ஜவ்வாது மலை - கடத்தல்
மலைவாழ் மக்களை கடத்தலுக்கு பயன்படுத்தும் பயங்கரம் !...
அதிக கூலிக்கு ஆசைப்பட்டு சிறையில் வாடும் பரிதாபம் !...
கடத்தலை காரணம் காட்டி பணம் பறிக்கும் போலீஸ் !...
========
காடுகள் உயிரினங்களை
பேணிக்காக்கின்றன. ஆனால், சில சமூக விரோதிகள் இந்த காடுகளை அழித்துக்கொண்டு வருவதால்,
காலங்காலமாக, காடுகளையும் மலைகளையும் நம்பி வாழும் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை
இழந்து தவிக்கிறார்கள். காடுகளை காப்பாற்ற வேண்டிய வன இலாகா அதிகாரிகளோ அங்ள்ள மர வளங்களை
திருடும் கொள்ளையர்களுக்கு துணை போகும் சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
காடுகளில் வளரும் சந்தனமரங்களையும்,
செம்மரங்கலையும் வெட்டி கடத்தும் கொள்ளை கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக காடுகளை அழித்துக்கொண்டு
வருகிறார்கள். இதை தடுக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் அதை செய்யாமல் அங்கு வாழும்
அப்பாவி மலைவாழ் மக்களின் பொருட்களையும், கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த பணத்தையும் அநியாயமாக
சூரையாடும் சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்டதில் இருந்து சுமார் 70 கி.மி. தொலைவில்
உள்ளதுதான், ஜவ்வாது மலை. சந்தன மரங்கள் நிரைந்த
இம்மலைப் பகுதியை ஜமுனா மத்தூர் என்றும் அழைக்கிறார்கள். போளூரில் இருந்து சுமார்
43 கி.மி. தூரத்தில் உள்ள இந்த மலை பாதைகள் அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டவை.
ஜவ்வாது மலை கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரம் கொண்டது.
இந்த மலையை சுற்றியுள்ள நம்பியம்பட்டு, முட்நாட்டூர், வள்ளியூர்,
தாசிர்புதூர், கோவிலாண்டூர், மேல்பட்டு, பரமனந்தல், பட்டறைக்காடு என்ற கிராமங்களில்
வாழும் மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் சாமை, கம்பு, பலா, சீத்தாபழம், தேன் எடுத்தல்
போன்றவையாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்சாரம், போக்குவரத்து போன்ற
எந்தவித வசதிகள் இல்லாமல்தான் இந்த மலை வாழ் மக்கள் வாழ்ந்துவந்தனர்.
ஆனால், தற்போது இவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. மலையில்
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து சந்தோஷமாக வாழ்ந்த வந்த இவர்களை, ஜவ்வாது மலையை
கூறுபோட நினைத்த சில சமூக விரோதிகள் பண ஆசை காட்டி தங்கள் வசம் ஈர்த்தனர்.
இப்படி ஜவ்வாது மலையில் மரங்களை திருட்டுத்தனமாக வெட்ட வந்த
ஆந்திராவை சேர்ந்த சிலர், மலைவாழ் மக்களை மரம் வெட்டுவதற்காக அழைத்து சென்று சிக்கலில்
மாட்டிவிட்ட சம்பவங்களை பற்றி பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் சேஷாச்சல மலைத் தொடர் சுமார் இரண்டரை லட்சம்
ஹெக்டர் பரப்பளவு கொண்டது. மிகவும் அடர்ந்து இந்த வனப் பகுதியில்தான் உலகின் பணக்கார
கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்த மலைத் தொடரில் சந்தன மரத்துக்கு
அடுத்தபடியாக மதிக்கப்படுவது அங்கு ஏராளமாக வளர்ந்துள்ள செம்மரங்கள்தான்.
திருப்பதி வனச்சரகத்துக்கு உட்பட்ட சுமார் 85 ஆயிரம் ஹெக்டரில்
உள்ள வனத்தில் பகுதி இந்த செம்மரங்கள் மரங்கள் நிறைந்துள்ளன. இங்கு சிறுத்தை, புலி,
யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளும் உள்ளன. சிவப்பு சந்தன மரங்களைத்
தவிர அரியவகை மூலிகைச் செடிகளும் இங்கு உள்ளன.
இந்த சேஷாச்சல மலைத் தொடரில் உள்ள ஏராளமான செம்மரங்களை வெட்டி
கடத்தும் பணியில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது. செம்மரங்களை வெட்டி சென்னை
மற்றும் மும்பை வழியாக சீனா, மலேசியா, தைவான் போன்ற ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் கடத்தப்படுகினறன.
ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் டன் செம்மரங்கள் இந்த நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த செம்மரக் கடத்தலை தடுக்க வனத் துறையினர் ஒரு பக்கம் தீவிரமாக
செயல்பட்டாலும், கடத்தல் கும்பல் தங்கள் தொழிலை தங்கு தடையின்றி ஜோராக நடத்தி வருவதுதான்
அதிர்ச்சியான் தகவல். ஏனென்றால், இந்த கடத்தல் தொழிலுக்கு ஆந்திர அரசியல் புள்ளிகள்,
பிரபல ரவுடிகள் துணையாக இருப்பதுதான்.
அடர்ந்த வனப் பகுதியில் மரங்களை வெட்டி கடத்தும் பணியில் தமிழகத்தில்
இருந்து மலைவாழ் கிராம இளைஞர்களுக்கு பணத்தாசை காட்டி அழைத்துச் செல்கிறார்கள். ஏனென்றால்,
இந்த மக்கள் தான் எவ்வளவு பெரிய காட்டிலும் மரத்தை ஈஸியாக வெட்டுவார்கள் என்பது கடத்தல்
கும்பலுக்கு நன்றாக தெரியும்.
இப்படி கோடிக்கணக்கில் மதிப்பு வாய்ந்த மரங்களை வெட்டி கடத்தி
செல்லும் கும்பலை வளைத்துப் பிடிக்க ஆந்திர வனத்துறையினரும் காவல் துறையினரும் சேர்ந்து
கூட்டு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கி உள்ளனர். இவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன்
ரோந்து செல்வதும், வாகன தணிக்கையில் ஈடுபடுவதுமாகவும் உள்ளனர்.
மேலும், தமிழக ஆந்திர எல்லையில் பல செக்போஸ்ட்கள் அமைத்து சோதனை
நடத்தியதில், கடந்த 7 மாதங்களில் மட்டும், கடத்தல் கும்பல் பயன்படுத்திய 125 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டதோடு, சுமார் 150 டன் செம்மரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், மரங்களை வெட்டும் 600 பேரை வனத்துறையினர் கைது செய்து
விசாரணை நடத்தியபோது அதில் 80 சதவீதம் பேர் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித்
தகவல் வெளியானது.
நாகரீகம் வளர்ந்த இன்றைய காலத்தில் பரம்பரை தொழிக்ளை மறந்த
ஜவ்வாது மலைக் கிராம இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்தனர். இதை
தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டது கடத்தல் கும்பல். மலை கிராம இளைஞர்களை வனப்
பகுதியில் பிறந்த வளர்ந்த வந்தவர்கள் என்பதால், அவர்கள் காட்டில் சுலபமாக சென்று மரங்களை
லாவகமாக வெட்டவும், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவும்
ஆற்றல் பெற்றவர்கள் என்பதை கடத்தல்காரர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர்.
செம்மரங்களை வெட்டும் சாமர்த்தியசாலிகளுக்கு 2 நாட்களுக்கு ரூ.15
ஆயிரம் கூலி வழங்குவதாக ஆசை காட்டி அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்கின்றனர் கடத்தல்காரர்கள்.
மரங்களை வெட்டிவிட்டு உஷாராக ஊர் திரும்பினால் தான் அவர்களுக்கு
பாதுகாப்பு, ஒருவேளை வனத்துறையினரிடம் சிக்கினால் மொழி தெரியாத மாநிலத்தில் கம்பிதான்
எண்ண வேண்டும்.
இவர்கள் மட்டும் இல்லாமல் வேலூரில் இருந்து வாடகைக்கு கார் ஓட்டிய
பல டிரைவர்களும் வனத்துறை சட்டத்தில் கைதாகியுள்ளனர். சமீபத்தில் கணியம்பாடியில் இருந்து
29ம் பேர் கொண்ட கும்பல் செம்மரம் வெட்ட திருப்பதிக்கு காரில் புறப்பட்டனர். அப்போது,
இந்த தகவலை தெரிந்து கொண்ட மற்ற டிராவல்ஸ் உரிமையாளர்கள் மரம் வெட்டும் கும்பலை விரட்டிச்
சென்று மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணத்துக்கு ஆசைப்பட்டு ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் ஜவ்வாது
மலைக்கிராம இளைஞர்கள் வனத்துறையினரிடம் சிக்குகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்சம்
ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கபடுகிறது. மொழி தெரியாத ஊரில் சிறையில்
அடைக்கப்படுவதால் உறவினர்களை விட்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஆந்திரவிலுள்ள பல்வேறு பொய் வழக்குகளை
காட்டி வன துறையினரும், போலீசாரும் ஜவ்வாது மலைவாழ் மக்களை சிறையில் அடைப்பதாக மிரட்டி
பணம் அவர்களிடம் பறிக்கும் போக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மலையை விட்டு கீழே சென்றாலே
தமிழக போலீசாரின் தொல்லை எல்லையில்லாமல் போகிறது என மலைவாழ் மக்கள் குமுறுகிறார்கள்.
மலை வாழ் மக்களின் சார்பாக போலீசாரிடம் சென்று நியாயம் கேட்பவர்களை,
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அதட்டல் தோரணையோடு போலீசார் மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால், மலையை விட்டு நகரத்தின் பக்கம் வருவதற்கே அங்குள்ள மக்கள் அஞ்சுகின்றனர். கடத்துபவர்களை
விட்டு விட்டு அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி
எழுப்புகின்றனர்.
இப்படிதான் டிராக்டர் வாங்க எடுத்துச் சென்ற ரூபாய் இரண்டரை
லட்சம் பணத்தை வனத்துறை அதிகாரிகள் அநியாயமாக பறித்துக் கொண்டு, மரம் கடத்திய பணம்
என்று பொய் வழக்கு போட்டு உடுத்திருந்த துணிகளை உருவி லாக்கப்பில் நிர்வாணமாக நிறுத்தி
கொடுமைப் படுத்துவதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறையினரின் இந்த அடாவடி போக்கை கண்டிக்காத சில அரசியல்வாதிகள்
போலீசாருக்கே துணைப்போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இனியாவது, அப்பாவி மக்கள் இந்த மரக்கடத்தல் கும்பலிடம் சிக்கி
சீரழியாமல் இருக்க ஆந்திரா மற்றும் தமிழக அதிகாரிகள் கூட்டாக மலைக் கிராம மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். விலை உயர்ந்த செம்மரங்களை வெட்டப்படுவதை
தடுக்க ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் கடத்தல் கும்பலை
கட்டுப்படுத்த முடியும்.
அதோடு, ஜவ்வாது மலைக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சரியான
வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்களும் சரியான பாதையில் தங்கள் வாழ்க்கையை
நடத்துவார்கள் என்பது நிச்சயம்.
பொதுவாக மலைவாழ் மக்கள்
இயற்கையை நம்பி வாழ்வதாலும், போலீஸ் மற்றும் சட்ட திட்டங்களுக்கு பயப்படுவதாலும், போலீசார்
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். பல்வேறு கடத்தல் சம்பவங்களை காரணம்
காட்டி அப்பாவி மக்களிடம் பணத்திற்காக டார்ச்சர் செய்வதும், மலைவாழ் பெண்களிடம் பாலியல்
அத்துமீறல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த அத்துமீறல்களை தடுக்க பல சமூக
அமைப்புகள் விழிப்புடன் இருந்து அம்மக்களை காக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்.
-------------------
ஜவ்வாதுமலை மக்களின் கலாச்சாரத்தையும் ,அவர்கள்படுகின்ற இன்னல்களையும் ,இனிவரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எளிய தமிழில் எடுத்தியம்பிட்ட திரு.கோ செயக்குமார் அவர்களுக்கு என் ஆழ் மனதின் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு