வெள்ளி, 1 மே, 2026
சென்னை பல்கலைக்கழக கல்விப் புலத்தில், மாணவர்கள், ஆய்வாளர்கள் உருவாக்கம் -பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் (முனைவர் கோ. ஜெயக்குமார்)
சென்னை பல்கலைக்கழக கல்விப் புலத்தில், மாணவர்கள், ஆய்வாளர்கள் உருவாக்கம் -பேராசிரியர் ஆ.ஏகாம்பரம்- முனைவர் கோ. ஜெயக்குமார்
பேராசிரியரே நீங்கள் விடை பெறவில்லை, விதைகளை விதைத்து விட்டுத்தான் செல்கிறீர்கள். அவை அனைத்தும் விதைகள் அல்ல, வீரியத்தோடு எழுந்து நிற்கும் ஆலமரங்கள். எதிர்கால சமூகத்தின் தூண்களான மாணவர்களை நீங்கள் உருவாக்கி விட்டுத்தான் செல்கிறீர்கள். தமிழகம் மட்டுமின்றி பூமிப்பந்தில் அவர்கள் தமிழின் அறிவுப் புலத்தோடு உங்களது குறிக்கோள்களை அவர்கள் நெஞ்சில் சுமந்து நிலைபெறச் செய்வார்கள். நீங்கள் உருவாக்கிய இந்த ஆய்வுக்குழு மார்க்சிய கொள்கைகளை அறிவுச் சூழலில் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தப் பணி நிறைவு விழா மலர் கட்டுரை துவங்குகிறது.
சாதாரண கிராமச் சூழலில் பிறந்து, கிராம சூழ்நிலைகள் வாழ்ந்து அந்தப் பின்புலத்தில் கல்வி கற்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியம். அது போல சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியின் உச்சத்தைத் தொடுவது என்பது நிகழ்காலத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது, எட்டாக்கனியாகவே உள்ளது. பேராசிரியர் முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் திருக்கனூர் அருகே உள்ள சித்தளம்பட்டு கிராமத்தில் திரு. ஆறுமுகம், திருமதி. அங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு கல்யாணி என்ற ஒரு சகோதரியும் உண்டு. எந்த பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தின் பின்னணியில், இளங்கலை (அறிவியல் அரசியல்) கல்வியை பிரசிடென்சி கல்லூரியிலும், முதுகலை (தமிழ்) மற்றும் ஆய்வில் நிறைஞர்,முனைவர் பட்டங்களை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பி. லிட், எம். ஏ. மொழியியல், பிஜிடிஎப் மொழியியல், முதுகலை ஆங்கிலம் என அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுள்ளார். பேராசிரியரின் இணையர் கோடீஸ்வரி இவர்களுக்கு இளம்பருதி, அறிவுக்கரசு, அமுதவாணன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். நன்கு படித்து பட்டம் பெற்று உள்ளனர்.
நான் மேலே குறிப்பிட்ட குடும்ப பின்னணிக்கும், பேராசிரியர் முனைவர் ஆ. ஏகாம்பரம் அவர்கள் படித்த கல்விக்குமான உயரம் என்பது தொடமுடியாத ஒரு உச்சம். நினைத்துப் பார்க்க முடியாத தாகம் அவருக்குள் இருந்துள்ளது. கூடவே பொருமையும் ஓய்வறியா உழைப்பும், அவரது வெற்றியின் ரகசியமாக அமைந்திருக்கிறது. அப்துல் கலாம் கூறுவது போல கனவு காணுங்கள், அந்தக் கனவு உங்களை உறங்க விடக்கூடாது, அது உங்களை வழிநடத்தும் என்று கூறுவார், அதுபோல பல கனவுகளோடு பேராசிரியரின் அறிவுத் தேடல் பயணம் நீள்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் அவர் உதவிப் பேராசிரியராக பணிக்கு சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, தமிழ் இலக்கியத் துறையின் தலைவராக உச்சத்தைத் தொட்டு, இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தான் வகித்த பொறுப்புகளில் இருந்து 31. 05. 2025 அன்று விடைபெறுகிறார். ஜூன் மாதம் விடைபெற வேண்டிய பேராசிரியர் மே மாதமே ஒரு மாதம் முன்கூட்டியே சென்னை பல்கலைக்கழகம் வழி அனுப்புகிறது. ஆனால் நம் இதயங்களில் அவர் நம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாத நிகழ்வுகளோடு நம்மிடையே அசை போட்டுக் கொண்டிருக்கும் பெரும் புகழுக்கு சொந்தக்காரர் பேராசிரியர் ஆ. ஏகாம்பரம்.
பொறுமையும் அமைதியும் இருந்தால், இமயத்தைக் கூட தொட்டுவிடலாம் என்பதைப் போல, தனது கல்விப் புலத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், பல்வேறு நெருக்கடிகளுக்கும், சுமைகளுக்கும், சொல்ல முடியாத போராட்டங்களுக்கும், ஏன் நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல், அதை எல்லாம் தனது மௌனப்புரட்சியால் சுக்கு நூறாக உடைத்து, தகர்த்து எறிந்தவர். அதை சுமையாக நினைத்து துவண்டு விடாமல், தனது லட்சியத்தின் மற்றொரு வடிகாலாக நினைத்து அவற்றில் இருந்து தனது வெற்றியை நிலைநாட்டியவர். சென்னை பல்கலைக்கழகத்தைப் பொறுத்த அளவிற்கு, தமிழ் இலக்கியத்துறையில் பயில்வது என்பது என்னைப்போன்ற கிராமப்புறங்களின் பின்னணியில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் மிகப்பெரிய கனவு. காரணம் அந்தத் துறையில் பல்வேறு மாணவர்களை வளர்த்தெடுக்கும் முறை, கல்வி பயிற்றுவிக்கும் முறையில் தனித்துவம், இதற்கெல்லாம் கால்கோள் இட்டவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை தலைவராக இருந்த பேராசிரியர் வீ. அரசு ஒரு முக்கிய காரணம். அவரை பின்பற்றியே பல்வேறு நிகழ்வுகள், பல்வேறு கற்பித்தல் மற்றும் கற்றல் முறை சென்னை பல்கலைக்கழக பரிதிமாற் கலைஞர் வளாகம் செயல்படுகிறது. அவர் பணி ஓய்வு பெற்றதும் பேராசிரியர் கோ. பழனி அந்தப் பணியை பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்கிறார், அதன்பிறகு அந்த இடத்திலே பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் அவர்கள் தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பதவி ஏற்கிறார். மாணவர்களோடு அவர் வகுப்பறையில் பேசுவதாக இருக்கட்டும் அல்லது தனது துறைத் தலைவர் அறையில் பேசுவதாக இருக்கட்டும், தொலைபேசியில் பேசுவதாக இருக்கட்டும், கங்கு போன்ற தொல்லியல் களங்களுக்கு அழைத்துச் சென்று களத்திலே மாணவர்களோடு அவர் பழகுவதாக இருக்கட்டும், உரையாடுவதாக இருக்கட்டும் அனைத்துமே ஒரே அன்பும், பொறுமையும், நிதானமும் இருக்கும். இவற்றை எப்போதுமே அவர் கடைப்பிடிப்பார்.
பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் இதுவரை எழுதியுள்ள நூல்கள் மொத்தம் 17, 36 பேர் முனைவர் பட்டம், 45 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் முடித்துள்ளனர். குறிப்பாக அவர் எழுதியுள்ள மக்கள் வாழ்வியல், தமிழரின் விருந்தோம்பல், சாதி- வறுமை -அரசு, மொழி-வரலாறு- அரசியல், சக்தி கோவிந்தனின் சிறார் மொழி, மொழியும் சமூக அமைப்பும், தமிழ் இஸ்லாமிய மரபுகள், மொழி, இன இலக்கிய ஆய்வுகள், சங்க இலக்கிய தொகுப்பு முறையியல், மக்கட்பா (குறுந்திட்ட ஆய்வு), மறைமொழி சமூகசாரம் உள்ளிட்ட நூல்களை, பல்வேறு ஆய்வு கட்டுரைகளையும், முதுகலை மாணவர்கள், ஆய்வியல் இளைஞர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என தமிழ் சமூகத்திற்கு வழங்கியது மிகப்பெரிய கொடையாகும்.
குறிப்பாக மாணவர்கள் தங்களுடைய முதுகலை மற்றும் ஆய்வியல் இளைஞர் (தற்போது இல்லை) முனைவர் பட்ட ஆய்வாளர்களாக இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் தலைப்பிலே முனைப்பாக, பல்வேறு ஆய்வுக்களங்களோடு களத்திற்கு சென்று, நூலகங்களுக்கு சென்று பல்வேறு புரிதல்களோடு ஆய்வு நேர்த்தியாக அமைய வேண்டும், மாணவர்கள் வந்த துறையில் தெரிந்த அறிவைப் பெற வேண்டும் என்பதில், அவருக்கு நிகர் அவராகத்தான் இருக்க முடியும். குறிப்பாக ஆய்வு முடித்து புறத்தேர்வுக்காக அனுப்பக்கூடிய ஆய்வுகள், டில்லி, பாண்டிச்சேரி போன்ற எந்த பல்கலைக் கழகங்களுக்கு சென்றாலும், தனது மாணவர்களுடைய பெயர் அந்தப் பல்கலைக்கழகங்களில் பேசப்பட வேண்டும் என்பதை அவர் எப்போதும் எதிர்பார்ப்பார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மொழித்துறையில் நான் ஆய்வியல் நிறைஞர் பட்டம் நிகழ்த்திவிட்டு, முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்துவதற்காக, ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் அவர்களிடம் பயில வேண்டும் என்ற நோக்கத்திற்காகக் காத்திருந்தேன். எனது காத்திருப்பை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். உறுதியாக உங்களுக்கு வழங்குகிறேன் என்கிற அந்த உறுதியை அவர் எனக்கு தெரிவித்தார். அப்படித்தான் எனக்கும் அவருக்குமான அந்த உறவு தொடங்கியது. உறவின் தொடக்கம் ஆசிரியர், மாணவர் என்ற நிலையில் இருந்தாலும், நான் முனைவர் பட்டம் சேர்வதற்கு முன்பாகவே, பேராசிரியரும், நானும் ஒரு நண்பர்களாக மாறிவிட்டோம். பேராசிரியர் என்கிற நிலையைக் கடந்து எப்போதுமே என்னிடம் ஒரு சகோதரனைப் போல, ஒரு நண்பனைப் போல, ஒரு குடும்ப உறவைப் போலத்தான் பழகுவார், பேசுவார். எங்களது பயணம், இந்த அன்பின் பிணைப்பிலேயே இந்த நிறைவு விழா நாள்வரை தொடர்கிறது. இதைக் கடந்து உயிர் உள்ளவரை அது தொடரும். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இந்த வளாகம் கட்டமைத்திருக்கக்கூடிய கல்வி, அது சார்ந்த கட்டமைப்பு என்பது ஆசிரியர் மாணவர் என்கிற உறவைக் கடந்து, எந்த நிலைக்கு அந்த உறவு நிலைபெறுகிறது என்பதற்காக இதை நான் இங்கே பதிவிடுகிறேன்.
எனது முனைவர் பட்ட ஆய்வு டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் உமாதேவி அவர்கள் அறிவிப்பு பலகையில் வைத்து, இது போன்று ஆய்வு இருக்க வேண்டும் என்று கூறியது, அதேபோன்று புறத்தேர்வாளர் பேராசிரியர் உமாதேவி அவர்கள் வழங்கிய பல்வேறு கருத்தியல்களை, பாராட்டுக்களை எனக்கு இந்த ஆய்வின் நோக்கம் முழுமை பெற்றுவிட்டது ஜெயக்குமார் என்று தெரிவித்தார் பேராசிரியர். அதேபோன்று பாண்டிச்சேரி பேராசிரியர் அறிவுநம்பி புறத்தேர்வாளராக அவர் வழங்கிய, பாராட்டுக்களில் சில வார்த்தைகளை அவர் எனக்குத் தெரிவித்தார். இதெல்லாம் எனக்கு அவர் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாணவன் தனது ஆய்வுப் பயணத்தில் எப்படியெல்லாம் அவன் பங்காற்றுகிறான், அவனை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு சிறிய மகிழ்வை கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், ஒரு ஆசிரியராக அதை எனக்கு நினைவுபடுத்துவார்.
எனது ஆய்வேடு பேராசிரியர் நா. வானமாமலையின் ஆய்வுப் பணிகள் என்ற தலைப்பில் மேற்கொண்டேன். அந்த ஆய்வேடு எப்படி உருவாக்கம் பெற வேண்டும், அந்தத் தலைப்பிற்குள் எப்படி ஒரு ஆய்வாளனாக இயங்க வேண்டும், நாவாவின் மார்க்சிய கண்ணோட்டங்களை எப்படி அணுக வேண்டும், நாட்டார் இலக்கியத் துறையில் அவர் பார்வை, அணுகு முறைகளை பின்பற்றியுள்ளார் என்பது குறித்து பல நேரங்களில் நாங்கள் விவாதிப்போம், அதோடு இல்லாமல் அந்த ஆய்வு முழுமையான ஒரு ஆய்வாக இருக்க வேண்டும், பேராசிரியர் நா. வா நடத்திய ஆராய்ச்சி இதழ், அவர் பங்களிப்பு செய்த புதிய வானம் தாமரை சாந்தி உள்ளிட்ட இதழ்கள் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், மார்க்சியம், நாட்டார் இலக்கியம் உள்ளிட்ட சமூகவியல் சார்ந்த கண்ணோட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதில் இருவருமே கண்ணும் கருத்துமாக இருந்தோம். குறிப்பாக நா. வாவின் ஆய்வுக் குழுவில் பங்காற்றிய நாவாவோடு பழகிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, காரல் மார்க்ஸ் நூலகத்தினுடைய நிறுவனர் கண்ணன், பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியன், பொன்னீலன், பேராசிரியர்கள் முத்துமோகன், நா. ராமச்சந்திரன், காமராசு மற்றும் மங்கை அக்கா, அவரது பிள்ளைகள் நேர்காணல் என ஆய்வு விரிவடைந்தது. மிகப்பெரிய ஆய்வாக உருவாக்கம் பெற்ற போது, சென்னை பல்கலைக்கழகத்தில் 'டெல்லி' பாண்டிச்சேரி போன்ற பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவது சிரமம் என்று பல்கலைக்கழக அஞ்சல் துறையில் கூறியபோது, என்னுடன் பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் நேரில் வந்து, இதை இதற்கு மேல் குறைக்க முடியாது, ஒரு முக்கியமான ஆய்வேடு, நீங்கள் புரிந்துகொண்டு உடனடியாக அனுப்புங்கள், நாங்கள் அஞ்சலக கட்டணத்தை செலுத்தி விடுகிறோம் என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு நாங்களே அனுப்புகிறோம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்தது.
அடுத்ததாக எனது முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வின் போது, சென்னை மாநில கல்லூரியில் இருந்து பேராசிரியர் மகாலிங்கம் அவர்கள் புறத்தேர்வாளராக வருகை தந்திருந்தார். ஆய்வாளராக எனது கருத்து நிலைகளை நான் ஒருமணிநேரம் எடுத்து வைத்த போது, அவர் பாராட்டிய வார்த்தைகளையும் மறக்க முடியாது. அந்த அவையிலே திடீரென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக இருந்த தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் நேரடியாக வந்து வாழ்த்திப் பேசி சிறப்புரை ஆற்றியதை மறக்க முடியாது. இந்த நிகழ்வுகளையும் எனக்கு அடிக்கடி பேராசிரியர் நினைவுபடுத்துவார். பல்கலைக்கழக வரலாற்றில் நல்லகண்ணு போன்றவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு நேரில் வந்து, வாழ்த்துவது என்பது மறக்க முடியாத தருணம் என்பதை அவர் எனக்கு சுட்டிக்காட்டுவார். மாணவர்கள் படிப்பை முடித்துச் சென்றாலும், ஆய்வாளர்கள் ஆய்வை நிறைவு செய்து சென்றாலும் அவர்களோடு தொடர்பிலிருந்து மனம் திறந்து பேசக்கூடிய, வழிகாட்டக் கூடிய பேராசிரியராக அவர் திகழ்வது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் ஆய்வாளராக இருந்த தருணத்தில் பேராசிரியர் நான் வானமாமலை பதிப்பித்த கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, வீரபாண்டியக் கட்டபொம்மன் கதைப்பாடல், ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் துணைப்பாடம், முத்துப்பட்டன் கதை, கான்சாகிப் சண்டை, வீணாதி வீணன் கதை என எட்டு கதைப்பாடல் நூல்களைக் கொண்ட கதைப்பாடல் திரட்டு என்ற தொகுப்பு நூலாகக் கொண்டு வந்தேன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியோடு நாவாவின் ஆக்கங்கள் - ஆய்வு என்று நூலும், நாவா ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம், தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும் உள்ளிட்ட தொகுப்பு நூல்களையும், என். சி. பி. எச். நிறுவனத்தின் மூலமாக நா. வானமாமலையின் ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் நா. வானமாமலை ஒரு பருந்துப் பார்வை ஆகிய நூல்களையும், கண்ணாடி பொம்மை என்கிற கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல்களுக்கு பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் வழங்கிய வாழ்த்துரையில் எனது அன்பிற்குரிய ஆய்வு மாணவர்களில் தலைசிறந்த தலைமாணாக்கராக திகழ்பவர்தான் முனைவர் கோ. ஜெயக்குமார் என்று குறிப்பிட்டிருப்பார். மேலும் இது போன்ற பல நூல்களை நீங்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்று கூறுவார். ஆசிரியர் மாணவர் என்ற நிலையைக் கடந்த அன்பு என பதிவிட்டு இருப்பார். இப்படி பெரிய ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் எதுவும் இல்லாமல், மிகப் பெரிய இலட்சியத்தோடு பயணிக்கக் கூடிய, பேராசிரியரின் இந்தப் பயணம், பல மைல்கற்களை கடந்து வந்தவர். அதனை அவர் நேர்த்தியாக தொடர்ந்து கடப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. பணி ஓய்வு என்று சொல்லக்கூடாது என நினைக்கிறேன். ஒரு இலக்கிய ஆளுமைக்கு பணி ஓய்வு என்பது எப்போதும் இல்லை. பணி நிறைவு என்று தான் சொல்ல வேண்டும், அப்படி பணி நிறைவோடு சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து செல்லும் பேராசிரியர், வாழ்நாள் முழுவதும், எல்லா நிலைகளிலும் நிறைவாக வாழ இந்தத் தருணத்தில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
- முனைவர் கோ. ஜெயக்குமார், உள்ளீட்டு பிரிவு ஆசிரியர் மற்றும் தலைமைச் செய்தியாளர், நியூஸ் ஜெ தொலைக்காட்சி, சென்னை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக