திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் -
கோ.ஜெயக்குமார்.
திருமாலிருஞ்சோலை, அழகர் கோயில் என்றும், கள்ளழகர் சந்நிதி என்றும் இன்று வழங்கப் பெறுகிறது. மதுரை மாநகருக்கு வடக்கோ. 20 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தத் திவ்ய தேசம் இருக்கின்றது. மலை அடிவாரத்தில் சந்திதி எழிலோடு அமைந்திருக்கிறது. மூலவர் அழகர், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
மூலவரும் உற்சவரும், இங்குக் கொள்ளை அழகுடன், காணக்காணக் களிப்பூட்டும் விதமாக எழுந்தருளியிருக்கிறார்கள். தாயாரின் பெயர் சுந்தரவல்லி நாச்சியாராகும். பஞ்சாயுதங்களோடு இங்குப் பெருமாள் விளங்குகிறார். உற்சவர், முழுவதும் பசும் பொன்னால் ஆனவர். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால், மங்களாசாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தலம் இது.
தர்ம தேவதைக்கும் மலையத்வஜ பாண்டியனுக்கும் பகவான் நேரிடையாக காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள 18 ஆம்படி கருப்பண்ண சாமி மிகவும் புகழ்பெற்றது. பெருமாளைக் கவர்ந்து செல்ல ரந்த மந்திரவாதிகளை இங்குள்ள மக்கள் தடுத்து விட்டனர். அப்போது மந்திரத்துக்குக் கட்டுப்பட்டுத் துணையாக வந்த கருப்பண்ணசாமி என்னும் தெய்வம் பெருமாளின் வடிவழகில் மயங்கி இங்கேயே நின்று காவல் தெய்வமாகிவிட்டது
பதினெட்டாம்படி கறுப்பு என்ற தேவதை காவல் புரிவதாகச் சொல்லப்படும் கோபுரவாடல் சமீபகாலமாக திறக்கப்படுவதே இல்லை. வேறொரு கதவு வழியாகத் தான் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். கோவிலுக்கு அருகே உள்ள மலை மேல் நான்கு கிலோ மீட்டர் சென்றால் சிலம்பாறு என்னும் நூபுரகங்கை சிறிய அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
திரிவிக்ரம அவதார காலத்தில் பிரம்மா, பகவான் பாதத்தில் கமலண்டலத்தால் தீர்த்தம் சேர்த்தார். அந்த நீர் தெரித்து விழுந்த இடம் `சிலம்பாறு' என்று சொல்லப்படுகிறது. இங்கே சேத்ர பாலருக்கு ஒரு சந்நிதி உண்டு. அர்ச்சகர்கள் கோவில் சாவியை இரவில் இவரிடம் ஒப்படைத்துப் போவதாக ஐதீகம்.
சித்திரைப் பெருவிழாவான சித்திரா பவுர்ணமியன்று அழகர் வைகையாற்றில் இறங்கி சேவாசாதிக்கிறார். மற்றும் ஆடிப்பவுர்ணமியன்று திருத்தேர்த் திருவிழாவாகும். கூரத்தாழ்வாருக்குப் பெருமாள் அருள்பாலித்த திருத்தலம். அழகர் மலைக் காட்டில் விஸ்வரூபம் போல் நின்று பஞ்சாயுதங்களால் எதிரிகளை விரட்டி நம்மை நிர்ப்பயமாக இருக்க வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் திருமாலிடம் நாம் நமது கவலைகளை நேரில் சென்று ஒப்படைத்து விட்டால் போதும். திருமால் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக