ஞாயிறு, 16 ஜூன், 2013

சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்

 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுக்கைகள் கண்டுபிடிப்பு!




செஞ்சி அருகே, மலை மீது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுக்கைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் சமணம் குறித்து ஆய்வு செய்ததில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு வடக்கே 23 கி.மீ., தொலைவில் உள்ள மரக்கோணம் கிராமத்தில் உள்ள வள்ளி மலை மீது, கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், மலை யின் தெற்கு பகுதியில், 75 மீட்டர் உயரத்தில் இயற்கையான குகையில் சமண படுக் கைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:

இங்குள்ள படுக்கைகள் 2000 ஆண்டுகளுக்கு முன், சமணத் துறவிகளின் உறைவிடமாக இருந்துள்ளன. இக்குகைத்தளம் 50 மீட்டர் நீளத்திற்கு கிழக்கு, மேற்காக உள்ளது. குகையின் கிழக்கில், மேற்கில் இருந்து கிழக்காக மூன்று இடங்களில், 250 செ.மீ., நீளமும், 170 செ.மீ., அகலமும் கொண்ட பெரிய படுக்கை அமைப்புகள் உள்ளன.

இவை ஒவ்வொன் றையும் ஆறு அல்லது ஏழு துறவிகள் பயன்படுத்தி இருக்கலாம் என கருத முடிகிறது. மேலும், குகையின் மூன்று இடத்தில் ஒவ்வொரு தனி படுக்கையும், மற்றொரு இடத்தில் இரண்டு படுக்கைகள் என, மொத்தம் 24 படுக்கைகள் இருப்பதை அறிய முடிகிறது. இங்கே மண் மூடியுள்ள பகுதியை ஆய்வு செய்தால், மேலும் படுக்கைகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

குகையின் உள்ளே நான்கு இடங்களில் ஒரு மீட்டர் உயரமுள்ள பலகை கற்களை கொண்டு முட்டு கொடுத்துள்ளனர். குகையின் முன் 203 செ.மீ., நீளமும், 105 செ.மீ., அகலமும், 20 செ.மீ., தடிமனும் உள்ள பலகை கல்லை, மூன்று சதுரமான கற்களைக் கொண்டு முட்டு கொடுத்து, கட்டில் போல அமைத்துள்ளனர்.

குகை தளத்திற்கு முன், செடிகள் அடர்ந்த பகுதியில் 14க்கு 14 செ.மீ., அளவில் உள்ள சதுரமான செங்கற்கள் காணப்படுகின்றன. எனவே, இங்கு கட்டடம் இருந்து சிதைந்திருப்பது தெரிகிறது. குகை தளத்தின் மேல் பகுதியில், வடமேற்கில் வற்றாத சுனை ஒன்றும் காணப்படுகிறது. இதன் அருகே, கிராம மக்கள் வள்ளியம்மாள் தெய்வ வழிபாடு நடத்துகின்றனர்.

இந்த கிராமத்தில் சிதைந்து காணப்படும் பல்லவர் கால ஜெயின் கோவிலுக்கு தெற்கே 52 செ.மீ., உயரமும், 30 செ.மீ., அகலமும் உள்ள ஜைன தீர்த்தங்கரர் சிற்பமும் காணப்படுகிறது.

இங்கே மேலும், சிற்பங்கள் பூமியில் புதைந்திருப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர். அகழாய்வு செய்தால், மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக