கம்போடிய நாட்டின் வரலாற்று பொக்கிசம் அங்கோர்வாட் கோயில் - முனைவர் கோ.ஜெயக்குமார்.

கெமர் மொழியில், ‘அங்கோர்’ என்றால் ‘நகரம்’ என்று பொருள். ‘வாட்’ என்றால் ‘கோயில்’ என்று பொருள். அங்கோர்வாட் என்றால் ‘கோவில் நகரம்’ என்று பொருள். இதன் உண்மையான பெயர், ‘பரம் விஷ்ணுலோகா’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் விஷ்ணுவின் தங்கும் இடம் என்று பொருள். இக்கோயில் முதலில் மகாவிஷ்ணுவிற்காகவே கட்டப்பட்டதாகும். பிறகு 12ம் நூற்றாண்டில் இது புத்த கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயில் மேரு மலையை குறிப்பது போன்றே கட்டப்பட்டதாகும். இந்து புராணத்தின்படி, மேரு மலை உலகின் நடுவிலே அமைந்திருப்பதாகும். இதுவே காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன், படைக்கும் கடவுளான பிரம்மன் மற்றும் தேவாதி தேவர்கள் குடியிருக்கும் இடம் என்று நம்பப்படுகிறது.

மற்ற அங்கோர் கோயில்கள் கிழக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கும்போது அங்கோர்வாட் மட்டும் மேற்கு நோக்கி கட்டப்பட்டிருப்பது இறப்பின் திசையை குறிக்கிறது என்றும் கூறுகிறார்கள். இக்கோயிலை சூர்யவர்மன் தன்னுடைய சமாதியாக பயன்படுத்த நினைத்திருப்பார் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும், மேற்கு நோக்கி சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு இருக்கும் இக்கோயிலுக்கு அதைக் காரணம் காட்டியே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவது ஆச்சர்யமான ஒன்றாகவே உள்ளது.
ப்னாம் குல்லன்’ மலை அங்கோர்வாட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கேயுள்ள அதிக எடையுடைய மணற்கல் 1500 கிலோ எடை கொண்டதாகும். இக்கோயிலைக் கட்ட அதிகப்படியான உழைப்பை போட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 5 மில்லியன் டன் மணற்கற்களை பயன்படுத்தி அங்கோர்வாட் கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம் ரெப்(Siem Reap)ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம் ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்கு சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் (Angkor) என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவுகளாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன.
கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.
அங்கோர்’ என்கிற சொல் ‘நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. ‘வாட்’ என்றால் கோயில். ‘அங்கோர் வாட்’ என்பது நகரக் கோயில். கோயிலைச் சுற்றிலும் நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.

நான் சென்ற சமயம் அங்கே பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அந்தப் படிகள்மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன. அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.
அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, மன்னர்களின் விருப்பம் போன்றவற்றைப் பொருத்துக் கட்டடப் பணிகளில் விரைவு, தாமதங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே முடிக்கப்படாதவையாக இருப்பதாகக் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அவ்வாறு முடிக்கப்படாத கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது பயோன். கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்), இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன் தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இரு பக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப் பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களிலும் காண முடிகிறது.
அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்கிற யூகமும் வலுவானது. அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உட்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்’ என்று அங்கோர் கோவில்கள் பற்றிய பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார். இந்தக் காரணங்களுக்காகத்தான் இக் கோயில்கள் எழுப்பப்பட்டன என்று அறுதியிட முன்வரும் எவருக்கும் இவை பெரும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றில் நூலகங்கள் என்றழைக்கப்படும் கட்டடங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கட்டுகள் கொண்டுள்ளது. அரசர் மற்றவர்களுடன் ஆலோசிக்கவும் ஆருடம் கேட்கவும் இந்த நூல கங்களைப் பயன்படுத்தி இருக்கலாம். இவை ஆடம்பரங்களற்ற கற்கட்டடங்கள். உருண்ட தூண்களால் தாங்கப்பெற்றுள்ளன. புடைப்புச் சிற்பங்கள் எதுவுமில்லை. இங்கே கல்வி கற்பிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே கல்விக் கூடங்களாகவும் இவை பயன்பட்டிருக்கும்.
கடவுளர்களுக்கு நிகரானவர்கள் தாங்கள்’ என்று அரசர்கள் கருதியதால் இவை நினைவுச் சின்னங்கள் என்று கருதவும் வாய்ப்புள்ளது. ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தையின் நினைவிற்காகக் கட்டிய கோயில் ‘தா ப்ரோம்’. அங்குள்ள லோகேஸ்வரரைத் தன் தந்தையின் சாயலில் அவர் வார்த்துள்ளார். அவருடைய மனைவிகளின் சிலைகளையும் அங்கே காணலாம். அவருடைய இரண்டாம் மனைவி, கல்வியைப் பரப்பப் பெரிதும் முயன்றவர் எனச் சொல்லப்படுகிறது. கெமர் சரித்திரத்திலேயே ஏழாம் ஜெயவர்மனுக்கு இணையாக இன்னொரு அரசன் தோன்றியதில்லை எனலாம்.
தொழுநோய் அரசன் என்னும் பெயரில் சிலை ஒன்றுண்டு. அதன் அசல் கம்போடியாவின் தலைநகரான ‘நாம் பெங்க்கி’லுள்ள பொருட்காட்சியகத்திற்குச் சென்றுவிட்டது. அங்கோர் தோமில் அதன் நகல் திறந்தவெளியில் மண்டபம் ஒன்றின் மீதுள்ளது. ஏழாம் ஜெயவர்மன்தான் அந்தத் தொழு நோயாளி எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் பல மருத்துவமனைகளைக் கட்டியுள்ளதை வைத்து இவ்விதம் முடிவுக்கு வந்திருக்கலாம். நோயைத் தன் ஆட்சியில் கட்டுப்படுத்தவே மருத்துவமனைகளைக் கட்டினார் எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் திறமைசாலியாகவும் வலிமையுடையவராகவும் விளங்கினார் என்பதற்கு அவரது ஆட்சிக் காலம் சாட்சியாக விளங்குகிறது.
சிம் ரெப் இறுதியாகத் தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது.
பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயில்கள் உலகப் புகழ் பெறத் தொடங்கின. காடுகளைச் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள்தாம் புனருத்தாரணம் செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் பல சிற்பங்களைத் திருடிச் சென்றனர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆந்ரே மால்ரா அங்குள்ள சிலைகளைத் திருடியதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பிரெஞ்சு காலனியின் சுவடுகளைச் சிம் ரெப்பில் பல இடங்களிலும் காண முடியும். சிம் ரெப்பில் உள்ள ஓட்டல்கள் புதுவையிலுள்ள கட்டடங்களை நினைவுபடுத்துகின்றன. பிரெஞ்சு மொழி பேசுகிற பழைய தலைமுறையினர் அங்கு நிறையக் காணப்படுகிறார்கள். பிரெஞ்சு வழிகாட்டிகள் எளிதில் கிடைக்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபது அங்கோர் கோவில்கள் சிம் ரெப் நகரில் காணப்படுகின்றன. அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். இரண்டு நாட்களில் இவற்றையெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதுபவற்றை மீண்டும் பார்த்துச் செலவிடலாம்.
அங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள் முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன. சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றன. பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் அவர்களது கற்பனையை மெய்யாகவே ஆட்கொண்டிருந்தன. அரசர்களைப் போலவே மக்களும் புராணங்கள் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் பெரும் நம்பிக்கைகள் கொண்டிருந்ததாலேயே கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன. புத்த மதத்தைப் பொருத்தவரை அவர்கள் பின்பற்றுவது ஹீனயானம். தெரவாடா பௌத்தம் என்று இது அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, ஸ்ரீலங்கா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் இது செல்வாக்கு பெற்றுள்ளது.
கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவுகொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்துமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்னென்ன என்பன பற்றியெல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள் எவையுமில்லை.
பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதால் மக்கள் சலிப்புற்று கெமர் ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாகத் தங்கள் அரசர்களை நோக்கிப் படையெடுத்து வந்த எதிரிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்கள் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தவறான யூகம் என நினைக்கிறேன். மக்கள் வெறுப்புற்றிருந்தால் அவர்கள் ஏழு நூற்றாண்டுகளாக ஒரு செயலை இந்து மதம் புத்த மதம் என்று மாறி மாறிக் கோயில் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்திருக்கமாட்டார்கள். கோயில்கள் தவிர மருத்துவமனைகளும் கட்டப்பட்டன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். எப்படித்தான் இவ்விதம் கோயில்களை மக்கள் கட்டினார்களோ என்கிற வியப்பிற்கான விடையாக அவர்கள் சலிப்புற்று வெறுக்கும் வகையில் பிழியப்பிழிய வேலை வாங்கப்பட்டார்கள் எனக் கூறுவது கிழக்கின் உணர்வைப் புரிந்துகொள்ளாத மேற்கின் கற்பனையாகும். ஏன் இன்றைய கம்போடியர்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையோவென எண்ணவைக்கிறது.
அங்கோரைப் படைத்த மக்களால் எதையும் செய்ய முடியும்’ எனக் கொக்கரித்த சர்வாதிகாரி போல்பாட் கம்போடிய மக்கள் அனைவரையும் கிராமப்புறங்களை நோக்கித் துரத்தி அவர்களை விவசாய மண்ணில் கடின உழைப்பில் ஈடுபடவைத்தான். எதிர்த்தவர்களைக் கொன்றொழித்தான். கம் போடியா கொலையுண்ட பூமியாகியது. எந்தச் சக்தி அங்கோர் கோயில்களைக் கட்டுமாறு அவர்களை இயக்கியது என்பதை அறியாத போல்பாட்டின் படைகள் போரின் போது அங்கோர் கோயில்களில் ஓடி ஒளிந்த மக்களை வேட்டையாடியதுடன் கோயில்களையும் நாசமாக்கின. பல புத்த இந்துக் கடவுள்களின் கற்சிரசுகள் கொய்யப்பட்டன. நிலமெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது நடந்தவர்களை முடமாக்கின. பொய்க்கால்களைப் பூட்டிக்கொண்டு இசைமீட்டிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களைக் கோயில் வாயில்களில் காண முடிகிறது.
ரிசி, பட்டு தவிர சுற்றுலாத் துறையிலிருந்துதான் அவர்களது வருமானம். அங்கோர் கோயில்களைப் பார்க்க ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியக் கலாச்சாரம் மற்றும் கட்டடக் கலையின் கணிசமான பாதிப்பு கொண்ட அங்கோரைப் பார்க்க வருபவர்களை இந்தியா வருமாறு அழைக்க இந்திய சுற்றுலாத் துறை முயல வேண்டும். பல்லவ காலத்துக் கட்டடக் கலையின் பாதிப்புகளும் அவற்றில் இருப்பதால் தமிழ் நாட்டுச் சுற்றுலாத் துறையும் பார்வையாளர்களைத் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஈர்க்க முயன்றால் அது நல்ல விளைவை ஏற்படுத்தும். அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்து நமது கோயில்களைக் காட்டிவிட்டுத் திருப்பி அனுப்பினாலேயே போதும். அவர்களே கம்போடியாவையும் இந்தியாவையும் தொடர்புபடுத்திப் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி விடுவார்கள். சுற்றுலா வாயிலாக வருவாய் மட்டுமின்றி ஒப்புநோக்கில் ஆய்வுகளுக்கும் இது வழிவகுக்கும். அவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் கோயில் கட்டடக் கலையைக் கெமர்கள் இந்தியாவிலிருந்து தான் முற்றாக எடுத்துக்கொண்டனர் என்றோ இந்தியக் கலையைத்தான் அவர்கள் அங்கே செழுமைப்படுத்தினர் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புவோமாக. கெமர்களின் கலை தனித்தன்மை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அங்குள்ள பிரமிட் வடிவ கோபுரங்களை இந்தியக் கோயில்களில் காண முடியாது.
இன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சிதிலமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறுதான் ஆரம்ப முதலே படைக்கப்பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம்பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.
மிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது. இரவு ஆரம்பிக்கிறபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற மளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் புதர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் எவருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது இருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு அந்த இருளில் முன்போலவே தொடர்கிறது.
































அருமையான தொகுப்பு, நன்றி!
பதிலளிநீக்கு