குற்றாலம் அருவி
பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.
குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.
குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
குற்றாலம் தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.
தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் 'குற்றால சீசன்' என அழைக்கப்படுகிறது.
ஒன்பது அருவிகள்;
குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.
பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.
சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.
செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.
பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்) - இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
புலியருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.
பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.
பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.
போக்குவரத்து;
தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக