நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது.
போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக
அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல்
வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி
ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின.
அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக்
கொண்டிருந்தார்.
1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள்
முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர்
மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண்
அடைந்தது.
ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை.
எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா
அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது
அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து
1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத்
தீர்மானித்தது.
அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர்
திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும்
ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில்
பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள்
பிறப்பித்தார். முக்கியமாக, "ஜான்சி ராணிப்படை"யில் உள்ள பெண்களைப்
பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.
இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.
"ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு
போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே
தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்பதுதான் அந்தச் செய்தி.
அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும்,
அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு
செய்தார்.
1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு
செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு.
"ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன.
இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்" என்பதே அந்தச் செய்தி. அடுத்த
செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. "நமது வரலாற்றில் இதற்கு
முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு
மனம் தளராதீர்கள்.
இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில்
இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்."
இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு
விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன்
பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்)
நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல்
ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித்
ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்)
ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா
மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.
ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு
ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு
மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும்,
விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா,
வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார்.
சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.
அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை.
எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி
அமர்ந்தார். கடைசி நேரத்தில், "இன்னொருவர் வரலாம்" என்று ஜப்பானிய
அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்- ரகிமான், நேதாஜி அருகில் போய்
அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி "ஜெய்
ஹிந்த்" என்று கூறினார். விமானம் புறப்பட்டது.
அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி
விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.
ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ "நேதாஜி இறந்துவிட்டார்" என்ற
திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.
ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-
"சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட்
16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார்.
18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான
நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம்
அடைந்தார்.
ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று
நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல்
சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார்.
நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய
அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்"
இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார்
என்பதை பலர் நம்பவில்லை. "நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன்
இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?" என்று கேட்டனர்.
ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-
ரகிமான், "நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்"
என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள்,
"நேதாஜி உயிருடன் இருக்கிறார்" என்றே கூறி வந்தனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய
மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ,
சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான
விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.
டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்" என்று
அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின்
அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350
"எம்.பி."க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை
நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர்.
அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட
"ஒரு நபர் விசாரணை கமிஷன்" அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல
நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, "விமான விபத்தில் நேதாஜி இறந்தது
உண்மை" என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக