கல்திட்டை அல்லது கல்பதுக்கை – முனைவர் கோ.ஜெயக்குமார்
வரலாற்றுக்
காலத்திற்கு
முற்பட்ட காலத்தை தொல்பழங்காலம்
எனத் தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர்.
ஆனால் தொல்குடிச் சமூக
வரலாற்றில் எழுத்துச் சான்றுகள்
தோன்றிய காலத்திற்கு முற்பட்ட
காலம் என்று குறிப்பிடுகின்றனர். இதனை வரலாற்றுக்கு
முந்திய காலம் என்றும் கூறலாம்.
தொல்பழங்காலம் என்றும் மண்ணியல்
காலம் (Gelogical
Age) என்றும் அழைப்பர். இதில் பெரும்
பனிப்படர்வு காலமும், கற்காலமும் அடங்கும்.
தொல்லியலாளர் தொல் பழங்காலத்தில் கிடைக்கின்ற
கற்கருவிகளின் தொழில் நுட்பங்களை
அடிப்படையாக கொண்டு நான்கு
பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
அவை
1. பழைய கற்காலம்(Paleolithic period), 2.
நுண்கற்காலம(Microlithic Period), 3.புதிய கற்காலம்(Neolithic Period), 4. பெருங்கற்காலம்(Megalithic Period) என்று
அழைக்கின்றனர்.
1.பழைய கற்காலம் (Paleolithic period)
தொல்பழங்குடிகள் காடுகளில்
இயற்கைச்சூழலோடு தங்களின் வாழ்வியலை
அமைத்துக்கொண்டனர். அவர்களின் உணவுத்
தேவைக்காக காட்டில் இருக்கும்
விலங்குகளை வேட்டையாடினர். உணவுக்கானத் முக்கியத்தொழிலாக வேட்டைத்தொழிலை முதன்மையாகக் கொண்டனர்.
வேட்டையாடுவதற்கான கருவிகளைப் அவர்களின்
வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப
பயன்படுத்தினர். அதனைப் பழையக்
கற்காலக் கருவிகள் என
அழைக்கின்றோம். பழையக் கற்கால
மக்கள் பயன்படுத்திய கருவிகள்
தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலம்
கர்ணூல் மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றின் தந்தையாக
கருதப்படும் இராபர்ட் புரூஸ்ட்புட்
என்ற புவியியல் ஆய்வாளர்
தமிழகத்தில் கொற்றலை ஆற்றங்கரையின்
பகுதியில் பழைய கற்காலக் கருவிகளைக்
கண்டுபிடித்துள்ளார்.
1882–இல் தருமபுரி
மாவட்டத்தில் செய்த ஆய்வின் போது
கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனப்பள்ளி
மலை அடிவாரத்தில் பழையகற்காலக்
கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கைக்கோடாரிகள்,
சுரண்டிகள், கிழிப்பான்கள், முட்டை வடிவில்
உள்ள (ஓவேட்) கருவிகள் கிடைத்துள்ளன.
இயற்கையாக அமைந்த மலைகளும்
நீர்ச்சுனைகளும் பழைய கற்கால
மக்களின் வாழ்விடங்களுக்கு ஏற்றதாக
அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி பகுதியில்
சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு
முன் கற்கால மக்கள்
வாழ்ந்துள்ளனர் என்பது இக்கருவிகளின்
மூலம் நம்மால் அறியமுடிகின்றன. வரட்டனப்பள்ளி மலை அடிவாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளின்
காலம் கி.மு.5,00,000 இருந்து
50,000 எனத் தொல்லியல் துறையினரால்
கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள்
கூர்மையாகவும் கரடு முரடாகவும் உள்ளன.
இவற்றினை விலங்குகளின் உடல்களைக்
குத்திக் கிழிப்பதற்காகக் பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மல்லச்சந்திரம், சென்னச்சந்திரம், மயிலாடும்பாறை குருவிநாயினப்பள்ளி, கங்கலேரி
ஆகியப் பகுதிகளில்
கற்கால கருவிகள் காணப்படுகின்றன.
மல்லச்சந்திரத்திலிருந்து இரண்டு கல்
தொலைவு குறுகலான காட்டுப்பாதையைக் கடந்து சென்றால் மலை
உச்சியில் மல்லச்சந்திர ஈமச்சின்னங்கள் உள்ளன. இதற்குப் பல
பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக
மோரலுப்பாறை
என்றும் பாண்டவர் வீடு (மாண்டவர்
வீடு என்பது மருவி
பாண்டவர் வீடு என வந்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்
தி.
சுப்பிரமணியம் கூறுகிறார்) மோரல் என்ற
சொல் அப்பகுதியில் சுனை
என்ற பொருளில் வழங்கப்படுகிறது.
மலையின் மேற்பகுதியில் சுனை
ஒன்று உள்ளது. அதில் எப்பொழுதும்
நீர் வற்றாது என்றும்
கூறப்படுகிறது. சுனை இருக்கும் மலை
என்ற பொருளில் மோரல்
பாறை என்று பெயர் வந்திருக்கலாம்.
பாறை என்றால் இப்பகுதியில்
சிறு குன்றைக் குறிப்பதாக
உள்ளது.
2. நுண்கற்காலம்
(Microlithic Period):
இடைக்கற்கால மக்களின்
வளர்ச்சியடைந்த நிலையே கடைக்கற்காலம்
(Cate
stone Age) என்று பெயரிட்டுள்ளனர். கல்லாயுதங்களைச் செய்யும்
தொழில் நுட்பத்தில் கடைக்கற்கால
மக்கள் புதிய தொழில் நுட்பத்தைக்
கையாண்டனர். கடைக்கற்காலத்தைச் சார்ந்த
மக்களின் கல்லாயுதங்கள் பர்கூர்,
கப்பல்வாடி மலையடிவாரங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக்கால மக்கள் சுமார்
10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள்
என அறியப்படுகிறது. இதைத் தொடர்ந்து
நுண்கற்காலம்( Microlithic Period) என்று அழைக்கப்படுகின்ற சிறிய கல்லாயுதங்களைப் பயன்படுத்திய
மக்கள் வாழ்ந்துள்ளனர். இக்கால மக்கள்
பயன்படுத்திய கல்லாயுதங்கள் மயிலாடும்பாறை,
பையம்பள்ளி, தொகரப்பள்ளி போன்ற
இடங்களில் கிடைக்கின்றன. இவர்கள் குகைகளிலும்,
குகை போன்ற பாறைகளின் அடிவாரங்களிலும் வாழ்ந்துள்ளனர். காட்டு விலங்குகளின்
ஊன்,
கிழங்கு, காய் மற்றும் கனிவகைகள் இவர்களுடைய
உணவாக இருந்துள்ளன. இவர்கள் தங்களுடைய
உணவைத்தேடி விலங்குகளுடன் விலங்குகளாக
காடுகளிலும் மலைகளிலும் அலைந்து
திரிந்தனர். கல்லாயுதங்களைத் தவிர
மற்ற உலோகங்களின் பலன்
தெரியாத காலமாக இருந்ததால்
இக்காலம் நுண் கற்காலம் என்று
அழைக்கப்படுகிறது.
3. புதியகற்காலம் (Neolithic Period)
புதிய கற்காலம்
மக்களின் வளர்ச்சி நிலை
எனலாம். காடுகளில் விலங்குகளைப் போன்று
திரிந்த மக்கள் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் தங்கி
வாழ்ந்தனர். கால்நடைகளான ஆடு மற்றும்
மாடுகளை வளர்த்தனர். வேட்டையையே தொழிலாகக்
கொண்ட நிலையிலிருந்து முன்னேறி
வேளாண்மை செய்யவும் முற்பட்டனர்.
புதியகற்கால மக்கள் பயன்படுத்திய
கருவிகள் தொழில்நுட்பத்துடன் காணப்படுகின்றது.
வழவழப்பாகவும் கூர்மையானதாகவும் உள்ளது.
விலங்குகளைக் கொல்வதற்குக் கூர்மையானதாகவும் கருவியைக் கையில் பிடிப்பதற்குக் வசதியாக வழவழப்பானதாகவும் அமைத்துக்கொண்டனர்.
இக்கருவிகளைத் தொல்லியல் ஆய்வாளர்கள்
கைக்கோடாரிகள் (செல்ட்) என்று கூறுகின்றனர்.
முல்லை நிலப் பகுதியில் புதிய
கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான
தடயங்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி வட்டத்திற்கு
உட்பட்ட தொகரப்பள்ளி, கப்பல்வாடி, கொல்லப்பள்ளி, பருகூர் ஆகிய
இடங்களில் கற்கால மக்கள்
வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
புதிய கற்காலக்
கருவிகள் தயாரிக்கும் தொழில்பட்டறைகள் இருந்துள்ளது. இன்றும் இவற்றின்
எச்சங்களைக் காணமுடிகின்றது. கைக்கோடாரி, கல்சுத்தி போன்ற
கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கற்கருவிகளில் கைக்கோடாரி
நன்கு தேய்க்கப்பட்டு ஒரு
முனைக் கூம்பு வடிவிலும்
மறு முனை உளி போன்ற
அமைப்பிலும் காணப்படுகின்றது. இந்தக் கைக்கோடாரிகளை
மரப்பட்டைகளை உரிக்கவும் விலங்குகளின்
தோலைக் கிழிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
மட்பாண்டங்கள் செய்யவும் இவர்கள்
அறிந்திருந்தனர். மட்பாண்டங்களின் ஓடுகள்
இப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிற இடங்களில்
மேற்கொண்ட அகழாய்வுகளைக் கொண்டு
புதிய கற்கால மக்கள்
சிறுசிறு வீடுகள் கட்டி
வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய
முடிகின்றது. புதிய கற்கால மக்கள்
தமிழகத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு
முன்னர் வாழ்ந்துள்ளனர்.
4.பெருங்கற்காலம் (Megalithic Period)
பெருங்கல் காலம்
என்பது மக்கள் பெருங்கல்
ஈமச் சின்னங்களைப் பயன்படுத்திய
காலத்தைக் குறிக்கும். ஐரோப்பாவில் பெருங்கல்
காலம் கி.மு.3200 இல் தொடங்கி
கி.மு.1500
வரை நீடித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
இறந்தோரைப் புதைத்த இடத்தில்
அல்லது அவர்களது எலும்புகளைப்
புதைத்த இடத்தில் சுற்றிலும்
பெரிய கற்களைக் கொண்டு
சூழப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட ஈமச்சின்னங்களைப் பெருங்கல் சின்னங்கள் என்று
குறிப்பிடுகிறோம். கிரேக்க மொழியில்
மெகாஸ் என்றால் பெரிய
என்று பொருள். லித்தோஸ் என்றால்
கல் என்று பொருள்படும். ஆகவே இச்சொற்களை
இணைத்து மெகாலிதிக் (Megalithic) என்ற
சொல் உருவாயிற்று. இக்கால ஈமக்குழிகள்
பலவித வடிவங்களில் பல்வேறு
பெயர்களுடன் காணப்படுகின்றன.
பெரும்பாலான
பகுதிகளில் மலையின் மேற்பகுதியில் உள்ள கல்திட்டை
வகையைச் சார்ந்தவைகள் பெரும்பாலும்
அழிக்கப்பட்டு வெறும் கற்
குவியல்களாகக் காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக மல்லச்சந்திரத்தில் உள்ளது
போன்று சித்தூர் வட்டம்
இருளபண்டாவில் கல்திட்டையைச் சுற்றி
15,16 அடி உயரத்தில் அரை
வட்டப் பலகைக் கற்கள்
நாற்புறமும் நடப்பட்டுள்ளன. இருளப் பண்டாவில்
ஒரு கிண்ணத்தில் விளம்பில்
“எழில்” என்னும் பிராமி எழுத்து
இருந்ததாக அதை அகழாய்வு செய்த
பிரேன்பில் என்பவர் கூறியுள்ளார்.
பாப்பநத்தம் இருளபண்டாவில் புதைகுழியின்
அளவு 12’X12’ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலனவை சாலை
அமைக்கச் சல்லிக் கல்லுக்காக
உடைத்தும் பயன்படுத்தியுள்ளனர். இதே போல்
கோவிந்த ரெட்டிபாளையம் என்னுமிடத்திலும் மல்லசமுத்திரம், இருளபண்டா ஆகிய
இடங்களில் உள்ளது போல்
சுற்றிலும் பலகைக்கற்கள் நடப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரிக்கு அருகாமையிலுள்ள சென்னசந்திரம்
பகுதியிலும் காணப்படுகின்றன.
மிகப்பழைய
கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 7,000
ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறுகின்றனர். பொதுவாகக்
இந்திய நிலவியல் அமைப்பில் தமிழகம் பலப் பழமையானப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
இப்பகுதிகளில் காணப்படும் ஈமச்சின்னங்கள், தொல்லியல்
துறையினர் கண்டுபிடித்திருக்கும் பெருங்கற்காலக் கருவிகள், கல்வெட்டுகள்,
நடுகற்கள், சதிகற்கல், சுவடிகள்
போன்ற சாசனங்கள் வரலாற்றை அறிய துணைபுரிகின்றன. இதுவரை உலக அளவில்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தொல்பொருள்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது தமிழின் தொன்மையினை
உலகத்திற்கு அடையாளப்படுத்த முடியும். கல்திட்டைகள்
உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறு
பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்படுகிறது. பண்பாட்டுச்
சின்னமான கல்திட்டைகளின் காலம் நாட்டுக்கு நாடு அதன் வடிவங்கள் வேறுபடுகின்றன. கல்திட்டை
ஒரே பலகைக்கல்லால் அமைக்கப்படாமல் சிற்சில துண்டுகற்களை கொண்டு
அமைக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள பக்கவாட்டு கல்லும் மூடும் கல்லும்
சிதைக்கப்பட்டுள்ளன. மூடுகற்கள் 5 துண்டுகற்களால் மூடப்பட்டுள்ளது.
பெருங்கற்கால நினைவுச்
சின்னங்கள், பால்ட்டிக் மற்றும்
வட கடற்கரைப் பகுதிகளிலும்,
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்
நாட்டிற்கு தெற்கே காணப்படுகின்றன.
இது போன்ற நினைவுச் சின்னங்கள்
உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன.
உலகில் மிகச் செறிவாக அமைந்துள்ள
கல்திட்டைகள் கொரியத் தீவக்குறையில்
காணப்படுகின்றன. இவை கி.மு முதலாம்
ஆயிரமாண்டு காலப் பகுதிகளைச் சேர்ந்தவை.
தென்கொரியாவிலும், வடகொரியாவிலும் உள்ள
கல்திட்டைகளின் எண்ணிக்கை சுமார்
30,000 ஆகும். இது உலகிலுள்ள மொத்தக்
கல்திட்டைகளின் எண்ணிக்கையில் ஏறத்தாழ
40% ஆகும். யுனெஸ்கோ உலக பாரம்பரியக்
களங்களான கோச்சாங், இவாசுன், காங்வா ஆகிய
மூன்று களங்களில் மட்டும்
1000க்கு மேற்பட்ட கல்திட்டைகள்
உள்ளன.
வடக்கத்திய வகையைச்
சேர்ந்த, கங்வா என்னும் இடத்திலுள்ள
கல்திட்டைகள் மேசை போன்ற அமைப்புடையவை.
இதிலே முன்னோருக்கான கிரியைகள்
நடத்தப்பட்டன. தென்கொரியாவில் உள்ள
இது போன்ற கல்திட்டைகளில் மிகப்
பெரியது இதுவே இது 2.6 x 7.1 x 5.5 மீட்டர்
அளவுகள் கொண்டது. உலகின் பிற
பகுதிகளில் கல்திட்டைகள் குறித்த
ஆய்வுகள் பெருமளவில் இடம் பெற்றதற்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே
கொரியாவில் பெருங்கற்காலச் சின்னங்கள்
குறித்த ஆய்வுகள் தொடங்கின.
1945க்குப் பின்னரே கொரிய
அறிஞர்களால் புதிய ஆய்வுகள் தொடங்கப்பெற்றன.
கொரியக் கல்திட்டைகளின் உருவவியல்
வளர்ச்சி அத்திலாந்திக் ஐரோப்பியக்
கல்திட்டைகளிலிருந்தும் வேறுபட்டுத் தனித்துவம்
வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.
இந்தியாவிலும் பல
பகுதிகளில் கல்திட்டைகள் உண்டு.
கேரளாவின் மறையூர் என்னுமிடத்திலிருந்து
7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
அழிஞ்சுவாடு என்னும் சிற்றூருக்கு
அண்மையில் கல்திட்டைகள் காணப்படுகின்றன.
இக் கல்திட்டைகள் ஐந்து
கல்திட்டைகள் கொண்ட கூட்டங்களாக அமைக்கப்பட்டு
உள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஒரு
குடும்பத்துக்கு உரியது எனக்
கருதப்படுகின்றது. இப்பகுதியில் இவ்வாறான
கூட்டங்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
இக் கல்திட்டைகள் கனமான
கருங்கற்களால் ஆனவை. இப்பகுதி பல
நூற்றாண்டுகளாக ஆதிசேரர் எனப்பட்ட
இனக்குழு மரபினரின் புதைகுழிகளுக்கான இடமாக இருந்துள்ளது. கல்பதுக்கை
குறித்து அகநானூறு, புறநானூறு, ஐங்குறுனூறு போன்றவற்றில் அக்காலத்துப் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பாலைநிலத்தின்
வழியே செல்லும் வழிப்போக்கர்களைக் கொண்று பொருள் பறிக்கும் மறவர்கள் அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மீது தழைகளைப் போட்டு மூடியும் கற்களை குவித்து மேடு செய்துவைப்பர். பாலைநிலத்தின் வழியாகச் செல்லும் வழியின் ஒரமாகக் காணப்படும் பதுக்கைகள் அச்சம் தரக்கூடியதாக அமைந்திருப்பதை சங்கப்பாடல்கள் விவரிக்கின்றன. நரிகள் மற்றும் காட்டுவிலங்குகள் சிதைக்காமல் இருக்கவும். அதேபோன்று இறந்த சடலங்கள் எழுந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையில் அதனைத்தவிர்க்க புதைக்கப்பட்ட இடத்தில் கற்களை போட்டு மூடும் வழக்கம் இருந்துள்ளது.
கல்திட்டை என்பதை மக்கள் வழக்கில்
எப்படி அழைக்கப்படுகிறது என்று பார்த்தால் கொரிய மொழியில் கொயிண்டோல் அதாவது தாங்கப்பட்டகல்
என்பது அதன் பொருள். தமிழகத்தின்
பெரும்பாலான பகுதிகளான திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல் போன்ற
இடங்களில் இறந்தவர் வீடு என்று பொருள் படும்படி மாண்டவர் வீடு என்று அழைத்துள்ளனர்.
தற்போது மாண்டவர் வீடு என்பது மருவி பாண்டவர் வீடு என்று அழைக்கப்படுவதை
காணலாம். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் குள்ளர்குகை என்று
அழைக்கப்படுகிறது. கேரளாவில் இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால
பெருங்கற்கால இடங்கள் காணப்படுகின்றன. பாறைகளைக் குடைந்த குகைகள்
(Chenkallara) காணப்படுகிறது இது திருவண்ணாமலை
மாவட்டத்தில் காணப்படுக் குகைகளைப்போலவே உள்ளன.
பெருங்கற்கால சின்னங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்,
உட்கட்டமைப்பு
1. முதுமக்கள் தாழி
(Urn Burial)
2.
ஈமப் பேழை (Sarcophagus)
மேல்கட்டமைப்பு
3.
கல்திட்டை (Dolmonoid Cist) கல்பதுக்கை
(Slab Cist)
4.
கல்வட்டம் (Cairn Circle)
5.
கற்குவை (Cairn heap)
6.
குத்துக்கல்
(Menhir)
7.
தொப்பிக்கல்(Cap
Stone) & (Umbrella Stone)
முதுமக்கள்
தாழி (Urn
Burial)
தாழி செய்ய பயன்படும் மூலப்பொருள் மண். இறந்தவர்களை
தாழியில் வைத்து மண்ணில் அடக்கம் செய்தமையால் இப்பெயர் பெற்றது. உடல்
செயலிழ்ந்த முதியவர்களின் உடலை இத்தாழிகளில் வைத்து புதைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. இந்த தாழியின் மேல்பகுதி சிறுத்தும் உடல் பகுதியானது பெருத்தும் கீழ்பகுதி குறுகி கூறாகவும் எளிமையாக கொண்டு செல்லும் வகையில் இருக்கும். களிமண்ணால்
செய்து சுட்டபின்பு இதனை பயன்படுத்தியுள்ளனர். இறந்தவர்களின் உடலையோ அல்லது எலும்புகளையோ வைத்து மண்ணில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள். பெருங்கற்காலப் பயன்பாட்டில் முதல்வகை பயன்பாடு இது. தமிழகத்தில்
முதுமக்கள் தாழிகளில் ஈமச்சின்னங்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. குறிப்பாக ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பலத்தரவுகளை நமக்கு கொடுத்துள்ள மிக முக்கியமான இடமாகும். 1876 ஆம் ஆண்டில் பெர்லினைச் சேர்ந்த ஜெகர் என்பவர் முதன்முதலில் பார்வையிட்டு ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை கண்டறிந்தார். இங்கு முதுமக்கள் தாழிவகையைச் சேர்ந்த பண்பாடு மட்டுமே நிலவியிருந்ததை உறுதிசெய்தார். தாழிகள் புதையுண்ட இடத்தில் தரைமட்டத்திற்கு மேல் எந்தவிதமான தடயமும் இல்லை. ஆனால்
வரிசை வரிசையாகப் தாழிகள் புதைக்கப்பட்டிருந்ததை அவர் பதிவுசெய்கிறார்.
தமிழகத்தில்
மருத நிலப்பகுதிகளான தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி, உள்ளிட்ட
ஆற்றுப்பகுதிகளிலும், நெய்தல் நிலப்பகுதியான காஞ்சிபுரம் பகுதியில் இவ்வழக்கம் காணப்படுகிறது. மருதம், நெய்தல் இரு நிலப்பரப்பும் மண் வளம்மிக்கப் பகுத்திகள் என்பதால் இவ்வழக்கம் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. இவ்வழக்கத்தைப் பற்றி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப்பற்றி ஐயூர்முடவனார் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் பாடல் -228 இல் புதைகலன், ஈமத்தாழிகள்
பற்றிய குறிப்புகள்
கிடைக்கிறது.
ஈமப்
பேழை (Sarco Phagus)
தாழிப்பயன்பாட்டில்
இது ஒருவகை. இவை
சதுர மற்றும் செவ்வக வடிவிலான பெட்டிவடிவம் என்பதால் பேழை என்று அழைத்தனர். இதனை
களிமண்ணால் செய்து நன்கு சுட்டு பயன்படுத்தினர். இதன்மேல் மூடப்படும் மூடியில் விலங்கின் தலைகள் இடம்பெற்று இருக்கும். இவை
செவ்வகம் மற்றும் நீள்வட்ட வடிவமான, உள் கட்டமைப்பைக் கொண்டது. ஈமப்பேழையின்
அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று கால்கள் உள்ளது. ஆந்திரமாநிலம்
சங்காவரத்தில் ஒரு பேழை ஆட்டின் வடிவில் கிடைக்கப்பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்சானூரிலும் இவ்வகை பேழை கிடைத்துள்ளது.
கல்திட்டை (Dolmen Cist)
அல்லது
கற்பதுக்கை
(Slab Cist)
பெருங்கற்காலப்
பண்பாட்டைச் சார்ந்தது. இவ்வகை
இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னமாகும். பெரிய அளவிலான கருங்கல் பாறைகள் பலகை வடிவில் இருக்கும். பறைகற்கலால்
உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான வீடு போல அதன் அமைப்பு இருக்கும். குறிப்பாக
இவ்வகையான கல்திட்டைகள் மலை மற்றும் காட்டுப் பகுதிகளில் உள்ள பாறைகளின் மேல் காணப்படும். நன்றாக செதுக்கப்பட்ட கல், ஒரளவிற்கு செதுக்கிய கற்கள், பாறைகற்களைக்
கொண்டும் அமைக்கப்பட்டிருக்கும். இடைவெளிப்பகுதிகளில் மண்ணால் பூசப்பட்டாலும் காலப்போக்கில் சிதைந்த நிலையிலேயே
காணப்படுகிறது. கல்திட்டைகளில் யாருடையது என்ற விவரங்கள் இல்லை.
இடங்களை வைத்து எந்தக் இனக்குழுவினர் வாழ்ந்தார்கள் என்ற அடிப்படையில்
அறியமுடியும். பூமிக்கு மேலே அமைந்திருப்பது
கல்திட்டை என்று அழைக்கப்படுகிறது. பூமிக்கு கீழே அடியில் அமைந்திருக்கும் அமைப்பைக் கொண்டது கற்பதுக்கை. கற்களில் கிழக்குப்பக்கம் பார்த்த மாதிரி உள்ளவற்றில் இடுதுளை ஒன்று இடப்பெற்றுள்ளது, மேலே மூடப்படும் கற்களில் சிறிய குழிகள் இடப்பெற்றுள்ளன. இதற்கு பயன்படுத்திய கற்கள் செம்புரைக்கல் எனப்படுகிறது. இவ்வகையான அமைப்பினை உடைய கற்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காணப்படுகிறது.
கல்வட்டம்
(cairn
cirle)
இயற்கையாகக்
கிடைக்கும் கற்க்ளைச் சேகரித்து இறந்தவர்களைப் புதைக்கும் இடத்தைச் சுற்றிலும் வட்டமாக வைத்து அடையாளமிட்டனர். இதனையே கல்வட்டம் எனப்பெயரிட்டு அழைத்தனர். இவற்றில்
வட்ட வடிவிலான உருண்டையான கற்களைப் புதைத்த இடத்தை மையப்படுத்தி ஈமத்தாழி, ஈமப்பேழை
அல்லது கல்லறை போன்றவை அமைக்கப்பட்டிருப்பதை பல பகுதிகளில் காணமுடிகிறது கல்வட்ட அமைப்புகள் எதற்காக உருவாக்கப்பட்டது என்று பார்த்தால் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளப்படித்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டதை அறியமுடிகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உருண்டைவடிவிலான கல்வட்டங்கள் தரையின் மேற்பகுதியில் காணப்படுகின்றன. பூமிக்கு அடியில் முதுமக்கள் தாழிகளும் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு நெடுங்கூர் கல்வட்டம், கொடுமணல்
கல்வட்டம் போன்றவற்றை குறிப்பிடலாம்.
கற்குவை
(cairn heap)
பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை பூமியில்
புதைத்து மூடிவிட்டு அந்த இடத்தை அடையாளப்படுத்த கூம்பு வடிவில் கற்களை அடுக்கி
வைப்பது, கற்குவை என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களால்
செயற்கையாக உருவாக்கப்படும் கற்குவியலைத்தான் கற்குவை என்கிறோம். இவ்வகை
அதிக அளவில் மேட்டு நிலப்பகுதி, காட்டுப்பகுதி, மலை மற்றும் நிர்வழிகளுக்கு அருகாமையிலும்
காணப்படுகின்றன. வட்டவடிவில் கற்பாறைகளின் குவியலைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இவ்வகையான நினைவுச்சின்னங்கள் தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டி போன்ற இடங்களில் காணமுடிகிறது.
குத்துக்கல்(Menhir) அல்லது நெடுங்கல்
குத்துக்கல் என்பது பெரிய அளவில நிலைக்குத்தாக நாட்டிவைக்கப்படுகின்ற தனிக்கல்லாகும். இவ்வகைக்கல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே இறந்தவர்களுக்கு அமைக்கப்படும் நினைவுச் சின்னமாக விளங்கியுள்ளது. தற்போது கிடைக்கப்படுவனவற்றில் மிகப்பெரிய குத்துக்கல் பிரான்ஸ் நாட்டில் உள்ள லோக்காமரியாக்கர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஆனால் தற்போது அது பராமறிப்பின்றி சிதலமடைந்துள்ளது. தமிழகத்தில் குத்துக்கல் வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சேலம் அம்மாபேட்டையில் கூச்சிக்கல் முனியப்பன் என்ற பெயரிலும், நெல்லை மாவட்டம் சமூகரெங்காபுரம் எனும் இடத்தில் குத்துக்கல் மாடசாமி என்றபெயரிலும் வணங்குகிறார்கள். இவ்வகையான
ஈமச்சின்னத்தின் மேல் உயரமான ஒழுங்கற்றகல் நட்டுவைக்கப்பட்டுள்ளது அதனால் குத்துக்கல்
என்றும் மனிதவடிவக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகையான கற்கள் விழுப்புரம் மாவட்டம் உதயநத்தம்,
வேலூர் மாவட்டம் மோட்டூர் போன்ற இடங்களில் காணப்படுகிறது. மலைப்பகுதி என்பதால் அங்கு கிடைக்கப்பெறும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.
தொப்பிக்கல்
(Cap Stone) அல்லது குடைக்கல் (Umbrella Stone)
இவ்வகையான
கல் புதைகுழி அமைப்பைக் கொண்டது. தொப்பி போன்ற வடிவிலான கல்லை
குழியின் மேல்வைப்பது. இது பார்ப்பதற்கு குடை போன்று இருப்பதால்
குடைக்கல் என்றும் தொப்பிக்கல் எனவும் அழைக்கப்படுகிறது. கேரள
மாநிலத்தில் மட்டும் காணப்படும் வகையாகும். இப்படி கல்திட்டைகளின்
வடிவங்களைப் பார்க்க முடிகிறது.
அன்மையில்
பேராசிரியர் பக்தவச்சலபாரதியுடன் திண்டுக்கல் மாவட்ட்த்தில் அமைந்துள்ள பழனிமலைத்தொடருக்கு
சென்றிருந்தேன். அந்த
மலைப்பகுதியில் உள்ள கிராமங்களான பாய்ச்சலூர், பட்டியக்காடு, பண்ணைக்காடு, தாண்டிக்குடி,கே.சி.பட்டி, சங்கரன்
போத்து முதலான பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் காணப்படுகின்றன. பாய்ச்சலூர் என்ற இடத்தில் இருந்து பட்டியக்காட்டிற்கு செல்லும் வழியில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கல்திட்டைகள் இடதுபுறத்தில் ஏறாலமாக உள்ளன. அந்தப்பகுதியில் சிதைந்த கற்களை குவியலாக வலது புறத்தில் அடுக்கி வைத்திருப்பதையும் காணமுடிகிறது. .அதேபோன்று பட்டியக்காட்டிற்கு செல்லும் வழியில் ஆற்றுப்பகுதிக்கு அருகேவும் கல்திட்டைகளை காணமுடிந்தது. சிதறிக்கிடக்கும் இவைகளை பாதுகாக்க வேண்டும்.
அகழாய்வு செய்யப்படும் போது குழியில்மேலிருந்து கீழாகக்கிடைக்கும்
தொல்பொருட்களில் மேல் மண் அடுக்கில் கிடைப்பவை காலத்தால் பிற்பட்டவை என்றும் அதற்கு
கீழ் உள்ள மண் அடுக்கில் கிடைப்பவை காலத்தால் முற்பட்டவை என்றும் மதிப்பீடு செய்யமுடியும்.
மட்கலன்களைக் கொண்டு காலத்தை அறியலாம். குறிப்பாக புதுச்சேரியில் உள்ள அரிக்கமேடு என்ற
இடத்திலும், இராமநாதபுரத்தில் அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைக்கும் ரோமானியப்பானை
ஓடுகளின் காலம் கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வுகளில் கிடைக்கப்பெறும் எலும்புகள், மண்டை
ஓடுகள் இவற்றை வைத்து ஆணா, பெண்ணா அல்லது குழந்தையா என்ற விவரங்களையும் அறியமுடியும்.
தமிழகத்தில் இதுவரை நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளால் அதன் தொன்மை
மற்றும் பண்பாடு, பொருளாதாரம், சமயநிலை, தொழில்நிலை, கால்நடை வளர்ப்பு, உலோகப் பயன்பாடு
உள்ளிட்ட அக்கால மக்களின் வாழ்க்கை நிலையை அறியமுடிகிறது. இதுபோன்ற அரிய பொக்கிசங்களை பதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். 1976 – ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த
போது, பழங்காலச் சின்னங்களை பாதுகாக்க அந்தந்தப் பகுதிகளில் கிடக்கும்
சின்னங்களை அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் எடுத்து வந்து பதுகாத்து குழந்தைகளுக்கு
வரலாற்றுச் சம்பவங்களை கற்பிக்க வேண்டும் என் உத்தரவிட்டிருந்தார். காலப்போக்கில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வராமலே போனதால் பழங்கால புராதனச் சின்னங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ள தொல்பொருள்களை
மீட்டெடுக்க அரசு முன்வரவேண்டும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
இல்லாத அளவிற்கு அதிகமாகக் காணப்படும் தொல்பொருள்களை பாதுகாக்க அரசு நிலையான திட்டத்தை
உருவாக்க வேண்டும். குறிப்பாக பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகள் இது சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
சமீபகால ஆய்வுகள் இதுபோன்று அழிந்து வரும் தொல்பொருகள் குறித்தான ஆய்வுகள்
அதிகம் இல்லாதாது வருத்தம் தரக்கூடியாதாகவே உள்ளது.
தொல்லியல், தமிழர் பண்பாடு மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை
அமைச்சர் பாண்டியராஜன் மாவட்டவாரியாக தொல்பொருள் குறித்த அருங்காட்ட்சியகம் அமைக்கப்படும்
என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும்
முழுமையான ஆர்வம் உள்ளவர்கள் அத்துறையில் ஈடுபத்தப் படவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
என்வே அழிந்துவரும் கல்திட்டைகள் போன்ற பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்
அமைக்கப்பட்ட வரலாற்றுச்சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கானப்
பணிகளை அரசு செய்ய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சான்றாதார நூல்கள்
1. தமிழக வரலாறு, தொல்பழங்காலம், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,
சென்னை-1975.
2. தி.ஸ்ரீ. ஸ்ரீதர்,
செம்பியன் கண்டியூர் அகழாய்வு அறிக்கை, 2007-2008, தொல்லியல் துறை, சென்னை.
3. கா.ராஜன், தொல்லியல்
நோக்கில் சங்க்காலம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,
2004.
4. புறநானூற்றில்
பாடல் -228
5. தி.ஸ்ரீ.ஸ்ரீதர், தமிழக அகழாய்வுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்
துறை - 2010.
6.V.D.Kirushnasamy, Ancient India, No.5, 1947.
.