக் கூறுங் கள்?
சங்க இலக்கியப் பாடல்களும், ஐம்பெரும் காப்பியங்களும், ஓலைச்சுவடிகளாக இருந்தன. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தேடி அலைந்து அவற்றைக் கண்டுபிடித்துப் பதிப்பித் தார். இல்லையென்றால் கண்டறிய முடியாமல் அழிந்திருக்கும், அதைப் போல நா.வா. சிறிய கிராமங்களுக்கெல்லாம் சென்று தேடி அலைந்து, வில்லுப்பாட்டுக் கலைஞர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களிடமிருந்து பெறப்பட்ட சுவடி களைப் படியெடுத்துப் பல கதைப் பாடல்களைப் பதிப்பித்தார். குறிப்பாக, ஐவர்ராசாக்கள் கதை, வீணாதி வீணன் கதை, கட்டபொம்மன் கதைப் பாடல் போன்றவை.
ஆராய்ச்சி இதழின் பங்களிப்பு பற்றியும், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் கூறுங்கள்?
அந்தக் காலகட்டத்தில் ஆராய்ச்சி இதழ் இரண்டு நிலைகளைத் தாங்கியதாக வந்து கொண்டு இருந்தது. செவ்வியல் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம். செவ்வியல் இலக்கியம் என்று குறிப்பிடும்போது, எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, நெடுஞ்செழியன், மு.வரதராசன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இதில் சங்க இலக்கியம் சார்ந்து நெடுஞ்செழியன் எழுதிய காதல் காட்சிகள், மு.வ., எழுதிய நற்றிணை விருந்து, குறுந் தொகை விருந்து போன்றவை இந்தக் கருத்துக் களைத் தாங்கியனவாக செந்தமிழ், தமிழ்ப் பொழில் முதலிய இதழ்களில் கட்டுரைகள் வெளி வந்தன. நாட்டுப்புற இலக்கியம் சார்ந்து ஆராய்ச்சி இதழில் பல கட்டுரைகள் வெளியிடப் பட்டன. அதே போன்று தாமரை, சரஸ்வதி, தீபம், ஜனசக்தி முதலிய இதழ்களிலும் வெளிவந்தன. செவ்வியல் இலக்கியம் சார்ந்தும் பல கட்டுரைகள் வந்தன. ‘திராவிட இயக்கத்தார் மட்டும்தான் செவ் வியல் இலக்கியம் பற்றிச் செயல்பட வேண்டும்’ என்ற எண்ணத்தை நா.வா., மாற்றியமைத்தார். அது ஒரு போக்கு, அதற்கான மாற்றுப் போக்கு என இதனைக் கூறலாம்.
பேராசிரியர் நா.வா.வின் போராட்டம், சிறை வாழ்க்கை பற்றிய உங்களின் கருத்து என்ன?
1970ஆம் ஆண்டு நிலமீட்சிப் போராட்டம் ஒன்று நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அறி வித்தது. அந்தப் போராட்டத்தைத் தடுக்க தமிழக அரசு கட்சியின் தலைவர்களை இரவோடு இர வாகக் கைது செய்து, சதி செய்ததாக வழக்குப் புனையப்பட்டு விடியற்காலை 4 மணிக்குக் காவல் துறையினர் நா.வா.வின் வீட்டின் கதவைத் தட்டி எழுப்ப, பேராசிரியர் என்னவென்று கேட்க, உங் களைக் கைதுசெய்ய வந்துள்ளோம் என்றார்கள். ‘நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தானே’ என ஆய்வாளர் நக்கலாகக் கேட்க, அதற்கு நா.வா. ஆங்கிலத்தில் ‘I would never say I am not a communist, I am proud to say I am a communist’ என்று கூறினார். பின்பு நா.வா.வைக் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்திப் பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டி பாளையங் கோட்டைச் சிறையில் அடைந்தனர். அங்கும் அவர் வாளாவிருக்கவில்லை. சிறைச் சாலையில் உள்ள கைதிகளுக்கு வகுப்பு எடுத்துப் புரட்சி செய்தார்.
நா.வா. நடத்திய டூடோரியல் கல்லூரியின் செயல்பாடுகள், அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது? அதனை நடத்த அவர் சந்தித்த பிரச்சினைகள் என்னென்ன?
பேராசிரியர் நா.வா. 1944ஆம் ஆண்டு அரசுப் பணியான ஆசிரியர் தொழிலை விட்டு விலகினார். 1947ஆம் ஆண்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ‘ஸ்டூடன்ஸ் டூடோரியல் இன்ஸ்டியூட்’ (Student Tutorial Institute)) நிறுவினார். இரசாயனம், ஆங்கிலம் இரண்டு பாடங்களையும் அவரே மாணவர்களுக்குக் கற்பித்தார். கே.சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து இந்தப் பணிகளைச் செய்தார். பின்னாளில் கருத்து வேறுபாடு காரண மாக கே.சீனிவாசனுடன் இருந்து பிரிந்து நா.வா.வே பொறுப்பேற்று நடத்தினார். தக்கலை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கிளைகள் துவங்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இக்காலகட்டத்தில் ஏற்பட்ட நிதி நெருக் கடிகளில் கூட யாரிடமும் உதவிகள் கேட்டது இல்லை. கே.சீனிவாசனை விட்டுப் பிரிந்தவுடன் ‘வானமாமலை டூடோரியல்’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. அக்கால கட்டத்தில் பெரும் வரவேற்பை இந்நிறுவனம் பெற்றிருந்தது.
நா.வா.வின் இறுதிக்காலத்தைப்பற்றிக் கூறுங்கள்?
பேராசிரியர் அயராது ஓய்வின்றி உழைத்தார். அதிகமாகப் புகைபிடிக்கும் பழக்கம், முறையாக உணவு உட்கொள்ளாமை, உடலியல் பிரச்சினை களுக்குச் சரியாக மருந்து உட்கொள்ளாமை ஆகிய காரணங்களால் இதயத்தாக்குதலுக்கு ஆளானார். இறக்கும் வரை சிகரெட் மீது அதிகப் பற்றிருந்தது. இரண்டாவது மகன் ராமமூர்த்திக் குக் குழந்தை பிறந்ததைப் பார்க்க 1980 ஆண்டு ஜனவரி மாதம் ஐதராபாத் சென்றார். அங்குச் சில நாட்கள் தங்கிவிட்டு கோர்பாவில் உள்ள மூத்த மகள் கலாவதிக்குப் பிறந்த ஆண் குழந்தையைப் பார்க்கச் சென்றார். அங்கிருந்து தனிமையை உணர்ந்த அவர் எனக்குக் கடிதம் எழுதினார். அதில் நண்பர்களைச் சந்திக்கவும், நூல்களை வாசிக்கவும் முடியவில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.
1980ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை மகள் கலாவதியும் (மருத்துவர்) மருமகன் பலராமனும் (பொறியாளர்) பணிபுரிந்த அலுமினியத் தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கலாவதி பலராமன், மூத்த மகன் ஸ்ரீகாந்துடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே கீழே சாய்ந்தார். அப்போது நா.வா.வின் மூத்தமகன் கிருஷ்ணமூர்த்தியும் மருமகள் விஜயாவும் அங்குதான் இருந்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தகவல்தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத காலகட்டம், உடலைப் பதப்படுத்த குளிரூட்டும் வசதிகள் இல்லை. போக்குவரத்து குறைபாடு. அதனால் உடலை அங்கேயே அடக்கம் செய்தனர். தமிழ்நாட்டில் இருந்து தலைவர்கள் செல்ல முயற்சி செய்தும் செல்லமுடியவில்லை. நா.வா.வின் இழப்பு தமிழுலகிற்கு ஏற்பட்ட இழப்பு, இறுதிக் காலத்தில் தோழர்களும், மாணவர்களும், உறவினர்களும் உடன் இல்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டிருக்கும் அந்தச் சூழலைக் காலம் தந்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக