சனி, 1 ஜூன், 2013

பாம்புகள் – ஆந்திரா, பீகார்
பாம்பை முத்தமிட்டு விஷத்தை குடிக்கும் மனிதன் !...
விஷப்பாம்புகளை உயிருடன் திண்ணும் அதிசயம் !...
பாம்புகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பெண்கள் !...
=========
புராணங்களிலும், இதிகாசங்களிலும் பாம்புகளை வழிபட்டுவரும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழகம் நாக வழிபாடு செய்து வந்ததால் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்டது. இதே பாம்புகள் சாத்தானின் குறியீடாக பைபிளிலும் கூறப்பட்டுள்ளது.ஏன், லெமூரியா கண்டம் இருந்த காலத்தில் இருந்தே நாக வழிபாடு என்பது மனித சமுதாயத்தால் செய்யப்பட்டு வருகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உண்மையில், காடுகளிலும், வயல் வெளிகளிலும், புதர்களிலும் விவசாயிகளின் நண்பனாக சுற்றி வந்த இந்த பாம்புகளை ஆரம்பத்தில் விஷ ஜந்துக்கள் என்று கருதி அடித்துக்கொல்ல ஆரம்பித்தான் மனிதன். ஆனால், பாம்புகளை புரிந்துக்கொண்ட மனிதன் அவற்றை பாதுகாக்க மேற்கொள்ளும் சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
இன்றைய நவீன உலகிலும், பாம்புகளுடன் சகஜமாக பழகுவதை வழக்கமாக வைத்துள்ள ஒருவர். விஷ பாம்புடன் கொஞ்சி விளையாடுவதோடு, அந்த பாம்பின் விஷத்தையும் குடித்து விட்டு, அதை அப்படியே உயிருடன் சாப்பிடுகிறார். இந்த அதிசய சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர் பிரகாசம். இவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக பாம்புகளுடன் சகஜமாக பழகி, அவற்றின் அரிச்சுவடுகளை தெரிந்துவைத்துள்ளனர். சிறு வயதிலிருந்தே தனது தாய்மாமானும், தந்தையும் பாம்புகளுடன் பழகுவதை பார்த்து வளர்ந்தவர்தான் இந்த பிரகாஷம். இதனால், பிரகாசத்திற்கு இயற்கையிலேயே பாம்புகளின் மீதுள்ள பயம் விலகி, ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆண்டுக்கணக்கில் பாம்புகளுடன் பழகிய அவருக்கும் அவற்றை விஷத்துடன் எப்படி உண்பது என்ற வித்தையையும் நன்கு கற்று கொண்டுள்ளார் இந்த பிரகாசம்.
இப்படி விநோதமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பிரகாசத்திற்கு திருமணமாகி மனைவியும் மற்றும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு திடீரென்று மூடு வந்துவிட்டால் சரக்கை அடித்துவிட்டு நேராக காட்டுக்கு செல்வார். அங்கே, சுற்றித்திரியும் நல்ல பாம்புகளை பிடித்து விளையாடுவார்.  
சில நேரங்களில் காட்டில் இருந்து பிடித்து வரும் பாம்பை பிரகாசம் அதை தன் தோளில் போட்டுக்கொண்டு பரமசிவன் போல் நின்று போதையில் அனைவருக்கும் வேடிக்கை காட்டுவார். ஒரு கட்டத்தில் உற்சாகம் பிறக்க பாம்பை தரையில் விட்டு அதன்  அசைவுகளுக்கு ஏற்ப ஆடவிட்டு ரசிப்பதோடு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் மெய்சிலிர்க்க வைப்பார்.
இப்படி விஷப் பாம்புடன் விளையாடும் பிரகாசம், திடீரென்று அந்த பாம்பை தன் வாயால் கவ்வி பிடித்து முத்தமிடுவார். அப்போது, கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் அந்த பாம்பு பிரகாசத்தை உதட்டை கடித்து விடுவதும் உண்டு.
மேலும், முரண்டு பிடிக்கும் அந்த விஷப் பாம்பின் தலையை அழுத்தி அதன் விஷத்தை கையில் எடுத்து தேன் போல நக்கி சாப்பிடுகிறார். அடுத்தக் கட்டமாக பிராந்தியில் விஷத்தை ஊற்றி அப்படியே மளமளவென்று குடிக்கிறார்.
இப்படி மதுவை குடிக்கும் அவர் சட்டென்று போதை தலைக்கேரி அந்த பாம்பின் தலையை கரும்பை கடிப்பது போல் கடித்து சாப்பிடுகிறார். அப்போது, உயிருக்காக துடிக்கும் அந்த பாம்பை தன் கால்களில் மிதித்து கொண்டு, உயிர் அடங்கும் அந்த பாம்பை முழுவதுமாக மென்று தின்று விடுகிறார்.
இப்படி, பாம்புகளோடு விளையாடி பார்ப்போரை அதியத்தில் ஆழ்த்தும் பிரகாசம், பாம்புகளோடு உள்ள தனது பிணைப்பை பற்றி கூறும் போது, இந்த வாழ்க்கை தனக்கு பிறகு தன் பிள்ளைகள் தொடரக் கூடாது என்று உறுதியாக சொல்கிறார்.
மேலும், இவரது மனைவி, தன் கணவர் விஷம் குடிப்பதால் இவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுவதில்லை என்று கூறுகிறார்.
அடுத்ததாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பெயின்டராக வேலை பார்த்துக்கொண்டு தினமும் பாம்புகளையே உயிருடன் சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளார். இவரின் மெய்சிலிர்க்கவைக்கும் செயல்களை பற்றி இப்போது பார்ப்போம்.
பீகார் மாநிலம், ஆரா மாவட்டத்தில் காக்ரா நதிக்கரையில் வசித்து வருபவர் நிரஞ்சன் பாஸ்கரன். இவர் தனது அன்றாட உணவாக பாம்புகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். பெயிண்டராக வேலை பார்த்து வரும் பாஸ்கரன், சிறு வயது முதலே பாம்புகளை சாப்பிட்டு சுறுசுறப்புடன் அந்த பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
இவர் தினமும் காலையில் எழுந்து காக்ரா நதி கரையோரம் திரிந்துக்கொண்டு இருக்கும் எல்லாவிதமான பாம்புகளைம் பிடித்துவந்து ஒரு இடத்தில் அமர்ந்து நிதானமாக ஒவ்வொரு பாம்பையும் உயிருடன் கடித்து உண்பார்.  
14 வயதில் இருந்தே பாம்புகளை உணவாக சாப்பிட்டும் பழக்கத்திற்கு அடிமையான இவர், வேறு எந்த உணவு பொருளையும் சாப்பிடுவதில்லை. வெறும் பாம்புகளை மட்டுமே ரசித்து சாப்பிடும் அளவிற்கு அடிமையாகிவிட்டார். ஆரம்பத்தில் குடும்பத்தாரிடமிருந்து பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் நாளடைவி்ல் அவர்களும் பாஸ்கரன் போக்கில் விட்டுவிட்டார்கள்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை சாப்பிட்டிருப்பதாகவும், அதனால் தனக்கு எந்தவித உடல் உபாதைகள் ஏற்பட்டதில்லை என்றும் கூறி அதிர வைக்கிறார் பாஸ்கரன். இப்படி விஷப் பாம்புகளை சாப்பிடும் பாஸ்கரனுக்கு, ஒரு லட்சியம் இருக்கிறது. அது என்வென்றால், அந்த விஷப் பாம்புகளோடு நீண்ட நாட்கள் தனிமையில் தங்கி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான்.
 உலகில் யாரும் செய்யாத இந்த சாதனையை செய்து முடித்தால்தான், இதுவரை தன்னை அருவருப்பாக பார்க்கும் அனைவருக்கும் தன் பெருமை விளங்கும் என்று கூறுகிறார் பாஸ்கரன்.
இப்படி விஷப் பாம்புகளை உயிரோடு சாப்பிடும் ஆந்திராவை சேர்ந்த பிரகாசம் மற்றும் பீகாரை சேர்ந்த பாஸ்கரன் உண்மையில் அந்த பாம்புகளில் உள்ள நஞ்சு கூட்டை முழுவதுமாக தூக்கியெறிந்து விட்டுதான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்புகளை உணவாக எடுத்துக்கொள்ளும் இதுபோன்ற மனிதர்கள் மத்தியில் அந்த பாம்புகளை பாதுகாத்து அவற்றின் வாழ்வுரிமைக்காக பாடுபடும் பல குழுக்களும் நாட்டில் உள்ளன என்பது ஆறுதலான விஷயம். தமிழகத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் செயல்படும், இயற்கை பாதுகாப்பு குழுமம் என்ற அமைப்பு அந்த பணியை செய்து வருகிறது. வனவிலங்குகளை, குறிப்பாக பாம்புகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, அங்கு பயிலும் சில மாணவ மாணவியர்கள்  தோற்றவிக்கப்பட்டு பல வருடங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பின் குறிக்கோள் என்னவென்றால், பாம்புகளை பாதுகாப்பது, அவற்றை கொடுமை படுத்தபவர்களிடமிருந்தும், உணவாக சாப்பிடுபவர்களிடமிருந்தும் அவற்றை காப்பாற்றுவதும் ஆகும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த அமைப்பை சேர்ந்த சில பெண்கள், எந்தவித பயமும் இல்லாமல் விஷப் பாம்புகளையும் லாவகமாக பிடித்து தூக்கி விளையாடுவது காண்போர் மனதை வியப்பில் ஆழ்த்துகிறது.
மேலும், இந்த அமைப்பினர் அந்த பகுதியில் உள்ள எல்லா விதமான பாம்புகளை காப்பாற்றி, அவை பாதுகாப்புடன் வாழ்வதற்கு சில தனியார் தொண்டு அமைப்புகளின் உதவியோடு அனைத்துவித வசதிகளையும் செய்கின்றனர். பாம்பாட்டிகள் வைத்திருக்கும் பாம்புகளை இந்த குழுவினர் பாதுகாத்து அருகில் உள்ள காடுகளில் பத்திரமாக விடுகின்றனர்.
இயற்கைக்கு எதிராக, பாம்புகளை துன்புறுத்தும் மனிதர்களையும், அவற்றை உணவாக உட்கொள்பவர்களையும் வனவிலங்கு பாதுக்காப்பு சட்டத்தின்படி கைது செய்து கடுமையாக தண்டனைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் இந்த அமைப்பினர்.
பூமி என்பது மனிதன் வாழ்வதற்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களும் சமமாக வாழ்வதற்கு படைக்கப் பட்டது. ஆனால், மனிதனோ பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறி பாம்பை கொன்று விடுகிறான். இப்படி, பாம்புகளை கொல்வதால் உணவு சங்கிலி பாதிப்படைந்து இயற்கை தன் சமன்பாட்டை இழந்துவிடுகிறது. இதனை உணர்ந்து இயற்கையின் படைப்புகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
=========


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக