திங்கள், 6 மார்ச், 2017

தமிழ்த் தொன்மை மீட்புப் பணியில் பேராசிரியர் நா.வானமாமலையின் பங்களிப்பு - முனைவர் கோ.ஜெயக்குமார்.
(தொல்லியல்ஆய்வுக் கட்டுரைகள்)




தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தொன்மைகளையும், உலக அளவில் கேட்பாரற்று பாதுகாக்கப்படாமல் கிடைக்கப்பெறும் தரவுகளையும் கொண்டு ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். இதனைச் செய்தால் தான் முழுமையான தொன்மைகளை மீட்டெடுப்ப தோடு, பாதுகாக்கவும் முடியும். வரலாற்றுத் தொன்மைகள் குறித்தான முழுமையான ஆய்வும் நமக்கு கிடைக்கப்பெறும்.


பேரா. நா.வா. நமக்கு தொன்மைகள் குறித்த புரிதல் வேண்டும் என்று கூறுகின்றார். குறிப்பாக தமிழரின் நாட்டுக் கலைகள் எப்பொழுது தோற்றம் பெற்றன. அவனது வாழ்க்கையில் கலையின் பணி யாது போன்ற வினாக்களின் ஊடாகவே கலையின் தன்மைகளை ஆராய முற்படுகின்றார். நமக்குள்ளே இதுபோன்று எழும் வினாக்களுக்கு விடை காண வேண்டும் என்றால் குறிப்பிட்ட சமூகம் பற்றியான முழுமையான புரிதல் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு இனத்தினுடைய அடையாளங் களாகவும், சான்றுகளாகவும் கிடைக்கப்பெறும் பொருட்கள், புதைக்கப்பட்ட மனிதர்களின் உடல், எலும்புகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள் போன்றவற்றைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், பண்பாட்டையும் அறிய முடியும்.

குகைச்சித்திரங்கள் அனைத்தும் அழகுணர்ச்சி யால் தோன்றியவை அல்ல. ஆற்றல், நம்பிக்கை, சடங்கு இவற்றின் விளைவாகத் தோன்றியவை என்பதை அறிய வேண்டும்.

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்களை நாம் ஆராய்வதற்கு முன்பு இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவது எண்ணற்ற வேற்றுமைகளுக்கு மத்தியில் இயங்கும் தமிழ்ச்சமூகம். இரண்டாவது துல்லியமான வரலாற்று ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தாதது. இதனால் தான் கால ஆராய்ச்சியில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியம் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப்பிள்ளையின் நூலும், சமணர்களைப் பற்றிய சக்கரவர்த்தி நாயினார் எழுதிய நூலும், சோழ வம்சத்தைப்பற்றி கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூலும், பல்லவர் பற்றி பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும் இன்னும் பல நூல்களும் ஆய்வாளர்கள் அறிந்தவையே. இருப்பினும் இவையே முழுமையான தமிழர் வரலாறு ஆகாது.

முழுமையான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டுமாயின் தமிழர் சமூகம் எப்படி மாற்றம் பெற்று வந்துள்ளன. அதற்கான அடிப்படைக் காரணங்கள் யாவை என்ற புரிதலோடு முழுமை யான தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும். தற்போது நம் காலத்தில் பண்பாடு சார்ந்த பலவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் என்பதை நமக்கு முன்னரே நா.வா. எச்சரித்துள்ளார். சங்க இலக்கியங்கள், மூவேந்தர், சமணர், பல்லவர் பல ஆராய்ச்சி நூல்கள் வந்தாலும் அவை மட்டுமே போதுமானவை அல்ல. அது சார்ந்து மேலும் பல ஆராய்ச்சி நூல்கள் வர வேண்டும். தொன்மை சார்ந்த ஆராய்ச்சி தொடர வேண்டும்.

பண்டைய கலைகள் அனைத்தும் வாழ்க்கை யோடு தொடர்பு கொண்டவை. பிரான்சு நாட்டில் உள்ள ‘டோர்டோக்னே’ என்ற குகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்த ஓவியங்கள் காணப்படுகிறது என அகழ்வாய் வாளர்கள் கருதுவதையும், இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹோவுங்காபாத் அருகே பிம்பெட்கா நகரில் கண்டறியப்பட்ட செய்யப்பட்ட கருவிகள் அதே காலத் தொன்மை உடையவை என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

நடுகல் பற்றிய ஆய்வரங்கம் ஒன்று தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினரால் நடத்தப் பட்டது. 24. 7. 1973இல் நா.வா ‘நடுகற்களும் நம்பிக் கைகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை. ஒன்றை படித்துள்ளார். நடுகற்கள் பற்றிய முழுமையான புரிதலை விளக்கிக் கூறுகின்றார். சங்க இலக்கியத்தில் புறநானூறு 231ஆம் பாடலில் அதியமான் நெடுமான் அஞ்சி இறப்பைச் சுட்டிக்காட்டி நடுகல் பற்றிய சான்றை அவ்வை விளக்கியுள்ளதையும் குறிப்பிடு கிறார்.

நாட்டுத் தொழில்களில் கலை, சுவரோவியம், மண்பாண்ட அலங்காரம், பெருங்கோயில் கலைகள் போன்றவற்றை பண்டைய தமிழர்கள் வளர்த் தெடுத்தனர். இருப்பினும் நா.வா.வின் வருத்தம் தற்காலத்தில் நாட்டுக் கலைகள் பல அழிந்து வருகின்றன. அல்லது பணம் தரும் தொழிலாக மாறிவருகிறது. இந்த நிலையில் நாட்டார் கலை களை ஆய்வதற்கான துவக்க முயற்சிகள் கூட தமிழ்நாட்டில் ஈடுபடவில்லை. எனவே ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றார்.

வரலாறு பற்றி நா.வா. தரும் விளக்கம் நமக்கு முழுமையான புரிதலை தரும்.

‘வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகவே போராட்டங்கள் நிகழ்கிறது. அப்போராட்டங் களின் விளைவாகச் சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன’

என்றும்

‘பொருளாதார வாழ்வையும் சமூக முரண் பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்’

என்றும் (தமிழர் வரலாறும் பண்பாடும், பக்- 4, 9) கூறுகிறார்.

வரலாறு என்பது சரித்திரங்களின் கால நிகழ்வுகளை விவரிக்கின்றன. இருப்பினும் தமிழ்ச் சமூகம் தோற்றம் முதல் பெற்று வந்துள்ள மாற்றங்கள், அதற்கான சான்றுகளோடு எழுதப்படும் வரலாறே முழுமையான வரலாறு என்று கூறுகின்றார்.

பழங்கால இனக்குழுச் சமூக வாழ்க்கையில் இருந்து படிப்படியாகவும், திடீரெனவும் முன்னேறி வரும் சமூகமாகவும், அரசுகளை நிறுவி, பண் பாட்டையும், கலைகளையும், தத்துவங்களையும் வளர்த்துப் பல நூற்றாண்டுகளாக முன்னேறியும் சில சமயங்களில் பின்வாங்கியும் வாழ்ந்த மனித சமூகத்தின் சரித்திரமே தமிழக வரலாறு என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் தொன்மை சார்ந்து பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் அது எப்படி நிகழ்த்தப் பட வேண்டும் என்ற புரிதலைப்பற்றிக் கூறும் நா.வா, இலக்கியத்தில் உள்ள சான்றுகளையும், அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டுகளுக்கு முந்தைய காலத்து சான்றுகளையும் அயல்நாட்டு வரலாறு, அவர்கள் நம்மோடு கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய குறிப்புகளோடு ஆராய வேண்டும். அப்போதுதான் முற்கால வரலாற்றை நாம் முழுமையாக அறிய முடியும்.

இடைக்கால வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும் என்றால் இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் பெர்சியன் மொழியில் எழுதிய வரலாற்றை விமர்சன ரீதியாக கற்கவேண்டும். ஆங்கில ஆட்சிக்கு முற்கால சரித்திரத்தை அறிய போர்த்துகீசிய பிரஞ்சுப் பாதிரிமார்களின் தாய்மொழியிலும் இலத்தீனிலும் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆராய்ந்தால் முழுமையான இடைக்கால வரலாற்றை நாம் பெற முடியும் என வலியுறுத்துகின்றார்.

தமிழகத்தில் கிடைக்கக்கூடிய வரலாற்றுச் சான்றுகளை எப்படி பாதுகாத்து வெளியிட வேண்டும் என்று தாமரை இதழில் நா.வா. எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகளான பல கல்வெட்டுகள் மைசூரில் இருப்பதாகவும் அவை கவனிக்கப்படாமல் அழிந்து கொண்டிருப்ப தாகவும் அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறுகின்றார்.

மதுரையில் நடைபெற்ற புதைபொருள் துறையின் கருத்தரங்கில் பேசிய ஒருவரின் கணக்குப் படி 20,000 கல்வெட்டுப் பிரதிகள் மைசூரில் தமிழக தொல் வரலாற்றுச் சான்றுகள் கவனிப்பாரின்றி அழிந்து வருவதாகவும் அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதே போல் நமது காலத்தில் பல இடங்களில் சிதறிக்கிடக்கும் தொன்மைகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும். அது சார்ந்த வரலாற்று ஆய்வுகள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று பதிவு செய்கின்றார்.

மைசூரில் தமிழ்நாட்டு வரலாற்றுச் சான்றுகள் பல அழிந்து வருவதற்கு காரணம் மத்திய அரசின் சாசனத்துறையை உதகையில் இருந்து மைசூருக்கு மாற்றியது. அதனை சென்னைக்கு கொண்டுவர வேண்டும் என்று அன்றைக்கு அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டதையும், மைசூரில் இருக்கும் இந்த சாசன நிறுவனம் நான்கு மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மைசூர் ஆகிய மாநிலங்களின் சாசனங்களை வைத்துள்ளது. எனவே அந்தந்த மாநிலத்திடம் அவர்களது சாசனம் ஒப்படைக்கப் பட்டு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பயனடைய முடியும் என்கிறார்.

மாநில அரசானது கொண்டுவரப்படும் தொன்ம சான்றாதாரங்களை உரிய முறையில் வைத்து அந்த துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு படியெடுத்தல், பதிப்பித்தல், புகைப்படம் எடுத்துப் பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மேலும் பல வரலாற்றுத் தரவுகளும் அது சார்ந்த ஆவணங்களையும் நாம் பெறமுடியும்.

அச்சுக்கு கொண்டு வரப்படும் ஆவணங்களை ஒரு நிறுவனமாக தொடர்ந்து இயக்க வேண்டும். அப்போது தொன்மம் சார்ந்த அறிவைப் பெற்ற ஆய்வாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதோடு நமது ஆதாரங்கள் நம்மிடம் இருக் கின்றன என்ற பெருமையோடு நம்மால் கூற முடியும். இதை கேட்டு வலியுறுத்தி பெறும் உரிமை தமிழக அரசுக்கும் மக்களுக்கும் உண்டு.

தமிழகத்தில் தொன்மைகளை பாதுகாப்பது மற்ற மாநிலத்தில் உள்ளவற்றை கேட்டுப் பெறு வதோடு நின்று விடுவதில்லை. பழமை வாய்ந்த கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சமணப்படுக்கைகள், குகைகள், நடுகற்கல், செப்புப் பட்டயங்கள், சுவடிகள் என அனைத்தையும் பாதுகாப்பதற்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும் இந்த துறையில் ஆர்வ முள்ள ஆய்வாளர்களை தவறவிடக்கூடாது என்பதே நா.வாவின் விருப்பம்.

தமிழகத்தில் கிடைக்கப்பெறும் வரலாற்றுச் சான்றாதாரங்களோடு ஆய்வுப்பரப்பை சுருக்கிக் கொள்ளாமல் பல்வேறு மாநிலங்களில் சிதறிக் கிடக்கும் நமது பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்க வேண்டும். குறிப்பாக கேரளாவில் 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சாசனங்கள் தமிழில் உள்ளன. விஜயநகர நாயக்கர்கள், அவர்களின் தளவாய்களான மதுரை நாயக்கர்கள், இவர்களின் தளவாய்கள் அழகப்ப முதலியார், இராமப் பையன், நசரப்பையன், கிருஷ்ணப்பையன் முதலியோரது சான்றுகள் தமிழிலும், மலையாழ்மா என்ற மொழியின் வரி வடிவத்திலும் கிடைக்கப் பெறுகின்றன.

தென் மைசூரில் சமண சமய சாசனங்கள், தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகள், தமிழக சிவனடியார்கள், கங்கர் படையெடுப்புகள், பழைய கன்னடம், நவீன கன்னடம் இவைகள் தமிழ்மொழியில் கிடைப்பனவற்றையுமாவது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆய்வு மனப்பான்மையை உருவாக்கித் தருகின்றார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் வரை பல்லவர்களின் தொன்மங்களும், குல சேகர பாண்டியன், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் போன்ற பாண்டியர்களின் தொன்மைகளும், நெல்லூர் வரை பிற்காலச் சோழர்களின் தொன்மைச் சான்றுகளும் கிடைக்கப் பெறுகின்றன. அதே போல 18ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாபுகள் நைஜாமின் பிரதிகளாக ஆற்காட்டில் இருந்து ஆண்டனர். அவர்கள் கால அரசியல் மற்றும் போர் நிகழ்வுகள் இவைகளும் வரலாற்றின் முக்கியத் தொன்மங்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிறார்.

இவற்றைப் போலவே வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக மராட்டியர்கள் விளங்கினர் (1801 முதல் 1815 வரை). எனவே இந்த காலகட்டத்தில் பல்வேறு சாசனங்கள் மராட்டிய மொழியில் உள்ளன. அந்த தொன்மை சாசனங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதைப்போலவே சோழர் காலத்தில் சாதியப் பிரிவினைகள் இருந்தன. இது இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அதனுள் இருந்த பல்வேறு சாதிய முரண்களை கல்வெட்டுச் சான்றுகளோடு ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

பல்வேறு வகையான சமூகப் பிரிவுகள் இந்த இரு பிரிவினுள் அடங்கியிருந்தது. அவர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொழில் முறை போன்றவை மீட்டெடுக்கப்படவேண்டும். பொங்கல் விழாவைப் பற்றி தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழியைக் கொண்டு நிலத்தில் விதைக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி அதனை சூரியனுக்கு படையல் இடுவதையும் பூமியின் செழிப்புக்கு காரணம் சூரியன் என மக்கள் நம்பிக்கையையும் பதிவு செய்கிறார். இந்த மகிழ்ச்சி யினை ‘வள்ளைக் கூத்து’ நெல்குத்துவதுபோல ஆடி மகிழ்ந்ததையும் பதிவு செய்கின்றார்.

கர்நாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம் என்ற கட்டுரை ஒன்று ‘புதியவானம்’ என்ற இதழில் நா.வா. எழுதியுள்ளார். தைப்பொங்கல் காணும் பொங்கலில் (ஜனவரி 17ஆம் நாள்) அங்கு பொங்கல் விழாவாக கொண்டாடப்படுவதையும் கதைப்பாடல், கூத்து போன்ற பண்பாட்டு தொன்மைசார்ந்து நடைபெறுவதையும் பதிவு செய்கின்றார்.

நாட்டார் இலக்கியங்களான கதைப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், பள்ளுப்பாட்டு, வில்லுப் பாட்டு, கலைகள், பண்பாடு சார்ந்த தொன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது சார்ந்த ஆய்வுகள் வேண்டும். குறிப்பாக மக்கள் இலக்கியமான இலக்கியத்தை மாவட்ட வாரியாக உள்ள பாடல்களைத் திரட்ட வேண்டும். திரட்டப்பட்ட பாடல்கள் முழுமையாக அச்சாக்கம் பெற வேண்டும். நாட்டார் கலைக்காட்சிக் களஞ்சியம் ஒன்று தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைமுறைகளைக் கடந்து பண்பாடு காக்கப் பெறும் என்பதை முன்வைக்கிறார்.

தமிழகத்தில் தற்போது கலைகளைப் பாது காக்கவும், பண்பாட்டை மீட்டெடுக்கவும் போராட்டம் நிகழ்த்த வேண்டிய சூழலுக்கு

நாம் தள்ளப்பட்டுள்ளோம் இந்த நிலைக்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் தொன்மங் களை மீட்டெடுக்க ஆய்வுகளை வளர்க்கவேண்டும் என்று பேராசிரியர் நா.வானமாமலை அன்றைக்கே முற்போக்கு சிந்தனையோடு பதிவு செய்துள்ளார்.

வரலாறு என்பது பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல. அப்படிப் பாதுகாத்தால் மட்டுமே அழியாமல் எதிர்வரும் சமூகம் பயன்பெற விட்டுச் செல்லமுடியும். எனவே நமது அடையாளங் களையும் தொன்மைகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து அவற்றை மீட்டெடுப்பதே நா.வா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும்.

சான்றாதார நூல்கள்:-

1. இந்திய இலக்கியச் சிற்பிகள் நா.வா, தோதாத்ரி, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.

2. நடுகற்களும் நம்பிக்கைகளும், நா.வா.

3.  புறநானூறு.

4. கருநாடகத்தில் சங்கராந்தி பயனுள்ள மரபு வழக்கம், நா.வா, புதிய வானம்- 1972.

5. தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள் (நா.வா. மணிவிழா மலர்) 1978.

6. தமிழரின் பண்பாடும் தத்துவம், நா.வா, என்.சி.பி.எச். 1973, சென்னை.

7. தமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும், நா.வா, பல்கலைப்பதிப்பு - 2009.

செவ்வாய், 3 மே, 2016

விக்டோரிய அரசின் வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

முதல் திரைப்படம், காந்தி, விவேகானந்தர் முதல் உரை- வரலாறு படைக்கும் விக்டோரியா அரங்கம்- முனைவர் கோ.ஜெயக்குமார்.


1880-களில், மெட்ராஸ் ஒரு வர்த்தக மையத்திலிருந்து ஒரு செழிப்பான மாநகரமாக வேகமாக உருமாறிக் கொண்டிருந்தது. அந்நகரின் உயர்மட்ட ராஜாக்கள், ஜமீன்தார்கள் மற்றும் தொலைநோக்காளர்கள் ஒரே ஒரு கனவுடன் பச்சையப்பா மண்டபத்தில் கூடினர்: எண்ணங்கள் ஒன்றிணையவும், கலை செழிக்கவும், குடிமக்கள் சுதந்திரமாக ஒன்றுகூடவும் ஓர் இடத்தை உருவாக்குவதே அந்தக் கனவு.

ராபர்ட் ஃபெரோஸ் சிஷோம் ஒரு கட்டிடக் கலைஞர் மட்டுமல்ல, அவர் தென்னிந்திய கட்டிடக்கலைக்கு மறுவடிவம் கொடுத்த ஒரு புரட்சியாளர் . பூரி பிரிவில் வங்காள பொதுப்பணித் துறையின் நிர்வாகப் பொறியாளராகப் பணியாற்றிய அவர், மெட்ராஸுக்குக் குடிபெயர்ந்து அதன் வானுயரக் காட்சியை என்றென்றைக்குமாக மாற்றியமைத்தார். முரண்பட்ட கட்டிடக்கலை மரபுகளை ஒருங்கிணைத்து, பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதில்தான் அவரது மேதைமை வெளிப்பட்டது.
விக்டோரியா பப்ளிக் ஹாலின் மையப் புள்ளி, சந்தேகமின்றி, சென்னையின் வானுயர்ந்த தோற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதன் கம்பீரமான கோபுரமே ஆகும். 34 மீட்டர் உயரத்திற்கு வானுயர்ந்து நிற்கும் இந்தச் சதுர வடிவ, மூன்று மாடிக் கோபுரம், 19 ஆம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் சாதனையாகும். சிஷோமின் கேரளக் கட்டிடக்கலை ஆய்வின் நேரடித் தாக்கத்தால் உருவான, இந்தக் கட்டிடத்தின் உச்சியில் அமைந்திருக்கும் திருவிதாங்கூர் பாணி ஓடு வேயப்பட்ட கூரையே இதை மேலும் அசாதாரணமாக்குகிறது.


விக்டோரியா பப்ளிக் ஹால், நகரத்தின் ஆன்மாவை வெளிக்காட்டும் ஒரு சாளரமாகத் திகழ்கிறது. அதன் சுவர்களுக்குள் வரலாறு படைக்கப்பட்டு, மறுஉருவாக்கம் செய்யப்பட்டது: மகாத்மா காந்தி சுதந்திரம் கோரிய மக்களிடையே அமர்ந்திருந்தார்; சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் மாட்டு வண்டியின் மீதிருந்து ஆன்மீகத் தீயுடன் ஒலித்தன; மேலும், 1896-ஆம் ஆண்டின் ஒரு விதிவசமான டிசம்பர் மாலையில், தமிழ் சினிமா முதன்முறையாகப் பிறந்தது.



மக்கள் பூங்காவிலிருந்து (தற்போது பரபரப்பான பார்க் டவுனின் ஒரு பகுதி) பிரிக்கப்பட்ட 3.14 ஏக்கர் நிலம், ஆண்டுக்கு வெறும் ₹28 என்ற மிகக் குறைந்த தொகைக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் கம்பீரமான ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையில் உள்ள அந்த இடத்தில், ஒருதிடைப்பட டிக்கெட்டின் விலையை விடக் குறைவான செலவில் வரலாறு படைக்கப்பட்டது.



30 உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டமாகத் தொடங்கிய இது, ஒரு அசாதாரணமான நிகழ்வாக உருவெடுத்தது. 1883-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி, விஜயநகரம் மகாராஜா ஆனந்த கஜபதி ராஜு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை மகாராஜாக்கள் உள்ளிட்ட அரச குடும்பத்தினரும், நீதிபதி முத்துசுவாமி ஐயர் மற்றும் கடிகாரத் தயாரிப்பாளரான பி. ஓர் அண்ட் சன்ஸ் போன்ற பிரமுகர்களும் தாராளமாகப் பங்களித்தனர்.


விக்டோரியா பொது மண்டபம், சிஷோமின் சோதனைக் கட்டத்தைப் பிரதிபலிக்கிறது; அதில் அவர், இந்தோ-சாரசெனிக் கொள்கைகளை மலபார் கட்டிடக்கலைப் பள்ளியின் கூறுகளுடன் துணிச்சலாக இணைத்தார். இது வெறும் அழகியல் தேர்வாக மட்டும் இருக்கவில்லை; மாறாக, நடைமுறைப் பொறியியல் கருத்தாய்வுகள் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டதன் விளைவாக உருவான ஒரு கட்டிடக்கலைப் புத்தாக்கமாகும்.


விக்டோரியா பப்ளிக் ஹாலின் மையப் புள்ளி, சந்தேகமின்றி, சென்னையின் வானுயர்ந்த தோற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதன் கம்பீரமான கோபுரமே ஆகும். 34 மீட்டர் உயரத்திற்கு வானுயர்ந்து நிற்கும் இந்தச் சதுர வடிவ, மூன்று மாடிக் கோபுரம், 19 ஆம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் சாதனையாகும். சிஷோமின் கேரளக் கட்டிடக்கலை ஆய்வின் நேரடித் தாக்கத்தால் உருவான, இந்தக் கட்டிடத்தின் உச்சியில் அமைந்திருக்கும் திருவிதாங்கூர் பாணி ஓடு வேயப்பட்ட கூரையே இதை மேலும் அசாதாரணமாக்குகிறது.
இந்தக் கோபுரம் வெறும் அலங்காரத்திற்காக மட்டும் இல்லை; அது முக்கியமான காற்றோட்டப் பணிகளுக்கும் உதவுகிறது. அதன் உயரம் ஒரு இயற்கையான புகைபோக்கி போன்ற அமைப்பை உருவாக்கி, சூடான காற்றை மேல்நோக்கி இழுத்து, கீழே உள்ள கூடங்களில் வெப்பநிலையைக் குளிர்ச்சியாகப் பராமரிக்கிறது. இது சென்னையின் வெப்பமண்டல காலநிலைக்கு ஒரு அற்புதமான, இயல்பான குளிரூட்டும் தீர்வாகும்.

கோபுரத்தின் உச்சியில், இஸ்லாமிய எழுத்துக்கலையை ஒத்த, கலைநயத்துடன் செதுக்கப்பட்ட ஒரு களிமண் விளிம்பு அமைந்துள்ளது; இதுவே அக்கட்டிடத்திற்கு அதன் தனித்துவமான தன்மையை வழங்கும் சாரசெனிக் பாணியின் தனிச்சிறப்பாகும். இந்த சுடுமண் வேலைப்பாடு, இத்தகைய உயரங்களில் இந்த நுட்பமான அலங்காரக் கூறுகளை வடிவமைத்து, சூளையில் இட்டு, நிறுவிய 19-ஆம் நூற்றாண்டு கைவினைஞர்களின் அசாதாரணமான கைவினைத்திறனை வெளிக்காட்டுகிறது.

இந்தக் கட்டிடம், சுமார் 150 அடிக்கு 80 அடி அளவுள்ள, உறுதியான இரண்டு மாடி செவ்வக வடிவ அடித்தளத்தின் மீது நிற்கிறது. இந்த அடித்தளம், கட்டிடத்தின் எடையை மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் கூடும் நூற்றுக்கணக்கான மக்களின் இயக்கப் பளுக்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; இது ஒரு பொதுக் கூட்ட அரங்கைப் பொறுத்தவரை மிக முக்கியமான அம்சமாகும்.

ஒவ்வொரு தளத்திலும் 600 பேர் அமரக்கூடிய ஒரு பிரம்மாண்டமான அரங்கம் அமைந்துள்ளது. பார்வைக் கோடுகளுக்கு இடையூறு செய்யாமல், அத்தகைய பெருங்கூட்டத்திற்கு இடமளிக்கும் அளவுக்குப் பெரிய, தூண்கள் இல்லாத இடங்களை உருவாக்குவதே இங்குள்ள பொறியியல் சவாலாக இருந்தது. சிஷோல்ம் இதை பின்வருவனவற்றின் மூலம் சாதித்தார்.

கிழக்கு முனையில், கூடுதலாக 200 பேர் அமரக்கூடிய ஒரு மரத்தாலான மேல்மாடம் உள்ளது. மெட்ராஸ் டெரஸின் இடைத்தளமே மேல்மாட அமைப்பாகச் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. களிமண் ஓடுகள், சுண்ணாம்புக்கல் மற்றும் மரத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இந்த மேல்மாடக் கட்டுமான நுட்பம், செலவு குறைந்ததாகவும், நாடக நிகழ்ச்சிகளுக்குச் சிறந்த ஒலி பண்புகளை வழங்குவதாகவும் இருந்தது.

சிஷோல்ம் கூரைக்கு எடை குறைந்த மங்களூர் ஓடுகளைப் பயன்படுத்தியதால், கட்டிடத்தின் மீது அதிக சுமையை ஏற்றாமல் மிக உயரமான மேற்கூரைகளை அவரால் உருவாக்க முடிந்தது. இந்தத் திறமையான எடைப் பகிர்வு, கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையைப் பேணிக்கொண்டே, அந்தப் பிரம்மாண்டமான ஓடு வேயப்பட்ட கூரையைத் தாங்க உதவியது.

1887-1888: மாபெரும் திறப்பு விழா

சரியான தேதி மற்றும் திறந்து வைத்தவர் (ஆளுநர் சர் மவுன்ட்ஸ்டுவர்ட் எல்ஃபின்ஸ்டோன் கிராண்ட் டஃப் அல்லது லார்ட் கொன்னேமாரா) குறித்து வரலாற்றுப் பதிவுகள் வேறுபட்டாலும், 1887 மற்றும் 1888-க்கு இடையில் இந்த அரங்கம் திறக்கப்பட்ட உடனேயே, அது மெட்ராஸின் முதன்மையான பொது இடமாக நிலைபெற்றது.

ஜனவரி 1888: விக்டோரியா பொது மண்டபமாகப் பெயர் சூட்டப்பட்டது.

குடிமக்கள் கூட்டம் ஒன்றின் போது, ​​விக்டோரியா மகாராணியின் முடிசூட்டு விழாவின் பொன்விழாக் கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போகும் வகையில், அந்த மண்டபத்திற்கு அவரது பெயரைச் சூட்டும் முடிவு முறைப்படுத்தப்பட்டது. இந்தப் பெயர் சூட்டும் விழா, ஒரு நகர மண்டபத்தை அரச நினைவுச்சின்னமாக மாற்றியது; ஆயினும், முரண்பாடாக அது தேசியவாத விழிப்புணர்வின் மையமாகவும் உருவெடுத்தது.

1900களின் முற்பகுதி: நாடகத்தின் பொற்காலம்

விக்டோரியா பப்ளிக் ஹால் தமிழ் நாடக மாற்றத்தின் மையப்புள்ளியாக விளங்கியது. முக்கிய மைல்கற்கள் பின்வருமாறு.

  • பெருந்திரளான மக்களை ஈர்த்த சங்கரதாஸ் சுவாமிகளின் புராண நாடகங்கள்
  • பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புரட்சிகரமான மாலை நேர நிகழ்ச்சிகள், நாடகத்தை குடும்பத்தினருக்கு உகந்ததாக மாற்றுகின்றன.
  • ஷேக்ஸ்பியரின் முதல் தமிழ்த் தழுவல்கள்: ஜ்வலித ரமணன் (ரோமியோ அண்ட் ஜூலியட்) மற்றும் வன்னிபுரத்து வாணிகன் (தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்)
  • 1891-ல் சுகுண விலாச சபாவின் முதல் 'காதலர் கண்கள்' அரங்கேற்றம், அந்த அரங்கத்துடனான 30 ஆண்டு காலத் தொடர்பைத் தொடங்கி வைத்தது.


  • சுவாமி விவேகானந்தர் (1893க்குப் பிறகு): சிகாகோவில் தனது வெற்றிமிக்க உரைக்குப் பிறகு, அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்; ஆயிரக்கணக்கானோர் வெளியே நின்றிருந்தனர். மண்டபத்திற்கு வெளியே அவர் மாட்டு வண்டியில் அமர்ந்து ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவு ஒரு செவிவழிக் கதையாக மாறியது.
  • மே 7, 1915: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மாவாவதற்கு முன்பும், தேசம் அவரது பெயரை அறிவதற்கு முன்பும், முதலியார் எழுதிய 'ஹரிச்சந்திரா' நாடகத்தில் கலந்துகொண்டார். அவரது வருகையை எந்த உள்ளூர் செய்தித்தாளும் வெளியிடவில்லை.
  • பாரதியாரின் “நித்திய வழிபாடு” குறித்த சொற்பொழிவுக்கு, ஒரு ரூபாய் என்ற கணிசமான விலையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
  • கோபால் கிருஷ்ண கோகலே மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் இங்கு நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டங்களில் உரையாற்றினர்.
  • இந்தியாவின் சுதந்திர இயக்கத்தை வடிவமைத்த எண்ணற்ற உரைகள், விவாதங்கள் மற்றும் திட்டமிடல் அமர்வுகள் அந்த மண்டபத்தில் நடைபெற்றன.

2009: சீரமைப்புப் பணிகள் தொடங்குகின்றன

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, அறிவியல் பூர்வமான பாதுகாப்பு முறைகளுக்கு முன்னுரிமை அளித்து, அதே சமயம் அந்த இடத்தை சமகால பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் ஒரு விரிவான புனரமைப்புப் பணியைத் தொடங்கியது


சிவப்பு செங்கல் முகப்பு

வெளிர் நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட பல காலனித்துவக் கட்டிடங்களைப் போலல்லாமல், விக்டோரியா பொது மண்டபம் அதன் சிவப்பு செங்கல் வெளிப்புறத்தை சுண்ணாம்புச் சாந்துப் பூச்சுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது, கட்டிடத்தின் அமைப்பை வலியுறுத்துவதோடு, நாள் முழுவதும் கண்ணைக் கவரும் நிழல் வடிவங்களையும் உருவாக்கும் ஒரு விவேகமான வடிவமைப்புத் தேர்வாகும்.


கொரிந்தியன் தூண்கள்

நேர்த்தியான கொரிந்தியன் தூண்களைக் கொண்ட வளைவுத் திண்ணைகள், வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு திசைகளிலிருந்தும் தெரியும் ஒரு சீரான தூண் வரிசையை உருவாக்குகின்றன; இவை, பார்வையாளர்களைப் பிரதான நுழைவாயிலை நோக்கி வழிநடத்தும் இரண்டாம் நிலை அடையாளங்களாகவும் செயல்படுகின்றன.

நான்கு மூலை கோபுரங்கள்

நுழைவாயில் முகப்பில், நான்கு அலங்காரக் கோபுரங்கள் பிரதான நுழைவுப் புள்ளியைச் சூழ்ந்து, 135 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்வையாளர்களை வரவேற்று வரும் ஒரு மறக்க முடியாத நுழைவாயிலை உருவாக்குகின்றன.

வளைந்த ஜன்னல்கள்

கல் வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய, வளைவு வடிவ ஜன்னல்கள், கட்டிடத்தின் முகப்புகளில் ஒரு தனித்துவமான வடிவத்தை உருவாக்கி, கோதிக் மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிகளை ஒரு இணக்கமான முழுமையாக ஒன்றிணைக்கின்றன.

ஒலி வடிவமைப்பு

அந்த அரங்கங்களின் செவ்வக வடிவ அமைப்பு, உயரமான கூரைகள் மற்றும் கடினமான பரப்புகள், மின்னணு ஒலி அமைப்புகளுக்கு முந்தைய காலத்திற்கு அவசியமான, ஒலிபெருக்கி இல்லாத பேச்சு மற்றும் இசைக்கு சிறந்த ஒலி அமைப்பை உருவாக்கின. மரத்தாலான மேல்மாடம் சில ஒலி அதிர்வெண்களை உறிஞ்சி, அதிகப்படியான எதிரொலியைத் தடுத்தது.

கட்டமைப்பு ஆயுட்காலம்

பல பத்தாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட போதிலும், கட்டிடத்தின் மையக் கட்டமைப்பு உறுதியாக இருந்தது என்பதற்குச் சான்றாக:

  • 19-ஆம் நூற்றாண்டு சுண்ணாம்புச் சாந்தின் தரம் (பெரும்பாலும் நவீன சிமெண்ட்டை விட உயர்ந்தது)
  • தடிமனான சுமை தாங்கும் சுவர்கள் மூலம் சரியான சுமைப் பகிர்வு
  • உள்ளூரில் கிடைக்கும், காலநிலைக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துதல்
  • பல நூற்றாண்டுகளாகச் செம்மைப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டுமான நுட்பங்கள்.
  • புனரமைக்கப்பட்ட இந்த மண்டபத்தில், சங்க காலத்தைச் (கி.மு. 300 – கி.பி. 300) சேர்ந்த சுமார் 120 பழங்கால இசைக்கருவிகளின் கண்காட்சியானது, தமிழ்நாட்டின் பண்டைய பண்பாட்டு மரபுக்கும் அதன் காலனித்துவ கடந்த காலத்திற்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்குகிறது.


காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இசைக்கருவிகள்:

  • டுடாரி (எக்காளம் போன்ற காற்று வாத்தியம்)
  • குழல் (புல்லாங்குழல் மாறுபாடுகள்)
  • கின்னரம் (வீணை போன்ற நாண் கருவி)
  • கொக்கரை (தாள வாத்தியங்கள்)
  • பல்வேறு டிரம்ஸ், கைத்தாளங்கள் மற்றும் தாள வாத்தியங்கள்

இந்தக் கண்காட்சி, விக்டோரியா பொது மண்டபத்தை வெறும் காலனித்துவ நினைவுச்சின்னம் என்ற நிலையிலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் தமிழ் நாகரிகத்தின் தொடர்ச்சியான கலை மரபைக் கொண்டாடும் ஓர் இடமாக உருமாற்றுகிறது.



விக்டோரியா காலம் - 1858

1858 இல் விக்டோரியா அரசியின் உத்தரவின் படி இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பிரித்தானிய இந்தியா என்ற பெயரில் பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. ஹாரிஸ் பிரபு சென்னையின் முதல் ஆளுனராக பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். நாட்டின் நிருவாகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஆளுனரின் நிருவாகக் குழுவுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது.1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட கவுன்சில் சட்டங்கள் ஆளுனரின் நிருவாகக் குழுவை மேலும் விரிவுபடுத்தி புனரமைத்தன. வி. சடகோபச்சாருலு இக்குழுவின் முதல் இந்திய உறுப்பினராவார். கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் சட்டத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். 1877 இல் டி. முத்துசாமி ஐயர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு ஆங்கிலோ இந்திய ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும் பணியற்றினார் (1893 இல்).1906 இல் சி. சங்கரன் நாயர், தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரானார்.

இக்காலகட்டத்தில் பல சாலைகள், தொடருந்து இருப்புப் பாதைகள், அணைகள், கால்வாய்கள் போன்றவை சென்னை மாகாணத்தில் கட்டபட்டன. சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78, இந்தியப் பஞ்சம், 1896–97 ஆகிய இரு பெரும் பஞ்சங்கள் இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைப் பீடித்தன. பஞ்சத்தின் பாதிப்பால் 1871 இல் 3.12 கோடியாக இருந்த மாகாண மக்கள் தொகை 1881 இல் 3.08 கோடியாகக் குறைந்தது. இப்பஞ்சங்களும் செங்கல்பட்டு உழவர் வழக்கு (1881-83), சேலம் கலவர வழக்கு (1882) ஆகிய நிகழ்வுகளைக் காலனிய அரசு கையாண்ட முறையும் மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.

விடுதலை இயக்கத்தின் தொடக்க காலம்

1922 இல் அன்னி பெசண்ட் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சென்னை மாகாண மக்களிடைய தேசியவாதம் தலைதூக்கியது. இம்மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு, 1852 இல் கசுலு லட்சுமிநரசு செட்டி என்பவர் தொடங்கிய சென்னை மக்கள் சங்கம் (Madras Native Association) ஆகும். ஆனால் அவ்வமைப்பு நெடுநாட்கள் செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து மே 16, 1884 இல் சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்டது.

இந்திய தேசியக் காங்கிரசின் முதல் மாநாடு மும்பையில் நடைபெற்ற போது (டிசம்பர் 1885) அதில் கலந்து கொண்ட 72 மாநாட்டு உறுப்பினர்களில் 22 பேர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 22 பேரில் பலர் சென்னை மகாஜன சங்கத்தின் உறுப்பினர்கள். காங்கிரசின் மூன்றவது மாநாடு டிசம்பர் 1887 இல் சென்னை நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாகாணம் முழுவதிலிருந்தும் 362 பேர் இதில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் 1894, 1898, 1903, 1908, 1914 மற்றும் 1927 ஆகிய ஆண்டுகளிலும் காங்கிரசு மாநாடுகள் சென்னையில் நடைபெற்றன.

1882 இல் எலனா பிளவாத்ஸ்கி மற்றும் ஹென்றி ஆல்காட் ஆகியோர் பிரம்மஞான சபையின் தலைமையகத்தை அடையாறுக்கு மாற்றினர். இந்த சபையின் முக்கிய புள்ளியான அன்னி பெசண்ட் 1916 இல் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார்.சென்னையிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இயக்கத்துக்கு மாகாணம் முழுவதும் பெரும் ஆதரவு கிட்டியது. சென்னையிலிருந்து வெளியான தி இந்து, சுதேசமித்திரன், மாத்ருபூமி போன்ற தேசியவாத இதழ்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தன. திரு. வி.காவும், பி. பி. வாடியாவும் இணைந்து இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை 1918 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவினர்.

இரட்டை ஆட்சி (1920-37)

தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்; பெரியார் (வலது) சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர் தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் இந்திய அரசுச் சட்டம், 1919 இன் விளைவாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்பட்டு முதன்முறையாக நேரடித் தேர்தல் நடைபெற்றது. இவ்வாட்சிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் ஆளுனரின் நிருவாகக் குழுவும் இணைந்து மாகாணத்தை நிருவகித்தன.

பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி முதல் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது. அ. சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். ஆனால் உடல்நலக் குறைப்பாடு காரணமாக விரைவில் பதவி விலகினார்.

அவரைத் தொடர்ந்து பனகல் அரசர் முதல்வரானார். அவரது ஆட்சியில் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க முதல் அரசாணை (613) வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் இட ஒதுக்கீடு பற்றிய முதல் அரசு நடவடிக்கையாகும். இரண்டாம் மாகாணத் தேர்தலிலும் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் உட்கட்சிப் பூசல் காரணமாக விரைவில் பிளவடைந்தது. 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மை இடங்களை வென்ற சுயாட்சிக் கட்சி அரசமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் ஜார்ஜ் கோஷன், ப. சுப்பராயன் தலைமையிலான சுயேச்சைகளின் அரசை உருவாக்கினார்.

1930 தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று பி. முனுசாமி நாயுடு முதல்வரானார். உட்கட்சிப் பூசல் காரணமாக நவம்பர் 1932 இல் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்; அவருக்கு பதில் பொபிலி அரசர் முதல்வரானார். இந்திய அரசுச் சட்டம், 1935 இன் படி இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியது.

1920களிலும் 30களிலும் சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாகி வலுவடைந்தது. மாகாண காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் ஈ. வே. ராமசாமி இதனைத் தொடங்கினார். பார்ப்பனர்கள், இந்து சமயம், சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை தமது எழுத்துகளால் சாடினார்.

பிரித்தானிய ஆட்சியின் இறுதி நாட்கள்

ராஜாஜி, இந்திய தேசிய காங்கிரசு 1937 இல் ஆட்சியமைத்த போது முதல்வரானார். 1937 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக் கோயில்களில் நுழைந்து வழிபடும் வகையில் ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றினார். மதுவிலக்கு விற்பனை வரி ஆகியவற்றையும் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தி மொழியைச் சென்னை மாகாணப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினார்.

இக்கொள்கைக்கு மாகாண மக்களிடையே பரவலான எதிர்ப்பு இருந்தது; இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், அ. தா. பன்னீர்செல்வத்தின் தலைமையில் நீதிக்கட்சியும் இப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றன. போராட்டங்களில் ஈடுபட்ட 1,200 ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சிறையிலடைக்கப்பட்டனர். தாளமுத்து, நடராசன் எனும் இரு போராட்டக்காரர்கள் மரணமடைந்தனர்.

1939ம் ஆண்டு இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்தியது இம்முடிவுக்குக் காரணமாக இருந்தது. இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுனரால் நேரடியாக நிருவாகம் செய்யப்பட்டது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் கட்டாய இந்தி அரசாணையை நீக்கினார்.

காங்கிரசின் பெரும்பான்மையான தலைவர்கள் 1942 இல் தீவிரமாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றனர். 1944 இல் நீதிக்கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து அதை விலக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் காங்கிரசு தேர்தல்களில் போட்டியிட்டது. 1946 தேர்தலில் எளிதில் வெற்றியடைந்து ஆட்சியமைத்தது.
 
த.பிரகாசம் 11 மாதங்கள் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலையடைந்தது.

சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக மாறியது.

காலம் உள்ளவரை போற்றும் தலைவர்களாக இவர்கள் பணி அமைந்ததை எவராலும் மறுக்க முடியாது.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது - கோ.ஜெயக்குமார்.

சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட நாள்: 21-12-1968

சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலா விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமொக்கா, தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது. மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சியின் வரிசையில், 2-வது திட்டமான அப்போலோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து 1968-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் தான் மனிதர்களை சுமந்து சென்று முதல் முறையாக பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, பூமியின் நிலவு வட்டப்பாதையை அடைந்த விண்கலம் ஆகும். அதன்பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

இதில் பிராங் போல்மேன், ஜேம்ஸ் லோவல், வில்லியம் ஆண்டர்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பயணித்தனர்.

இதே டிசம்பர் 21ம் தேதியின் சில முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1967 - உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களில் இறந்தார்.

1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பம்.

1992 - டச்சு விமானம் ஒன்று போர்ச்சுக்கலில் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலி.

1995 - பெத்லேகம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2007 - பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் சாவு.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பறம்பு மலை என்ற பிரான்மலை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

 பறம்பு மலை என்ற பிரான்மலை வரலாறு - முனைவர் கோ.ஜெயக்குமார்.

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.
 

மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும்.
 
இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம்  எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
 
 "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,415 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிங்கம்புணரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78% உம் பெண்களின் கல்வியறிவு 65% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. சிங்கம்புனரி மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.விவசாயம் முதல் தொழிலாகவும், பனையும் தென்னையும் சார்ந்த தொழில்கள் பணத் தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு.
 
சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு  எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

   தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை - பறம்புக்குடி
    கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்
    வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்
 
மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர் எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா்.
 
இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.
 
முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

சனி, 1 ஆகஸ்ட், 2015

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலைப்பகுதியில் சமணர் படுக்கைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தார்கள். இதுகுறித்து மேலும் விசாரித்தப்போது பல புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. வந்தவாசி-செய்யாறு சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் மலையில் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டோம். இதில் அம்மலையில் சமணர் படுக்கைகள் இருப்பது தெரியவந்தது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgRduvAqu5zH7ey0dvAEPLFGWZOtSBGnwg3ZXx3ype51Tl5Y7BQ9loQch_IQxVoMVp6L1PhNIWqNNrZzcCQB9Sr3X-VLL_IN6UZSdRPMvwC0ClMbq3k2E834RXFvVLqVvtI6_yj4vSY_A/s1600/vandavasi1.jpg
இந்த மலையில் உள்ள சமணப்படுக்கைகள்  சுமார் 2000 ஆண்டுகளுக்கும் தொன்மையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மலையில் பெருங்கற்காலத்திற்குரிய கல்வட்டங்களும், கற்காலக் கருவிகள் செய்யப்பட்டதற்கான மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைக் கொண்டு மலையின் கிழக்குப் பகுதியை ஆய்வுசெய்தபோது அங்கு படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV820BRbwZ6TFTJ-h2r4ILkH8GaO_n6bvLwKZub_BLHSGMDw-G_aTMuat5rZ4f9kaDhsuykpeNTdNizo_7eIm_jV-M_5vNeXAc9uv2HMlNtrDKUqEanM8uxVBeldPBRstYrZWT_jgQrbg/s1600/krish.jpg
சாய்வான அமைப்பை கொண்டுள்ள சமணப் படுக்கைகள் கிழக்கு நோக்கி உள்ளன. இந்த படுக்கை தளத்தின் அகலம் 170 செ.மீ., நீளம் 150 செ.மீ. ஆக உள்ளது. இதை பார்க்கும்போது 4 முதல் 5 துறவிகள் உறைவிடமாக கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv9SyYjJCYeLcNltVaWpfPooERj5HGN1ziHarO9qTPpUlPXDR8cBWvlojCxHNYkjCFBA9nFWNTd1-_M4jexF6QAOlBFlkHUz_BtKjzY0KaES_MkCW6AvQDku4ZhEHX07OgDLmzdVSxRPA/s300/images6.jpeg
இந்த பாறையில் தரைப்பகுதியை துறவிகள் இயற்கையாகவே பயன்படுத்தி உள்ளனர். இந்த பயன்பாட்டினால் பாறையின் தரைப்பகுதி நன்றாக தேயந்திருப்பதை பார்க்கும்போது துறவிகள் பல நூற்றாண்டுகள் இதை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.
 
கீழ்த்தளப் பாறையின் நடுப்பகுதியில் 33 செ.மீ. நீளமும், 21 செ.மீ.அகலமும் கொண்ட ஒரு செவ்வக் குழி காணப்படுகிறது. இதற்கு தெற்காக இப்போது விளையாடும் ஆடுபுலி ஆட்ட கட்டம் காணப்படுகிறது. இதுபோன்ற கட்டங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் இதர பகுதிகளில் உள்ள படுக்கைகள் போலவும் காணப்படுகிறது.
 
இம்மலையில் காணப்படும் பாறைகளின் மேல் பல இடங்களில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுப் பாறை மீது மழை, காற்று, வெயில் படுவதால் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. கல்வெட்டின் மீது ஊரார்கள் தங்கள் பெயரையும் செதுக்கி வைத்துள்ளதால் கல்வெட்டின் தகவலை முழுமையாக அறிய முடியவில்லை.
 
சில கல்வெட்டுகளை ஆய்வுசெய்தபோது தமிழ் (பிராமி) வடிவ எழுத்துகளையும், வட்டெழுத்துகளையும் உடையதாக உள்ளன. இக்குன்றை சார்ந்த பிற பகுதிகளில் தாழ்வான குகைத்தளங்கள் காணப்படுகிறது. படுக்கை குன்றுக்கு தெற்கில் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த ஏரிப்பகுதியில் முதுமக்கள் தாழி புதைக்கப்பட்டுள்ளன.
 
இந்த தாழிகள் மழை, வெள்ளத்தால் சிதைவு ஏற்பட்டு உடைந்து காணப்படுகின்றன. எனவே இந்த ஏரிப்பகுதியில் துறவிகள் இறந்தபிறகு இதுபோன்ற தாழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வு மேற்கொண்டால் தமிழர் பண்பாட்டுக்குரிய அரிய செய்திகள் வெளிப்படும் என்பதில் அய்யமில்லை.

வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீதவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இம்மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் உள்ளன.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzpIynrGR_fRCh6DcGYRjdpRaP_AUtgfQrO2KEpW3VWjhF0DCKbor0LKwulhp_7DtFj6oyf_txTNTL5dN5vqCeSrI1PxsY5ueZKrQXUyqOe-RyJeUVmO7V-XDbc_u840Sherpa0x8xmP0T/s1600/1.bmp
இந்தக் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுகின்றனர். பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதவளகிரீஸ்வரர், ஸ்ரீவிநயாகர் ஆலயங்களில் தனித்தனி கொப்பரைகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஞாயிறு, 7 ஜூன், 2015

வரலாற்றுக் கோட்டை வந்தவாசி - கோ.ஜெயக்குமார்.

வரலாற்றுக் கோட்டை வந்தவாசி - கோ.ஜெயக்குமார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில்  மிகப்பெரிய போர் நடந்தது. இந்த கால கட்டத்தில் மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. வரலாற்று ஆசிரியர்கள் இந்த போரை மூன்றாம் கர்நாடகப் போர் என்வும் குறிப்பிடுகின்றனர். இந்தப்போரோடு இந்தியாவில் பிரஞ்சு ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.
 
1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் அயர் கூட் தலைமையிலான படை, பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலுான்ற காரணமானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது வந்தவாசி. சட்டமன்ற தொகுதியான இங்கு இதுவரை ஆண்டு வந்த, ஆண்டு வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் வளர்ச்சிக்கோ அல்லது வரலாற்றை பாதுகாக்கவோ தவறிவிட்டனர் என்று உறுதியாக சொல்ல முடியும். வந்தவாசி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.
 Displaying 20150519_182521_resized_1.jpg
வந்தவாசியை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளை கடந்து சென்றாளும் வளர்ச்சி இல்லை. குறிப்பாக அடிப்படை வசதிகளான சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர், சுகாதாரம், நூலகம், கல்வி வளர்ச்சி இல்லை. வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எனக்கு தெரிந்து கடந்த 15 ஆண்டுகளுகு மேலாக கழிப்பிடம் இன்றி துர்நாற்றம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
 
நகராட்சி நிர்வாகம் வசூல் வேட்டையில் மட்டும் தனி கவனம் செலுத்திவருகிறது. அதிகாரிகளும் இந்த வசூல் வேட்டைக்கு உறுதுணையாக உள்ளது. வளர்ச்சிப்பணிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. சாலைகள், போக்குவரத்து, குடிநீர் இவற்றைப்பற்றி கவலைப்படாத நிர்வாகம் குடிநீர் இணைப்பு ஒன்றிற்கு 15000 முதல் 20000 வரை லஞ்சம் வாங்குவது அதை பகிர்ந்து கொள்வது போன்றவை கையூட்டு வேலைகள் மட்டும் படுஜோராக
நடைபெற்று வருகிறது.
Displaying 20150519_182420_resized_2.jpg
வந்தவாசி நகராட்சிக்கு அருகில் உள்ள கோட்டை பராமரிக்கப்படவில்லை. கோட்டைக்கு சொந்தமான குளம் ஆகாய தாமரைக்கு வாழ்வளித்துள்ளது. நடுகல் ஒன்று கேட்பார் அற்று உள்ளது.
 Displaying 20150519_181427_resized_1.jpg
வரலாற்றில் மிக முக்கியமான் போர் நடைபெற்ற இந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு பணம் வாங்கி பழகிப்போன் அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் வரலாற்றை பாதுகாப்பது பற்றி தெரியவாபோகிறது.
 http://www.vandaitimes.com/wp-content/uploads/2012/09/DSC00374.jpg
இதுவரை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பேசி நான் பார்த்ததில்லை இதுதான் இவர்களின் அரசியல் ஜனநாயகம்.
 Displaying 20150519_182346_resized_1.jpg
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டும
 Displaying 20150519_182051_resized.jpg
மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.
 Displaying 20150519_182221_resized_1.jpg
வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க தவறி வரும் இவர்களுக்கு வரும் காலங்களில் மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும். வழிபாட்டிற்காக கோயில் என்ற அளவில் ஆஞ்சநேயர் வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது. பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அகழி மீண்டும் பொலிவு பெறுமா என்பது விடை கான முடியாத வினாவாகவே உள்ளது.
 http://img716.imageshack.us/img716/7079/wandawashplaque.gif
இந்த கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்
கப்பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Displaying 20150519_181452_resized.jpg
வந்தவாசி போர் பற்றிய வரலாறவது எதிர்காலத்தில் ஆவணங்களில் இருக்குமா என்ற வினாவும் இந்த நேரத்தில் எழத்தான் செய்கிறது. நமது பண்பாடும், நாகரிகம், கலை பாதுகாக்கப்படுமா என்ற ஐயம் அனைவரது கேள்வியாக உள்ளது.........தொடரும்........