இன்றைய மனிதனுக்கு
உணவு, உடை, இருப்பிடம் தவிர சமுதாயத்தில் மேலும் பல தேவைகள் கூடிக் கொண்டே போகின்றன.
இதனால் இவர்களின் எதிர்பார்ப்பும், பணத் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால்,
ஒரு கட்டத்தில் இவைகளால் துருப்தி அடையாத மனிதன் மன அமைதியை தேடி அலையும் சம்பவங்களை
பற்றி இப்போது பார்ப்போம்.
அப்படித்தேடி அலைபவர்கள்
எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் ஆழ்ந்து
யோசிக்காமல் அவர்களின் போதனைகளை வேத வாக்காக எண்ணி மயங்கி, மகுடிக்குக் கட்டுப்பட்ட
பாம்பாய் மாறி விடுகிறார்கள். தங்களின் குறைகள் எல்லாம் அவர்களால் முழுமையாகத் தீர்க்கப்பட்டு
விடுவதாகவும் நம்பி சரணாகதி அடைந்து விடுகிறார்கள், இதைப் பயன்படுத்தி நாட்டில் போலிச்
சாமிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
நாம் இப்போது பார்க்கப்போகும்
சாமியார் ஒருவரின் நடவடிக்கையோ வேறு ஒரு வினோதமான வகையாக உள்ளது. இவர் வழங்கும் மிக
வித்யாசமான அருள்வாக்கு முறையின் உண்மையையும் அதன் பின்னணி பற்றியும் நாம் பார்க்கலாமா.
===========
திருநெல்வேலியில் இருந்து
சென்னைக்கு வரும் பிரதான சாலையில் உடையார்பட்டி பைபாஸ் அருகில் முன் பகுதியிலேயே அமைந்திருக்கிறது
பஞ்சமுக ஆஞ்சனேயர் திருக்கோவிலும், அதனுடன் இணைந்த அண்டகாளி அம்மன் திருக்கோவிலும்.
இக்கோவிலை உருவாக்கி தற்போது நிர்வகித்தும் வருகிறார் வெங்கடேச சுவாமிகள் இவருக்கு
வயதோ இவரது மனைவி பெயர் கலா. இவர்களுக்கு விவேக், குமார், மீனா என்று மூன்று பிள்ளைகள்
இருக்கிறார்கள்.
சிறு வயது முதலே பக்தி
வழி பாட்டில் அதிகம் ஈடுபாடுகொண்டிருந்த இந்த வெங்கடேச சாமிகள் முன்பு சொந்தமாக டயர்
மற்றும் ரீட்ரேடிங் கம்பெனியை நடத்தி வந்தார். தொழில் மிகச் சிறப்பாக நடை பெற்று வந்தாலும்
மனதில் பக்தி வழிபாட்டிலேயே மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டி வந்தார். நாட்கள் செல்லச்செல்ல
இவர் கொண்ட பக்தி ஈடுபாடும் மிக மிக உச்சக்கட்டத்தை அடைந்தது.
ஒரு நாள் அதிகாலை எழுந்தவர் உற்சாகக் கூக்குரல் எழுப்பி ஆஞ்சனேயர்
புகழ்பாடத் தொடங்கி விட்டார். இந்த திடீர் மாற்றம் கண்டு குழம்பி காரணம் அறியாமல் திகைத்த
குடுப்பத்தினரும் அக்கம் பக்கத்தார்களும் அவரிடம் விவரம் கேட்க அவரோ
முதல் நாள் இரவு தன்
கனவில் ஆஞ்சனேயப் பெருமான் வந்ததாயும், திவ்ய தரிசனம் தந்து தன்னை ஆட்கொண்டு விட்டதாயும்,
ஆஞ்சனேயருக்குக் கோவில் கட்டி விசேச பூஜை புனஸ்காரங்கள் தவறாது வெகு சிறப்பாய்ச் செய்யவேண்டும்
என்று அன்புக் கட்டளை இட்டதாயும் பக்திப் பரவசத்துடன் கூறினார்.
இப்படி திடீர் ஆனந்தப்
பெருக்கில் கூறிய அவரின் வார்த்தைகளைக் கேட்டு முதலில் ஒன்றும் புரியாமல் குழம்பிய
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவர் ஏதோ பக்தி மேலீட்டால் இவ்வாறு நடந்து கொண்டதாய்
எண்ணி நாட்கள் சென்றால் எல்லாம் சரியாகி விடும் என்றும் விட்டு விட்டார்கள்.
ஆனால் அவரின் பக்திப்
போக்கிலோ எந்தவித மாற்றமும் ஏற்படவே இல்லை. தான் விரும்பிய படியும் ஆஞ்சனேயர் தன்னிடம்
கனவில் வந்து உத்தரவிட்ட படியும் உடனடியாக கோவில் எழுப்பும் பணியில் மிகத் தீவிரமாய்
ஈடுபடத் தொடங்கினார் வெங்கடேசன். தொழில் பற்றிய ஈடுபாடோ கொஜ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.
நாளொரு உயரமும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்தது பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலையம். பக்தர் வெங்கடேசனின் பக்தி ஆவேசம் அத்துடன்
முடிந்துவிட வில்லை. மேலும் மேலும் அதிகரித்து அக்கோவிலுக்குப் பக்கமாகவே மேலும் ஒரு
கோவிலை அண்டகாளி அம்மனுக்காகக் கட்டி முடித்தார்.
இவ்வாறாக தெற்குப்
புறம் ஆஞ்சனேயருக்கும், கிழக்குப் புறமாக அண்டகாளி அம்மனுக்குமாய் அற்புதமாக அமைந்தன கோயில்கள். மேலும்
ஒரு சிறப்பாக கோவிலின் முதல் தளத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. வாழ
வந்த காளிஅம்மன் என்ற பெயரிலும் இக் கோவில் அழைக்கப்படுகிறது. ஸ்ரீ சித்த ராமலிங்கேஸ்வரர்
அறக்கட்டளை என்ற பெயரில் கோவில் நிர்வாகம் இயங்கி வருகிறது.
இவ்வாறு முழுமையான
கோவிலில் தினமும் வித வித அபிசேகங்களும் ஆராதனைகளும்
அலங்காரங்களும், உற்சவங்களும், இடைவிடாது சிறப்பாக நடைபெறத் தொடங்கின. நாளொரு பூஜயும்
பொழுதொரு யாகமுமாய் நடந்துவந்த வேளையில் தான் சில அதிசய மாற்றங்கள் நிகழ தொடங்கின நம்
வெங்கடேசனிடம்.
வழிபட வரும் பக்தர்களுக்கு
மன அமைதியும் நம்பிக்கையும் தரும் படியாக வெங்கடேசன் கூறிய சில நல்ல ஆசிகளும், நம்பிக்கை
வார்த்தைகளும் பிறகு அப்படியே பலிக்கத் தொடங்கியதைக் கண்டு பக்தர்கள் மிகுந்த ஆச்சர்யமும்,
மகிழ்ச்சியும் அடையத் தொடங்கினார்கள். இந்த அதிசய நிகழ்வுகளால் மெல்ல மெல்ல சாதாரண
பக்தர் வெங்கடேசன், வெங்கடேச சாமிகளாக பக்தர்களுக்கு அறிமுகமானார்.
சாமிகளின் மூத்த மகன்
விவேக் ஒரு சிவில் இஞ்சினியர். திருமணமும் முடித்தவர். இரண்டாவது மகன் குமார் என்பவரோ
தன் தந்தையைப்போல பக்தியில் மேம்பட்டவராய் தந்தையுடனேயே இருந்து அவரது ஆன்மீகப் பணியில்
முழுமையாய் அவருக்கு உதவி வருகிறார்.
வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்
அண்டகாளி அம்மனுக்கு உச்சக்கட்டமான பூஜைகளும், பூஜையின் முடிவில் சாமிகளின் அருள்வாக்கு
நிகழ்சிகளும் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அப்போது வெங்கடேச சாமிகள் அம்மனோடு அம்மனாக
ஒன்றி மோனத் தவத்தில் மூழ்கிய படியே ஆடவும் பாடவும் ஆசி வளங்கவுமாக அமர்க்களம் செய்கிறார்.
காளி அம்மனுக்கான நள்ளிரவுப்
பூஜைகளோ நம்மை அப்படியே மெய்சிலிர்க்க வைத்து மிரள வைக்கின்றன. ஆட்டுக் கடாயின் கழுத்தை
அறுத்து ரத்த பலி கொடுப்பதும், வெட்டப்பட்ட ஆட்டைத் தோளில் போட்டபடியே அருள் வந்ததாய்
ஆட்டம் போடுவதும், பெண்கள் வேப்பிலை சகிதமாய் சக்கரம்போல் சுற்றிச் சுழன்று பக்தியுடன்
பம்பரமாய் ஆடி ஓடுவதும் பக்தர்களை நடுங்க வைக்கிறான.
மின்னிடும் வகை வகையான
வண்ண வண்ண விளக்குகளும், நெருப்புப் பந்தங்களும்,
வான வெடிகளும் கற்பூர ஜோதியும், பஜ்சமுக தீபங்களும், கணக்கற்ற தீச்சட்டி வழி பாடுகளும்,
பட்டாசுச் சத்தங்களும், பக்தர்களின் மன இருளைப் போக்கி பில்லி சூனியங்களை விரட்டி சாந்தப்படுத்துகின்றன.
அதே நள்ளிரவில் உக்கிரமான முனீஸ்வரருக்கும் வழிபாடுகள் அற்புதமாய் நடக்கின்றன. துர்க்கை
வேடமனிந்த நபர் அசுர வேகத்தில் ஆக்ரோச நடனம் ஆடுவதும், பக்தர்களீன் வழிபாட்டை ஏற்றுக்
கொள்வதும், அச்சத்துடன் கூடிய பக்தியை வழங்குகிறது.
எட்டுக் கரங்களுடனும்,
அருகில் கதாயுதத்துடனும், முகத்தில் வீரமும் மனத்தில் ஈர முமாகக் காட்சி தரும் அஷ்டபுஜ
ஆஞ்சனேயரின் தோற்றமோ தத்ரூபமாக திகழ்கிறது. நம்பிக்கை ஊட்டுகிறது. நாதஸ்வரம், தவில்
சகிதமாய் இசைக்கப்படும் இசையோ நம்மை வேறு உலகுக்கே கூட்டிச் செல்கிறது. முழு முதற்கடவுள்
கணபதிக்கும், முத்தமிழ்க் கடவுள் முருகனுக்கும், ராகு கேதுவுக்கும், சூலத்திற்க்கும்,
என்று வகை வகையான தீபாராதனைகள் விடிய விடிய நடந்தவண்ணமாகவே இருக்கின்றன.
அப்போதெல்லாம் தானும்
காளியோடு காளியாக மாறி சூலத்தைக் கையில் எடுத்து ஓங்காரச் சிரிப்புடன் குதித்து தாண்டவம்
ஆடி,பெரும் அதட்டலுடன் அருள் வாக்கு வழங்குகிறார். பில்லி சூனியத்தாலும் கர்ம வினையாலும்,
கடும் நோயாலும் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில்
அபிஷேக மஞ்சள் நீரை ஓங்கி அடித்தும்,திரு நீறு மற்றும் குங்குமத்தைப் பூசியும் கஷ்டங்களிலிருந்து
உடனடி நிவாரனம் தருகிறார் வெங்கடேச சாமிகள்.
அம்மனும் இவரும் வேறு
என்றில்லாமல் அம்மனுடன் உறைந்தபடியே அம்மனுக்கான அபிசேகஞ்களைத்தானும் ஏற்றுக்கொள்கிறார்.
திருமணத்தடை, கேன்சர் போன்ற தீராத நோய், குழந்தைப்பேறு இல்லாமை, கல்வியில் மந்தம்,
தொழில் நொடிப்பு, கடன் தொல்லை, ஏவல் பில்லி, என்று சகல ரோகத்துக்கும் சஞ்சீவி மருந்தாய்
தீர்வு தருகிறார் வெங்கடேச சாமிகள்.
இந்த விசயத்தில் இந்த
நாளில் உனக்கு இவ்வாறு தீர்வு கிடைக்கும் என்றும் இன்ரிலிருந்து இத்தனையாவது நாளில்
காரியம் ஜயமாகும் என்றும், துல்லியமாஹ இவர் கூறும் அருள் வாக்கால் பக்தர்கள் கவலை மறந்து
கண்ணீர் வழிய பேரானந்தத்துடன் நம்பிக்கையோடு செல்கின்றார்கள்.
அண்டகாளி அம்மனுக்கு
கொடைவிழா எடுக்க வேண்டி பந்தல் கால் நட்டும்
ஏழு புது மண் கலயத்தில் நவ தான்யங்களைப்பாவியும், அவற்றில் பால் ஊற்றி முளைப்பாரி கட்டவைத்தும்
சங்குகள் முழங்க கோலாகலமாகத் துவக்குகின்றார்கள். அத்துடன் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்து
திருநீரணிந்து குடங்களில் புனித நீர் மொண்டு ஊரின் முக்கிய சாலைகளின் வழியாக ஆட்ட பாட்டங்களுடனும்,
வான வேடிக்கைகளுடனும், பக்திப் பெருக்குடனும், உற்சாகப் பெருக்கோடு ஊர்வலம் வந்து வாழவந்த காளி அம்மனுக்கும் ஆஞ்சனேயருக்கும் அபிசேகம்
செய்கின்றார்கள்.
சனி மற்றும் புதன்
கிழமைகளில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு வடைமாலை வெண்ணை சாத்தியும் வெற்றிலை மாலை சூட்டியும்
பால்குடம் எடுத்தும், வெங்கடேசசாமியின் தலைமையில் அற்புதமாக வழிபாடு நடத்துகிறார்கள்.
பால்க்குடங்களை பூஜையில் வைத்து பூஜித்து கலசயாகம் செய்தும், ராமனாம வழிபாடுகள் நடத்தியும்
,அஷ்டபுஜ அனுமனுக்கு தொடர் மணி ஓசை முழங்க
அற்புதமாய் பூஜைகள் இரவு முடிய தொடர்கின்றன.
பெண்கள் கூட்டம் பக்தியுடன்
நடத்தும் கூட்டு வழிபாடுகளோ, விளக்கு பூஜைகளுடன்
ஜே ஜே என்று அமர்க்களப்படுத்துகின்றன.
எந்தவித தட்சனைகளோ
கட்டணமோ வாங்கிக்கொள்ளாமல் இவர் செய்யும் இந்த பக்தி சேவையின் போது இவர் கூறும் முக்கிய
கட்டளைகள் என்னென்ன தெரியுமா. தன்னை முழுவதுமாக
நம்ப வேண்டும், தனக்கு அடிமையாய் இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும், எந்த தீய சக்தியுமே தன்னை எதிர்க்க முடியாது, ஏனென்றால் தானே
காளியும் ஆதிபரா சக்தியுமாக இருக்கிறேன் என்பதாகும்.
அம்மனுக்கான அபிஷேக
சந்தனத்தை தன் தலையில் ஊற்றவைத்து ஆனந்தமயமாய் ரசித்து திளைத்து பரவசப்படுத்துகிறார்
அம்மனாய் மாறிய வெங்கடேச சாமிகள். இவருடனான கூட்டு வழிபாடுகளாலும் பக்தி கோசங்களாலும்
மனம் கரைந்து துன்பம் விலகி அமைதி கூடி, நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடிகிறது
என்கிறார்கள் இவரது பக்த சிரோன்மணிகள்.
மஞ்சளாடை பள பளக்க,
தங்கவாளோ தக தகக்க, குங்கும முகத்தில் அருள்
வழிய, கோலக்கரங்கள் ஆசி தர, பட்டுத்துகிலில்
பாதாதி கேசம் பத்ரகாளி பாங்குடன்,அருள் பாலிக்கிறாள்.
மக்கள் வாழ்க்கை முழுவதுமே
பெரும்பாலும் கவலைகளாலும் கஷ்டங்களாலும், மட்டுமே அவதிப்படும் நிலை ஏற்படும்போது மனம்
மிகவும் நொந்து ஆதரவு தேடி அங்கும் இங்குமாய் அலைந்து முடிவில் இறைவன் திருவடியே சரணம்
என்று தீர்மானித்து கோவில்களை நாடுகின்றார்கள்.
அப்படி நாடும் கோவில்கள்
உண்மையிலேயே அவர்களுக்கு அமைதியையும் ,நிம்மதியையும் செல்வத்தையும் கொடுக்கிறது என்றால்
அது வரவேற்கவேண்டிய ஒன்றுதான். அதே சமயம் மூடத் தனத்தையும் ஏமாற்று வேலைகளையும் பக்தர்களிடம்
திணிக்கின்றனவா என்று பார்ப்பதிலும் பக்தர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்
என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது
……..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக