விக்டோரியா மகாராணி ஒரு வரலாற்றுப்பார்வை - கோ.ஜெயக்குமார்.
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1-ம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இதுவரை பிரிட்டன் அரசை ஆண்டதில் இதுதான் அதிக வருடம். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.
விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது.
இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.
63 ஆண்டுகள், ஏழு மாதங்களுக்கு இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலணிகளையும் ஆண்டார்.உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.
சென்னை ஒரு பெரிய நகரமாக ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் உருவானது. ரயில், கப்பல் போக்குவரத்து ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் வந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வாணிபம், தொழில், வேலை நிமித்தமாக மக்கள் குடிபெயர்ந்து வந்தார்கள்.
ஆங்கிலேய அரசாங்கம், விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கவர்னர் ஜெனரல் காரன் வாலீஸ், ராணுவ ஜெனரல் நீல் ஆகியோரின் சிலைகளை நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்தது. அப்படி வைக்கப்பட்டதன் நோக்கம், "ஆளும் பரம்பரையினரை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பொதுமக்களிடம் சொல்வதுதான். அந்த அதிகார வர்க்கத்தினரின் சிலைகள் அரசின் பணத்திலும், அரச விசுவாசிகளான இந்தியர்களின் நன்கொடையிலும் உருவாக்கப்பட்டவையாகும்.
அவை, இங்கிலாந்தில் இருந்த மிகச்சிறந்த சிற்பிகளால் படாடோபமான தோரணையில் உருவாக்கப்பட்டவை. அவை சிலையாக இருப்பவர்களின் ஆத்மாவை பிரதிபலிப்பதை விடவும் கலைஞர்களின் கைவண்ணத்தாலேயே சிறப்புப் பெற்றவையாகும்.
காரன் வாலீஸ் இங்கிலாந்தின் தளபதியாக அமெரிக்கர்களை எதிர்த்து போரிட்டான். ஜார்ஜ் வாஷிங்டனிடம் தோற்றுப் போனான். இங்கிலாந்து திரும்பிய அவனை பத்தாண்டுகள் கழித்து இந்தியாவிற்கு முதல் கவர்னர் ஜெனரலாக அனுப்பி வைத்தார்கள். அவன் திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்தில் தோற்கடித்தான். பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பிடித்து வைத்துக் கொண்டான். அவன் சிலையில் திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
1857ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களை ராணுவத்தளபதி ஜெனரல் நீல் பீரங்கி முன்னால் நிறுத்தி சுட்டுக் கொன்றான். இவர்கள் இருவருக்கும் சென்னையில் வைக்கப்பட்ருந்த சிலைகளை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அகற்றப்பட்டு கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சிலை சர் தாமஸ் மன்றோவின் சிலை. அது முழுக்க முழுக்க பொதுமக்கள் நன்கொடையாக கொடுத்த பணத்திலிருந்து இங்கிலாந்தின் பிரான்சிஸ் லக்கெட் சாண்ட்ரி என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.
சென்னை ராஜதானியின் கவர்னராக இருந்த தாமஸ் மன்றோ ஒரு தையற்கலைஞரின் பேரன். இவர் சென்னை ராஜதானியின் கவர்னராகி மக்கள் அன்புக்கு உரியவராக இருந்தார். ரயத்துவாரி என்ற நிலசீர்திருத்தம் செய்தார். அதனால் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் சுதேசி மக்களை சவுக்கால் அடிப்பதைப் பார்த்த மன்றோ "யார் உங்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது' என்று கண்டித்தார். காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1827இல் இறந்துபோன சர் தாமஸ் மன்றோ, சேனம் இல்லாத குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். 1839ஆம் ஆண்டில் இந்த சிலை வைக்கப்பட்டது.
உயர்ந்தவர்களுக்கு சிலை வைத்து சிறப்பு செய்வது நெடுங்காலமாகவே மக்கள் மரபாக இருக்கிறது. அது ஒரு பண்பாட்டுச் செயல். தங்கள் நாட்டையும், தங்கள் முன்னோர்களையும் நிலைநாட்டும் முறை. அதன் வழியாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்வது.
கிரேக்க, ரோமானிய, எகிப்து நாடுகளில், கடவுள்களுக்குச் சிலை வைத்ததுபோலவே மன்னர்கள், தத்துவ ஞானிகளுக்கும் சிலை வைத்திருக்கிறார்கள். அங்கு நல்லவர்களுக்கு மட்டுமல்ல கெட்டவர்களுக்கும் சிலை இருக்கிறது. சில சிலைகள் ஆட்சியாளர்களே வைத்துக் கொண்டவை.
தமிழர்கள் நெடுங்காலமாகவே சிலைகள் செய்து வைக்கும் மரபைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கோர் எடுத்துக்காட்டு நடுகல். ஊருக்குள் புலி போன்ற விலங்குகள் புகுந்து விட்டால் அவற்றை எதிர்த்து உயிர் துறந்த வீரனுக்கும் மற்றும் அரசனின் போர்ப் படையில் சேர்ந்து எதிரிகளோடு போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கும் ஊருக்குள் நடுகல் நட்டார்கள்.
நடுகல்லில் அவன் பெயரும், பீடும் பெருமையும் எழுதி மயிற்தோகை சாற்றி, நறுமண புகை கமழச்செய்து வழிபட்டார்கள் என்று தமிழ்ப் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெளியூர்களில் இருந்து புதிதாக ஊருக்குள் வருபவர்கள், நடுகல்லாக நிற்கும் வீரனைப் பார்த்து ஐயன் யாரென வினவினார்கள். ஐயன் யார் என்பதே காலப்போக்கில் ஐயனாராகி விட்டது. காக்கும் கடவுளாக ஊரின் எல்லையில் இமைக்காத விழிகளோடும், கரத்தில் பிடித்த கத்தியோடும் இருக்கிறார். இரவில் புரவி மீதேறி வேட்டை நாய் பின்தொடர விடியுமளவு சுற்றிச் சுற்றி வந்து கெட்ட ஆவிகளிடம் இருந்து மக்களைக் காக்கிறார் என்பது ஐதீகம்.
கலையென்பதே ஐதீகமும் நம்பிக்கையும்தான். காக்கும் கடவுளைப் போற்றிக் கொண்டாடுவது போல, உழைக்கும் மக்களை, தொழிலாளிகளை போற்றுவதும் மரபாகவே இருந்து வந்திருக்கிறது. தொழிலாளி என்றால் அறிவும் ஆற்றலும் கொண்டவன். சிறிதும், பெரிதுமான பல கருவிகளைச் செய்து, அவற்றைக் கொண்டு மனித சமூகத்தையே முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவன்.
அவன் ஆற்றலையும் அதனைப் பயன்படுத்துவதையும் சொல்லும் சிற்பமாக சென்னை கடற்கரையில் இருப்பதுதான் உழைப்பாளர் சிலை. நான்கு தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு பெரும் பாறையை நெம்புகோல் கொண்டு உருட்டிக் கொண்டு போவதுதான் அச்சிலை.
இந்தியாவின் முதல் ஓவிய சிற்பக் கல்லூரியான சென்னை கவின் கலைக்கல்லூரி முதல்வராக, இருபத்தைந்து ஆண்டுகள் இருந்த தேவிபிரசாத் ராய் சௌத்ரியின் கலைப்படைப்பு இந்த உழைப்பாளர் சிலை.
அவரின் மற்றொரு படைப்பு கடற்கரை சாலையில் உள்ள, கையில் பிடித்தத் தடியைத் தரையில் ஊன்றி வேகமாக நடந்து செல்லும் மகாத்மா காந்தியின் சிலை. அந்த சிலை காந்தி மாதிரியே இல்லையென்று அப்போது சிலர் புகார் சொன்னார்கள். பொது இடங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் ஒருவருடைய சிலை அல்லது சிற்பம் அச்சு அசலாக அவரைப்போன்றே முகபாவனையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஒரு கலைஞன் படைப்பில் ஆத்மாதான் முக்கியம். சம்பந்தப்பட்டவரின் ஒரு சாயல் வந்தால் போதும். காந்தி எப்பொழுதும் வேகமாக நடப்பவர். அந்த நடையையே காந்தியின் குறியீடாக சிற்பி ராய் சௌத்ரி படைத்துள்ளார்.
பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் என்பவை, ஒரு நாட்டின் கலைமரபு, படைப்பாற்றல், தொழில் திறன் போன்ற பலவற்றையும் ஒன்று சேர்த்து கொண்டிருக்கின்றன. அவை அவ்வாறு படைக்கப்பட்டதால், மனிதர்களை பிரமிக்க வைக்கின்றன. "இது மனிதர் படைத்ததுதானா' என்ற கேள்வியையும் கேட்க வைக்கின்றன.
அவ்வகை சிற்பங்களில் முதலில் இருப்பது, ஒன்பதாம் நூற்றாண்டில் ஐம்பொன்களில் தமிழர்கள் வடித்தெடுத்த ஆடல் வல்லானின் சிற்பம். திருவாலங்காட்டில் ஆடிய ஆடல்வல்லான் என்னும் நடராஜர் கலைப் படைப்பின் உச்சமாகி, வரவேற்பு அறைகளில் முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டார்.
உயர்ந்தப் படைப்பென்று குறிப்பிட வேண்டிய இன்னொரு படைப்பு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி. ஒரு பெண்ணின் பூரண அழகும் அமைதியும் கொண்டு மிளிரும் சிற்பம் அது. உலகம் முழுவதற்கும் புத்தொளி வீசுகிறது. பிரஞ்சு நாட்டுப் படைப்பென்றாலும் மனித சமூகம் முழுவதையும் அது வசீகரித்துக் கொண்டிருக்கிறது.
பொது இடங்களில் சிலைகள், சிற்பங்கள் வைப்பது கூடிக்கொண்டே வருகிறது. சர்வாதிகாரிகளில் சிலர் தங்களுக்குப் பெரிய சிலைகள் செய்து முக்கிய இடங்களில் வைத்துக் கொள்கிறார்கள்.
சிலர், தங்களை முன்னேற்றியவர்களுக்கும்கூட சிறியதாக சிலை செய்து வைக்கிறார்கள். ஆனால் அவை கலைப்படைப்புகளாக இல்லாமல் வெறும் உருவ பொம்மைகளாகவே இருக்கின்றன. ஆனாலும் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் ஆட்சி மறைந்ததும் அவர்களின் பொம்மைகள் அவசர அவசரமாக அகற்றப்படுகின்றன. சில சிலைகள் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அது மக்களின் கோபம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு.
மக்களுக்குப் பிடித்தமான தத்துவ ஞானிகள், சீர்திருத்த செம்மல்கள், கவிஞர்கள், கலைஞர்கள் போன்றோரின் சிலைகள் மதிக்கப்படுகின்றன. சமூகம் எப்படி இருந்தாலும், மக்கள் தங்களின் அசலான சகோதரர்களை, முன்னோடிகளை அறிந்து கொண்டு அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
தமிழ் மட்டுமே அறிந்த உ.வே. சாமிநாதையர் அவர்களில் ஒருவர். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரின் சீர்மிகுந்த சிலைக்கு ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளன்று பலரும் வந்து வணக்கம் செலுத்துகிறார்கள்.
சென்னை மெரீனா கடற்கரையில் திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஒளவையார் போன்ற பெருங்கவிஞர்கள் சிலைகளாக நிற்கிறார்கள். அவர்களைக் கண்டு பெருமிதம் கொண்ட புகழ் பெற்ற மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன், "என் ஆதி கவிஞகளே' என்று தொடங்கும் சிறந்த கவிதையொன்றை எழுதி இருக்கிறார்.
நிகழ்காலம், நகரங்களின் சந்தடி மிகுந்த இடங்களில் சிலைகள் வைக்கும் காலமாக மாறி வருகிறது. சிலர் பெரிய சிலை வைக்க, கோடிகணக்கான ரூபாய் செலவிட தயாராக இருக்கிறார்கள். அது தங்களின் இருப்பை நிலை நிலைநாட்டுமென்றும் பெருமைகளையும் சிறப்புக்களையும் பேசுமென்றும் கருதுகிறார்கள்.
ஆனால் சரித்திரம் கருணையற்றது. அவை போன்ற சிலைகள் புறக்கணிக்கப்பட்டு, அசலானவர்களுக்கு வைக்கப்படும் சிலை - அது அளவில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும்கூட மக்களால் ஏற்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும்; வருகிறது.
படங்கள் அட்டகாசம். தத்ரூபம். எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் மெருகு கலையாத ஓவியங்கள்.
பதிலளிநீக்கு