காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.

 
பொறுமையைக் கடைப்பிடியுங்கள்
இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
 
தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
 
“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.
 
இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.
எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.
வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்
நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.
வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.
காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.
வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.
படிக்கும் போது அரசியல் வேண்டாம்
அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.
படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.
படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.
உழைத்து வாழ வேண்டும்
இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.
காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.
உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.
வீரமுடன் வாழுங்கள்
“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.
“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.
நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.
1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.
வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.
எளிமையோடு இருங்கள்
எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.
மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.
வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.
சட்டத்தை மதித்திடுங்கள்
முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.
சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.
“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.
“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.
சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.
“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.
ஒற்றுமையோடு வாழுங்கள்
கருத்து வேறுபாட்டினால் ஒருவருக்கொருவர் சண்டைப்போடுவது நல்லதல்ல. ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது. முன்னேற விரும்புகிறவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்பதை வலியுறுத்தினார் காமராஜர். 1960ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில்பேஇய கமராஜர்,
“குறுகிய உணர்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்துச் சண்டைப்போடக்கூடாது. இருப்பவர்கள் வேண்டுமானால் தாராளமாகச்சண்டைப்போட்ட்டும்; பணக்காரர்களுக்கு வேறு வேலையில்லை யென்றால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே இனம், அதாவது பட்டினிப் பட்டாளம்: எங்களைச் சண்டைக்குக் கூப்பிடாதீர்கள்.
வடக்கிலிருந்தாலும், தெற்கிலிருந்தாலும், தமிழன் என்றாலும் வங்காளி என்றாலும் ஏழைகள் எல்லோரும் ஒரே இனம்தான். நமக்குச்ச்ணைட் போட நேரமில்லை. நான் முன்னேற விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
“ஒற்றுமையே முன்னேற்றத்திற்கு அசைக முடியாத நம்பிக்கை அடித்தளம்” என்பது காமராஜரின் வாக்கு.
உழைப்புக்கு ஏற்ற கூலி கேளுங்கள்
காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.
‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?
பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?
வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.
“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.
“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.
லஞ்சம் வாங்காதீர்
ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.
படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.
ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.
படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.
அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.
அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.
ஏழைகளுக்கு உதவிடுங்கள்
முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.
கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.
“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.
“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்.

பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை கண்ணி அறுபடாத சங்கிலித் தொடராய் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என தேசம் முழுவதும் வியாபித்த அரசியல் கட்சியே யாகும். பிரிட்டனின் கன்சர்வேடிவ்லேபர் கட்சிகளையும் அமெரிக்காவின் டெமாக்ரடிக் ரிபப்ளிகன் கட்சிகளையும்விடப் பலவிதங்களில் சிறப்புப்பெற்ற கட்சி, அது. முக்கியமாக, தேர்தலில் பிற கட்சிகளுடன் போட்டியிட்டோ, கூட்டுச் சேர்ந்தோ ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கதுடன் தோற்றுவிக்கப்பட்ட கட்சியல்ல.
பிரிட்டிஷ் ஏகதிபத்தியம் ஆட்சியைத் தன்னிடமே சிக்கலின்றித் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, அடைபட்டு நிரம்பும் நீராவியால் பாத்திரம் வெடித்துச் சிதறிவிடக்கூடாது என்பதற்காக வால்வு வைப்பதுபோல் பாரத தேசத்தவர் தமது மனக் குமுறல்களை வெளியிட்டு ஆசுவாசம் கொள்வதற்கென வெகு சாமர்த்தியமாய் ஒரு ஆங்கிலேயர் மூலமாகவே ஆரம்பித்துவைத்த கட்சி காங்கிரஸ் மகாசபை. அதனால்தான் அதன் பெயரே காங்கிரஸ் என்றாகிப் போனது. ஆனால் காலப்போக்கில் அது வேறு தடம் தேர்ந்து, மாபெரும் தலைவர்கள் தோன்றி அவர்களின் வழிகாட்டலுக்கேற்ப இயங்கத் தொடங்கிவிட்ட கட்சி.
ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி என்பார்களே அதுபோல் பாரதமெங்கிலும் வலுவாக ஆயிரங் கால்களை ஊன்றிக்கொண்டுவிட்டிருக்கிற கட்சி, காங்கிரஸ். இன்று காலத்தின் கோலத்தால் அது எப்படியெல்லாமோ கெட்டுக் குட்டிச் சுவராகப் போய்விட்ட போதிலும், அதன் பாரம்பரிய வலிமையின் காரணமாக தேசம் முழுவதும் பரவலாக மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெற்றுப் புத்துயிர் கொள்கிறது. தலைமுறைகள் எத்தனை கடந்தாலும் காங்கிரசின் பிம்பம் மனங்களில் நிழலாய் நீண்டு வருகிறது. தான் கொண்ட பெயரால் காங்கிரஸ் பாரத அரசியலில் நீடித்து வருகிறது.
நடுநடுவே எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டாலும் ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு அந்த ஆட்சி திரும்பவும் காங்கிரசின் கைக்கே போய்ச் சேருகிறது.
தமிழ் நாடு என்கிற மாநிலம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கு வங்கம் உள்ளதே என நினைக்கலாம். ஆனால் அங்கும் ஒருமுறை இடதுசாரிகளிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் மீட்டது; சிதார்த்த சங்கர் ராய் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது, 1971ல்.
1989 ல் அப்படியொரு அருமையான வாய்ப்பு தமிழ் நாட்டிற்கும் கிடைத்தது. மக்கள் ஆட்சியைக் காங்கிரஸ் வசம் ஒப்படைக்கத் தயாராக இருந்த போதிலும் உள்ளூர் காங்கிரசாரின் மதியீனம் காரணமாக ஆட்சி தி முக வசமாயிற்று. அந்தச் சமயம் நடைபெற்ற தேர்தலில் தமிழ் நாட்டில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளும் தனித்தனியாக நின்று பலப் பரீட்சையில் இறங்கின. அ தி மு க எம் ஜி ஆரை இழந்து, ஆர் எம் வீரப்பனின் அதிகார ஆசையால் ஆட்சியையும் பறிகொடுத்து, ஜானகி அ தி மு க, ஜயலலிதா அ தி மு க என இரண்டாகப் பிளந்து எது எம் ஜிஆரின் அ தி மு க என்பதைக் கண்டறியும் போட்டியில் எதிரும் புதிருமாக நின்றது.
பிரதமர் ராஜீவ் கா ந்தி பதினேழு முறை தமிழ் நாட்டிற்கு வந்து, குடிசைகளுக்குள் எல்லாம் நுழைந்து, நுழைந்து, வெள்ளைக் குர்தாவை அழுக்காக்கிக்கொண்டு காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது காலை உள்ளூர் காங்கிரசாரே வாரிவிட்டனர். முக்கால்வாசி காங்கிரஸ் வேட்பாளர்கள் நமது கட்சி எங்கே ஜயிக்கப் போகிறது, வழக்கம் போல் ஏதாவது ஒரு திராவிடக் கட்சிதான் ஜயிக்கும் என்று அவர்களாகவே முடிவு செய்து தேர்தல் பிரசாரத்திற்காகத் தாமும் செலவழிக்காமல், காங்கிரஸ் மேலிடம் அள்ளிக் கொடுத்த பணத்தையும் பயன்படுத்தாமல் அவரவர் வீடுகளில் பதுக்கிக்கொண்டார்கள். இவ்வாறாகத் தமது அற்பப் பணத்தாசைக்கு முன்னால் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பினைப் பலி கொடுத்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் நான் பத்திரிகைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்குத் தாவி, அச்சமயம் கல்கத்தாவிலிருந்த டெல்டா என்கிற விளம்பர நிறுவனத்தின் சென்னை பிரான்சைசியாக எழும்பூரில் அலுவலகம் நிறுவி இயங்கத் தொடங்கியிருந்தேன். காங்கிரசில் எனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி, காங்கிரசுக்கான தேர்தல் பிரசார விளம்பரத்தை மேற்கொள்ள முற்பட்டேன். மூப்பனார், பழனியாண்டி, தங்கபாலு, ஏ கே சண்முக சுந்தரம் எனப்பலர் எனது நிறுவனத்தைப் பயன் படுத்திக்கொள்வதாக உறுதி யளித்தனர். எழுத்தாளர் சிவசங்கரிக்கு காங்கிரஸ் வட்டாரங்களில் செல்வாக்கு அதிகம் இருந்ததால் அவர் மூலமாகவும் தூண்டில் போட்டேன். தில்லியில் எச் கே எல் பகத், லலித் மேக்கன் முதலானோருடன் எனக்கு ஏற்கனவே அறிமுகம் இருந்தது. அவர்களும் எனது முயற்சிக்குப் பச்சைக்கொடி காட்டினார்கள். பகத் முன்பணமாக ஒரு லட்சம் போல் ஏற்பாடு செய்து இது உனது ஏஜன்சியைப் பயன் படுத்திக் கொள்கிறோம் என்கிற நம்பிக்கை உனக்கு வரவேண்டும் என்பதற்கான உத்தரவாதம் போலத்தான் என்று தைரியமும் அளித்தார்.
ஆரம்பித்தேன். ராஜீவ் காந்தி எப்படிப் பிரசாரத்திற்காகத் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தாரோ அதேபோல் தில்லி மேலிடத்திலிருந்து பணமும் வெள்ளம்போல் பாய்ந்து வந்துகொண்டே யிருந்தது. ஒரு லட்சம் முன்பணம் கிடைத்த தெம்பில் நான் மூன்று லட்சம் வரை கைப்பணத்தைச் செலவிட்டு குறுகிய காலத்தில் எப்படியும் பத்து லட்சமாவது தேற்றிவிடலாம் என மும்முரமாய் வேலை செய்தேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும் கட்சி மேலிடம் தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டு தொண்டர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனர். நானோ, கைப் பணமும் இழந்து, எனது இளம் விளம்பர ஸ்தாபனத்திற்கு நஷ்டக் கணக்கு எழுதினேன். சண்முக சுந்தரம் மட்டும் அவ்வப்போது ஆயிரம், ஐநூறு என்று துண்டு துண்டாகக் கொடுத்து, அவர் வகையிலான செலவில் மட்டும் கால்வாசி கொடுத்துத் தீர்த்தார்! எனது விளம்பர நிறுவனம் விரைவில் சண்முக சுந்தரம் போன்ற ஒரு சில காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக ஒரு தொடக்கம்போல் விளம்பரப் பணியை மூடப்பட்டது. அப்போது, இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பைக் கொண்டுவர அருண் பூரியும் பிரபு சாவ்லாவும் திட்டமிட்டு சென்னைக்கு வந்து தினமணியின் ஆசிரியராக இருந்த ஐராவதம் மஹாதேவனிடம் தக்க நபரின் பெயரைக் கேட்டனர். மஹாதேவன் எனது பெயரைக் கூறினார். அவர்கள் தாஜ் கொரமண்டலுக்கு வருமாறு என்னிடம் வேண்டி நானும் சென்றேன். ஆனால் புதிதாக விளம்பர நிறுவனத்தைத் தொடங்கியிருந்ததால் ஒரு அசைன்மென்ட்போல தமிழ்ப் பதிப்பை என்னிடம் தருமாறு யோசனை சொன்னேன். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. வாய்ப்பு மாலனுக்குப் போனது. அதன்பின் வாஸந்தியை அடைந்தது!
பொன் முட்டைக்காக வாத்தின் வயிற்றையே அறுத்தானாமே ஒரு புத்திசாலி, அவன் தமிழ் நாட்டு காங்கிரசாருக்குச் சரியான முன்னோனாயிருக்க வேண்டும். நான் தொடங்கிய விளம்பர நிறுவனம் குறிப்பாகக் காங்கிரஸ் பிரசார விளம்பரத்தில் இறங்கியதாலேயே கரைசேரவில்லை எனலாம்.
மக்கள் அச்சமயம் காங்கிரசை மீண்டும் அரியணை ஏற்றத் தயாராகவே இருந்தனர் என்பதை மா நிலம் முழுவதும் சுற்றிவந்ததில் தெரியவந்தது. ஆனால் சரியான தொடர் பிரசார விளம்பரமின்றி, மக்கள் நம்பிக்கையினைக் காங்கிரஸ் வேட்பாளர்கள் கை நழுவவிட்டனர்.
பதினேழு முறை பிரதமர் ராஜீவ் வந்து சென்றும் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றிபெற இயலவில்லை; ஏனெனில் இது அண்ணாவின் பூமி, பெரியாரின் பூமி என்றெல்லாம் கருணாநிதி முழங்கத் தமிழகக் காங்கிரசார் வாய்ப்பளித்தனர். இவ்வளவுக்கும், எம் ஜி ஆர் காலமாகி, அவர் தொடங்கிய அ தி மு க பிளவுபட்டதாலும், வாக்குகள் பலவாறு பிரிந்ததாலுந்தான் கருணாநிதியால் மீண்டும் பதவிக்கு வரமுடிந்தது.
எம் ஜி ஆர் கைப்பற்றிய தமிழக ஆட்சிப் பொறுப்பை மீண்டும் கருணாநிதியின் கரங்களில் ஒப்படைத்தவர் ஆர் எம் வீ தான் என்பது அன்றைய அரசியல் நோக்கர்களின் கருத்து. காமராஜர் எப்படி இந்திரா கா ந்தியைப் பிரதமராக முன்னிறுத்தி அதிகாரத்தைத் தம் கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டு ஏமாந்தாரோ அதேபோல் வி என் ஜானகியை முதலமைச்சராக முன்னிறுத்தி அதிகாரம் செலுத்தலாமென ஆர் எம் வீ திட்டமிட்டதாகச் சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல் ஜானகிக்கு ஒரு பிரபையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரை ஒரே இரவில் ஜானகி என் ஜி ஆர் என்று பெயர் மாற்றம் செய்தார், ஆர் எம் வீ!
எம் ஜி ஆர் மறைந்ததும் தமிழக அமைச்சரவையின் நிரந்தர இரண்டாம் இடம் என்று பெயர் எடுத்திருந்த நெடுஞ்செழியன் இப்போதாகிலும் எப்படியேனும் தற்காலிக முதல்வர் என்கிற அந்தஸ்திலிருந்து நிரந்தர முதல்வர் என்கிற பதவி உயர்வு பெறத் துடித்தார். அவர் அப்படியொன்றும் சாமர்த்தியம் உள்ளவர் அல்ல. ஆர் எம் வீ நினைத்திருந்தால் அவரை வைத்தே தமது விருப்பத்தைச் சாதித்துக்கொண்டிருக்கலாம்; கட்சியும் பிளவுபட்டிருக்காது. ஆட்சியும் கை நழுவிப் போயிருக்காது. ஆனால் அடிப்படையில் வெறும் சினிமாக்
காரரேயான ஆர் எம் வீ அரசியல்வாதியான நெடுஞ்செழியனை நம்புவதைவிட த் தம் சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய பழம்பெரும் நடிகை ஜானகியை வைத்துக் காய் நகர்த்துவதே நம்பகம் என நினத்து நந்தவனத்தில் தோண்டியைப் போட்டு உடைத்தார்!
வி என் ஜானகியை, ஜானகி எம் ஜி ஆராக அரங்கேற்றிய ஆர் எம் வீ பற்றிச் சொல்லும்போது இந்திரா காந்தியைப் பிரதமராக்கி காமராஜர் ஏமாந்த கதையை நினைவூட்டியது காரணமாகத்தான். ஏனெனில் இங்கிருந்து சுலபமாகத் தொடக்கத்தில் சொன்ன 1969 கால கட்டத்திற்குப் போய்விடலாம்!
நேரு காலமானதுமே, அவர்விட்டுச் சென்ற நாற்காலியில் அமர்ந்துகொள்ள மொரார்ஜி தேசாய் பொறுமையிழந்து தவிக்கலானார். குஜராத்திக்காரரான மொரார்ஜி அவருக்கு முந்தைய குஜராத்தி அரசியல் தலைவரான காந்திஜியைப் போலவே தம்மிச்சையானவர். மற்றவர் எண்ணங்களுக்குச் செவிசாய்க்காமல் தாம் சொல்வதும் செய்வதும்தாம் சரி என்று பிடிவாதமாக இயங்குபவர். பிரதமர் பதவியில் அவர் அமர்ந்துவிட்டால் நம்மையெல்லாம் டம்மியாக்கி விடுவார் என்று காமராஜரும் அவருடைய சகாக்களான அதுல்ய கோஷ், எஸ் கே பாட்டீல் முதலானோரும் கவலைப்படலானர்கள். மொரார்ஜியோ பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கிவிட்டார். அவரது மாநிலத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துத் தமக்குச் சாதகமாகச் சுற்றறிக்கை தயார்செய்து வெளியிட்டார். தேர்தல் பிரசாரம்போல் பிட் நோட்டீஸ்கள் வேறு!
காமராஜருக்குத் தமிழ் நாட்டில் ராஜாஜி திரும்பவும் காங்கிரசில் சேர்ந்து செல்வாக்குப் பெற்றுவிடாமல் தடுப்பதில் முன் அனுபவம் இருந்ததால் அவரையே சகாக்கள் இப்பொழுது நம்பினர். காந்திஜியிடமிருந்தே கட்சிக்குள்ளேயிருந்து விஷமம் செய்யும் சிறு குழுவினர் க்ளிஷே என்கிற சான்றிதழ் பெற்றவராயிற்றே, காமராஜர்!
மொரார்ஜியின் ஆசையில் மண்ணள்ளிப் போடுவதற்காக தேசத்தின் பிரதமர் பதவி தேசத்திலேயே பெரிய மாநிலமான, பாராளுமன்றத்திற்குக் கூடுதலான உறுப்பினர்களை அனுப்புகின்ற, உத்தரப் பிரதேசத்திற்குப் போவதுதானே முறை என்று சர்ச்சையைக் கிளப்பி, சாதுவான லால்பஹதூர் சாஸ்த்ரியை முன்னிறுத்தினார் காமராஜர்.
சாஸ்த்ரிக்குப் பிறகாவது பிரதமராகலாம் என மொரார்ஜி தம்மைத் தயார்செய்து
கொண்டபோதோ, கூங்கி குடியா வாய் பேசாத பொம்மை போல இருந்த இந்திரா காந்தியைப் பிரதமராக்குவதன் மூலம் தமக்கும் தம் சகாக்களுக்கும் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்று காமராஜர் நம்பினார். ஆனால் அந்த பொம்மை நாற்காலியில் சவுகரியமாக உட்கார்ந்துகொண்டதும் சிறிது சிறிதாகத் தானாகவே வாய் திறந்து பேசத் தொடங்கிவிட்டது! தான் பொம்மலாட்ட பொம்மை அல்ல என்பதை உறுதி செய்வதற்காகத் தான் சார்ந்த பாரம்பரியமிக்க காங்கிரஸ் மகாசபையையே இரண்டாகப் போட்டு உடைத்தும்விட்டது! அது முதல் அரசியல் என்றாலே சுயநலத்திற்காக எதுவும் செய்யலாம்; தேச நலன் என்பதெல்லாம் சம்பிரதாயம்தான் என்கிற ஒழுங்கீனம் பாரத தேசத்தின் அரசியலில் ஓர் ராஜ தந்திரம் என்கிற அந்தஸ்தைப் பெறலாயிற்று.
காங்கிரஸ் மகாசபை ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காங்கிரஸ் என்பதாகவும் பிளவுபடுவதற்கு பிரதமர் என்கிற அதிகாராம் இருக்கும் தைரியத்தில் இந்திரா காந்தி விதையை ஊன்றியது 1969ல், பெங்களூர் மாநகரின் லால்பாக் நந்தவனத்தின் கண்ணாடி மாளிகையில்தான். என்ன பொருத்தம் பாருங்கள், தோண்டியைப் போட்டு உடைக்க ஒரு நந்தவனம், அதிலும் கண்ணாடி மாளிகை! விளைவு கடுமையாக இருக்கும் என்பதை என் வாயால் சொல்ல வேண்டுமா?
குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது கட்சி நிறுத்திய வேட்பாளரையே தோற்கடித்த விசித்திரத் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார், இந்திரா. கட்சியின் கட்டளைக்கு மாறாக அவரவர் மனச்சாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கலாம் எனச் சமிக்ஞை செய்தார். அதாவது கட்சி அரசியல் நடைமுறையில் முற்றிலும் ஒழுங்கீனத்தை சிபாரிசு செய்தார்! பதவி அவர் கரத்தில் இருந்ததால் ஆதரவு அவர்பக்கம் அதிகரித்தது. சரியும் தவறும் இருக்கும் இடத்தைப் பொறுத்தது என்கிற நியாயம் செலாவணிக்கு வந்தது.
அந்தச் சமயத்தில் நான் பெங்களூரில்தான் இருந்தேன். யூனிவர்சல் பிரஸ் சர்வீஸ் என்னும் பாரத மேற்கு ஜெர்மன் செய்திக் கட்டுரைகள் பறிமாற்ற நிறுவனத்தின் கர்நாடக மாநிலப் பிரதிநிதியாக! காங்கிரஸ் மகாசபையின் அப்போதைய தலைவர் கர்நாடகத்து நிஜலிங்கப்பா என்றபோதிலும் ஸ்தாபனத்தின் சூத்திரதாரி காமராஜர்தான் என்பதால் பெங்களூருக்கும் சென்னைக்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தேன். காரணம், சென்னையில் எனது நிறுவனத்தின் நிருபர் எவரையும் காமராஜர் அண்டவிட மாட்டார். என்னை மட்டும் திட்டித் தீர்த்துக்கொண்டே அருகில் நெருங்க அனுமதிப்பார். என் அதிர்ஷ்டம் காமராஜருக்கு நான் அண்ணாவின் ஆள் என்கிற எண்ணம். அண்ணாவுக்கோ, நான் காமராஜரின் ஆதரவாளன் என்கிற சந்தேகம்! அப்போது அண்ணா காலமாகிவிட்டிருந்ததால், வாய்ய்கு வாய் நீ அண்ணாத்துரை ஆளுதானே, வேற எப்பிடிப் பேசுவே என்று என்னைத் திட்டுகிற வழக்கத்தை மட்டும் காமராஜர் நிறுத்தியியிருந்தார்!
பத்திரிகையாளன் என்கிற முறையில் காமராஜருடனான எனது அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானதுதான். இன்றைக்கு இருக்கிற அரசியலைப் பார்க்கிறபோது சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தேச நலன் கருதும் தலைமைப் பண்பு மிக்கவர்தான். ஆனால் விருப்பு வெறுப்பின்றி அவரைப் பற்றி விமரிசிக்க முற்படுவோமேயானால் காமராஜர் ஆட்சியைத் திரும்பக் கொண்டுவருவோம் என்று இன்று லட்சியம்போல் ஒரு கோஷம் அவ்வப்போது மெல்லிய குரலிலாவது எழுவது எந்த அளவுக்குச் சரி என்று யோசிக்க வேண்டியிருக்கும்.
தமிழர்கள் மிகுதியாக உள்ள தேவி குளமும் பீர்மேடும் தமிழ் நாட்டோடு இருப்பதுதான் நல்லது என்று தமிழர் தலைவர்களும் விவரம் அறிந்த வட்டாரத் தலைவர்களும் மன்றாடியபோது, குளமாவது, மேடாவது, எல்லாம் இந்தியாவுக்குள்ளதான் இருக்கு என்று அலட்சியமாகப் பேசி, அப்பிரதேசம் கேரள மாநிலத்திற்கு உரியதாவதைத் தடுக்க மறுத்தவர் காமராஜர். அன்று தமிழக முதல்வரான அவருக்கு பிரதமர் நேருவிடம் நல்ல செல்வாக்கு இருந்தது. தேசிய அளவிலும் பிரசித்திபெற்றிருந்தார். அவர் நினைத்திருந்தால் தேவிகுளம், பீர்மேடு தமிழ் எல்லைக்குள் வந்திருக்கும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை இன்றளவும் தீர்வாகாது நீடித்து நமக்குத் தொல்லை தரும் நிலைமையும் ஏற்பட்டிருக்காது. நம்ம காமராசு தலைமையில காங்கிரஸ் ஆட்சிதானே நடக்குது என்கிற நம்பிக்கையில் காந்திய வழியில் தமிழ் நாடு பெயர் மாற்றத்தோடு மற்றும் சில கோரிக்கைகளுக்காக விருது நகர் சார்ந்த காங்கிரஸ் முதியவர் சங்கரலிங்க நாடார் சாகும்வரை உண்னாவிரதம் இருந்து செத்தே போனதும், பல ஐ ஏ எஸ் அதிகாரிகளும், ஐ பி எஸ் அதிகாரிகளும் அரசியல் நோக்கில் பந்தாடப்பட்டதும் காமராஜர் ஆட்சியின்போதுதான் என்பதும் நினைவுக்கு வருகிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தலையாய தகுதிகளாக பணபலத்தையும் ஜாதியையும் முன்னிறுத்தியவர் காமராஜர்தான். அதேபோல் மாற்றுக் கட்சியின் செல்வாக்கை அழிப்பதற்காக வஞ்சம் தீர்ப்பதுபோல் செயல்பட்டவர் அவர். 1957ல் பதினைந்து தொகுதிகளில் தி மு க வென்றது. 1962 தேர்தலில் அந்தப் பதினைந்து தொகுதிகளிலும்
தி மு க வைக் கருவறுக்க வேண்டும் என்று கறுவிக்கொண்டு செயல்பட்டு அப்பதினைந்து தொகுதிகளிலும் தி முக தோற்கச் செய்தார். கருணாநிதி குளித்தலையிலிருந்து தொகுதி மாறி தஞ்சையில் போட்டியிட்டதால் அவர் தலை மட்டும் தப்பியது. ஆனாலும் என்ன பயன்? காமராஜர் வீம்புடன் திமுக ஜயித்த பதினைந்து தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்போக, ஐம்பது பிற தொகுதிகளில் தி முக வெற்றிபெற்று அவரைத் திகைக்க வைத்தது.
காஞ்சியில் எப்படியும் அண்ணாவைத் தோற்கடித்தாக வேண்டும் என்கிற வேகத்தில் நடேச முதலியார் என்கிற அரசியலுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத பஸ் முதலாளியை நிறுத்திய காமராஜர், வெற்றிபெறுவதற்காக அவர் எல்லா முறைகேடுகளையும் செய்கையில் கண்டும் காணாததுபோல் இருந்தார். விளைவு, 1957 முதல் 1962 மார்ச் மாதம் வரை ஒரு இன்னிசைக் கச்சேரிபோல் ஒலித்து வந்த அண்ணாவின் குரலைத் தமிழக சட்டசபை இழந்தது. அண்ணாவுக்குப் பதிலாக வந்து அமர்ந்த நடேச முதலியார் ஒரு தடவைகூட உருப்படியாக அந்த அவையில் பேசவில்லை! தேவைப்படுகிறபோது சபைக்கு வந்து கை தூக்குவதோடு சரி!
1962 ல் அண்ணாவை வன்மத்துடன் தோற்கடித்தார், காமராஜர். காஞ்சியில் அண்ணாவின் தோல்விக்காகப் பணம் வாரியிறைக்கப்பட்டது. காங்கிரசாரின் பிரசாரம் அமர்க்களமாக நடந்தது. அதேபோல் அண்ணாவின் தோல்வியும் அவர்களால் காஞ்சியில் அட்டகாசமாகக் கொண்டாடப்பட்டது.
1967 தேர்தலில் விருதுநகரில் ஒரு சம்பிரதாயத்திற்காக காமராஜரை எதிர்த்து முன்பின் அறிமுகமில்லாத பெ. சீனிவாசன் என்கிற ஹிந்திப் போராட்ட கால மாணவர் தலைவரை அண்ணா நிறுத்தினார். காமராஜருக்கு எதிராக மிகவும் மிதமான பிரசாரமே அங்கு நடைபெறுமாறும் பார்த்துக்கொண்டார்.
படுத்துக்கொண்டே ஜயிப்போம் என்று சவால் விட்டுத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிய காமராஜர், தமக்குத் தாமே அறம் பாடிக்கொண்டதுபோல் காலை உடைத்துக் கொண்டு நடமாட இயலாமல் தாம் கூறியதற்கு இணங்க படுத்துக்கொண்டார். ஆனால் ஜயிக்கத்தான் இல்லை. விருது நகரில் முழு வேகப் பிரசாரம் ஏதுமின்றி அகில பாரத காங்கிரஸ் தலைவரையே தோற்கடித்தான் அரசியல் அனுபவம் இல்லாத ஓர் இளைஞன், தி மு க வேட்பாளன் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில். எத்தனை பெரிய வெற்றி! ஆனால் அதனைக் கொண்டாட அனுமதியில்லை, அண்ணாவிடமிருந்து!
1962 ல் தமிழக சட்ட சபைக்குள் அண்ணா நுழைவதைத் தடுத்தார், காமராஜர். அதனால் என்ன, அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக தில்லி சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பூபேஷ் குப்தா, ஜன சங்கத்தின் அடல் பிஹாரி வாஜ்பாய், என அகில பாரத அடிப்படையில் அபிமானிகளைப் பெறலானார்.
மரியாதைக்குரிய அண்ணாதுரை அவர்களே, அவையில் நீங்கள் எப்போது பேசப்போகிறீர்கள் என்பதைத் தயவு செய்து முன்னதாகவே சொல்லுங்கள்; ஏனென்றால் உங்கள் பேச்சைக் கேட்கும் வாய்ப்பினை நாங்கள் இழக்க விரும்பவில்லை என விவரம் தெரிந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வேண்டிக்கொள்ளச் செய்தார், அண்ணா. குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், எப்போதும் காலியான இருக்கைகளே அதிகம் காணப்படும் அவை இன்று நிரம்பியிருப்பதிலிருந்தே மரியாதைக்குரிய உறுப்பினர் அண்ணாதுரை பேசவிருக்கிறார் என்பது புரிகிறது என்று சொல்லவைத்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடக்கத்திலும் முடிவிலுமாக சமஸ்கிருத ஸ்லோகம் எதையேனும் அவையில் சொல்லும் வழக்கம் உள்ளவர். அவரும், அவையில் இருந்தோர் அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் விதமாக, யதா ராஜா, ததாப் ப்ரஜா என்று தமது உரையில் சொல்லிக் குறும்பாகப் புன்னகைத்தார், எம் அண்ணா!
அண்ணாவைப் பற்றிய நினைவை வலுக்கட்டாயமாக அகற்றிக்கொண்டு, அண்ணா இல்லாமற்போன 1969க்கு வருகிறேன். அந்த ஆண்டில்தான் பாரம்பரியம் மிக்க காங்கிரசைத் தனது சுய லாபத்திற்காக இரண்டாய்ப் பிளந்தார், இந்திரா. காமராஜரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. காமராஜர் விருதுநகர் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பின் நாகர்கோவில் தொகுதியின் உறுப்பினராக மக்களவையில் இடம்பெற்றிருந்தும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இந்திரா காந்தி அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதுவே காமராஜருக்கு எரிச்சலைத் தந்திருந்தது. அதைத் தொடர்ந்து
இந்திரா காந்தி கட்டுப்பாடு இன்றிக் கட்சியைப் பிளந்ததுவேறு அவரைச் சீற்றத்தின் உச்ச நிலைக்கு ஏற்றிவிட்டிருந்தது.
மக்களவையில் தனக்குப் போதிய எண்ணிக்கை இல்லாததால் மக்கள் ஆதரவைப் பெற வங்கிகள் தேசிய மயம், மன்னர் மானிய ஒழிப்பு எனச் சில கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து, தனது எண்ணிக்கையினைப் பெருக்கிக்கொள்ள 1971ல் இடைக்காலத் தேர்தலுக்கும் ஏற்பாடு செய்தார், இந்திரா காந்தி. தமிழ் நாட்டில் முதல்வராகிவிட்டிருந்த கருணாநிதி மிகவும் புத்திசாலித்தனமாக அதனை ஒட்டியே தமிழ் நாட்டின் சட்ட சபைக்கும் இடைக்காலத் தேர்தல் நடைபெறச் செய்தார். மக்களைவையில் பத்தே பத்து இடங்கள் தமிழ் நாட்டிலிருந்து தமக்குக் கிடைத்தாலே போதுமானது என்று அதற்காக சட்டசபையில் தமது பிரிவு காங்கிரசுக்கு ஒரு இடங்கூடத் தேவையில்லை என்று விட்டுக்கொடுத்து, தி முக வுடன் கூட்டணி வைத்தார், இந்திரா. அதுதான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனது சுயமரியாதையை இழக்கத் தொடங்கியதன் ஆரம்ப கட்டம். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் களத்தில் இருந்ததால் அந்த வீழ்ச்சி அப்போது அவ்வளவாக உணரப்படவில்லை.
இந்திரா காங்கிரசின் ஒழுங்கீன அரசியலை எப்படியும் முறியடிக்க வேண்டும் என்பதற்காக 1971ல் காமராஜர் முன்னின்று ஒரு தேசிய முன்னணியைத் தமிழ் நாட்டில் நிறுவினார். அதன்பொருட்டு அவர் துணை சேர்த்துக் கொண்டது, தமக்கு முற்றிலும் மாறுபட்ட ராஜாஜியின் சுதந்திரக் கட்சியையும், ஹிந்து சமயச் சாயம் பூசப்பட்ட ஜன சங்கத்
தையும்தான்!
சுதந்திரக் கட்சிக்கு அன்று பல தொகுதிகளில் ஆதரவு இருந்தது. ஜன சங்கத்திற்கு மத்திய சென்னை, கோவை மாவட்டத்திலும், சேலம் மாவட்டத்திலும் சில இடங்கள், மதுரை, கும்பகோணம் போன்ற இடங்களிலும் சில பகுதிகள் எனச் செல்வாக்கு இருந்தது. பொதுவாக எல்லாத் தொகுதிகளிலுமே சுதந்திரக் கட்சிக்கு கணிசமாகவும் ஜன சங்கத்திற்கு ஓரளவும் வாக்குகள் இருந்தன. அவற்றை காமராஜர் தமது கட்சிக்குப் பயன்
படுத்திக்கொண்டார். சுதந்திரக் கட்சிக்கு ஒருசில தொகுதிகளைத் தம் விருப்பம்போல ஒதுக்கிய காமராஜர், ஜன சங்கத்திற்கு ஒரு தொகுதியைக்கூடத் தரவில்லை! மத்திய சென்னையில் ராஜஸ்தானியரும், குஜராத்தியரும், தெலுங்கு பேசும் பல பிரிவினரோடு ஆரிய வைசியரும் பெருமளவில் இருந்தமையால் ஜன சங்கத்தின் மோதிலாலுக்கு அங்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. மேலும் ஜன சங்கம் தேர்தலைக் குறிவைத்து முன்னதாகவே அங்கு நன்கு அடித்தளமிட்டிருந்தது. கோவை சேலம் மதுரை கும்பகோணம் முதலான இடங்களிலும் அதற்குப் பாரம்பரியமான வாக்குகள் இருந்தன. எனினும் தோத்துப் போறதுக்குன்னே தொகுதி கேக்கறீங்களா என்று ஜன சங்கப் பிரதி நிதிகளை இளக்காரம் செய்து ஒரு தொகுதியைக் கூட ஜன சங்கத்திற்குத் தர மறுத்துவிட்டார், காமராஜர். கட்டுப்பாடு மிக்க ஜன சங்கம் அந்த அவமதிப்பைச் சகித்துக் கொண்டு, தேசியக் கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட்டது. ஆனால் ஜன் ரஞ்சகத் திட்டங்களின் பயனாய் எழுந்த இந்திரா அலையில் தேசியக் கூட்டணி தோல்வியடைந்து, மக்களவையில் இந்திரா காங்கிரசுக்கும், தமிழக சட்டசபையில் தி மு க வுக்கும் மிக அதிக அளவில் இடங்கள் கிடைத்தன.
இப்படி தேச நலனைக் கருதி இந்திரா காங்கிரசின் தோல்விக்காகத் தமக்கு முற்றிலும் ஒத்துவராத சுதந்தரக் கட்சி, ஜன சங்கம் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர முனைந்த காமராஜர்தான், 1972ல் அதே இந்திரா காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தார், புதுவை மாநில சட்டசபைத் தேர்தலிலும், கோவை மக்களவைக்கான இடைத் தேர்தலிலும் அன்ணா
தி மு க வலது கம்யூனிஸ்ட் கூட்டையும், தி முக வையும் எதிர்ப்பதற்காக!
தமிழ் நாட்டின் நிலவரம் தனிதன்மை வாய்ந்தது; இங்கு தேசிய சக்திக்குப் பற்றுகோல் வேண்டுமாதலால் இந்திரா காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாக வேண்டும், என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!
காமராஜர் இவ்வாறு தமது சொந்த உணர்வுகளையும் சுய கவுரவத்தையும் பாராட்டாமல் தமிழக நலன் கருதித் தாம் ஜன்ம விரோதிபோல் பாவித்த இந்திரா காங்கிரசுடன் இணக்கமாகச் சென்றார். ஆனால் அன்று வீசிய எம் ஜி ஆர் அலை, காமராஜர் தமது கவுரவத்தை விட்டுக் கொடுத்துக் கீழே இறங்கி வந்தும் தோல்வியையே அவருக்குத் தந்தது.
இந்த நிகழ்ச்சிகளை இன்றைய நிலவரத்தோடு இணைத்துப் பார்க்கிறேன். இன்று காமராஜர் இருந்தால் என்ன செய்வார்? ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என அவர் வர்ணித்த இரு திராவிடக் கட்சிகளும் தமிழ் நாட்டில் காலூன்றி நிற்பதை எப்பாடு பட்டேனும் தளர்வடையச் செய்து தேசிய உணர்வுள்ள சக்திகள் எவையாயினும் அவற்றையெல்லாம் ஒன்று திரளச் செய்வதுதான் அவரது முயற்சியாக இருக்கக்கூடும்.
இன்று கமராஜர் இல்லை. அவரது கட்சியும் இல்லை. அவர் தலை மீது ஆணையிட்டு அவர் பின் நின்றவரெல்லாம்அவர் மனமுடைந்து காலமாவதற்கென்றே காத்திருந்தவர்போல் அவரது உடல் எரியூட்டப்பட்ட சூடு ஆறுவதற்கு முன்பே இந்திரா காங்கிரசில் சங்கமித்துவிட்டனர், காமராஜர் இந்திரா பிறப்பித்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்ப்பவராக இருந்த நிலையில்தான் இறந்தார் என்பதையும் பொருட்படுத்தாமல். இன்று அவரெல்லாம் சோனியா காங்கிரசாராகத் தி மு க வின் நிழலில் நிற்போராயினர். எனவே அவரை நம்பிப் பயனில்லை. காங்கிரசையடுத்து இரண்டாவது பரவலான தேசிய சக்தியாக இருக்கத் தகுதி வாய்ந்த பாரதிய ஜனதா கட்சிதான் இதற்கு முன் முயற்சி எடுக்க வேண்டும். இதன்பொருட்டு முதலில் அது தனது வலிமையைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுவது அவசியம். தமிழ் நாட்டில் பல தேசிய சக்திகள் சிதறிக் கிடக்கின்றன. சுபாஷ் போஸ் நிறுவிய பாரவர்டு ப்ளாக்கின் பிரிவுகள், அம்பேத்கர் தொடங்கிய குடியரசுக் கட்சியின் பிரிவுகள், சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சி எனப் பல உள்ளன. பார்வர்டு ப்ளாக்கை இடது சாரி மயக்கத்திலிருந்து மீட்க வேண்டும். குடியரசுக் கட்சிகளுக்கு அம்பேத்கரின் தேசியத்திற்கு முன்னுரிமை தரும் இயல்பை உணர்த்த வேண்டும்.
நல்லதோர் அறிகுறியாக இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பு இல கணேசன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கணேசனுக்கும் அறுபது வயது கடந்துவிட்டது எனினும் இளமைத் துடிப்பு குன்றவில்லை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி நட்பை வேரூன்றச் செய்யும் பண்பும் அவரிடம் உள்ளது. மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் வீடு தேடிச் சென்று பழகும் சாமானியத் தன்மை உள்ளது. தம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தோர் யாராயிருப்பினும் அவர்களிடம் மிகுந்த மரியாதை
யுடன் நடந்துகொள்ளும் இயல்பும் உள்ளது. அவர் சிரத்தையுடன் முயற்சி செய்தால் தமிழ் நாட்டில் உள்ள தேசிய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி அணிவகுத்து தமிழகத்தை பிரதிபலன் கருதாது ஒருங்கிணைந்த தேசிய சக்தியின் நிலைக்களனாகக் காலப்போக்கில் திருத்தியமைக்க முடியும். இதனைக் கண்ணுறும் மனசாட்சியுள்ள சில இந்திரா காங்கிரசாரும் சுய நலன் கருதாதும் சுய கவுரவம் பாராட்டாமலும் இந்த தேசிய அணியில் சேர முன் வரக்கூடும்.
இந்தக் கட்டுரையினை திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை என்ற எனது முந்தைய கட்டுரையுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
(1962 மே மாதம் இரண்டாம் வாரம் குடியரசு துணைத் தலைவரும் மா நிலங்களவைத் தலைவருமான டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இதற்குள் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்று இருமுறை உரை நிகழ்த்திவிட்டிருந்தார். அண்ணாவின் யதா ராஜா ததா ப்ரஜா குறும்புப் பேச்சு, அவரது முத லுரையிலேயோ மா நிலங்களவைத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கான பிரிவுபசார உரையிலோ இடம்பெற்று அனைவரையும் மகிழ்வித்தது).