செவ்வாய், 24 டிசம்பர், 2013

அதியமான் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்.


 அதியமான் கோட்டை வரலாறு - கோ.ஜெயக்குமார்.

அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை களிமண்ணால் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும்.

இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுயில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். மன்னர் அதியமான் காலத்தில் அவரது அரசின் தலைநகராக தர்மபுரியும், அவரது கோட்டையாக இந்த அதியமான் கோட்டையும் விளங்கி இருக்கிறது. இந்த அதியமான் கோட்டைக்கு செல்ல ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.
 
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
 
சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான். இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். இவற்றையும் பார்க்கவும்.

அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர்.

இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
 
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.


அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.


மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.


அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.


அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள்.
 இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.

இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.


இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட சிற்றரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் குறுநில மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன[1].


இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது[2]. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன.

விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது.


இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும் சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.

விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.


வெள்ளி, 20 டிசம்பர், 2013

வீரமறவன் ஊமைத்துறை வரலாறு - கோ. ஜெயக்குமார்.



வீரமறவன் ஊமைத்துறை வரலாறு - கோ. ஜெயக்குமார்.

ஊமைத்துரை (இ. நவம்பர் 16, 1801) வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இயற்பெயர் துரைசிங்கம். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில்(இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்)அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். 
 
வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். 
 
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சு திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.
 
வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்! ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசாமி. தந்தையார் ஜெகவீர கட்டபொம்மன். தாயார் ஆறுமுகத்தம்மாள். ஊமைத்துரை 1772 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது மூத்த சகோதரர் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன். இயற்கையிலேயே இவர் செவிடாகவும் ஊமையாகவும் பிறந்தார். ஆனால், திட்டம் தீட்டுவதில் வல்லவர். மேலும், வலிமையும், வீரமும், துணிச்சலும் மிகுந்தவர்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPeWXeoR7MJlyJCiqc9D9aV3tYDrqLiJM2MEl1fFLVqgJQASxEpANQZsFXK9wqYNC3NEO-fzomRmCFD9b-dtG6FqB12KAsY9HD8XTh_VTE7Z_inEeDhKmEehrYZzJz9zu3W38O0EfY6qo/s1600/IMG_1670.JPG
ஆங்கிலேய ஜெனரல் ஜேம்ஸ்வேல்ஸ் என்பவர் ஊமைத்துரையின் வீரத்தை,  “கட்டபொம்மன் காலத்தில் இவர் இல்லாமல் ஒரு சாதனையும் ஏற்படவில்லை. ஓவ்வொரு சாதனைக்கும் இவர்தான் பக்க பலமாகக் காணப்பட்டார்.” – எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 1790 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் பாளையக்காரராகப் பதவி ஏற்றார். அப்பொழுது திருநெல்வேலி மாகாணத்தில் சுமார் 33 பாளையங்கள் இருந்தது. 
 
இந்தப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி, முதல் இந்தியச் சுதந்திரப் போரை தொடங்கினர் என்கிறது இந்திய விடுதலைப் போர் வரலாறு!
கட்டபொம்மன் தமது செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், தம்பி ஊமைத்துரை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். 
 
ஊமைத்துரையும் தமது அண்ணன் கட்டபொம்மனுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்தும், அவருக்குப் பாதுகாவல் அரணுமாக செயல்பட்டார்.
அக்காலத்தில் ஆற்காடு நவாப் முகமது அலி ஆங்கிலேயரிடம் கடன்பட்டிருந்ததால் பாளையக்காரர்களிடம் வசூல் செய்யும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். இந்த நோக்கத்திற்காக 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கை கையெழுத்தானது. 
 
அதன்படி திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரின் கீழ் படிப்படியாகக் கொண்டு வரப்பட்டனர். ஆங்கிலேயர்கள் புதிய கலெக்டர்களை நியமித்துப் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வில்லியம் சார்லின்ஸ் ஜாக்ஸன் என்பவர் 1797 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் பாளையக்காரப் பகுதிகளுக்குக் கலெக்டராகப் பொறுப்பேற்றார். இவரது காலக்கட்டத்தில் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் புரட்சி, கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை தலைமையில் வெடித்தது. 
 
ஜாக்ஸன் துரை கட்டபொம்மனிடமிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து நேரிடும் என நினைத்தார். சுட்டபொம்மன் ஒழுங்காக வரிப்பணம் கட்டாததை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்தார். ஜாக்ஸன் துரை கட்டபொம்மனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும், கட்டபொம்மன் மீது ஆங்கிலேய அரசுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் சென்னை அரசுக்கு எழுதினார். அதனால், பகை சுடர் விட்டு எரிந்தது.
 
இச்சூழலில், கட்டபொம்மனின் ஆலோசகரான சிவசுப்பிரமணிய பிள்ளை ஊமைத்துரையின் தலைமையில் ஆங்கிலேய அரசுக்குச் சொந்தமான கரிசல் கோட்டாரம் என்ற இடத்தில் இருந்த நெற்களஞ்சியத்தைச் சூறையாடினார். இந்த நெற்களஞ்சியச் சூறையாடல் , ஜாக்ஸன் துரைக்கும் கட்ட பொம்மனுக்கும் இடையே உள்ள பகையை மேலும் வளர்த்தது. கட்ட பொம்மனைக் கைது செய்யும் உள்நோக்கத்துடன், ஜாக்ஸன் துரை வரிப்பணத்துடன் இராமநாதபுரம் வருமாறு கட்டளையிட்டான். இராமலிங்க விலாசம் என்ற இடத்தில் இருந்த கலெக்டர் அறைக்குக் கட்டபொம்மனை மட்டும் தனியாக வருமாறு கலெக்டர் கட்டளையிட்டான். கட்டபொம்மனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட உள்ளதை உணர்ந்த ஊமைத்துரை பெரும் படையுடன் இராமலிங்க விலாசத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டார். 
 
ஊமைத்துரை எதிர்பார்த்தது போலவே கலெக்டர் ஜாக்ஸன் கட்டபொம்மனைக் கைது செய்யக் கட்டளையிட்டான். உடனே, கட்டபொம்மன் ஊமைத்துரைக்குச் சைகை காட்டினார். உடன் ஊமைத்துரை கட்டபொம்மனுக்கு அருகில் நெருங்கி வந்து கட்டபொம்மனுடன் இராமலிங்க விலாசத்திலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் கட்டபொம்மனுக்கு மொழிபெயர்ப்புக்காகச் சென்ற சுப்பிரமணியபிள்ளை ஆங்கிலேயரின் பிடியில் சிக்கினார்.
பின்னர் கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும் 17-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUxZgxF9YsQGY8USKEhuo5UY0m6QB9nAn3y7f026o-T5ENmH0EW9L1FRwQZxMaBo292oiIkIHAPlcYGmggqwM8q3dFf-61fLRX4HIZbc1dqX34X9zPk6fcOO7VRvvavwkdVfgUIQ6VDAo/s1600/IMG_1599.JPG
ஊமைத்துரையும் , பாளையக்காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களால் சிறையில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது.
 
புரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் கொண்டு, இடுப்பில் மஞ்சள் கச்சையணிந்து மந்திரங்களை வாயில் முணுமுணுத்துத் திருநீறைப் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டே பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அருகில் வந்தனர்.
பின்னர், அவர்கள் தங்களது வேடங்களைக் கலைத்துவிட்டு , விறகுகள் மற்றும் வாழை இலைகள் , பழங்கள் ஆகியவைகளை விற்கும் வியாபாரிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். 
 
இத்தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் சிறைக் காப்பாளர்களிடம் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ய இப்பொருள்களை வாங்க அனுமதி பெற்றனர். உடனே தெரு வியாபாரிகள் கோட்டைக்குள் நுழைந்து சிறைவளாகத்திற்குச் சென்று ஊமைத்துரையும் அவரது தோழர்களும் அடைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டறிந்தனர்.
சிறையில் பெரியம்மை நோய் பரவியிருந்ததால் சிறைக்கைதிகள் கைவிலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். 
 
ஊமைத்துரையிடமிருந்து சைகை கிடைத்தவுடன் விடுதலை வீரர்கள், விறகுக் கட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் வெளியே எடுத்து சிறைக்கதவுகளை உடைத்தெறிந்தனர். சிறைக்காப்பாளர்கள் தாக்கப்பட்டு வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஊமைத்துரை விடுவிக்கப்பட்டார். 
 
ஆங்கிலேயப் படையினர் தாக்கப்பட்டு சீர்குலைக்கப்பட்டனர். இந்த வீர நிகழ்ச்சி 02-02-1801 ஆம் நாள் நடை பெற்றது என்பது வரலாறு. சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர்களும் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி முன்னேறினார். ஊமைத்துரையின் படையினர் ஆங்கிலேயரின் கண்காணிப்பு இடங்களையும் , அவர்களது உணவுக் களங்சியங்களையும் சூறையாடினர். 
 
ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துகுடி ஆகியன புரட்சியாளர்கள் வசம் வந்தன.
ஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மறுபடியும் புதுப்பித்தனர். மக்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஆங்கிலேயருக்கு எதிரான போரை வலிமைப்படுத்தினர். ஆங்கிலேயரிடம் வீழ்ந்த பாளையங்களைக் கைப்பற்ற செயல்திட்டம் வகுத்தனர்.
 
பீதியடைந்த ஆங்கிலேய அரசாங்கம் ஊமைத்துரையை உயிருடன் பிடிக்க மேஜர் மெக்கலே என்பவன், ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரவைத்தான். கேப்டன் மார்டின், மேஜர் ஷெபர்டு, லெப்டினென்ட் வெல்லி ஆகியோர் மேஜர் மெக்காலேக்கு உதவி புரிய வந்தனர். 
 
மேஜர் ஷெபர்டு  03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்து புறப்பட்டு வந்தான். ஆங்கிலேயப்படை 08-02-1801 அன்று குலசேகர நல்லூர் என்னும் இடத்தை அடைந்தது. ஆனால், புரட்சியாளர்கள் குலசேகர நல்லூரில் ஆங்கிலேயப் படையைத் தாக்கியதால், அப்படைகள், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, மூன்று திசைகளில் சிதறி ஓடியது. ஊமைத்துரையின் படையில் நாற்பது புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். 
 
ஆங்கிலேயப் படைவீரர்கள் ஆறுபேர் மாண்டனர். ஆனால், ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர். கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான்.
 
இந்நிலையில் ஊமைத்துரை வீரபராக்கிரமபாண்டியன் என்பவரின் தலைமையில் புரட்சியாளர்கள் படையை, இழந்த பாளையங்களை மீட்கும் எண்ணத்தில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஆங்கிலேய அதிகாரியும், படைவீரர்களும் பிடிபட்டனர். பக்காட் என்ற ஆங்கிலேயப் பொறுப்பு அதிகாரி சிறைபிடிக்கப்பட்டான். ஆனால், அந்த அதிகாரியின் மனைவியான மெர்வின்னோலா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான். 
 
ஊமைத்துரையை ஒழித்துக்கட்ட மீண்டும் 27-03-1801 அன்று , சுமார் 3000 படைவீரர்களுடன் மேஜர் மெக்காலே கயத்தாறு வந்தடைந்தான். பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் புரட்சியாளர்களால், ஆங்கிலேயப்படை தாக்கப்பட்டது. அதன் பின்னர் 31-03-1801 அன்று மெக்காலே பாஞ்சாலங்குறிச்சியை அடைந்து, நவீன ஆயூதங்களுடனும், பீரங்கிப்படையின் உதவியுடனும் கோட்டையைத் தாக்கினான்.
 படிமம்:Maruthupandiyar-memorial.jpg
ஊமைத்துரை வீரமுடன் போராடி ஆங்கிலேயப் படையை விரட்டியடித்தார். இறுதி முயற்சியாக மெக்காலே, புரட்சியாளர்கள் தப்பித்துச் செல்வதைத் தடுக்க கோட்டையை முற்றுகையிட ஆணையிட்டான். ஆனால் அவனது முயற்சி தோல்வியுற்றது.
ஆங்கிலேய அரசாங்கம் மெக்காலேயை பொறுப்பிலிருந்து விடுவித்து, லெப்டினெண்டு கர்னல் ஆக்னியூ என்பவனை ஆங்கிலேயப் படைத்தளபதியாக நியமித்தது. இவன் கனரகத் துப்பாக்கிகளை மலபார் பகுதிகளிலிருந்தும், திருச்சிராப்பள்ளியிலிருந்தும், திருநெல்வேலிக்கு வரவைத்தான். ஆக்னியூ 21-05-1981 அன்று பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றான்.
கோட்டையின் மீது தாக்குதலைத் தொடுத்தான். 24-05-1801 அன்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டுப் பிடிக்கப்பட்டது. ஆனால் , புரட்சியாளர்கள் நான்கு பக்கமும் சிதறித் தப்பிச் சென்றனர். இந்தப் போரில் 1050 புரட்சி வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆங்கிலேயப் படைவீரர்கள் 600 பேர் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டனர்.
 
ஆக்னியூ துரை 24-051981 அன்று ஆங்கிலேயப் படையினரை எட்டயபுரம் அனுப்பிப் புரட்சியாளர்களைக் கண்டுபிடிக்க ஆணையிட்டான். புரட்சியாளர்கள் ஆங்கிலேயப் படையினரை நேரில் மோதிப் போரிட்டனர். மறைந்திருந்து தாக்கும் போர் முறையிலும் (கொரில்லாப் போர் ) ஆங்கிலேயப் படையினருடன் போரிட்டனர். 
 
25-05-1801 அன்று நடைபெற்ற போரில் பரட்சியாளர்கள் பலர் ஆங்கிலேயப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி களத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். இதனை அறிந்த கிராமப் பெண்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சி வீரர்களைக் காப்பாற்ற ஒடிவந்தனர்.   காணப்படுகின்ற பிணக்குவியலில் ஒரு தாய் தமது மகன் சிவசம்பு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. 
ந்த இளம் வீரன் தன் தாய் முத்தம்மாள் குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்து, தனது அருகாமையில் மடிந்து கிடந்த வீரர்களில் ஊமைத்துரை பெரும் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டான். தமது தாயிடம் ஊமைத்துரையை உடனே காப்பாற்றுமாறும் அவர்தான் எனது தெய்வம் என்றும் , அவரைக் காப்பாற்றினால் ஆங்கிலேய ஆட்சியை வேரோடு அழிப்பார் என்றும் கூறினான்.
 
இதனைத் தாயிடம் கூறிவிட்டு, அந்த வீரமகன் உயிரைவிட்டான். தமது மகனின் இறுதி ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் அந்தத்தாய் இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட ஊமைத்துரையை அவளது கிராமத்துக்கு தூக்கிச் சென்றாள். ஊமைத்துரையின் காயங்களுக்கு மருந்திட்டு காப்பாற்றி வந்தாள். அப்பொழுது, ஆங்கிலேயப்படையினர் அக்கிராமத்தை முற்றுகையிட்டு ஊமைத்துரையை கண்டுபிடிக்க வீடு வீடாகச் சோதனை செய்தனர்.
 
ஆனால், அந்தத் தாய் சில பெண்களை அழைத்து ஊமைத்துரையை ஒரு வெள்ளைத் துணியால் மூடித் தன் மகன் பெரியம்மை நோயால் இறந்து விட்டதாகப் படைவீரர்களிடம் கூறினாள். ஆங்கிலேயப் படை வீரர்களை நம்பவைக்க அங்கே கூடிய பெண்கள் தங்களது மார்பில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினர். ஆங்கிலேயப் படையினர் தங்களுக்கும் பெரியம்மை நோய் வந்துவிடக்கூடாது என்று திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடினர்.
ஊமைத்துரை காயம் ஆறியவுடன் கமுதி சென்றடைந்தார். 
 
மருது பாண்டியர்கள் ஊமைத்துரையை வரவேற்றனர். சிறுவயலில் தங்க வைத்து சிறப்பித்தனர். மக்கள் நன்கொடைகளை அள்ளித் தந்தனர். ஆக்னியூ துரை, ஊமைத்துரையை உடனே தன்னிடம் ஒப்படைக்கும்படி மருது பாண்டியர்களை கேட்டுக்கொண்டான். ஆனால், ஊமைத்துரையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர்.
 
ஆங்கிலேயப் படையுடன் போரிட மருது பாண்டியர்களின் இருபதாயிரம் பேர் கொண்ட படை தயரானது. ஆக்னியூ துரையும் ஆங்கிலேயப் படைகளை பல பகுதிகளிலிருந்தும் வரைவைத்தான்.
 
ஊமைத்துரை சிவகங்கையில் புரட்சிப் படைக்குத் தலைமை ஏற்றார். மதுரையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். பின்னர் விருப்பாட்சி என்ற இடத்தில் பாளையத்தில் 4000 பொதுமக்களைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பெரும் தடைகளை ஏற்படுத்தினார்.
 
மேஜர் ஜோன்ஸ் ஊமைத்துரையைச் சமாளிக்க முடியாமல் திரும்பினான். ஆனால், 14-10-1801 அன்று நடைபெற்ற போரில் ஊமைத்துரையை, கர்னல் ஜேம்ஸ் இன்னஷூம், மேஜர் பரோஷூம் தோற்கடித்தனர். பின்னர் வத்தலகுண்டில் இருபடைகளுக்கும் பெரும் போர் நடைபெற்றது. மூன்று நாட்கள் தீவிரமாக புரட்சியாளர்கள் போர் புரிந்தனர். பல புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். இறுதியில் ஊமைத்துரையும், 65 புரட்சியாளர்களும் ஆங்கிலேயப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
 
ஊமைத்துரையும், அவரது இளைய சகோதரர் செவத்தையாவும் 16-11-1801 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டனர். தமது விடுதலை தாகத்திற்காக ஊமைத்துரை தூக்குமரத்தை தழுவினார்.! அவரது தியாகம் இம்மண்ணுள்ளவரை போற்றப்படும்!
 
இவர் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி முதல் போரில் அழிக்கப்பட்ட பாளையங்கோட்டை கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினார்.
இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர். ஊமைத்துரை ஒளிந்திருந்த குகை.
ஊமைத்துரை நட்போடும் , மனிதாபிமானத்தோடும் திகழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன் , தீரன் சின்னமலை , விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாக கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்களிடம் என்று அனைவரிடமும் நட்போடு வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணித்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது.
 
ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு காலநெல் என்ற ஆங்கிலேயர் 1801 இல் தூத்துக்குடி மாவட்ட கம்பனி தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தநேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து , தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாக செல்ல குதிரை, இரண்டு வீரர்களையும் அனுப்பி வழி அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் . 
 
வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள். இப்படி ஒரு வீரனையும் ஆளுமை திறன் படைத்தவனையும் நான் கண்டதில்லை - என்று வெள்ளை படை தளபதி ஒருவர் பதிவு செய்தது உள்ளார். ஊமைத்துரை ஒரு வெள்ளைய அதிகாரியை கைது செய்த போது -அவரது மனைவி வந்து கெஞ்சி மன்றாட ஊமை துரை மனம் இளகி அந்த தம்பதிகளுக்கு விருந்தினரை போல் வழி அனுப்பி வைத்ததாகவும் நான் ஒரு ஆவன படத்தில் பார்த்து உள்ளேன்.
 
தமிழ் மண் ஊமைத்துரையை ஒரு அழவுகேனும் பதிவு செய்தாலும். தமிழ் மண்ணில் ஊமைத்துரை தங்கிய கோட்டைகள் சில இன்னம் உயிர்ப்போடு இருந்தே ஆக வேண்டும். புதுக்கோட்டை பகுதியில் அறந்தங்கியும்  திருமயமும் கட்டபொம்மன் மற்றும் ஊமை துரையுடன் தொடர்பு உள்ள இடங்களே.  அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு இந்த உண்மை தெரியுமா என்று தெரிய வில்லை.ஊமைத்துரை கட்டிய கோட்டை வெள்ளையர்களால் அழிக்க பட்டு இருக்கலாம் இல்லாவிட்டால் புதுக்கோட்டை  மன்னனுக்கும் பரிசாய் அளிக்கப்ட்டிருக்கலாம்.
 
அறந்தாங்கி பரிசாய் தந்த ஒன்று  என்று புதுக்கோட்டை  தொண்டைமான்களை பற்றி எழுதும் போது hollow  Crown  என்கிற ஆங்கில புத்தகம் பதிவு செய்கிறது. திருமயம் கோட்டை ஊமைத்துறையால் கட்டபட்டிருக்கலாம் என்று சிலர் கருதுவதாக கேள்வி பட்டதுண்டு. இல்லை இங்கே ஊமைத்துரை தங்கினார்  - அதுவும் புதுகோட்டை மன்னரின் நட்பினால்  என்று கதை சொல்லபடுவதில் - கொஞ்சம் வரலாறு இடிப்பதாக  உணர்கிறேன்.
திருமயம் கோட்டை தற்போது தொல்லியல் துறையிடம் உள்ளது என்று உணர்கிறேன். அங்கே இன்னும் பீரங்கிகள்  செயல் படும் நிலையில் உள்ளது எனவும் ஒரு முறை இணையத்தில் படித்த ஞாபகம்.
 
ஊமைத்துரை அடுத்து தங்கியதாக பதிவு செய்யப்படும் இடம் - சிவகங்கை. சிவகங்கை அரண்மனை இன்றும் கம்பீரமாய் நிற்பதாகவும் - அதற்கு முன் வேலு நாச்சியின்  சிலை உள்ளதெனவும் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் ஊமைத்துரை தங்கினாரா ? இல்லை வேறு இடத்தில் தங்கினாரா ? நானே அந்த அரண்மனையை கடந்து சென்று உள்ளேன். 
 
ஒரு வரலாறு நிற்கிறது என்கிற எண்ணம் தமிழர்கள் பலருக்கு இல்லை.
அப்புறம் கண்ணகி தங்கிய இட பகுதியில்தான் தற்போதய மதுரை ஆட்சியர் அலுவலகம் உள்ளதாக ஒருவர் சொன்னார். காந்தி தங்கிய மதுரை இடம் ஒன்றில் மீனாக்ஷி பெண்கள் கல்லூரி இருக்கிறது என்று அங்கே பனி ஆற்றிய ஒருவர் சொன்னார்.
வரலாறுகள்  பதிவு செய்யப்படவேண்டும். அவை நிறையவே பாடம் சொல்லும். அலெக்ஸாண்டரின் கால் சுவட்டில் என்று ஒரு ஆவன படம் பல வருடங்களுக்கு முன் BBC  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
 
யுவான் சாங் அவர்களின் காலடி ஒட்டி சில வரலாற்று ஆய்வாளர்கள் பயணம் மேற்கொண்டனர். போதி தர்மரின் சீன பயணத்திற்கும் போகர் மற்றும் புலிபாணி சித்தர்கள் கதைக்கும்  ஒற்றுமை உள்ளதென்று ஒரு குழப்பம் கூட உள்ளதாம். போதி தர்மரின் பயணம் காஞ்சியில் ஆரம்பித்து சீனத்தில் முடிகிறது - இடையில் மலேசியாவில் அவர் சில நாட்களோ சில மணி நேரமோ தங்கி இறுக்கலாம். புத்தர் கூட தமிழ் நாடு வழியாக இலங்கை பயனித்திருக்கலாம். நேதாஜியின் INA பயணம் வந்த வழியாக உயிரோடு உள்ள INA  வீரர்கள் சிலர் அழைத்து ஒரு பயணம் மேற்கொள்ளப்பட்டு அது இந்திய தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.
 
தமிழர்களில் ஊமைத்துரை பல பயணம் மேற்கொண்டு உள்ளான். அவன் கால் சுவட்டில் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள் பயனிகின்றனரா  என்று தெரியவில்லை. ராமநாதபுரத்தை ஆண்ட உடையத்தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி மன்னரால் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு கமுதி கோட்டைமேட்டில் பிரமாண்ட கோட்டை ஒன்று கட்டப்பட்டது. பிரான்ஸ் பொறியாளர் உதவியுடன் கோட்டையை கட்டியுள்ளனர்.
 
இக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலை மன்னர் சுந்தரபாண்டியனார் கட்டினார் என்பதற்கான சில சுவடுகள் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் சென்ற போது வீரபாண்டிய கட்டபொம்மன் இக்கோட்டையில் தங்கியிருந்ததாகவும், பாஞ்சாலங்குறிச்சி வீழ்ச்சிக்கு பின் கட்டபொம்மன்,
ஊமைத்துரை ஆகியோர் இக்கோட்டையில் தங்கி ராமநாதபுரம் மன்னருடன் இணைந்து ஆங்கிலே யரை எதிர்த்ததாகவும் வரலாறு கூறுகிறது. மருது சகோதரர்கள் வசமும் இக்கோட்டை சில ஆண்டு காலங்கள் இருந்துள்ளது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ச்சிக்கு பின் கிழக்கிந்திய கம்பெனியின் வசமாகி விட்டது.
 
கடந்த 1801ம் ஆண்டு முழுமையாக ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பற்ற இக்கோட்டை கமுதி குண்டாற்றில் 1877ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெருமளவில் சேதமடைந்தது. கோட்டையின் உள்புறம் ஒரு குகை இருப்பதாகவும் இங்கிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று வர மன்னர்கள் இதை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இங்கு 300ஆண்டுகள் பழமையான மரம் உள்ளதாகவும், அந்த மரத்தில் உள்ள இலைகளை சாப்பிட்டால் மனிதர்கள் என்றும் இளமையாக வாழலாம் எனவும் அப்பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.
 
கோட்டையை ஒட்டி முனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை கமுதி ஆயுதப்படை போலீசார் பராமரித்து வருகின்றனர். ஆனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை மட்டும் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. பல இடங்களில் கோட்டை சுவர்கள் இடிந்து குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோட்டையை அழியா வண்ணம் பாதுகாத்து பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வந்து சுற்றுலா தலமாக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.