ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பறம்பு மலை என்ற பிரான்மலை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

 பறம்பு மலை என்ற பிரான்மலை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.
 

மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும்.
 
இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம்  எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
 
 "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,415 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிங்கம்புணரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78% உம் பெண்களின் கல்வியறிவு 65% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. சிங்கம்புனரி மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.விவசாயம் முதல் தொழிலாகவும், பனையும் தென்னையும் சார்ந்த தொழில்கள் பணத் தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு.
 
சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு  எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

   தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை - பறம்புக்குடி
    கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்
    வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்
 
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர் எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா்.
 
இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.
 
முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

14 கருத்துகள்:

 1. பறம்புமலை என்கிற பறம்புமலையை பற்றிய முனைவர் திரு.கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ அவர்களின் படைப்பாற்றலை கண்டு வியந்து மகிழ்ச்சியடைந்தேன்.அண்ணாரின் தழிழ் வரலாற்று பணி தொடர என் ஆழ் மனதின் வாழ்த்துக்கள்.
  தழிழ்பித்தன்
  தருமன்.
  18.பட்டி

  பதிலளிநீக்கு
 2. பறம்புமலை என்கிற பறம்புமலையை பற்றிய முனைவர் திரு.கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ அவர்களின் படைப்பாற்றலை கண்டு வியந்து மகிழ்ச்சியடைந்தேன்.அண்ணாரின் தழிழ் வரலாற்று பணி தொடர என் ஆழ் மனதின் வாழ்த்துக்கள்.
  தழிழ்பித்தன்
  தருமன்.
  18.பட்டி

  பதிலளிநீக்கு
 3. பறம்பு என்கிற பிரான்மலை பற்றிய வரலாற்றை அழகு தமிழில் இவ்வுலகிற்கு அளித்திட்ட முனைவர்.திரு.கோ.ஜெய்க்குமார் ஜெயஸ்ரீ அவர்களின் தமிழ்ப்பணி தொடர என் ஆழ் மனதின் வாழ்த்துக்கள். ்.
  ். என்றும்.
  ். உங்கள் நண்புக்காக
  எல் .தருமன்
  ். 18 பட்டி.

  பதிலளிநீக்கு
 4. அங்குள்ள தர்கா பற்றி தகவல் ஏதும் இல்லையே ஏன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி. இங்கு சொல்லப்பட்டது வரலாறு மட்டுமே. வரலாற்றை விளக்குவதென்றால் கட்டுரையாளர் கற்பனையில் எழுதமுடியாது. ஆவணங்கள்;சங்க இலக்கியங்கள்; சான்றுகள் ; கல்வெட்டுகள் இவைகளை மேற்கோள் காட்டியே சொல்லமுடியும். தர்கா பற்றிய விபரங்கள் அவருக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். கிடைத்தால் எழுதுவார்.
   மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு நம் பிரான்மலை. ஆம் மேலே தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்கள் அதற்கு முன்பு உள்ள விநாயகரை வணங்காமல் தர்காவுக்கு செல்வதில்லை. அதே நேரத்தில் சேக்அப்துல்லா அவுலியா தர்காவுக்கு சென்று கும்பிடாமல் இஸ்லாமியர் அல்லாதவர்களும் மலையைவிட்டு இறங்குவதுமில்லை.பிரான்மலை கந்திரி இஸ்லாமியர்கள் மட்டுமல்லாதவர்களாலும் அங்கு வெகு விமரிசையாக நடத்தப்பட்டுவருகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.
   ஆகவே தம்பி வீண் குழப்பம் வேண்டாம். அது நம் மலை

   நீக்கு
 5. கண்டிப்பாக தர்கா பற்றியும் விரைவில் எழுதுகிறேன். வாழ்த்திய அனைவர்க்கும் நன்றிகள்....

  பதிலளிநீக்கு
 6. பிரான்மலையின் கம்பீரத்தை காணவேண்டுமென்றால் கீழ்திசையிலிருந்து காணவேண்டும். ஆம் பொன்னமராவதி திருமயம் பள்ளத்தூர் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மேற்குப்பக்கமாகப்பார்க்கும்போது பிரான்மலையும் அதற்கு வடமேற்கே உள்ள மலையும் சேர்ந்து யானை படுத்திருப்பது போல் கம்பீரமாக காட்சியளிக்கும். இது எங்களுக்கு பெருமையளிக்கக்கூடியதாகும். எங்கள் ஊரில் நெல் கருது அடித்து நெல்லை குவித்து பொலி பொலி என்று கூறி சுத்தி வருவோம். சுத்திய பிறகு மேற்கே பிரான்மலையைப்பார்த்து கும்பிட்டு அந்த நெற்குவியலையும் கும்பிடுவோம். பொலி எவ்வளவு உயரம் என்று ஒருவர் பொலியை சுத்தி வந்தவரிடம் கேட்பார்.அதற்கு பிரான்மலை உயரம் என்று பெருமைபட பிரான்மலையைப்பார்த்து சொல்வோம். எங்கள் ஊர் திருமயம்-சந்தனவிடுதி.
  காலங்கள் மாறினாலும்; ஊர்கள் மாறினாலும் மக்களின் மனநிலை மாறினாலும் மாறாமல் கம்பீரத்துடன் காட்சியளிப்பது நம் பிரான்மலையே. அதோடு பூலாங்குறிச்சி மலையையும் சேர்த்து பார்த்தால் (அதாவது கீழ்திசையிலிருந்து மேல்திசை நோக்கி ) காலம் முழுதும் கண்டுகளிக்கலாம்.அலுப்புத்தட்டாது.

  பதிலளிநீக்கு
 7. என் தந்தை பிறந்த மண் பிறான்மலை தேனம்மாள் பட்டி, என் தாயின் அப்பா பிறந்து பிறான்மலை.. நான் இலங்கையில் பிறந்தாலும் பிரானமலையின் வாசம் என்னுள் வீசிக்கொண்டே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 8. சரிதான் ஆனால் ஏதோ ஒரு குறை உண்டு

  பதிலளிநீக்கு
 9. வேள்பாரி படித்தபிறகு பிரான் மலை பற்றி அறிய ஆசை. ஒருமுறையாவது அங்கு சென்று வர வேண்டும்.

  பதிலளிநீக்கு