புதன், 22 ஜூலை, 2026

கோவில் நகரம் காஞ்சி - முனைவர் கோ.ஜெயக்குமார்

கோவில் நகரம் காஞ்சி - முனைவர் கோ.ஜெயக்குமார்




காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்கஇலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. 


பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலையிலும், தமிழ் மற்றும் சமற்கிருத மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்து.


1200 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை இருந்தது. மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் ஏதுமின்றி ஓர் அற்புத ஆலயத்தை அமைத்திட வேண்டுமென்பதே அது! அதன் விளைவே, காஞ்சியில் எழுந்த கயிலாயநாதர் திருக்கோவில். காஞ்சி கைலாசநாதர் கோவில் இராஜசிம்மவர்ம பல்லவ மன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோவில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது.



கோவில் நகரம்'
 சிறப்புக்குரிய இடம் காஞ்சிபுரம் ஆகும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து தென்மேற்கே சுமார் 75 கி.மீ தொலைவில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் அமைந்துள்ளது. இங்கு கைலாச நாதர் கோவில் காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் போன்ற புகழ்பெற்ற பழமையான கோவில்கள் ஏராளமாக உள்ளன. எனவே இது 'கோவில் நகரம்' அல்லது 'ஆயிரம் கோவில்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது


தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோவில்களை ஒத்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோவில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம் பெற்றுள்ளது. திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இது இராஜசிம்மனின் முன்னோர்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.


இங்கு அமைந்துள்ள கொற்றவை, துர்க்கை, மூத்ததேவி, யானைத் திருமகள், சப்தமாதர்கள் ஆகிய சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. நின்ற நிலையில் பாய்ந்தவாறு உள்ள யாளித்தூண்கள் வியப்பூட்டுபவை. இக்கோவில் முழுவதும் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. அதன் எச்சங்களை இப்போதும் பல சிற்பங்களில் காணலாம். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை.


காஞ்சிபுரம் நகரத்தின் மேல் கோடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை நெருங்கும்போது ஓர் அழகிய கந்தர்வ விமானம் தரையில் இறங்கி நிற்கிறதோ என்ற பிரமிப்பினை உணர முடியும். பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.[இக்கோயில் வெளிச்சுற்று, உள்சுற்று, மூலவர் கட்டடப்பகுதி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது


இறைவனது கருவறை மீதுள்ள விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது.


பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்றழைக்கப்படுகிறது.


பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன.


தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள, பல்லவப் பேரரசின் சிறந்த கட்டிடக்கலையின் சான்று பெறும் வரலாற்றுப் புகழ்பெற்ற கோயிலாகும். கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாமன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்) காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், திராவிடக் கட்டிடக்கலையின் தொடக்கத்தை வெளிப்படுத்துகிறது. கருங்கற்களால் முழுமையாகக் கட்டப்பட்ட முதல் பெரிய கோயிலாகக் கருதப்படும் இது, பல்லவ மன்னர்களின் ஆன்மீக மற்றும் கலை ஆர்வத்தை ஒருங்கே வெளிப்படுத்துகிறது.

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள்.

இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.