முக்தி வேண்டி குடும்பம் குடும்பமாக் சிவன் காலடியில் தவமிருக்கும் மனித சமூகம் - முனைவர் கோ.ஜெயக்குமார்.
தமிழ் சமூகத்தில் காசி என்ற இரண்டு எழுத்து, இறுதி மூச்சின் எச்சமாக பார்க்கப்படுகிறது. காசிக்கு சென்று காசி ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பது சமூகத்தில் நம்பிக்கை. இது இன்றல்ல காலம் காலமாக மனித சமூகம் நாகரீகம் அடைவதற்கு முன்பில் இருந்து இந்த வழிபாட்டு முறை நம் சமூகத்தில் இருந்து வருகிறது.
மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல்வேறு அனுபவங்களை வாழ்க்கையில் கற்றுக் கொள்கிறான். எதையுமே அறியாமல் இந்த மண்ணிலே தாயின் கருவறையில் இருந்து வரும் குழந்தை, ஒவ்வொரு வயதில் வளருவதும் அதனால் ஏற்படும் அனுபவங்களும் அளப்பரியது. கிடைக்கும் அனுபவங்களை கொண்டு, சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக கட்டமைத்துக் கொள்கிறார்கள். சில மனிதர்கள் சமூகத்தில் சிக்கி சின்னாபின்னமாக புழுக்கள் போல நெளிந்து நாள்தோறும் துயரத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
வாழ்க்கையில் கிடைத்ததைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ கற்றுக் கொண்டவர்கள் சிலர், நாட்களை சாதாரணமாக கடந்து செல்லுகிறார்கள். ஆனால் அனைவருக்கும் இருக்கும் மனம் மகிழ்ச்சியாய் வாழும் மனிதனைப் பார்த்து அல்லாடுகிறது. ஏழ்மையில் தவிக்கும் சில மனிதர்களை பார்த்து, ஆடம்பரமாய் வாழும் மனம் ஏளனமாய் பார்க்கிறது. இரண்டிலும் இல்லாத இருக்கும் மனம் ஏதோ இருப்பதை வைத்து கடந்து செல்கிறது.
இந்த வாழ்க்கையைத் தாண்டி திருமணம், குழந்தைகள், வயதான தாய், தந்தை பராமரிப்பு, இது போன்ற குடும்ப கட்டமைப்பை பாதுகாக்க போராடிக் கொண்டே சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். ஏன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவில்லை என்று கூட சொல்லலாம்.
இதையும் தாண்டி திருமணமாகி பிள்ளை பேரு இல்லாத, கணவன் மனைவி இந்த சமூகத்தால், ஏன் அவர்கள் மனதால் ஏற்படும் துயரங்களை வார்த்தைகளால் கூறி விட முடியாது.
இப்படிப்பட்ட பெரும் துயரங்களை தாண்டி, மனிதன் ஏதோ ஒரு நம்பிக்கையின் கீற்றை மட்டும் பற்றிக் கொண்டிருக்கிறான். அதுதான் காசி என்ற அந்த இரண்டு எழுத்து. காசி விஸ்வநாதரை, விசாலாட்சியை சென்று தரிசனம் செய்தால், தங்களுக்கு முக்தி கிட்டுவிடும் என்பது தான் அந்த அசைக்க முடியாத நம்பிக்கை.
முத்தி என்பது நம் மக்களுடைய பிறவிப் பயன் என்ற அடிப்படை சித்தாந்தத்தை முன்னிறுத்தியதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த முக்தி என்பது சிவனின் திருவடிகளை அடைவது என்பதை மட்டுமே பொருளாகக் கொண்டுள்ளது.
இதற்காகத்தான் நாள்தோறும் குடும்பமாக உழைத்து வியர்வை சிந்தி ரத்தம் சொட்டி சேர்த்த சொத்துக்களை கூட, தானங்களாக பல ஆதரவற்ற இல்லங்களுக்கும், கோவில்களுக்கும் எழுதி வைத்துவிட்டு, முக்தியை வேண்டி காசியிலேயே சித்தமாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கணவன் மனைவியும், கணவனை இழந்த மனைவிகளும், மனைவியை இழந்த கணவன்களும் இப்படி முக்தி பிரார்த்தத்தை தரிசிக்க தவம் கிடக்கிறார்கள்.
முக்தி வேண்டி இருப்பவர்கள் இங்கேயே உயிர் விட்டு விட்டால், காசியிலேயே அவரது உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது. சுமார் மூன்றாண்டு காலம் வரை இப்படி இருப்பார்கள் என்றும், அதன் பிறகு நன்றாக இருந்தால் விரும்பினால் வீட்டிற்கு அனுப்புவார்கள், இல்லையென்றால் அங்கேயே இறக்கலாம் என்ற நிலை உள்ளது. ஒவ்வொரு நாளையும் கடவுளின் பெயரை தங்கள் திருக்கரங்களால் எழுதி நொடிகைளையும், நிமிடங்களையும், மணிகளையும், நாட்களையும், மாதங்களையும், ஆண்டுகளையும் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
2026 செப்டம்பர் மாத உத்தரப்பிரதேச வாரணாசி காசி பயணம் மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே வித்யானந்த் பவன் என்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு சென்று வந்தால் 10 நாட்களில் இறந்து விடுவார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது. சென்று வந்தவர்கள் பல பேர் பத்து நாட்களைக் கழித்தும் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்களும் உள்ளன. மனிதன் எதற்காக போராடுகிறானோ அதையே தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் எங்கிருந்து வந்தானோ அதை நோக்கிய தனது இறுதிப் பயணத்தை கட்டமைத்துக் கொள்கிறான். போதும் என்ற மனதோடு அந்த வாழ்க்கையை அவன் நிறைவு செய்கிறான். அந்த புரிதலான வாழ்க்கையை இங்கே பார்க்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக