சனி, 29 ஜூன், 2013

நேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி - கோ.ஜெயக்குமார்.


நேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி

இந்தியா - சீனா போர் மூளுகிறவரை நேருவின் தலைமைக்கு எதிராக யாரும் குரல் எழுப்பியதில்லை. சீனப்போரில் இந்திய படைகளுக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக நேரு தன் வாழ்நாளில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்க நேர்ந்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்று பதவியில் நேரு நீடித்தபோதிலும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

75 வயதைத் தாண்டியும் இளமையோடு இருந்த அவர் 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம் புவனேசுவரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டபோது பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். பின்னர் குணம் அடைந்து பிரதமருக்குரிய பொறுப்புகளை செவ்வனே கவனித்தார்.

எதிர் காலத்தில் இந்தியா மீது வெளிநாடுகள் படையெடுத்தால் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ராணுவத்தைப் பலப்படுத்தவும் நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார். எனினும் அந்த மகத்தான தலைவரை எமன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான். 1964 மே 27-ந்தேதி காலை 6.20 மணிக்கு அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்தது. உணர்வு இழந்தார்.

டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு காலமானார். சுதந்திரத்துக்கு முன் 30 ஆண்டுகளும், சுதந்திரத்துக்குப்பின் 17 ஆண்டுகளும் தாய்நாட்டுக்கு உழைத்த நேரு மறைந்தார். உயிர் பிரியும்போது மகள் இந்திரா காந்தி மந்திரிகள் நந்தா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் நேருவின் படுக்கை அருகே இருந்தனர்.

நேரு மரணம் அடைந்த செய்தியை பாராளுமன்றத்தில் மந்திரி சி.சுப்பிரமணியம் அறிவித்தார். "நேரு மறைந்துவிட்டார். இந்த தேசத்தின் ஒளி விளக்கு அணைந்து விட்டது" என்று அவர் குரல் தழுதழுக்க, கண்களில் கண்ணீருடன் கூறினார். சுப்பிரமணியத்தின் அறிவிப்பைக் கேட்டதும் பல "எம்.பி."க்கள் கதறி அழுதார்கள்.

உடனே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மந்திரிகளும், "எம்.பி."க்களும் நேரு வீட்டுக்கு விரைந்தனர். நேருவின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 5 மணிக்கு, நேருவின் வீட்டு முன் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கூடிவிட்டனர்.

அவர்கள் வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். நேரு மகள் இந்திரா தந்தையின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நேரு மந்திரிசபையில் மூத்த மந்திரியாக இருந்த குல்சாரிலால் நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார்.

விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி (எம்.பி.க்கள்) கூடி, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நேருவின் இறுதி ஊர்வலம் மறுநாள் நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் டக்ளஸ் ஹோம், ரஷிய உதவிப்பிரதமர் கோசிஜின், இலங்கைப் பிரதமர் திருமதி பண்டாரநாயக், நேபாள மன்னர் மகேந்திரா, எகிப்து உதவி ஜனாதிபதி உசேன் சபி, அமெரிக்க வெளிநாட்டு இலாகா மந்திரி டீன் ரஸ்க் உள்பட உலகத் தலைவர்கள் பலர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

ஊர்வலம் நேரு வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று யமுனை நதிக்கரையை அடைந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி சமாதி அருகே சந்தனக் கட்டைகளால் அமைக்கப்பட்ட "சிதை"யில் நேருவின் உடல் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு நேருவின் பேரன் சஞ்சய் காந்தி தீ மூட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக