வெள்ளி, 19 ஜூலை, 2013

காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்-கோ.ஜெயக்குமார்.

காலத்தை வென்ற திரைப்பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்-கோ.ஜெயக்குமார்.
 தஞ்சை இராமையாதாஸ் (சூன் 5, 1914 - சனவரி 15, 1965) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.
சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா" பாடலும் தருவார். மாயாபஜார் படத்துக்கு "கல்யாண சமையல் சாதம்" பாடலும் தருவார்.

காதலை நெஞ்சில் பதிக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" படப்பாடலான "அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா"வும் தருவார்.

நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் "மலைக்கள்ளன்" படப்பாடலான "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடலும் தருவார்.

புரியாத மொழியில் 'ஜிகினா' வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் "ஜாலியோ ஜிம்கானா" பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே" பாடலை போடுவார்கள். "பானை பிடித்தவள் பாக்கியசாலி" படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

1939-ல் வெளிவந்த "மாரியம்மன்" படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து "புலவர்" பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?

கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-

அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

சுதந்திரம் கிடைத்த பிறகு "சுதந்திர போராட்ட தியாகி" என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு 'வாத்தியார்' என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் 'வாத்தியார்' ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜுனா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.

ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி", "ஓர் இரவு" போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக "வெச்சேன்னா வெச்சதுதான்" என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.

அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் "மச்சரேகை" நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.

இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த "பாதாள பைரவி", "மிஸ்ஸியம்மா", "மாயாபஜார்" போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.

அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.

ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் "அமரதீபம்" படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, "நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க" என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், "வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே" என்று கலக்கமாய் கூறியவர், "வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க" என்று கேட்டிருக்கிறார்.

அப்பாவும் உடனே தமாஷாக, "ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா" என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

"இதுக்கு என்ன அர்த்தம்?" என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, "கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்" என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு "டப்பாங்குத்து பாடலாசிரியர்" என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த "குறவஞ்சி" படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி "எந்நாளும் 'தண்ணி'யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா.... ரா..." என்று எழுதினார்.

சினிமாவில் 'கேட்டது கிடைக்கும்' என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது "தங்கரத்தினம்" படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் "உதயசூரியன்" என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் "எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு" என்று எழுதிக் கொடுத்தார்.

அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது "மாலையிட்ட மங்கை" என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த 'பிஸி'யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.

அந்தக் காலத்தில் 'கதை, வசனம், பாடல்கள் ஒருவரே' என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் 'பபூன்' வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.

பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் 'ஏகலைவன்' என்றும் அழைத்துக் கொண்டார்".
கித்தியார் என்றால் ஆசிரியர் என்று நமக்குத் தெரியும். ஆனால், திரைப்பாடல்களின் வாத்தியாராகத் திகழ்ந்தவர் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ். தஞ்சை, மானம்பூச்சாவடியில் நாராயணசாமி-பாப்பு
கித்தியார் என்றால் ஆசிரியர் என்று நமக்குத் தெரியும். ஆனால், திரைப்பாடல்களின் வாத்தியாராகத் திகழ்ந்தவர் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையாதாஸ்.
தஞ்சை, மானம்பூச்சாவடியில் நாராயணசாமி-பாப்பு தம்பதிக்கு 1914-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பிறந்தார். அவ்வூரிலுள்ள புனித பீட்டர் பள்ளியில் படித்து, கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்று தஞ்சை கீழவாசல் பள்ளியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு நாடகத் துறையிலும் ஈடுபட்டதுதான் அவர் கலைத்துறையில் கால்கோளிட வாய்ப்பாக அமைந்தது. ஜெகந்நாத நாயுடுவின் "சுதர்சன கான சபா' நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். நாடகக் கதை வசனம் பாடல் எழுதுவோர் வாத்தியார் என்றழைக்கப்படுவது அந்நாளைய வழக்கம் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.
பிறகு, "ஜெயலட்சுமி கான சபா' என்று தானே ஒரு நாடகக் குழுவை ஏற்படுத்தி, மச்சரேகை, துருவன், கம்பர், விதியின் போக்கு, வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, பகடை பன்னிரண்டு ஆகிய நாடகங்களை ஊர்தோறும் முகாமிட்டு நடத்திவந்தார்.
ஜெயலட்சுமி கான சபா சேலத்தில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தபோது, அறிஞர் அண்ணாவின் நாடகக் குழுவினர் அங்கே இருந்து கொண்டு ஓர் இரவு, வேலைக்காரி போன்ற சமூக நாடகங்களை நடத்தி வந்தனர். அண்ணா, தன் நாடகம் முடிந்ததும் குழுவினருடன் ராமையாதாஸின் நாடகங்களைக் கண்டு ரசிப்பாராம்.
கவிஞர் ராமையாதாஸின் நாடக உரையாடலும், பாடல்களும் பிரபலமானதால், அவர் புகழ் திரைத்துறையில் பரவத்தொடங்கியது. அப்போது டி.ஆர்.சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற படம் உருவாகிக் கொண்டிருந்தது. அதில் பாடல்கள் எழுத ராமையாதாஸýக்கு வாய்ப்பு வந்தது.
""வச்சேன்னா வச்சது தான் புள்ளி'' என்ற அவரது முதல்பாடல் அந்நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்து திகம்பர சாமியார், சிங்காரி ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.
ராமையாதாஸின் மச்சரேகை நாடகம் 200 நாள்களைக் கடந்து நடந்து கொண்டிருந்ததைக் கண்ட நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் அதைத் திரைப்படமாக்க, ராமையாதாûஸ 1950-இல் சென்னைக்கு அழைத்தார். இவருடைய திறமையை அறிந்த நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம், "பாதாள பைரவி' படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதக் கேட்டுக்கொண்டது. 1951 முதல் 1960 வரை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதி மேலும் புகழ் பூத்தார்.
இதற்கிடையில், தமிழ்நாடக உலகின் தலைமை ஆசிரியர் எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளைத்தான் தன் குருவாக ஏற்று மகிழ்ந்தார். அது மட்டுமல்ல, அவரின் ஏகலைவன் என்றும் தன்னைக் கூறிக்கொண்டார். ராமையாதாஸýக்கு காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களோடு தொடர்பு உண்டு என்றாலும், அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதைதான் எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி என்ற திரைப்படம். இப்படத்தில் ராமையாதாஸ் எழுதிய பாடல்களான, "சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு' என்ற பாடலும், "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா...' என்ற பாடலும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன.
தஞ்சை ராமையாதாஸின் பாட்டெழுதும் வேகத்தைக் கண்டு அதிசயித்த எம்.ஜி.ஆர். அவரை "எக்ஸ்பிரஸ் கவிஞர்' என்றே அழைத்து மகிழ்ந்தார். தமிழன்னைக்கு ஏதேனும் ஓர் உருப்படியான பணி செய்ய நினைத்த ராமையாதாஸ் "திருக்குறள் இசை அமுதம்' என்ற நூலை எழுதினார். 1962-இல் வந்த இந்த நூலுக்கு டாக்டர் மு.வ.வும் இசையரசு எம்.தண்டபாணி தேசிகரும் அணிந்துரை அளித்துள்ளனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார்.
இவ்வாறு ஒட்டுறவோடு இருந்த ராமையாதாஸýக்கும் எம்.ஜி.ஆருக்கும் பின்நாளில், திரைப்படம் எடுத்தது தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐநூறு திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவர் தொடக்க காலத்தில் ராமையாதாஸிடம் உதவியாளராக "நாட்டியதாரா' என்ற படத்துக்குப் பணிபுரிந்தார். வசனம் எப்படியிருந்தால் சிறப்பாக இருக்கும் என வழிகாட்டியவரும், ஜேசுதாஸ் என்ற அவர் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவரும் ராமையாதாஸ்தான்.
திரைப்படத் தயாரிப்புத் தொழில், அதில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கூறுகளுமே வணிக நோக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதே குறிக்கோள். அவற்றில் பாடலை மட்டும் எடுத்துக்கொண்டு இப்பாடலில் பொருளே இல்லை, இலக்கணம் இல்லை, பிறமொழிச் சொற்கள் அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் விமர்சிப்பதில் பொருள் இல்லை. அவற்றில் இலக்கிய நயத்தை எதிர்பார்த்தல் சரியான அணுகுமுறை அல்ல. திரைப்பாடலின் உயிர்நாடி மெட்டுதான். இது அனைத்துப் பாடலாசிரியர்களுக்கும் தெரிந்த உண்மை. இதனால், அவர்களுக்கெல்லாம் இலக்கணத்தோடு பாடல் புனையத் தெரியாது என்று பொருளல்ல, அந்த இடத்துக்கு அவ்வாறு எழுதுவது பொருந்தாது - எடுபடாது என்பதேயாகும். அங்கெல்லாம் பணத்துக்குத்தான் முதலிடம்; இலக்கணத்துக்கும் விமர்சனத்துக்கும் வேலையில்லை.
தஞ்சை ராமையாதாûஸயும் விமர்சித்தனர். கடுமையாக விமர்சித்தவர் ஏ.எல்.நாராயணன். அவருக்கு மறுமொழி கீழ்கண்டவாறு கூறியுள்ளார் ராமையாதாஸ்.
""தம்பி! என்னை நல்லாதான் திட்டி எழுதியிருக்க, வெண்பா, கலிப்பா, எண் சீர் விருத்தம் அனைத்தும் எனக்கும் தெரியும். ஏத்தம் இறைக்கிறவன் ஐலேசா பாடாம, வண்டார் குழல் செண்டாட என்றா பாடுவான். நாலணா துட்டுக் கொடுத்துப் படம் பாக்கிறவனை சந்தோஷப்படுத்த வேண்டும். அதுக்குத்தான் எனக்குப் பணம் கொடுக்கிறார்கள். நான் வேண்டாம் என்றாலும் என்னை அந்த வலைக்குள் சிக்க வைக்கிறார்கள்'' என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.
83 படங்களில் சுமார் 532 பாடல்களை எழுதியதோடு, 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதிப் பணமும், புகழும் குவித்து, திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, 1950 முதல் 1963 வரை கொடிகட்டிப் பறந்தார்.ராமையாதாஸýக்கு இரண்டு மனைவியர். ஒருவர் தாயராம்மாள். இவருக்கு விஜயராணி என்ற மகள் இருக்கிறார். இன்னொருவர் ரங்கநாயகி. இவருக்கு த.ரா.ரவீந்திரன் என்ற மகன் இருக்கிறார்.
பாமரமக்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்கள் இயற்றியிருப்பதுதான் தஞ்சை ராமையாதாஸின் முத்திரை. அவர் இயற்றிய பாடல்களில் ""பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ'' என்ற பாடல்தான் அவருக்குப் பிடித்த பாடலாம்.
ராமையாதாஸ் நாடகத்துறையிலும் திரைத்துறையிலும் ஒரு சாதனையாளர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ராமையாதாஸ், 1965-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி காலமானார்.
தஞ்சை ராமையாதாஸின் கலைப்பணியைப் போற்றும் வகையில், 16.7.2010 அன்று கலைஞர் கருணாநிதி அவருடைய கலைப்படைப்புகளை நாட்டுடைமையாக்கி, வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ராமையாதாஸின் ஒரே வாரிசான ரவீந்திரன் அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால், கவிஞர் ராமையாதாஸ் பிறந்த இடமான தஞ்சையில், அவருக்கு மணிமண்டபமும் சிலையும் நிறுவி, கவிஞரின் பெயரில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக