திங்கள், 16 டிசம்பர், 2013

வீரபாண்டிய கட்டபொம்மனும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையும் - கோ.ஜெயக்குமார்.



வீரபாண்டிய கட்டபொம்மனும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையும் - கோ.ஜெயக்குமார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.
 
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
 
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
 
வாழ்க்கை
ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
 
போர்
கும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது.
 
போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
 படிமம்:KATTAPOMMAN FULL SCENE.JPG
மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
 படிமம்:KATTAPOMMAN THUN.JPG
1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
 
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்.
    ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
    எட்டயபுரம் - 23 கி.மீ
    தூத்துக்குடி - 25 கி.மீ
    கயத்தாறு - 40 கி.மீ
    கோவில்பட்டி - 38 கி.மீ
    திருச்செந்தூர் - 70 கி.மீ
மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே குறுக்குச்சாலை என்னும் ஊருக்கு அருகே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கோலோச்சிய பாஞ்சாலங்குறிச்சி. 36 ஏக்கரில், 36 அடி உயர மதில் சுவர்களுக்குள் கம்பீரமாக காட்சி தந்த கோட்டையிலும் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திலும் தற்போது எஞ்சி இருப்பது தரைமட்டமான சிதிலங்கள்தான். வெள்ளையர்கள் கோட்டையும் மதில் சுவர்களையும் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
 
தமிழக அரசு அங்கே ஒரு நினைவிடத்தை எழுப்பி பராமரித்து வருகிறது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தைய கோட்டையின் தரைப்பகுதி மட்டும் தற்போது மிச்சமுள்ளது. அதைச் செப்பனிட்டு பராமரிக்கும் வேலையை தொல்பொருள் ஆய்வுக்கழகம் மேற்கொன்டு வருகிறது. திருச்செந்தூரை நோக்கி செல்லும் 2 மைல் நீள சுரங்கப்பாதையின் முகப்பையும் காணலாம். அந்த பாதை தற்போதும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
 
பாஞ்சாலங்குறிச்சி: கதை சொல்லும் சித்திரங்கள்
வாகனத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தின் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். இந்த மண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட சிறு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. கட்டணத்தைச் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு நினைவு மண்டபத்திற்குள் சென்றோம்.
 
இந்தக் கட்டடம் உள்ளேயும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தூய்மையாக உள்ளன. சுவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைச் சித்திரமாக தீட்டி வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு சித்திரமும் ஒரு கதை சொல்லும் அருமையான சித்திரங்கள். அங்கு சுற்றுப் பயணிகளுக்குத் தகவல் வழங்குவதற்காக ஒருவரை நியமித்திருக்கின்றார்கள். எங்களைப் பார்த்ததும் அருகில் வந்து தகவல் விசாரித்து விட்டு எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஒவ்வொரு சித்திரத்திற்கும் ஒரு கதை உள்ளது என்று ஆரம்பித்து கதையைக் கூற ஆரம்பித்தார்.
 
ஒலிப்பதிவு :
பாஞ்சாலங்குறிச்சியைத் தனது கோட்டைக்கான இடமாக  கட்டபொம்மன் வம்சத்தினர் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு கதை கூறுகின்றனர். அவர்கள் பார்த்த ஒரு காட்சி அவர்களை இவ்விடத்தை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.
 
ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். 
 
நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டயை அமைத்திருக்கின்றனர் கட்டபொம்மன் வம்சத்தினர். அவரது பாட்டனார்  ஆட்சிப் பொறுப்பை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அவரது 30வது வயதில் வழங்குகின்றார். தனது பாட்டனார் பாஞ்சாலன் ஞாபகமாக இந்தப் பகுதிக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரும் வழங்குகின்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ஆட்சியின் போது 6 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டாமலேயே இருந்திருக்கின்றார். இதனை அறிந்த ஆங்கிலேய அதிகாரி இவரிடம் வரி கட்டும் படி கோரி செய்தி அனுப்புகின்றார். 
 
வரி கட்ட முடியாது என்று தெரிவித்து கட்டபொம்மன் மறுக்கின்றார். வரி தர முடியாது என்று கூறிவிட்டாலும் இதனால் ஏதும் விபரீதம் விளையுமோ என்று அவருக்கு மனதில் கலக்கம் இருக்கின்றது. வரி தர முடியாது என்று சொல்லிவிட்டோம். இதனால் ஏதும் கேடு ஏற்படுமோ என எண்ணம் தோன்ற தனது குலதெய்வமான ஜக்கம்மாவை இவரும் இவரது மனைவியும் வழிபடுகின்றாகள்.
 
ஜாக்சன் துரை என்பவர் 10.9.1790ல் தனது ஆட்களை அனுப்பி கட்டபொம்மனை அழைத்து வந்து கட்ட வேண்டிய பாக்கி வரியை கட்டாததன் காரணைத்தை அறிய விசாரனை நடத்துகின்றார். இந்த விசாரணை நடைபெறும் போது கட்டபொம்மன் தந்திரமாக தனது வாளால் அவரைத் தாக்கி விட்டு தப்பித்து ஓடி விடுகின்றார்.
 
வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்துப் ஓடினாலும் இவரது கணக்குப்பிள்ளை தாணாபதிப்பிள்ளை பிடிபட்டு விடுகின்றார். இவரை பிடித்து ஆங்கில அரசாங்கம் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றார்கள். கணக்குப்பிள்ளை பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார்.
 
கட்டபொம்மனும் அவரது மனைவியும் சில வீரர்களுடன் ஒட்டப்பிடாரத்துக்கு அருகில் சாலிகுளம் என்னும் இடத்தில் தங்கியிருக்கின்றார்கள். அப்போது அனைத்து பொறுப்பும் மந்திரி தானாபதி பிள்ளைக்குப் போய் சேர்கின்றது.
 
திருச்சியில் தன்னை சிறைபிடித்து வைத்ததை மனதில் வைத்து அதற்காக பழிவாங்க வேண்டும் என்றும் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான தபால் போக்குவரத்தைத் தடை செய்து விடுகின்றார் மந்திரி தானாபதிப்பிள்ளை.
 
எட்டயபுரம் ஜமீனோடு ஒப்பிடும் போது கட்டபொம்மனின் அரசாங்கம் சிறியதே.  ஆக ஆங்கிலேயர்கள் எட்டயபுர ஜமீன் ஆதரவோடு கட்டபொம்மன் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
 
கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர். திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் போது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்று விடுவாராம். அந்த நேரத்தில் கோட்டையைத் தாக்கினால் கோட்டையைக் கைபற்றிவிடலாம் என்று ஆங்கில அரசு திட்டமிடுகின்றனர். 
 
 5.9.1799 அன்று பானர்மேன் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி தன் வீரர்களுடன் கோட்டைக்கு வருகின்றார். அந்த சமயம் கட்டபொம்மன் கோட்டையில் இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டையை இடித்து உடைத்து தரை மட்டமாக்கி விட்டுச் சென்று விடுகின்றனர்.
 
இப்படி தரை மட்டமாக்கிய பின்னர், மந்திரி தாணாபதிப்பிள்ளையின் ஆலோசானையைக் கேட்டு தம்பி ஊமைத்துரையையும் அழைத்துக் கொண்டு  புதுக்கோட்டைக்குச் சென்று விடுகின்றார் கட்டபொம்மன்.
 
9.9.1799ல் கட்டபொம்மன் தனது இடத்தை விட்டு வேறு இடம்  சென்று விட்டார் என்ற தகவல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் செல்கின்றது. கட்டபொம்மன் இல்லாததால் எல்லாவறறையும் இடித்து உடைக்க உத்தரவிடுகின்றார்.
 
கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த புதுக்கோட்டை மன்னர் விஜயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்கின்றார். தகவல் கிடைத்த ஆங்கிலேயர்கள் அங்கு சென்று கட்டபொம்மனை புதுக்கோட்டையில் கைது செய்து விடுகின்றார்கள். கைது செய்து அங்கிருந்து கட்டபொம்மனைக் கயத்தாறு கொண்டு செல்கின்றார்கள். அங்கு அவரை விசாரனை செய்கின்றார்கள். விசாரணையின் அடிப்படையில் 16.10.1799 அன்று அவரை புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்தரவிடுகின்றார்கள். 
 
கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பின்னர் ஆங்கிலேய அரசு கட்டபொம்மனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பொது  மக்களையும் சிறையில் அடைக்கின்றனர்.  சிறையில் அடைக்கப்பட்டவர்களில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் ஒருவர். இவர் சிறையிலிருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வருகின்றார்.
 
திரும்பி வந்ததும் அங்குள்ள  மக்களை ஒன்று திரட்டி மீண்டும் முதலில் கோட்டை இருந்த இடத்திலேயே ஒரு கோட்டையையும் கட்டி விடுகின்றார் ஊமைத்துரை.  இந்த செய்தி ஆங்கிலேயர்களுக்கு எட்டுகின்றது. மீண்டும் எப்படி ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கின்றது என்ற செய்தி கேட்டு நேரில் வந்து பார்க்க வருகின்றனர். மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கின்றது. ஊமைத்துரைக்குத் துணையாக இருந்து படைக்கு தலைவராக இருந்து போராடுகின்றார் வெள்ளயத்தேவன். 
 
ஊமைத்துரை கட்டிய கோட்டையை பீரங்கிகளை வைத்து ஆங்கிலேயர்கள் உடைத்து தரைமட்டமாக்கி விடுகின்றனர்.

2 கருத்துகள்:

  1. இவர் எழுதியிருக்கும் விபரங்கள் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை.ஆனால் இனம் சார்ந்த பதிவாக இருக்கிறது.கட்டபொம்முவுக்கு முக்கிய தளபதி சுந்தரலிங்கக்குடும்பனார்தான்.மேலும் ராமலிங்க விலாசத்தில் மேஜர் க்ளார்க்கின் த்லையை துண்டித்தது கட்டகுடும்பர் என்ற சுட்ன்கரலிங்கத்தேவேந்திரர்தான்.வெள்ளையத்தேவன் என்பது ஒரு கற்பனைப் பாத்திரம் சினிமாவில்.

    பதிலளிநீக்கு
  2. எட்டயபுர ஜமீனின் பட்டக்குதிரையை முதலில் கொண்டுவந்தது தளவாய் என்ற ஊரின் குமரத்தேவேந்திரன் எனும் வீரனே கடத்தி வருகிறான்.பிறகு அதை மைதானத்தில் விட்டு அடக்க சொல்லும்போது யாராலும் அடக்கமுடியாத குதிரையை மாவீரன் சுந்தரலிங்கத்தேவேந்திரர் அடக்கியபிந்தான் இவர் பொம்முக்கு தளபதியாகிறார் இந்த கவர்னகிரிக்காரன்.மேலும் பாஞ்சாலங்குரிச்சு சுற்றி உள்ள முப்பத்தாறு கிராமமும் இப்போதும் தேவேந்திரரே பெரும்பான்மை காலம் காலமாக.அதனால்தான் தெலுங்குமன்னர்கள் தேவேந்திரர் ஆதரவுக்காக தேவேந்திரரை தளபதியாக வைத்திருந்தனர்.வெண்ணிக்காலாடிகூட அப்படித்தான் நெல்கட்டும்செவல் ஜமீனுக்கு தளபதி.

    பதிலளிநீக்கு