சனி, 1 ஆகஸ்ட், 2015

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலையில் சமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலைப்பகுதியில் சமணர் படுக்கைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்தார்கள். இதுகுறித்து மேலும் விசாரித்தப்போது பல புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. வந்தவாசி-செய்யாறு சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் மலையில் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டோம். இதில் அம்மலையில் சமணர் படுக்கைகள் இருப்பது தெரியவந்தது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgRduvAqu5zH7ey0dvAEPLFGWZOtSBGnwg3ZXx3ype51Tl5Y7BQ9loQch_IQxVoMVp6L1PhNIWqNNrZzcCQB9Sr3X-VLL_IN6UZSdRPMvwC0ClMbq3k2E834RXFvVLqVvtI6_yj4vSY_A/s1600/vandavasi1.jpg
இந்த மலையில் உள்ள சமணப்படுக்கைகள்  சுமார் 2000 ஆண்டுகளுக்கும் தொன்மையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மலையில் பெருங்கற்காலத்திற்குரிய கல்வட்டங்களும், கற்காலக் கருவிகள் செய்யப்பட்டதற்கான மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைக் கொண்டு மலையின் கிழக்குப் பகுதியை ஆய்வுசெய்தபோது அங்கு படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV820BRbwZ6TFTJ-h2r4ILkH8GaO_n6bvLwKZub_BLHSGMDw-G_aTMuat5rZ4f9kaDhsuykpeNTdNizo_7eIm_jV-M_5vNeXAc9uv2HMlNtrDKUqEanM8uxVBeldPBRstYrZWT_jgQrbg/s1600/krish.jpg
சாய்வான அமைப்பை கொண்டுள்ள சமணப் படுக்கைகள் கிழக்கு நோக்கி உள்ளன. இந்த படுக்கை தளத்தின் அகலம் 170 செ.மீ., நீளம் 150 செ.மீ. ஆக உள்ளது. இதை பார்க்கும்போது 4 முதல் 5 துறவிகள் உறைவிடமாக கொண்டிருக்கலாம் என தெரிகிறது.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv9SyYjJCYeLcNltVaWpfPooERj5HGN1ziHarO9qTPpUlPXDR8cBWvlojCxHNYkjCFBA9nFWNTd1-_M4jexF6QAOlBFlkHUz_BtKjzY0KaES_MkCW6AvQDku4ZhEHX07OgDLmzdVSxRPA/s300/images6.jpeg
இந்த பாறையில் தரைப்பகுதியை துறவிகள் இயற்கையாகவே பயன்படுத்தி உள்ளனர். இந்த பயன்பாட்டினால் பாறையின் தரைப்பகுதி நன்றாக தேயந்திருப்பதை பார்க்கும்போது துறவிகள் பல நூற்றாண்டுகள் இதை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.
 
கீழ்த்தளப் பாறையின் நடுப்பகுதியில் 33 செ.மீ. நீளமும், 21 செ.மீ.அகலமும் கொண்ட ஒரு செவ்வக் குழி காணப்படுகிறது. இதற்கு தெற்காக இப்போது விளையாடும் ஆடுபுலி ஆட்ட கட்டம் காணப்படுகிறது. இதுபோன்ற கட்டங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் இதர பகுதிகளில் உள்ள படுக்கைகள் போலவும் காணப்படுகிறது.
 
இம்மலையில் காணப்படும் பாறைகளின் மேல் பல இடங்களில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுப் பாறை மீது மழை, காற்று, வெயில் படுவதால் சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. கல்வெட்டின் மீது ஊரார்கள் தங்கள் பெயரையும் செதுக்கி வைத்துள்ளதால் கல்வெட்டின் தகவலை முழுமையாக அறிய முடியவில்லை.
 
சில கல்வெட்டுகளை ஆய்வுசெய்தபோது தமிழ் (பிராமி) வடிவ எழுத்துகளையும், வட்டெழுத்துகளையும் உடையதாக உள்ளன. இக்குன்றை சார்ந்த பிற பகுதிகளில் தாழ்வான குகைத்தளங்கள் காணப்படுகிறது. படுக்கை குன்றுக்கு தெற்கில் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த ஏரிப்பகுதியில் முதுமக்கள் தாழி புதைக்கப்பட்டுள்ளன.
 
இந்த தாழிகள் மழை, வெள்ளத்தால் சிதைவு ஏற்பட்டு உடைந்து காணப்படுகின்றன. எனவே இந்த ஏரிப்பகுதியில் துறவிகள் இறந்தபிறகு இதுபோன்ற தாழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வு மேற்கொண்டால் தமிழர் பண்பாட்டுக்குரிய அரிய செய்திகள் வெளிப்படும் என்பதில் அய்யமில்லை.

வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீதவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது. இம்மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரர் கோயில் உள்ளது. மேலும் விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் உள்ளன.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzpIynrGR_fRCh6DcGYRjdpRaP_AUtgfQrO2KEpW3VWjhF0DCKbor0LKwulhp_7DtFj6oyf_txTNTL5dN5vqCeSrI1PxsY5ueZKrQXUyqOe-RyJeUVmO7V-XDbc_u840Sherpa0x8xmP0T/s1600/1.bmp
இந்தக் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலை மீது ஏறிச்சென்று இறைவனை வழிபடுகின்றனர். பின்னர் மாலை 6 மணிக்கு ஸ்ரீதவளகிரீஸ்வரர், ஸ்ரீவிநயாகர் ஆலயங்களில் தனித்தனி கொப்பரைகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.