புதுக்கோட்டை பேசும் வரலாறூ - கோ.ஜெயக்குமார்.
அறந்தாங்கி
புதுக்கோட்டையை அடுத்த பெரிய நகரம். முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் சேர்ந்தது. இங்குள்ள சிதைந்த கோட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
ஆவுடையார் கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாத சாமி கோயிலின் ஆளுயரச்சிலை புகழ்பெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே
இக்கோயிலின் சந்நிதிக் கூரை தாமிர ஓடுகளால் வேயப்பட்டது. இங்குள்ள மரவேலைப்பாடுகளும் கருங்கல் கூரையும் கலை நேர்த்தி மிக்கவை.
ஆவூர்
புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்வூரில், கி.பி. 1547 ஆம் ஆண்டு ஃபாதர் ஜான் வெனான்டியஸ் பச்சட் என்பவரால் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயம் அமைந்துள்ளது. மேலை
நாட்டு தமிழறிஞரான வீரமா முனிவர் (ஜோசப் பெஸ்கி) இந்தத் தேவாலயத்தில் இறைப்பணி ஆற்றியுள்ளார். கோடை காலத்தில் இங்கு நடக்கும் ஈஸ்டர் பண்டிகையும், தேரோட்டமும் அனைத்து
மதத்தினரும் கலந்து கொள்ளும் பெரு விழாக்களாகும்.
திருக்கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோயில்
திருக்கோகர்கணத்தில் உள்ள கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் குடைவரைக் குகைக் கோயில், மகேந்திர வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது. காந்திநகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம்
பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜியான் ஜூப்ளி, சேக்ரட் ஹார்ட் தேவாலயம், மார்த்தாண்டபுரம், இரண்டாவது தெற்கு வீதியில் உள்ள பெரிய மசூதி ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும்.
காட்டுபாவா பள்ளி வாசல்
புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் திருமயம்-மதுரை நெடுஞ்சாலையில் இந்தப் பள்ளி வாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனிதத் தலமென்றாலும் இந்துக்களும் இங்கு சென்று
தொழுவது தனிச்சிறப்பு. நபியுல் அகிர் மாதத்தில் இங்கு நடக்கும் உர்ஸ் திருவிழா பிரபலமானது.
அரசு அருங்காட்சி சாலை
புதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இங்கு புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாற்று ஆவணங்கள்,
ஓவியங்கள் என்று ஏராளமான சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த அற்புதமான சிலைகளும் வெண்கலக் கலைப்பொருட்களும் காண்போரை வியப்படையச்
செய்யும்.
பார்வை நேரம்- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி - 04322-236247.
கொடும்பாளூர்
புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோழர்களுடன் உறவாக இருந்த இருக்கு வேளிர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்த இந்த ஊரில்
பூதி விக்கிரமகேசரி 10 ஆம் நூற்றாண்டில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளார். இவற்றில் தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. தென்னிந்திய கட்டுமானக் கலைக்கும் சிற்பக் கலைக்கும்
இந்தக் கோயில்கள் எடுத்துக் காட்டாக உள்ளன. இவற்றில் அமைந்துள்ள களரி மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரி, கங்காதர மூர்த்தி ஆகியவை சிற்பக் கலையின் உன்னத சாட்சியங்களாகும்.
இதன் அருகே சோழர்கால முச்சுகொண்டேஸ்வரர் கோயிலும் உள்ளது. கொடும்பாளூர் என்றாலே மூவர் கோயில்தான் நம் நினைவுக்கு வரும்.
குடுமியான் மலை
இங்குள்ள சிவன் கோயிலில் சிறந்த சிற்பங்களும், பழமையான கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றில் ஒரு கல்வெட்டு மகேந்திர வர்ம பல்லவனின் இசை ஞானத்தையும் பிரிவதனி என்ற எட்டிழை
வாத்தியத்தில் அவர் செய்த பரிசோதனைகளையும் பற்றி விவரிக்கிறது.
நார்த்தா மலை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் முன்பு முத்தரையர் படைத்தலைவர்களின் தலைமையிடமாக இருந்துள்ளது. பழங்கால வட்ட வடிவக் கோயிலை முத்தரையர்கள் கட்டினார்கள் என்றால்
விஜயாலய சோழேஸ்வரன் கோயிலை பிற்காலச் சோழர்களின் முதல் அரசனான விஜயாலய சோழன் கட்டியுள்ளான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில்கள் பார்க்கப்பட வேண்டியவை.
புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் நார்த்தா மலை இருக்கிறது.
சித்தன்னவாசல்
உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் நிறைந்த குகைக் கோயில் இங்குதான் உள்ளது. இந்தக் குகைக் சுவரில் வரைந்துள்ள அஜந்தா வகை ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களால்கொண்டாடப்படுபவை.
நடுநாயகமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் ஒரு தாமரைக் குளம், அங்கு நடனமாடும் இரு கந்தர்வப் பெண்கள், குளத்திலிருக்கும் தாமரை மலரைக் கொய்து கொண்டிருக்கும் சிலர், சுற்றிலும்
மீன்கள், அன்னப் பறவைகள் என காவியமாய் விரியும். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் இங்குள்ளன. சித்தன்னவாசல் சுற்றுப்புறத்தில் ஆதிகால இடுகாடுகளும், புதைக்கப்படாத துமக்கள் தாழீகளும் உள்ளன.
குமரமலை
புதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருக்குள நீர் புனித நீராகக் கருதப்படுகிறது.
திருமயம்
இந்தியாவிலேயே பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப்பெரிய குகைக் கோயில் இங்குதான் உள்ளது.இயற்கையில் அமைந்த குகையே அற்புதமான கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயில்
அமைந்துள்ள குன்றைச் சுற்றிலும் கம்பீரமான கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கி.பி. 1687 ஆம் ஆண்டு சேதுபதி விஜயரகுநாத தேவரால் 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குன்றின்
கீழ்ப்புறமாகப் பெருமாள் கோயிலோடு சிவன் கோயிலும் உள்ளது. தொண்டைமான் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் முக்கியப் பங்காற்றியுள்ள இந்தக் கோட்டை, புதுக்கோட்டையிலிருந்து 19
கி.மீ தொலைவில் உள்ளது.
வேடன்பட்டி
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மீனாட்சி சொக்கேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நெய் நந்தி மிகப் பிரபலமானது.
விராலிமலை
இந்த மலைக் குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள மயில் காப்பகத்தில் முருகன் வள்ளி
தெய்வயானையோடு மயில் மீதமர்ந்து காட்சி அளிக்கிறார். திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் விராலிமலை அமைந்துள்ளது.
அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சுனையின் சுற்றுச் சுவரில் ஒரு சூலம் வரையப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பங்குனிமாதம் சுனையின் நீர்மட்டம்
இந்தச் சூலக் குறியிட்ட இடத்திற்கு வரும் வேளையில் வழிபாட்டின் போது ஒலிக்கப்படும் ஒருவித இசையொலி கேட்பதாக நம்பப்படுகிறது. ஆதிசேஷன் பூமிக்கு அடியிலுள்ள அருள்மிகு நாகநாதரை
வழிபடும்போடு ஏற்படும் இசைஒலிதான் அது என்றும் கூறப்படுகிறது. இதை சுனை முழக்கம் என்றும் அழைக்கிறார்கள். ஆடிமாத ஆடிப்பூரத் திருவிழா 9 ஆம் நாள் தேரோட்டம் உள்பட 10 நாட்களும்,
புரட்டாசி மாதம் நவராத்திரி, விஜயதசமி, அம்புபோடுதல் போன்ற திருவிழாக்களும், ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் கந்தர்சஷ்டி உற்சவமும், கார்த்திகை மாத தீபத்திருவிழாவும், மார்கழி கந்தர்சஷ்டி
உற்சவமும், கார்த்திகை மாத தீபத்திருவிழாவும், மார்கழி மாதம் 10 நாட்கள் ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக