புதன், 30 அக்டோபர், 2013


உத்தர பிரதேசத்தில் டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனைக்குள் 1000 டன் தங்கம்  - கோ.ஜெயக்குமார்.

 

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் வெள்ளிக்கிழமை அரண்மனை வளாகத்தை தோண்டி தங்கள் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளனர்.
இந்த அரண்மனையில் புதையுண்டு கிடக்கும் தங்கத்தை அரசு கைப்பற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று சாது தெரிவிக்கிறார்.

 
1000 டன் தங்கம் இருப்பதாக கண்ட சாதுவின் கனவு பலித்தால், ஓராண்டுக்கு இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு இணையாக இருக்கும்.அரண்மனைக்கு பின்புறம் இரண்டு இடங்களில் தலா 100 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனினும், அந்த மண்ணில் புதையல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வுக்குழு தலைவர் மிஷ்ரா தெரிவித்தார். 

 
உ.பி.யில் பழங்கால கோட்டையில் பள்ளம் தோண்டி தங்கப்புதையலைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அங்கு பூமிக்கு அடியில் விலை உயர்ந்த உலோகம் இருக்கலாம் என தொல் பொருள் ஆராய்ச்சித்துறை வல்லுனரும், கலெக்டரும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பழங்கால மன்னர் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ஷோபன் சர்க்கார் கனவில் தோன்றி, தாண்டியா கெராவில் உள்ள தனது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகக் கூறிய தகவல் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் கோட்டையில் 1000 டன் தங்கப்புதையலை தேடும் வேட்டையை இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர் நேற்று முன்தினம் தொடங்கினர்.தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தங்கப்புதையல் தேடும் வேட்டை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. தொல் பொருள் ஆராய்ச்சித்துறை துணை இயக்குனர் பி.கே.மிஷ்ரா தலைமையில், அந்தத் துறை மற்றும் இந்திய புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையை சேர்ந்த 12 உறுப்பினர் குழு வழிகாட்டுதலில், உள்ளூர் தொழிலாளர்கள் மண்வெட்டி, மண்கொத்தி, கடப்பாரை போன்றவற்றைக் கொண்டு தோண்டி வருகின்றனர்.

இதை வேடிக்கை பார்க்க சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக் கான மக்கள் வெள்ளமென திரண்டனர். இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சர்வானந்த் சிங் உறுதிப்படுத்தினார்.தோண்டுதல் பணி நடக்கிற இடத்திற்குள் பொதுமக்கள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு திடீர் கடைகள் உதயமாகி உள்ளன. அங்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை அமைந்துள்ள பகுதியை துளையிடும் எந்திரம் கொண்டு துளையிட்டு பார்த்தபோது 20 மீட்டர் ஆழத்தில், உலோகப்படிமம் தென்பட்டது. அது பாறைபோல இல்லை. அந்தப்பகுதியில், 10-க்கு 10 மீட்டர் பரப்பளவு கொண்ட 3 பள்ளங்கள் தோண்டுவதற்கு இந்திய தொல் பொருள் ஆராய்ச்சித்துறையினர், இந்தியப் புவி அமைப்பியல் ஆராய்ச்சித்துறையினர் குறியிட்டுள்ளனர். அந்தப் பள்ளங்களைத் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.