சனி, 27 ஜூலை, 2013

சென்னைதிருநீர்மலை திவ்ய தேசம் - கோ.ஜெயக்குமார்.

சென்னைதிருநீர்மலை திவ்ய தேசம் - கோ.ஜெயக்குமார்.

திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன. மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன.
அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgabqsDdsBkqdK5WEappZamixumX64Q2trzhT6YtQbSdC_y1EYnzsa1NePA084-AzGrsOjAREWlpxIGDNAEJMxeLa2wAg6KIO3jy9jiihwC1P1foRTl4fEb_0RLNU4HtrvR_3EEuYv33kHR/s320/thiruneermalai.jpg
மலையில் கீழ் `நின்றான்' என்று சொல்லும் நிலையில் பெருமாள் மலையின் மேல் ` இருந்தான்! நடந்தான்!' என்ற திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் ரங்கநாயகித் தாயார், தனிக் கோவில் நாச்சியாராகக் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். 

வால்மீகி இங்கு வந்து தியானம் செய்ய ராம லட்சுமண, பரத, சத்ருக்னர்கள், சுக்ரீவனோடும் அனுமனோடும் அவருக்குக் காட்சி தந்து மறைந்தார்களாம். திருமங்கையாழ்வார், ஆறு மாத காலம் இங்குத் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டார்.

அப்பொது இந்த மலையைச் சுற்றி நீர் அரண் போல் இருந்ததால், நீர்மலை என்ற பெயர் இதற்கு உண்டாயிற்று. பூதத்தாழ்வாரும், இந்தத் திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டிïர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் மங்ளாசாசனம் செய்துள்ளார். 

இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாகக் காட்சி தருதலால், திருமணம் கைகூடும் தலமாகவும், பிரார்த்தனைத்தலமாகவும் விளங்குகிறது. இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாகக் கருதப்படுகிறது. 

ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, திருமணத்தடைகள் நீங்க திருநீர் மலைக்கு வந்து பெருமாளைத்தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும் அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.  

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநீர்மலை. இந்த மலையை அணிதிகழும் சோலை அணிநீர்மலை என்கிறார் பூதத்தாழ்வார். அத்தகைய வசதி அக்காலத்தில் இல்லாததால், நீர் சூழ்ந்த இத்தலத்துப் பெருமானை தரிசிக்க திருமங்கை ஆழ்வார் ஆறுமாத காலம் காத்திருந்தார்.

திருநறைïரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். இனி ஆலயத்தின் தல வரலாறு பார்ப்போம்.

தல வரலாறு.........

ராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரசிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார்.

முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர். ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் அனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரசிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்.

போக்குவரத்து வசதி......

சென்னை பல்லாவரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
 
நீர்' பெருமாள்: ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.
ஒரே தலத்தில் நான்கு பெருமாள்: இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.
http://photos.wikimapia.org/p/00/01/00/47/96_big.jpg குழந்தை நரசிம்மர்: நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம். 
http://photos.wikimapia.org/p/00/01/00/47/97_big.jpg கோபுரம் ராமருக்கு... கொடிமரம் நீர்வண்ணருக்கு...: கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, "அணிமாமலர்மங்கை' எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
இரட்டை திருவிழா: மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர், ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும்  ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
குளம் ஒன்று: தீர்த்தம் நான்கு: கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, "முக்கோட்டி துவாதசி' என்று அழைக்கிறார்கள்.
பெருமாள் கோயில் கிரிவலம்: தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. இவை, "ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்' எனப்படும். இதில் திருநீர்மலையும் ஒன்று. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் பிற தலங்கள் ஆகும். மலையில் அமைந்த கோயில் என்பதால் இங்கு பவுர்ணமி தோறும் கிரிவல வைபவம் விசேஷமாக நடக்கிறது.இம்மலைக்கு "தோயாத்ரிமலை' என்ற பெயரும் உண்டு. தோயம் என்றால் "பால்' எனப்பொருள். சுவாமி தோயகிரி விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். சனிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது இவருக்கு புஷ்பாங்கி அலங்காரம் செய்கின்றனர்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzJ2RMTQWf2D9tlW5Obi6jY9SsSUC5_Pf19bIosIPkAoLEsc_QnlO6yy9xIjdRkc8LcnOX9IqzBTEfIKAEYXlovMbSaskMNyVCGHuzD-T1IfcDAVyZ4Cu905Gzj3drANVEPX6kk4RMxp3F/s1600/ranganathar+thiruneermalai.jpg
 ஆலயத் தகவல்களுக்கு முன்னால் சில அடிப்படைத் தகவல்கள். "நாராயணனே இறைவன்" என்று பாடிக் களித்த ஆழ்வார்கள் 12 பேர். ஆழ்வார்களால் குறைந்தது ஒரு பாடலாவது பாடப்பெற்ற ஆலயங்களே 108 திருத்தலங்கள் என்னும் சிறப்பைப் பெறுகின்றன.வைணவத் திருத்தலங்கள் (திவ்ய தேசங்கள்) 108. சோழ நாடு - 40, பாண்டிய நாடு - 18, நடு நாடு - 2, தொண்டை நாடு - 22, வட நாடு - 11, மலைநாடு - 13, நில உலகில் பார்க்க முடியாத தலங்கள் - 2.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-ZlIkzaMtvWLnnGobVwxlHNsykX2NnxYBrfiHuq3Zp6DGVD0tVEPeCsVW4ZZo8lKnZht6EpSOJGSF5IeuthpDKS1dCuclgsycUoz9r6f_DLKvlWUKWILqC8g4wYX0X3wwQGdeoXsyFuqF/s400/ThiruNeer_Malai.JPG
இந்த ஆலயத்தைப் பாடியவர்கள், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார். நூற்றி எட்டில் இது 91 ஆவது திருத்தலம். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் என்ற பெயர் இருந்தாலும் உள்ளூர் மக்களால் நீர்வண்ணப் பெருமாள் கோயில் என்றே பரவலாக அறியப்படுகிறது.
https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/549932_198787723598131_1828427974_n.jpg

நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம். 
நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை - நின்ற திருக்கோலம்.
சாந்த நரசிம்மன் - வீற்று இருந்த திருக்கோலம்.
ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி - கிடந்த திருக்கோலம்.
உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) - நடந்த திருக்கோலம். 

https://lh3.googleusercontent.com/_goo3xXzQh5o/TafrH_xAlwI/AAAAAAAAHn0/93Ho94j7b8Y/s512/063.jpg
ஆலயத்தின் அமைப்பும், சிறப்பும்: நீரும், மலையும், மரங்களும் சூழ்ந்திருப்பதால் ரியல் எஸ்டேட்காரர்களையும் மீறி ஆலயம் பொலிவாகக் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் முகப்பாக அமைந்துள்ள காருண்ய தீர்த்தம் நிரம்பிய குளமும், நீராழி மண்டபமும், வசந்த மண்டபமும் அடுத்தடுத்து நாம் அனுபவிக்கப் போகும் அழகுகளுக்கான முன்னுரை!
http://www.tamil.dhamma.org/images/routemap_tamil.jpg
மலை அடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாள், ரங்கநாதர், ஆண்டாள் சன்னதிகள்.12 ஆழ்வார்களின் சிலைகள் எழிலானவை. வெளிச்சுற்றில் அணிமாமலர் மங்கைத் தாயார், ஸ்ரீராமர் சன்னதிகள்.

ஆடுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு 200 படிகள் மேலே சென்றால் ரங்கநாதன், ரங்கநாயகி, சாந்த நரசிம்மன் மற்றும் உலகளந்த பெருமாள் சன்னதிகளைக் காணலாம்.

சிறப்புகள்:

மனித முயற்சிகளின்றி (ஸ்வயம் வ்யக்த) தானாக உருவான தலம்.


நான்கு வேதங்களின் பொருளாக நான்கு நிலைகளிலும் இறைவனைத் தரிசிக்கலாம்.

இங்கு தரிசனம் செய்தால் திருமலை, ஸ்ரீரங்கம், திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம். (குறிப்பிட்ட ஆலயங்களுக்குச் செல்ல வேண்டாம் என்பது பொருளில்லை!)

நாம் இங்கு ஒரு நாள் செய்யும் புண்ணிய செயல்கள் பிற தலங்களில் பல வருடங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.

உலக இச்சைகளில் உழலும் உயிர்களுக்கு முக்தி அளிக்கும் தலம். (வளைவுகளில் விரையும் பேருந்துகள் முக்தியை நினைவு படுத்துகின்றன!)

பாடல்:

அன்றாயர்    குலக்கொடி  யோடு
             அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
               உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
               தடந்திகழ் கோவல் நகர்
 நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
                மாமலையாவது நீர்மலையே. 
                                                                 திருமங்கை ஆழ்வார்.

2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் காத்திருந்து பார்த்திருக்கிறார். அவ்வளவு மெய்வருத்தம் நமக்கு இருக்காது. ஆலயத்தின் வாசலுக்கே பேருந்துகள் செல்கின்றன. இயற்கைப் பின்னணிக்காகவே (ஆன்மீக நாட்டமில்லாதவர்களும்) காண வேண்டிய ஆலயம்! 

2 கருத்துகள்:

  1. மிகவும் அருமை ஐயா மிக மிக பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றோம்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு மாத பவுர்ணமியில் கிரிவலம்
    எத்தனை மணிக்கு ஆரம்பித்து எவ்வாறு
    நடத்தப்படுகிறது என்பதை அடியேன்
    அறிந்து கொள்ள விபரங்கள் தெரிவிக்கவும்
    கிரிவலத்தில் பங்கேற்று பெருமாள் ஆசி
    பெற விருப்பம். வணக்கம்.

    பதிலளிநீக்கு